Tuesday, September 22, 2009

பி.எஸ்.எல்.வி., : இந்திய விஞ்ஞானிகள் மீண்டும் சாதனை

"ஓசியன்சாட் -2' செயற்கைக்கோள் மற்றும் ஆறு சிறிய செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் மீண்டும் சாதனை படைத்துள்ளனர்.

"பி.எஸ்.எல்.வி., சி-14' ராக்கெட் பகல் 11.55 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதில், "ஓசியன்சாட் -2' செயற்கைக்கோளும், ஆறு சிறிய செயற்கைக்கோள்களும் இடம்பெற்றுள்ளன. மீன் பிடிப்பதற்கு வாய்ப்புள்ள பகுதிகள், வானிலை நிலவரம், கடலோர பகுதிகள் ஆய்வு போன்றவற்றுக்கு, "ஓசியன்சாட் -2' செயற்கைக்கோள் பெரிதும் உதவியாக இருக்கும். இது 970 கிலோ எடை கொண்டது. "ஓசியன்சாட் -2' செயற்கைக்கோளின் ஆயுள் காலம் ஐந்து ஆண்டுகள். ஆறு சிறிய செயற்கைக்கோள்களில், நான்கு ஜெர்மனி நாட்டுக்குரியவை, ஒன்று சுவிட்சர்லாந்து, மற்றொன்று துருக்கி நாடுகளுக்குரியவை. இந்த குறு செயற்கைக்கோள்கள் இரண்டு முதல் எட்டு கிலோ வரை எடை கொண்டவை.

இதற்கான இறுதி 51 மணி நேர, "கவுன்ட் டவுன்' கடந்த திங்கள்கிழமை காலை 9 மணிக்கு துவங்கியது. சரியாக 11.55 மணிக்கு ராக்கெட் விண்ணுக்கு புறப்பட்டது. அனைத்து செயல்பாடுகளும் சரியாக உள்ளதாகவும், ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது என்றும், "இஸ்ரோ' விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ராக்கெட் விண்ணில் பாய்ந்ததும் விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Thursday, September 17, 2009

ஈரம் | திரைவிமர்சனம் = பெர்ஃபக்ட் த்‌ரில்லர்

முதல் காட்சியிலேயே படத்தின் ஹீரோயின் இறந்து போகிறார். அது கொலையா? தற்கொலையா? தற்கொலை என்று போலீஸ் முடிவுகட்டும்போது அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆதி, அது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறார். அந்த மரணத்தின் மீது அவருக்கு ஈடுபாடு தோன்ற காரணம், கொலை செய்யப்பட்டது அவரது முன்னாள் காதலி. விசாரணை எந்த முன்னேற்றமும் இல்லாமல் நகரும்போது, மேலும் சில கொலைகள் அதே அபார்ட்மெண்டில் நடக்கிறது. இந்த கொலைகளுக்கு யார் காரணம்? தும்பை பிடித்துப் போனால் அதன் மறு நுனியில் கிடைப்பதோ நம்ப முடியாத ஆச்ச‌ரியம்.

பழி வாங்கும் ஆவி கதை. இந்த கால்வ‌ரி கதை அறிமுக இயக்குனர் அறிவழகனின் கச்சிதமான திரைக்கதையி‌ல் கலைடாஸ்கோப்பில் போட்ட வளையல் துண்டுபோல் நமக்கு காட்டுவது பல வர்ண ஜாலம்.

படத்தின் நிஜ ஹீரோ, அறிவழகனின் திரைக்கதை. அடுத்தடுத்து கொலை நடப்பதை திகிலுடன் சித்த‌ரிக்கும் போதே, ஆதி சிந்துமேனன் காதலும் உடன் பயணிக்கிறது. இடைவேளைக்குப்பின் ஆதியின் விசாரணையுடன் சிந்துமேனனின் கொலைக்கான காரணமும் சொல்லப்படுகிறது. விசாரணை, காதல், கொலைக்கான காரணம்... படத்தின் முக்கியமான இந்த மூன்று அம்சங்களையும் எந்த உறுத்தலுமில்லாமல் புத்திசாலித்தனமாக இணைத்திருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங், கலை நான்கும் அபஸ்வரம் இல்லாமல் இணைந்திருப்பது படத்தின் ம‌ற்றொரு அம்சம். ஹாரர் படத்திற்கேற்ற க்ரே நிற க்ரேடிங், படம் நெடுக வரும் மழைக் காட்சிகள், சில் அவுட்டில் தெ‌ரியும் உருவங்கள் என தனியான அனுபவத்தை தருகிறது மனோ‌ஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு. அதிக பாடல்கள் இல்லாதது ஈரத்தின் ஸ்பெஷல். ஹாரர் படம் என்பதற்காக கண்டபடி இசைக்கருவிகளை ஒலிக்கவிடாததற்காக இசையமைப்பாளர் தமனை பாராட்டலாம்.

