Monday, February 16, 2015

என்னதான் இருக்கிறது சதுரகிரியில்....

சதுரகிரியும், திருவண்ணாமலையும், எத்தனை முறை சென்றாலும் , ஒவ்வொரு முறையும் அதன் பிரம்மாண்டத்தை உணர்த்துவதில் தவறியதே இல்லை.
இன்று மகாலிங்க மலையைப் பற்றி - நீங்கள...் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.

தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.
*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
*ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.
* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.
*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது.
* சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
* ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.
* சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.

இருப்பிடம்:
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.
அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.

திறக்கும் நேரம்:
காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.போன்: 98436 37301, 96268 32131
மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.
சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.
வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.
சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.
சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும்.

மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.
இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.
இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.

கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.
இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.

""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.
பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.

வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.
பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது.
[p91a.jpg]
தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.

சுந்தரமூர்த்தி
கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.
பார்வதி பூஜித்த லிங்கம் : சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்
இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.

இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.
லிங்க வடிவ அம்பிகை
சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

சதுரகிரியில் தீர்த்தங்கள்
சந்திர தீர்த்தம்
சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.
கெளண்டின்னிய தீர்த்தம்.
சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.
கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு.
சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.
இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.
இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.
இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.

காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக்
காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.
பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.

அபூர்வ மூலிகைகள் :
இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.
பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.
தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.
இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.
விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக
பயன்படுத்த வேண்டும்.
சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.
இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு.
இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.
இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.
சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.
இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.
இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.
இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் " கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.
உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் - நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை..
சதுரகிரி மலை - ஒரு ஆன்மிக உலா
சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.
சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.
சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்.

Wednesday, January 21, 2015

சிதம்பர ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம்

கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப...்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ?
 
 
 
எப்படி இதை செய்தார்கள் - என்பதே பெரும் ரகசியம் தான் ....
இணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது..
அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்க ு பின் இருக்கும் சில அற்புதங்கள் சிலவற்றை நாம் அறிவோம் ..
பல வற்றை அறிய விஞானம் - ஆராய்ச்சி இருந்தும் அதன் முக்கியத்துவம் புரியாததால் சீண்டுவார் இல்லாமல் இருக்கின்றன ...
அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்...
அறிவியல் ,பொறியியல்,புவி யியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்....
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது,
இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவிய ியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது , இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள் ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

பெண்கள்....

பெண்கள்.... அர்த்தநாரீஸ்வர சிவனின் பாதி... காளி ரூபமாய் கற்களில் மீதி... கடவுளான பெண்ணுக்கே அவ்வளவுதான் மதிப்பு என்றால் தினம், தினம் குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும், தங்களுடைய வாழ்க்கைக்காகவும் போராடும் சாதாரண பெண்களின் நிலைமை இன்னும் மோசம்தான். 2014 இல் உலகம் அழியும் என்ற செய்தி கேட்டு பயந்து, பதறியவர்களுக்கு அன்று தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்...

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் பிறப்பிற்கும் காரணமான பெண்களின் அழிவுதான் அது என்பது. காலம்காலமாக ஆண்களின் மார்புப் பதக்கமாக மட்டுமே பெண்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கும் மோசமான ஆண் வர்க்கத்தின் பொறாமை மற்றும் சதை தின்னும் நர ஆசைக்கு பலியான பரிதாப பெண்கள்தான் நிர்பயா முதல், உமா மகேஸ்வரி முதல், இன்றைய வேலூர் சிறுமி வரை. "உன்னை நீ என்னிடம் இருந்து காப்பற்றிக் கொள்ள வேண்டுமானால் ஆடைகளால் உன் அவயங்களை மறைத்துக் கொள், பாலியல் இச்சையைத் தூண்டாதே, இரவில் நடக்காதே" என்று பெண்களுக்கு மட்டுமே அறிவுரைகள் வழங்கத் தயாராக இருக்கும் நாம் ஆண்களுக்கு "பெண்ணை இச்சையுடன் பார்க்காதே... மனைவியைத் தவிர அனைவரும் சகோதரிகள்...

