Wednesday, July 8, 2009

கடற்படை ஒத்திகை வேட்டை - தூத்துக்குடி போலீசார் கோட்டைவிட்டனர்

மும்பையில் கடந்த ஆண்டு கடல் வழியாக புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்திய கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை தகவல் ஒன்றை அனுப்பினர். அதில் தீவிரவாதிகள் கடல் வழியாக மீண்டும் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் எந்த நேரத்திலும் எந்த பகுதியிலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மத்திய கடலோர காவல் படையும், சென்னை போலீசாரும் நேற்று இரவு நடத்திக்காட்டிய “அதிரடி நாடகம்” பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆடம்பர பங்களாக்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், என்று எதிலும் நேற்று இரவு அவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியவில்லை. போலீசாரின் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளேநுழைய முடிந்தது.

சென்னை நகரில் நேற்றிரவு எங்கு பார்த்தாலும் போலீஸ் தலைகளாகவே காணப்பட்டது. அனைத்து முக்கிய சாலைகளிலும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. மும்பையில் தாக்குதல் நடத்தியது போல சென்னை நகரிலும் தாக்குதல் நடத்த கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ வந்து கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து திருவொற்றியூரில் இருந்து திருவான்மியூர் வரை உள்ள கடலோர பகுதிகள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 13 ஆயிரம் போலீசார் உஷார் நிலையில் இருந்தனர். கடலோர காவல் படையின் கமாண்டோ விரர்கள் மேற்பார்வையில் மாக்டிரில் என்று அழைக்கப்பட்ட ஒத்திகை நாடகம் அரங்கேறியது.

சென்னையில் ஏதாவது ஒரு பகுதியில் தீவிரவாதிகள் போல கமாண்டோ படை வீரர்கள் நுழைவார்கள். அவர்கள் எப்படி வருவார்கள், எந்த பகுதியில் வருவார்கள் என்பதையெல்லாம் சொல்ல மாட்டோம். அவர்களை மடக்கி பிடிக்க வேண்டியது உங்களது கடமை. சென்னை போலீசின் திறமைக்கு இது ஒரு சவால் என்று கடலோர காவல்படை அதிகாரிகள் கூறி விட்டனர்.

இதனை தொடர்ந்து திக்... திக்... என்ற மனநிலையுடன் சென்னை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். சென்னை நகரில் பணியில் இருந்த அத்தனை போலீசாரும் நேற்று இரவு பதட்டத்துடன் காணப்பட்டனர். நமது ஏரியாவில் தீவிரவாதிகள் போர்வையில் உள்ள கமாண்டோக்கள் நுழைந்து, அவர்களை பிடிக்க முடியாமல் கோட்டை விட்டு விட்டால் சிக்கலாகி விடுமே என்ற அச்சத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளும் பரபரப்புடன் காணப்பட்டனர்.

வடசென்னையில் திருவொற்றியூரில் இருந்து காசிமேடு வரை 12 இடங்களில் படகுகளில் கண்காணித்த படி கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு போலீசார் காவல் காத்தனர். சரியாக இரவு 10 மணியளவில் காசி மேடு கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கிடமான படகு ஒன்று வந்தது.

இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி கமிஷனர் மாடசாமி தலைமையிலான போலீசார் உஷாரானார்கள். படகில் வந்த 6 பேரையும் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் 6 பேரும் மின்னல் வேகத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டனர். இதன் மூலம் சென்னைபோலீசார் ஒத்திகையில் வெற்றிபெற்றனர்.

இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவினால் அவர்களை உங்களால் பிடிக்க முடியுமா? என்று சென்னை போலீசுக்கு சவால் விடுப்பது போல் இருந்தது இந்த ஒத்திகை நாடகம். இந்த நாடகத்தில் சென்னை போலீஸ் தான் ஹீரோ என்பதை நாங்கள் நிரூபித்து விட்டோம்.

காசிமேடு கடற்கரையில் தீவிரவாதிகள் போல ஊடுருவிய கமாண்டோ வீரர்களை பிடித்ததுடன் பணிகளை நாங்கள் முடித்துக் கொள்ளவில்லை. இரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை சென்னை முழுவதும் உஷார் படுத்தியிருந்தோம். இந்த ஒத்திகை நாடகத்தின் 2-ம் காட்சியாகவே கருதி இதன் பிறகு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தோம்.

நேற்று இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை விடிய விடிய சென்னை முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடு பட்டிருந்தோம்.

காரிலோ, மோட்டார் சைக்கிள்களிலோ கமாண்டோ வீரர்கள் தீவிரவாதிகள் வேடத்தில் மீண்டும் வந்து விட்டால் என்ன செய்வது என்பதற்காக விடிய விடிய வாகன சோதனையும் நடத்தின. சென்னை நகரில் உள்ள அத்தனை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

தமிழக போலீசாருக்கு சவால் விடுக்கும் வகையில் கடலோர காவல்படை நடத்திக்காட்டிய இந்த மாதிரி வேட்டையால் சென்னை முழுவதும் நேற்று இரவு பரபரப்பில் மூழ்கியது. இன்று அதிகாலை 4 மணி வரை பரபரப்பு நீடித்தது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் போலீசாருக்கு இதுபோல் ஒத்திகை வேட்டை நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட போலீசார் மட்டும் பாதுகாப்பு பணியில் கோட்டைவிட்டனர். தீவிரவாதிகள் வேடத்தில் வந்த கமாண்டோ வீரர்களை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது 6 கமாண்டோ வீரர்கள் போலீசுக்கு தெரியாமல் மீனவர்கள் போல ஒரு படகில் வந்து தங்களது இலக்கான கோவிலுக்குள் நுழைந்து விட்டனர். அவர்களை முன் கூட்டியே கண்டுபிடிக்க தவறி விட்டனர்.

3 பேரு சொன்னாங்க:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

said...

நன்றி செய்திவளையம் குழுவிநர்க்கு