நறுக்கி வைத்த மாதி‌ரியான காட்சிகளின் வழி கதை சொல்லப்படுகிறது. லா‌ஜிக் மீறக் கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர். ஆவி பற்றி ஆதி மேற்கொள்ளும் தேடல், ஆவி கதைக்கான நியாயத்தை உருவாக்குகிறது. அதே நேரம் சந்தேக கணவனாக வரும் நந்தா கதாபாத்திரத்தின் செகண்ட்ஹேண்ட் போபியா ஓவர் டோஸ்.

படத்தில் அனைத்து நடிகர்களையும் அண்டர்ப்ளே செய்ய வைத்திருக்கிறார் இயக்குனர். நந்தாகூட கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாமல் தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்துகிறார். சிந்துமேனன் காதலியாகவும், மனைவியாகவும் இருவேறு ப‌ரிமாணங்களை காட்டுகிறார். கணவன் சந்தேகப்படும்போது வாடிப் போகும் அவரது முகம் ப‌ரிதாபத்தை அள்ளுகிறது.

மிடுக்கான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் மிளிர்கிறார் ஆதி. கல்லூரி காலத்திலும் அதே மிடுக்குடன் இருப்பது மட்டும் சின்ன நெருடல். வீட்டைவிட்டு ஓடிவர முடியாது என்று சிந்துமேனன் சொல்லும்போது ஆதி சொல்லும் அடாவடி பதில் கதைக்கு திருப்புமுனையாக அமைந்தாலும், அவரது கதாபாத்திரத்தின் தன்மையை பாதிக்கிறது.

அபார்ட்மெண்டில் இயல்பாக நடக்கும் செக்ஸ் குற்றங்கள் எப்படி ஒன்றிணைந்து பெரும் க்ரைமாக மாறுகிறது என்பது சற்றே திடுக்கிட வைக்கிறது. அசம்பாவிதம் நிகழும்போது காட்டப்படும் சிவப்பு நிறமும், ஆவியின் மீடியமான தண்ணீரும் ஆதியை போலவே நம்மையும் பதற்றப்படுத்துவது இயக்குன‌ரின் வெற்றி.

கச்சிதமான திரைக்கதையும், காட்சியமைப்பும் இருந்தால் எந்த கதையையும் ரசிக்க வைக்கலாம் என்பதற்கு ஈரம் சிறந்த எடுத்துக்காட்டு. சின்னச் சின்ன நெருடல்களை களைந்தால், ஈரம் நம் சட்டைக்குள்ளும் ஏசி தியேட்டரில்!

Friday, September 11, 2009

படிச்சா படிங்க, படிக்காட்டி போங்க :-)

வழக்கம்போல பிரபல பதிவர் என சொல்லிக்கொள்ளும் உங்களில் பலர் இதை படிக்காமலே விடலாம்...ஒன்றுமில்லாத பதிவிற்கு போய் ஓட்டும் பின்னூட்டமும் போடலாம், இருந்தாலும் நான் என் எழுத்தை நிறுத்தப்போவதில்லை. சரி சரி மேட்டருக்கு வருவோம்! கடந்த இரண்டு மூன்று நாளாய் புவிவெப்பமடைதல் விஷயமாய் தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் ஓரிரு மணிகள் மின்விளக்கை நிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுதிதி முடித்துவிட்டார்கள். பிளாஸ்டிக் குப்பைகளைத் தடை செய்ய வேண்டும், மின்சார நுகர்வைக் குறைக்க வேண்டும், பழைய காகிதங்களையும் துணிகளையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும், கரிமக் குப்பைகளை உரமாக்க வேண்டும், குளியல் மற்றும் பாத்திரங்களைக் கழுவும் நீரைத் தோட்டங்களில் பாய்ச்சி, கறிகாய்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் தாராளமாக அள்ளி வீசப்பட்டுள்ளன.

நோக்கியா நிறுவனம் பழைய செல்பேசிகளையும் இதர மின்னணுச் சாதனங்களையும் சேகரித்துச் சமையல் பாத்திரங்களாகவும் பூங்கா பெஞ்சுகளாகவும் மறுசுழற்சி செய்து வழங்கப் போவதாகச் சொல்கிறது. அத்துடன் தன்னிடம் தரப்படும் ஒவ்வொரு செல்பேசிக்கும் ஒரு மரக்கன்றை நடப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. நல்ல நோக்கம், நல்ல முயற்சி.