சதை தின்பதற்கு அலையாதே" என்ற அறிவுரைகளை வழங்கத் தயாராக இல்லை. இதில் விதிவிலக்காக 10 சதவீத ஆண்கள் நல்லவர்களாக இருந்தாலும், 90 சதவீதம் பேர் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணகர்த்தாக்களாகத்தான் உள்ளனர். எதற்கெடுத்தாலும் கையில் தயாராக பதிலையும், வாயில் வர்ணம் பூசிய வார்த்தைகளையும், எதிரெதிர் வார்த்தை தாக்குதல்களையும் நிகழ்த்தத் துணிந்தவர்களும் கூட இதனை மறுக்க முடியாது. மறுத்தால் கண்டிப்பாக அவர்களும் இந்த கூட்டத்தில் ஒருவர்தான் என்பதுதான் நம்மால் மறுக்க முடியாத உண்மை. வாச்சாத்தி வன்கொடுமை, டெல்லி நிர்பயா, பத்திரிக்கை பெண், பொறியாளர் உமா மகேஸ்வரி, பெங்களூர் பள்ளி மாணவி, எல்கேஜி குழந்தை, 80 வயது மூதாட்டி, உபேர் டாக்சி பெண் பயணி, வேலூர் மாணவி என்று குழந்தை தொடங்கி எந்த வயது பெண்களுக்கும் இங்கு பாதுகாப்பில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. பெண்ணியம் பேசும் அமைப்புகளும் கூட இவ்விஷயத்தில் முழுமையாக போராடுவதற்கு தயாராக இல்லை.

வீட்டில் பெற்ற தந்தையைக் கூட நம்ப முடியாமல், அண்ணனை மதிக்க முடியாமல், தம்பியிடம் அன்பு பாரட்ட முடியாமல் இன்று வேறொரு வகையில் பெண்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் என்பதுதான் காலத்தின் கசப்பான உண்மை. "ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் போது, ஒரு சந்ததியே அங்கு அடியோடு வேரறுக்கப்படுகின்றது" என்பது சாட்டையடி நெருப்பாக என்று ஆண்களின் மனதில் பதிகின்றதோ அன்றுதான் பெண்களுக்கு முழுச்சுதந்திரம் கிடைக்கும். ஒரே ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பார்த்தால் எல்லா ஆண்களுக்கும் புரியும்.... நாம் உலகிற்கு வர உதவிய ஒரு புனிதமான கருவறை வழியை, கேவலம் ஒரு நிமிட இச்சைக்காக கல்லறை சமாதியாக நமக்கு நாமே மாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்ற விஷயம். பெண்களுக்கு.... "

உன்னைக் காப்பாற்றிக்கொள்ள நீயே ஆயுதம் எடுக்க வேண்டிய நேரம் இது. ஏனெனில், உன்னைக் காப்பாற்ற உன் குடும்பமோ, கல்வி நிறுவனமோ, அரசோ, பக்கத்து வீட்டு மனிதர்களோ, மதமோ, இனமோ, சட்டங்களோ தயாராக இல்லை". கடைசியாக.... பெண்களை ஆடை உரித்துப் பார்க்கத் துடிக்கும் ஆண்களும், போகும் வழியெல்லாம் பின் தொடரும் காமம் நிறைந்த கண்களின் நிழல்களும், கேளிக்கை என்ற பெயரில் பெண்ணை நுகர்வுப் பொருளாக பயன்படுத்துபவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றே ஒன்று .... "ஒரு பெண்ணை தவறான இச்சையோடு பார்ப்பவன் தன்னுடைய தாயையே தரக்குறைவாய் பார்ப்பவனுக்கு சமமாவான்" என்பதுதான்... பெண் இனத்தின் அழிவு ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்குத் தானே தோண்டிக்கொள்ளும் சவக்குழி... சதைத் திமிர் பிடித்த ஜென்மங்கள் திருந்துவார்களா இனியேனும்?

Wednesday, January 26, 2011

என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல்... இலவசம்!

பசியில் வாடுபவனுக்கு மீனைக் கொடுக்காதே... மீன் பிடிக்கக் கற்றுக்கொடு!'' என்கிற மேலை நாட்டுப் பொன்மொழி இந்த ஏழை நாட்டுத் தலைவர்களுக்கு ஏன் புரியாமல்போனதோ?

தொலைக்காட்சி இலவசம், உடுப்பு இலவசம், அடுப்பு இலவசம் என அனுதினமும் ஓர் அறிவிப்பை வெளியிட்டு, கையேந்தும் பெரு​மக்களை பெருக்கிக்கொண்டே போ​கிறது இந்த அரசாங்கம்.

65 ஆண்டு கால சுதந்திரத்தில், 45 ஆண்டுகள் இந்தத் தாய்த் தமிழகத்தை திராவிட இயக்கங்கள் ஆண்டிருக்​கின்றன. இன்றைக்கு இலவ​சத்தை மகத்தான திட்டமாக வாய் வலிக்​கச் சொல்பவர்கள், இத்தனை காலங்கள் ஆண்டும் என் மக்களைக் கையேந்த​வைத்த கயமைக்குப் பொறுப்பு ஏற்பார்களா?கலைஞரின் 'இளைஞன்’ படம் தமிழ்த் திரையுலகத்தின் புரட்சியாய், புகழாரக் கூட்டத்தால் கொண்டா​டப்படுகிறது. மாக்ஸிம் கார்க்கியின் 'தாய்’ நாவலை, தாய்க் காவியமாக வடித்த முதல்வர் பெருமகனாருக்குச் சொல்கிறேன்... அய்யா, கார்க்கியின் எழுத்துகள் மேல் நீங்கள்கொண்டு இருக்கும் ஈர்ப்பும் பிரியமும் என்னை வியக்கவைக்கிறது. கார்க்கி எழுதிய சாலச் சிறந்த வாக்கியம் ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன்.

