Friday, July 10, 2009

தீபா வளர்த்த நாய்!

கறுப்பு நாய்க்கு முதுகு மிகவும் வலித்தது. முதுகுப் புண் செக்கச் செவேலென்று பார்ப்பவர் கண்களை அருவருக்கச் செய்யும் விதத்தில் இருந்தது. மிளகாய் தூளைப் புண்ணில் தூவியது போலக் காந்தல் எடுத்தது, கறுப்பு நாயின் கண்களிலிருந்து நீர் பொலபொலவென்று கொட்டியது. முதுகுப் புண்ணின் வேதனையை விட மனப்புண் வேதனை மிகவும் வருத்தியது.

காரிலிருந்து வெளியே தள்ளப்பட்டதும் காரைத் துரத்தி வீட்டினை அடைய அது எவ்வளவோ முயன்றது. ஒரு காலத்தில் ''திருடனைத் துரத்தும் போலீஸ் மாதிரி எங்க நாய் கம்பீரமாக ஓடும்'' என்று எசமானனால் வர்ணிக்கப்படட அந்தக் கறுப்பு நாயின் கால்களால் காரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

திருவிழாவில் பெற்றோரைத் தவற விட்ட குழந்தையாய்த் திருதிருவென விழித்தது. தூரத்தில் ஒரு கார் விரைவாக வர, அந்தச் சாலையை அது மெதுவான வேகத்தில் கடந்தது. அதன் நடையோடு அதன் மன நிலையான நிழல்கள் விழுந்து விரைந்து சென்றன. 'இந்த டிரைவர் நம்மைக் கொல்ல மாட்டான்' என்ற மனிதனின் மீது கொண்ட அதன் ஆழ்ந்த நம்பிக்கையும், கார் வருவதற்குள் இந்த நடையின் வேகத்தில் சாலையைக் கடந்து விடலாமென்ற நுண்ணிய மனக் கணக்கீட்டையும், மனச்சோர்வில் 'கார் இடித்து விட்டுப் போகட்டும்' என்ற தற்கொலை மனோபாவமும் அந்த நடையில் சித்திரங்களாய்த் தெரிந்தன.

பார்வைக்கு எட்டிய திசைகளில் எல்லாம் ஓடி ஓடி முயன்றது. ஆனால் அதனால் வீட்டை எட்டவே முடியாமல் போனது. அது போகும் தெருக்களில் எல்லாம், அங்குள்ள வெளிநாட்டு வீட்டு நாய்களும், சில சொறி நாய்களும், கறுப்பு நாயை ஒருவித இன வெறியுடன் தீண்டத் தகாததாய்ப் பார்த்தன. அவை இதை ஏதோ அந்நியனாய்ப் பாவித்துக் குரைத்து நிராகரித்தன.

அது சாலை ஓரத்தில் இருந்த மலத்தை நுகர்ந்தது. ஒரு வெறுப்புணர்ச்சியுடன் அதை நிராகரித்து விட்டு மீண்டும் ஒடியது. கழுத்தில் கிடந்த லைசென்சு அதை முனிசிபாலிட்டிகாரர்களிடமிருந்து காப்பாற்றியது. பசி வயிற்றைப் பிய்த்தது. பசியின் கொடுமையால் முதன்முதலாய் அந்த ஹோட்டலின் எச்சில் இலையை நக்கத் துவங்கியது. அந்த எச்சில் சோறு வயிற்றின் உள்ளே செல்ல மிகவும் தயங்கியது.

அது எப்படியெல்லாம் வளர்ந்த நாய். அது பிறந்த இரண்டாவது நாளிலிருந்து, இன்று காலை வரை எசமானி தீபா வீட்டு உணவை மட்டுமே உண்ட நாய், தீபாவின் மூன்றாவது குழந்தையாய் வளர்ந்த நாய். ''தீபா வீடு'' என்று சொல்லாமல், ''கறுப்பு நாய் வீடு'' என தீபா வீட்டை அறிமுகப்படுத்தும் அளவிற்குத் தெருவிலுள்ள எல்லோரும் அறிந்த நாய்! அது ஒரு முக்கிய அறிவுஜீவி.

பல வருடங்களுக்கு முன்பு தீபா வங்கியில் கணக்கராக இருந்தபோது அதிக வசதிகளில்லாத ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பஸ்தராகவே இருந்தார். அவர் கறுப்பு நாய்க்கு மட்டும் எந்தக் குறையும் வைத்தது கிடையாது.