மனிதக் காரியங்களால் வளிமண்டலத்தில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பது கட்டாயம் என்று விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் எச்சரிக்கிறார். தமிழகத்தின் நீண்ட கடற்கரையே ஒரு சாபமாக மாறிவிடலாம் என அவர் கூறுகிறார்.

வளிமண்டல வெப்பநிலை ஒரு செல்சியஸ் டிகிரி உயர்ந்தாலும் ஹெக்டேருக்கு முக்கால் டன் என்ற அளவில் நெல் உற்பத்தி குறையும். கடல் மட்டம் உயர்ந்து கடற்கரையோர வயல்கள் மூழ்கினால் நெல் உற்பத்தி வெகுவாகக் குறையும்.இமயமலைப் பனியாறுகள் உருகி நேபாளத்தில் வெப்ப அபாயத்தை உண்டாக்கி வருகின்றன. அடுத்த 50 ஆண்டுகளில் மாலத்தீவு கடலில் மூழ்கிவிடும் அபாயத்தில் உள்ளது.

அங்குள்ள மக்கள் வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்து செல்லத் திட்டமிடுகிறார்கள். சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு நவீன உலகின் விவசாயப் பண்ணைகள், தொழிற்சாலைகள், வாகனங்கள் எனப் பலவகையான காரணிகள் உள்ளன. இதெல்லாம் சரிதான். அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று அங்கலாய்ப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி.

அமெரிக்க அரசின் ஆற்றல்துறை அமைச்சர் ஸ்டீவன் சூ வீடுகளின் கூரைகள், மொட்டை மாடிகள், சாலைகள், வாகனங்களின் மேற்பரப்புகள் என வெயில்படுகிற எல்லாப் பரப்புகளிலும் வெள்ளையடித்துவிட வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார். அவர் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி. அவர் சொன்னால் அர்த்தமிருக்கும்.

வெள்ளை நிறப்பரப்புகள் தம் மீது விழும் வெப்பத்தில் எண்பது விழுக்காடு வரை பிரதிபலித்து வானுக்குத் திருப்பி அனுப்பிவிடும். மொட்டை மாடியில் வெள்ளையடிப்பதால் வீட்டுக்குள் இறங்கும் வெப்பம் குறைந்து மின் விசிறிகள், குளிர் சாதனங்கள் போன்றவற்றின் தேவை குறையும். கார்களின் மேற்பரப்பு வெள்ளையாக இருந்தால், உள்ளே சூடு குறைந்து ஏசி போடாமல் சமாளிக்க முடியும்.

இவ்விதமாக வெள்ளையடிப்பது, உலகிலுள்ள அத்தனை கார்களும் பதினோரு ஆண்டுகளுக்கு ஓடாமலிருந்தால் ஏற்படக்கூடிய வெப்ப உமிழ்வு குறைவின் நல்விளைவை ஏற்படுத்தும் என்று கலிபோர்னியாவிலுள்ள தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த ஆர்ட் ரோசன்பெல்ட், ஹஷிம் அக்பரி, சுரபி மேனன் ஆகிய விஞ்ஞானிகளின் ஆய்வுகள் காட்டுகின்றன.

நூறு சதுர அடி பரப்புள்ள வெள்ளைக் கூரை, ஒரு டன் கரியமில வாயுவால் ஏற்படக்கூடிய பசுங்குடில் விளைவை ஈடு செய்யும் என அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன்மூலம் அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்குப் பத்து லட்சம் டாலர் வரை மின்சாரச் செலவைக் குறைக்க முடியும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. கலிபோர்னியா மாநில அரசு அங்குள்ள வர்த்தக நிறுவனங்களில் வெயில்படும் பரப்புகள் யாவும் வெள்ளை நிறம் பூசப்பட வேண்டுமென சட்டமியற்றியுள்ளது.

விரைவில் அந்தச் சட்டம் தனியார் வீடுகள் மற்றும் பண்ணைகளுக்கும் நீட்டிக்கப்படவுள்ளது.
இங்கிலாந்திலும் அதே போன்றதொரு சட்டம் வரப்போகிறது. நாமும் அதை மேற்கொள்ளலாம். அமெரிக்கா, ரஷியா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பசுங்குடில் வாயுக்களை வெளியிடும் நாடாக இந்தியா உள்ளது.அவற்றில் 68 சதவிகிதம் நிலக்கரியை எரிப்பதால் உருவாகின்றன.