'பிச்சை போடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை. பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை!’

கார்க்கியின் எழுத்துகளைப் பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்து உரைத்திருக்கும் நீங்கள், இந்த வரிகளுக்கு என்ன அய்யா பதில் சொல்ல முடியும்? உடனே, பிச்சைக்கும் இலவசத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது என வழக்கம்போல் விளக்கப் புராணம் பாடாதீர்கள். தனி மனிதனுக்குப் போட்டால் பிச்சை... தமிழ்நாட்டுக்கே போட்டால் இலவசமா? எங்களின் பணத்தை எங்களுக்கே பிச்சையாக்கும் வித்தையை இத்தனை காலம் நீங்கள் பயன்படுத்தாமல் இருந்ததே ஆச்சர்யம்தான்.

இலவசத் திட்டங்களுக்காக அரசாங்கம் இழக்கும் தொகையை நீங்கள் எதன் மூலமாக ஈடுகட்டுகிறீர்கள்? மது விற்பதன் மூலமாக... ஏழைக் குடியானவன் சாராயம் காய்ச்சினால், சட்டப்படி அது குற்றம். அரசாங்கமே சாராயம் காய்ச்சினால், அது திட்டம். நல்லா இருக்கிறதய்யா உங்கள் நியாயம்? தீபாவளி தினத்தில் மட்டும் 90 கோடிக்கு சாராயம் விற்றதாக இந்த அரசாங்கம் சாதனை அறிக்கை வெளியிடுகிறது. வயிற்றுக்கு விஷம் வைத்துவிட்டு, வாய்க்கு உணவு கொடுப்பதுதான் உங்கள் சாதனையின் மகத்துவமா அய்யா?

இலவசம் என்றால் என்ன பொருள் உங்கள் அகராதியில்? பல்துறைப்பட்ட வருமானத்தின் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தியதுபோக, மீதம் இருக்கும் உபரி வருமானத் தொகையை வைத்து மக்களுக்கு ஏதாவது வழங்​கினால் அதற்குப் பெயர்தான் இலவசம். ஆனால், 80 ஆயிரம் கோடியை தமிழகத்தின் கடனாக ஏற்றிவைத்துவிட்டு, இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்கிற நிலைமையிலும், இலவசத்தை வழங்கினால், அதற்கு உண்மையான அர்த்தம் 'உள்நோக்கம்’ என்பதுதானே!

உடனே அறிவார்ந்தவரும் மூத்த அமைச்சருமான அய்யா அன்பழகனார் அறிவிக்கிறார்... 'தமிழக அரசின் 80 ஆயிரம் கோடி கடன் தமிழக மக்களைப் பாதிக்காது!’ அப்படி என்றால், எங்களின் கடனை கன்னடக்​காரன் கட்டுவதாகச் சொல்லி இருக்கிறானா? இல்லை தெலுங்குக்காரன் திரட்டிக் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறானா?

இலவசங்கள் தொடர்ந்துகொண்டே போகட்டும்... என்றைக்கோ ஒரு நாள் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, இலவசங்களைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டால், தமிழகத்தின் நிலை என்னாகும் என்பது உங்களின் புத்திக்குப் புலனாகவில்லையா முதல்வரே?

இலவசம் இல்லாமல் போனால், பிறர் சவம் என்றாலும், பிய்த்துத் தின்னும் நிலை வந்துவிடாதா? இத்தனை காலம் உண்டபடியே உறங்கியவனை, ஒரே நாளில் உழைப்புக்குப் பழக்கப்படுத்திவிட முடியுமா? கொலை, கொள்ளை, வழிப்பறி என இந்த நாடே சுடுகாடாகிவிடாதா? அப்படி ஒரு நிலை வரத்தானே இத்தனை இலவசங்களை அறிவித்து, எம்மக்களின் சொரணைக்குச் சுருக்குப் போட்டுவிட்டீர்கள்?

தேர்தல் நெருங்க... நெருங்க... எப்படி எல்லாம் இலவசங்களை அறிவிக்கலாம் என மூளையைக் கசக்கி முப்பொழுதும் யோசிக்கிறீர்கள். வாரம் ஐந்து முட்டை என அறிவித்து குழந்தைகளைக் குதூகளிக்க​வைத்தீர்கள்... இத்தனை காலம் ஒரு முட்டை போட்ட கோழிகள் திடீரென ஐந்து முட்டைகள் போட ஆரம்பித்துவிட்டதா அய்யா? நாலரை ஆண்டு காலம் ஏழைகள் எந்தக் குடிசையில் வாழ்ந்தாலும் சரி என நினைத்த நீங்கள், இப்போது திடீரென வீடு வழங்கும் திட்டத்துக்கு வித்திட்டு இருக்கிறீர்கள். கடகட வேகத்தில் மூன்று லட்சம் வீடுகளைக் கட்டவைக்கும் நீங்கள், அடுத்த மூன்று லட்சம் பேருக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கான ரசீதைக் கொடுத்து இருக்கிறீர்கள். 'எங்கள் ஆட்சி மீண்டும் வந்தால், உங்களுக்கு வீடு நிச்சயம்!’ என்பதை ஏழைகள் மனதில் எவ்வளவு சூசகமாக ஏற்றி இருக்கிறீர்கள் பார்த்தீர்களா? அடிக்கத் திட்டமிட்டு இருக்கும் கொள்ளையில் மக்களையும் மறைமுகப் பங்குதாரர்களாக மாற்றுவதற்குத்தானே இலவசம் என்கிற பெயரில் இந்தக் கையூட்டு?

ஆனால், உங்கள் நெஞ்சத்தில் கைவைத்துச் சொல்லுங்கள்... இலவசமாக்கப்பட்டு இருக்க​வேண்டி​யது கல்வியும், மருத்துவமும்தானே... ஏழைக்கு ஓர் உயிர்; பணக்காரனுக்கு ஓர் உயிர் என்கிற பாராமுக நிலைப்பாடுதானே இன்றுவரை தொடர்கிறது. கல்வி ஏற்றத்தாழ்வுகளை இன்று வரை இந்த அரசாங்கத்தால் களைந்து எடுக்கமுடியாமல் போனது ஏன்?

ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டு, 'உழைப்பு தேவை இல்லை!’ என்கிற சோம்பேறித்தனத்தை விதைப்புச் செய்தீர்கள். புத்தியை மழுங்கடிக்க இலவசத் தொலைக்​காட்சி கொடுத்தீர்கள். எவன் வீட்டில் இழவு விழுந்தாலும் தன் வீட்டில், 'மானாட மயிலாட’ ஆடினால் சரி என்கிற சாக்கடை எண்ணத்துக்குள் ஒவ்வொரு தமிழனையும் தள்ளினீர்கள். உங்களின் இலவசம் ஏற்படுத்திய பாதிப்பு என்ன என்பதை காவிரிக் கரையோர விவசாயிகளிடம் கேட்டுப் பாருங்​கள்... கூலிக்கு வேலை இல்லாமல் திண்டாடிய காலம் போய், வேலைக்கு ஆள் இல்லாமல் அல்லாடும் காலம் உருவாகி இருக்கிறது. இது ஆரோக்கியமான மாற்றம் அல்ல அய்யா... அயோக்கிய மாற்றம்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விவசாய மாவட்டங்​களில் பட்டினிச் சாவுகள் தொடர்ந்தபோது, அரசாங்கமே சோறு போடும் என அறிவித்தார் அன்​றைய முதல்வர் ஜெயலலிதா. கூட்டுப் பொறியலோடு குக்கிராமங்கள்தோறும் சாப்பாடு தயாரானது. அப்போது நீங்கள் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா அய்யா... ''ஊருக்கே படியளந்த மக்களை சோற்றுக்குக் கையேந்த வைத்துவிட்டார் ஜெயலலிதா!''

அந்த அம்மையாரின் நிலைப்பாட்டை நான் நியாயப்​படுத்தவே இல்லை. ஆனால், அன்றைக்கு எம் விவசாய வர்க்கம் கையேந்தியதைக் காணச் சகிக்காத நீங்கள், இன்​றைக்கு ஒரு ரூபாய்க்கு அரிசி போடுகிறீர்களே... நீங்கள் அரிசி போட்டால், அது மகத்தான திட்டம்... அந்த அம்மையார் ஆக்கிப்போட்டால் அது குற்றமா?

நாவைச் சுழற்றியே நாட்டைச் சுழற்றும் உங்களின் அபூர்வ ஆட்சியை மீண்டும் தக்கவைக்க நீங்கள் தீட்டி வரும் சில திட்டங்கள்பற்றிக் கேள்விப்பட்டேன். 'ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஓர் அலைபேசி இலவசம்’ என அறிவிக்கப்போகிறீர்களாமே... தொலைக்காட்சியை இலவசமாக வழங்கி இணைப்புக்கு எங்களிடமே பணம் பறித்ததைப்போல, அலைபேசியை இலவசமாக வழங்கி இணைப்புக்கு எந்த நிறுவனத்திடம் பேசி வைத்திருக்கிறார்களோ?

உலகத்தில் தமிழகத்தைத் தவிர வேறு எங்கேயுமே சுய மரியாதைக்கு கட்சி தொடங்கியதாகவோ, தன்​மானத்துக்காக இயக்கம் தொடங்கியதாகவோ, சரித்திரம் இல்லை. ஆனால், இன்றைக்கு அவமரியாதையின் அடை​யாளமாகவும், அவமானத்தின் சின்னமாகவும் எம் மக்கள் மாறிக்கிடக்கிறார்களே... அடுப்பு இலவசம், உடுப்பு இலவசம், மின்சாரம் இலவசம், சம்சாரம் இலவசம் (இலவசத் திருமணங்கள்), முட்டை இலவசம், சட்டை இலவசம் என அள்ளி வழங்கும் இந்த அரசாங்கம் தேர்தல் நெருங்குவதால் சீக்கிரமே இன்னொரு இலவசத்தையும் அறிவிக்கப் போகிறது. இனமானம் மிகுந்த தன்மானம் தளும்பிய தமிழர் பெருமக்களே... அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனாலும், காத்திருங்கள்... 'இல்லங்கள் தோறும் பிள்ளைகளும் இலவசம்!’