மரம் நடுவது, மழை நீர் சேமிப்பு, மின்சார உபயோகத்தைக் குறைப்பது, நடை அல்லது சைக்கிள் மூலம் பயணிப்பது போன்றவற்றுடன் நம் வீட்டு மொட்டை மாடிகளில் வெள்ளைச் சாயம் பூசுவதன் மூலம் நம்மாலான அளவில் வளிமண்டலம் சூடாவதைக் குறைக்கும் பங்களிப்பைச் செய்யலாம்.

Thursday, September 10, 2009

பள்ளியில் மின்கசிவு புரளி - 5 மாணவிகள் பலி!

டில்லியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மின்சார கசிவு ஏற்பட்டதாக வந்த புரளியையடுத்து பள்ளியிலிருந்து வெளியேறிய மாணவ மாணவிகள், நெரிசலில் சிக்கி 5 மாணவிகள் பலியாயினர். 30 பேர் படுகாயமுற்றனர். மாணவிகள் இறந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசாருக்கும், பெற்றோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மின்சாரக்கசிவு ஏற்பட்டதாக தகவல் : டில்லியில் பெய்த பலத்த மழையால் நகர் முழுவதும் மேக மூட்டங்கள் காணப்பட்டது. கஜூரிகாஸ் என்ற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வழக்கம் போல் அவரவர் பாடங்களை கவனித்து கொண்டிருந்தனர். சில வகுப்புகளில் தேர்வு துவங்கிய நிலையில் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர் . இந்நி‌லையில் பள்ளியை சூழ்ந்து இருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்திருப்பதாகவும், இது பள்ளி கட்டடத்தில் பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும் வதந்தி பரவியது.

30 பேர் காயம் : 5 பேர் கவலைக்கிடம் : இதனையடுத்து மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளியை ‌விட்டு வெளியேறுமாறு பள்ளி நிர்வாகம் அறிவித்தது. அப்போது ஏற்பட்ட நெரிசிலில் சிக்கி 5 மாணவர்கள் பலியாயினர். படுகாயமுற்ற 30 மாணவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் 14 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். அவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

போலீசார் மீது கல்வீச்சு : பள்ளியில் மாணவிகள் இறந்த செய்தி நகர் முழுவதும் பரவியது. இதனை கேள்விப்பட்ட பெற்றோர்கள் அவசர, அவசரமாக பள்ளி முன் வந்து குவிந்தனர். தங்களது குழந்தைகளை அழைத்து கொண்டு புறப்பட்டனர். கூடி நின்ற பெற்றோர்கள் எதிர்ப்பு கோஷங்கள‌ை எழுப்பினர். இதனையடுத்து போலீசாருக்கும், பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாருக்கும், பெற்றோர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் மீது கல் வீசப்பட்டது. பின்னர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். குழந்தைகள‌ை இழந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகம் முன்பு கதறி அழுதபடி நின்றனர். பள்ளி வளாகம் மற்றும் ஆஸ்பத்திரிகளில் பெரும் சோகம் உருவாகியுள்ளது.

முதல்வர் ஷீலா தீட்ஷித் விரைந்தார் : டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் சம்பவ இடத்தை பார்வையிட்டு, ஆஸ்பத்திரி சென்று காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்வர், நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக தலா ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என்றார். சம்பவம் குறித்து உயர் மட்ட குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Monday, September 7, 2009

தேசிய விருது: பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகர்

2007 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் நடிகர் பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகர் விருதைத் தட்டிச் சென்றுள்ளார். காஞ்சிவரம் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.


பிரகாஷ்ராஜ் இருவர் படத்தில் நடித்ததற்காக 1998 ஆம் ஆண்டில் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார். கிரீஷ் கஸரவல்லியின் கன்னடப் படமான குலாபி டாக்கீஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக உமாஸ்ரீ சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.


'காஞ்சிவரம்' 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான விருதையும் வென்றுள்ளது.


சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது மராத்தி திரைப்படம் திங்யா படத்தில் நடித்த சரத் கோயகருக்குச் சென்றுள்ளது.


ஃபெரோஸ் அப்பாஸ் கானின் காந்தி மை ஃபாதர் படத்தில் நடித்ததற்காக தர்ஷன் ஜாரிவாலாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.


தாரே ஜமீன் பார் படத்தில் மேரீ மா பாடலைப் பாடிய ஷங்கர் மகாதேவனுக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது கிடைத்துள்ளது.


சாய் பாரஞ்ச்பே தலைமையிலான திரைப்பட விருதுகள் தேர்வுக்குழுவில் அசோக் விஸ்வநாதன் மற்றும் நமீதா கோகலே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.


விருதுப் பட்டியல் கடந்த வாரமே இறுதி செய்யப்பட்டாலும் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவு காரணமாக பட்டியலை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.