Thanks: Vikatan (http://new.vikatan.com/article.php?aid=2110&sid=61&mid=2)

Wednesday, July 14, 2010

இந்தியாவின் இறையாண்மை!! அரசும் நாடும் ஒன்றா?

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றக் கட்டடத்தில் விடுமுறைக் கால குடும்ப நல நீதிமன்றத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசியபோது தமிழ்நாட்டின் சட்ட அமைச்சர் துரைமுருகன் இவ்வாறு பேசியுள்ளார்.

“தமிழ்நாட்டில் சில பேர் வெளிநாட்டுப் பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசி வருகின்றனர். பேச்சுரிமை என்ற போர்வையில் அவர்கள் பேசுகின்றனர். இருப்பினும் அத்தகைய நபர்கள் விரைவில் புதிய சட்டத்தை சந்திக்க நேரிடும். இவர்களைத் தண்டிக்கத் தேவைப்பட்டால் கடுமையான புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்” என்று தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.

‘இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது’ என்கிற இந்த சொற்றொடர் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும், ஏன் நாடாளுமன்றத்தில் கூட ஒலிக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில்தான், அதுவும் கடந்த 4 ஆண்டுகளாக அதிகம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நாட்டின் உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் உட்பட தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சிக்காரர்கள்தான் (ஏதோ இறையாண்மை என்பதும் காங்கிர‌ஸின் கண்டுபிடிப்பு, அதற்குத் தங்களுக்கு மட்டுமே அறிவுச் சொத்துரிமை உள்ளது என்பதுபோல்) தொடர்ந்து பேசிவந்தார்கள்.

அதுவும் எப்போதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்சனை தமிழ்நாட்டில் வலிமையாக எழும்புகிறதோ, உடனே காங்கிரஸ்காரர்கள் ராஜீவ் படுகொலையை எழுப்புவார்கள். அந்த பூதத்திற்கு அடுத்தபடியாக அவர்கள் தட்டி எழுப்புவதுதான் இறையாண்மை. இந்த நாட்டின் இறையாண்மை மட்டுமல்ல, இலங்கையின் இறையாண்மை பற்றிக் கூட இவர்கள் மிகுந்த கவலையுடன் பேசுவார்கள். ஈழத் தமிழர்கள் படுகொலையை தடுத்து நிறுத்த முதலில் குரல் கொடுத்துவிட்டு பிறகு தன் அரசிய்ல வசதிக்காக தமிழக மக்கள் அதனை மறந்துவிட வேண்டும் என்று விரும்பிய தமிழ்நாட்டின் முதல்வர் கருணாநிதி இறையாண்மை பற்றி பேசத் துவங்கினார். இவரும் இரண்டு நாடுகளின் (இந்தியா + இலங்கை) இறையாண்மையையும் பேசினார். காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடத்துகிறார் அல்லவா? பிறகு அதே பாணியில்தானே பேச வேண்டும்?

இப்போது அந்தக் கச்சேரியை அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்று, இருக்கிறாரா... இல்லையா என்ற சந்தேகத்திலிருந்த சட்ட அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார். எனவே இதில் துரைமுருகன் எந்த விதத்திலும் கட்சியின் கட்டுப்பாட்டையோ அல்லது முதல்வர் போட்ட கோட்டையோ தாண்டாதது மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தொங்கிக் கொண்டிருக்கும் திராவிட அரசிற்கும் ஆபத்து எதையும் ஏற்படுத்தாமல் பேசியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

அரசும் நாடும் ஒன்றா?

துரைமுருகன் பேசியதில் கவனிக்கத்தக்க முக்கிய விடயம் என்னவெனில், “சில பேர் வெளிநாட்டுப் பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசிவருகின்றனர்” என்று கூறியுள்ளார். அதுவும் ‘சில பேர்’ மட்டுமே பேசுவருகிறார்கள், அதற்கே இவ்வளவு பதட்டமாகி இவர் பேசியுள்ளார்.

இதில் ‘வெளிநாட்டுப் பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக’ என்று துரைமுருகன் பேசியிருப்பதுதான் புரியவில்லை. வெளிநாட்டுப் பிரச்சனை என்பது மாநில அரசு சம்மந்தப்பட்ட பிரச்சனை அல்ல, அது மத்திய அரசின் பொறுப்பின் கீழ் வரும் மிக முக்கியமான அமைச்சு. அவ்வாறிருக்க, ஒரு மாநில அமைச்சரான துரைமுருகன் ஏன் அதற்காக அலட்டிக் கொள்கிறார் என்று புரியவில்லை. சில பேர் பேசுவதால் இந்தியாவின் வெளிநாட்டு உறவிற்கு பங்கம் ஏற்படுகிறது என்றா‌ல் அது குறித்து இந்தியாவின் அயல் உறவு அமைச்சராக இருக்கிறத எஸ்.எம். கிருஷ்ணாதான் பேச வேண்டும், துரைமுருகன் ஏன் மருக வேண்டும் எ‌ன்று கே‌ட்க‌த் தோ‌ன்று‌கிறதா? அவசர‌ப்படா‌தீ‌ர்க‌ள்.

எஸ்.எம். கிருஷ்ணாதான் (அயலுறவுச் செயலர் நிரூபமா மேனன் ராவிற்குப் பிறகு) இந்தியாவின் அண்டை நாடுகள் குறித்து தகுதியுடன் அதிகம் பேசுபவர். இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்று மனசாட்சியோடு அமைச்சர் கிருஷ்ணா பேசியதற்கு சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்தில் (லங்கா.எல்கே) கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது மட்டுமின்றி, இலங்கையின் இறையாண்மையில் தலையிட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து கட்டுரை வெளியிடப்பட்டது. இப்போதுதான் தெரிகிறது நமது தமிழ்நாட்டின் சட்ட அமைச்சராகவுள்ள துரைமுருகனுக்கு உள்ளத் தெளிவு நமது நாட்டின் அயலுறவு அமைச்சராக இருக்கும் கிருஷ்ணாவிற்கு இல்லை என்பது. இப்படிப்பட்ட ஒருவரை அமைச்சராகப் பெற்றதற்கு தமிழ்நாடு மாதவம் செய்திருக்க வேண்டும்.

மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசாதே என்கிறார் துரைமுருகன். ஏன்? அது அவர்களுக்கும், காங்கிரசின் ஆதரவுடன் இன்னும் ஓராண்டு தள்ள வேண்டிய ஆட்சிக்கு ஆபத்து உண்டாகிவிடும் என்று (தனது தலைவர் கலைஞர் மு.கருணாநிதி சார்பாக) பொறுப்புணர்வுடன் பேசியுள்ளார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அது என்ன வெளிநாட்டுப் பிரச்சனை? எவ்வளவு அரசியல் சாதுரியம் துரைமுருகனுக்கு! அப்பப்பா புல் பயங்கரமாக அரிக்கிறது! இலங்கைப் பிரச்சனையைத்தான் குறிப்பிடுகிறார்... ஆனால் இலங்கைப் பிரச்சனை என்று பேசினால் அதுவே சிறிலங்க அதிபர் ராஜபக்சவிற்கு கோபத்தை ஏற்படுத்தலாம் அல்லவா? பிறகு அவரிடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி வைப்பது முடியுமா? அவரைச் சந்திப்பதால் ‘தமிழ் மக்களுக்கு’ பெற்றுத்தரக் கூடிய ‘அனுகூல’ங்களை பெறத்தான் முடியுமா? எனவேதான் அவர் இலங்கைப் பிரச்சனை என்று கூட சொல்லாமல், மிக இராஜதந்திரமாக ‘வெளிநாட்டுப் பிரச்சனை’ என்று சொல்லியுள்ளார்.

அதுமட்டுமல்ல, இலங்கைப் பிரச்சனை என்று கூறி, எதை மக்கள் மறைக்க வேண்டும் என்று தனது தானைத் தலைவர் விரும்புகிறாரோ அதனை ஏன் சொல்ல வேண்டும்? அதனைக் கேட்கும் மக்களுக்கு ஈழத் தமிழர் இனப் படுகொலையும், இன்றளவும் அவர்கள் அனுபவித்துவரும் துயரமும் நினைவுக்கு வந்துவிடாதா? பிறகு ரூ.380 கோடி செலவில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டதன் நோக்கம் என்னாவது? இப்படி பல்வேறு விடயங்களை தன்னுள் அடக்கியவறாகவே துரைமுருகன் ‘வெளிநாட்டுப் பிரச்சனை’ என்று நாசூக்காக கூறியுள்ளார். எல்லாம் தமிழினத் தலைவரின் அமைச்சரவையில் தொடர்ந்து இருந்து பணியாற்றியதா‌ல் கற்றப் பாடமல்லவா?

எனவே, வெளிநாட்டுப் பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசக்கூடாது என்று அவர் கூறுவதில் ஒர் உன்னதமான உண்மையும் அடங்கியுள்ளதல்லவா? மத்திய மாநில அரசுகள் இணைந்துதானே அந்த வெளிநாட்டுப் பிரச்சனையில் செயல்பட்டன. உண்ணாவிரதம், மனித சங்கிலி என்றெல்லாம் நடத்தினாலும், அவையெல்லாம் மத்திய அரசிற்கு எதிரான நடவடிக்கை அல்லவே, தமிழர் அனுபவித்த துயரம் அந்த நிலைக்கு நம்மைத் தள்ளியது அவ்வளவுதான். எனவே அதிலுள்ள ஒற்றுமையை, தேச ஒற்றுமையை கருத்தில்கொள்ள வேண்டும், எதிர்த்து பேச‌க் கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார். ராஜபக்ச அரசோடு இணைந்துதான் டெல்லி அரசு செயல்பட்டது என்பதையும், அந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு இரகசிய ஆதரவு அளித்தது என்பதையும் நன்கு புரிந்துகொண்டுள்ள அந்த ‘சில பேர்’ மட்டுமே பேசி வருகின்றனர். அவர்களுக்கே இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார் துரைமுருகன்.

அதுமட்டுமல்ல, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசுவது மட்டுமின்றி, அவர்கள் இந்திய இறையாண்மைக்கும் எதிராக பேசிவருகிறார்கள் என்பதையும் இனம் கண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் இறையாண்மை என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ளதற்கு பொருள் என்ன என்பது குறித்து பல்வேறு வழக்குளில் விளக்கமளித்துள்ள இந்தியாவின் உச்ச நீதிமன்றம், அது நாட்டின் எல்லைகளைக் காப்பதற்கும், விரிவுபடுத்துவதற்கும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசிற்கு மக்கள் அளித்துள்ள அதிகாரம் என்று கூறியுள்ளது. அதாவது எல்லைகளைக் காப்பதன்மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான அதிகாரம் இறையாண்மை என்பது. இதனை மன்னராட்சிக் காலத்து ‘அளவு கடந்த அதிகாரம்’ என்று பொருளில், அதாவது மக்கள் என்ன சிந்திக்க வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அரசன் நிர்ணயிக்கும் அதிகாரம் என்பதற்கு ஒப்பாக நமது அரசியல்வாதிகள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தான் எப்போதெல்லாம் அரசின் தவறான நடவடிக்கையை சுட்டிக்காட்டினாலும், இந்த இன்பத் தமிழ்நாட்டில் அது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்று பேசப்படுகிறது.

இந்தியாவின் கடல் எல்லைகளில் மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டின் மீனவர்கள், அண்டை நாடான சிறிலங்காவின் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும்போது இந்தியா ஏன் அமைதி காக்கிறது என்று அந்தச் ‘சிலர்’ கேள்வி எழுப்புவதோடு நின்றுவிடாமல், தமிழக மீனவர்களைக் காக்க வேண்டிய கடமை இந்திய அரசிற்கு இல்லையா? நமது கடற்பகுதிக்குள் அத்துமீறி வந்து நமது நாட்டு மீனவர்களை சுட்டுத் தள்ளிவிட்டுப் போகிறானே இது நமது நாட்டின் இறையாண்மைக்கு இழுக்கல்லவா? என்றும் கேட்கிறார்கள். இதுதான் (மத்திய, மாநில) ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை. எல்லையென்றால் பாதுகாக்க வேண்டும் என்று யார் சொன்னது? எல்லைகளைச் சரியாக பாதுகாத்தால் பாகிஸ்தானில் இருந்து எப்படி பயங்கரவாதிகள் ஊடுருவ முடியும்? அவர்கள் ஊடுருவாவிட்டால் எதை வைத்து அயல் நாட்டு அரசியல் நடத்துவது? எல்லைகளை நன்கு பாதுகாத்தால், சீன இராணுவம் எப்படி நமது நாட்டின் பகுதிகளை கைப்பற்றும்? அப்படி நடக்காவிட்டால் அண்டை நாட்டுடன் எப்படி எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது? எனவே இறையாண்மை என்பது எல்லையைக் காப்பது, நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வது, மீன் பிடிக்கச் செல்லும் தமிழனைக் காப்பது என்பதெல்லாம் அல்ல, அது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வது என்பதே! இதனை அறிந்தவர் துரைமுருகன்.

இறையாண்மை என்பது ஒரு சட்ட ரீதியான மிரட்டல் கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது. இறையாண்மை என்னவென்று புரியாவிட்டாலும், அதனை எவ்வாறு அரசியல் அச்சுறுத்தல் ஆயுதமாக பயன்படுத்தவது என்பதை நன்கு புரிந்துகொண்டுள்ள சட்ட மேதையான துரைமுருகன், அந்தச் சிலரை இறையாண்மை வார்த்தை கூறி மிரட்டியுள்ளார். அந்த மிரட்டிலில் எதிர்கால தேர்தல் அரசியல் அடங்கியுள்ளது எனபதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

பேச்சுரிமையாவது கீச்சுரிமையாவது....

“பேச்சுரிமை என்ற போர்வையில் இவர்கள் பேசுகின்றனர். இவர்களைத் தண்டிக்க சட்டங்கள் உள்ளன. இருப்பினும் அந்த நபர்கள் விரைவில் புதிய சட்டத்தை சந்திக்க நேரிடும். இவர்களைத் தண்டிக்க தேவைப்பட்டால் கடுமையான புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்” என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இரண்டே வரியில் எத்தனை சட்டங்கள்! அப்பப்பா அசத்திவிட்டார். அங்கிருந்த நீதிபதிகள் கூட அரண்டுபோய் இருப்பார்கள். 1. இவர்களைத் தண்டிக்க சட்டங்கள் உள்ளன; 2. விரைவில் புதிய சட்டங்கள்; 3. தேவைப்பட்டால் கடுமையான சட்டங்கள்... அடடா... அடடா... எங்கோ போய்விட்டார் துரைமுருகன்! மீண்டும் பயங்கரமாக புல் அரிக்கிறது. அந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களு‌க்கு எவ்வளவு அரித்திருக்கும்? எப்படி சொரிந்திருப்பார்கள்? வடிவேலு ஜோக்கைப் போல உடம்பு ரணகளமாகியிருக்குமே!

தண்டிக்க சட்டம் உள்ளது... தண்டிக்க வேண்டியதுதானே, புதிய சட்டம் எதற்கு என்று கேட்கிறீர்களா? அந்தச் சில நபர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் தருகிறார். அதற்காகவே புதிய சட்டத்தைத் தேடியிருக்கிறார். அது புதிதாக மட்டுமே இருந்தால் போதுமா? சடுதியில் ஒரு ஐடியா பிறக்கிறது அவருடைய அபார சட்ட மூளையில், உடனே கூறுகிறார்... கடுமையான சட்டம் என்று. அதுவும் நிறைவெற்றப்படும் என்று கூறவில்லை துரைமுருகன். ‘கொண்டு வரப்படும்’ என்று கூறுகிறார். அவர் ஏற்கனவே வெளிநாட்டுப் பிரச்சனை என்று அந்த நிகழ்ச்சியில் பேசியிருப்பதால்... அயல் நாட்டில் இருந்தே கொண்டுவர திட்டமிட்டுள்ளார் என்று தெரிகிறது.

ஏனென்றால் சிறிலங்க அரசு பல வருடங்களாக அவசர நிலைச் சட்டத்தை பிரகடனம் செய்து, அதனை ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு புதுப்பித்துக் கொண்டிருக்கிறது அல்லவா? அதை வைத்துதானே அங்குள்ள பத்திரிக்கையாளர்களில் இருந்து அரசிற்கு எதிரான (அதாவது இறையாண்மைக்கு எதிரான) அனைவரையும் ‘உள்ளே’ தள்ளிக்கொண்டிருக்கிறது. அதைக் கொண்டுவருவோம் என்று துரைமுருகன் சொல்லியிருக்கிறார். கொண்டு வருவோம் என்று கூறியிருப்பதால், அதில் காங்கிரஸும் உள்ளது எனபதையும், அப்படிப்பட்ட சட்டம் இயற்றும் ஐடியா மத்திய அரசிற்கும் இருக்கலாம், அதைத்தான் கூட்டணி சூட்சமத்துடன் துரைமுருகன் கூறியுள்ளார் என்றும் கொள்ள வேண்டும்.

ஏன் அவசர கால சட்டத்தை மனதில் வைத்து துரைமுருகன் பேசுகிறார் என்றால், அதை 1975வது ஆண்டு ஜூன் மாதம் முதல் 20 மாதங்களுக்கு ‘நன்கு’ அனுபவித்த கட்சியைச் சேர்ந்தவர் அல்லவா, எனவே அந்த அனுபவத்தை குறைந்தது தமிழ்நாட்டிற்காவது தனது தலைவன் ஆட்சிக் காலத்திலேயே கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார். எல்லாம் அந்தச் சில பேருக்காகத்தான்.

‘பேச்சுரிமை என்ற போர்வையில்’ என்று அரசமைப்புச் சட்டம் நமக்களித்துள்ள அடிப்படை உரிமை குறித்துப் பேசியுள்ளார். பேச்சுரிமை குறித்தும் அதிகம் அறிந்தவர் துரைமுருகன் என்பது இளைஞர்கள் அதிகம் பேருக்குத் தெரியாது. தமிழக சட்டப் பேரவையில் மிக ஜாலியாக பேசக் கூடியவர் துரைமுருகன். பொருள் பொதிந்த அவருடைய வார்த்தைகள் பலமுறை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பெருமையைப் பெற்றவர். எனவே பேச்சுரிமைப் போர்வை எவ்வளவு ஆபத்தானது என்பது அவருக்குத் தெரியும்தானே?

இந்த நாட்டை வழிநடத்த துரைமுருகன் போன்ற சட்ட மேதைகள் நிச்சயம் தேவையே. ஏனென்றால் அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரும் இல்லையே, நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தந்த மகாத்மா காந்தியும் இல்லையே. நமக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த தலைவர்கள் ஒருவரும் இல்லையே.