தீபா வீட்டைக் கறுப்பு நாயும் சிறந்த காவல் வீரனாகக் காத்திருக்கிறது. அது பல திருடர்களைக் குரைத்து விரட்டியிருக்கிறது. ஆனால் அது தன் வாழ்வில் யாரையும் கடித்ததாய்ச் சரித்திரம் இல்லை. தீபா கூட அந்தக் கறுப்பு நாயைப் பற்றி வீட்டிற்கு வருபவர்களிடம் எல்லாம் ''இதுக்குக் கண் கழுகுக் கண், இதுக்குக் காது பாம்புச் செவியாக்கும, இதுக்கு மூக்கு அபாரமான நுகர்வுத் திறனுள்ளது. திருடனைத் துரத்தும் போலீஸைப் போலக் கம்பீரமாக இது ஓடும்'' என விதவிதமாக, அதன் அங்கங்களை வர்ணிப்பார். தீபாவைத் தேடி வரும் பலர் கறுப்பு நாயைப் புகழ்ந்து பேசி அவரை ஐஸ் வைத்துப் பல காரியங்களும் சாதித்திருக்கின்றனர். இந்தக் கறுப்பு நாய் தீபா வீட்டுக்கு விருந்துக்கு வரும் விருந்தாளிகளின் குழந்தைகளுக்குக் காட்சிப் பொருளாய் அவர்களின் அழுகையை நிறுத்தி எவ்வளவு சேவை செய்திருக்கிறது!

''கடிக்காத நாய்''என்ற அபார நம்பிக்கையில் தீபா தைரியமாக நாயின் பக்கத்திலேயே குழந்தைகளை விளையாட விடுவார்.

''ஹாய்! நாயைப் பாரு'' என்றதுமே அடம்பிடிக்கும் குழந்தையும் அழுகையை நிறுத்திவிடும். அந்தக் கறுப்பு நாய் மட்டும் இல்லாவிட்டால், குழந்தை அழுதுகொண்டே இருந்திருக்கும். 'சீ! குரங்கு அழுகையை நிறுத்தல்லே கொன்னுடுவேன்' எனத் தாயும் மிரட்டி இருக்கலாம். அழுது அழுது குழந்தையின் உடல் நிலை கூடப் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

''என்னடி! அப்பவே சொன்னேன்! குழந்தை கேட்டத கொடுன்னு! குழந்தை அடம்பிடிக்கறதே உன்னாலேதான்'' எனக் கணவன் மனைவியிடையே பிரளயம் ஆரம்பித்து அது பூகம்பமாய் வெடித்திருக்கவும் செய்யலாம்.

இப்படிச் சாதாரணமாக நம் சிந்தனைக்கு எட்டாமலேயே, இந்தக் கறுப்பு நாய் பெரிய பெரிய சேவைகளை தீபா குடும்பத்திற்குச் செய்திருக்கிறது.. அதுவே பலர் இவருக்குக் கடிதம் எழுதும் போது கறுப்பு நாயைப் பற்றி விசாரிக்கவும் வைத்திருக்கிறது. தீபாவும் கறுப்பு நாயை நாள் தவறாமல் குளிப்பாட்டி, குழந்தை போல் வளர்த்தார். அதன் உடம்பில் உண்ணிப் பூச்சிகள் ஒன்றினைக்கூட அண்ட விடமாட்டார்.

பக்கத்து வீட்டுச் சிறுவன், கறுப்பு நாயின் மேல் கல்லை எறிந்ததற்கு அவர்களிடம் சண்டை போட்டு அவர்களின் நட்பையே முறித்துக்கொண்டார். ஒரு தடவை அது சைக்கிளில் அடிபட்டுக் கால் ஒடிந்து வ்ந்தபோது, நாய் என்று பாராமல், மூலிகைகளைக் கால்களில் வைத்துக் கட்டிக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்தார். குளிர்க் காலங்களில், பல இரவுகளில், நடு இரவில் விழித்து, ''பாவம்! நாய்க்கு குளிரடிக்கும்'' என்று கூறி நாயை அவிழ்த்து, முற்றத்தில் படுக்க வைத்துக் கோணியால் போர்த்தி விடுவார்.

''நாய் தனியாக இருக்கும்'' என்ற காரணத்தினாலேயே அயலூரில் பல உறவினர்கள், நண்பர்களின் திருமண விழாக்களை நஞ்சப்பன் நிராகரித்திருக்கிறார். பல விழாக்களுக்கு கணவரையும், பிள்ளைகளையும் மட்டும் அனுப்பி இருக்கிறார். தீபா கவலையோடு ஏதாவது ஆலோசித்துக் கொண்டிருக்கையில் 'அது ஊர் சுற்றிவிட்டு, கல்லூரியிலிருந்து வீட்டிற்குக் காலம் தாழ்த்திப் பெற்றோருக்குப் பயந்து வரும் ஒரு மகனின் தயங்கிய கால்களைப்' 'போல் தன் கால்களை நகர்த்தி நகர்த்தி வரும். தீபா அதன் தலையினை அன்பாய்த் தடவித் தடவியே தன் கவலைகளை மறந்து போவார்.

ஆண்டுகள் பல ஓட, தீபா வசதியும் சிறிது பெருகிக் கொண்டே சென்றது. புதுவீடு கட்டினார். ஸ்கூட்டி, கார் வாங்கும் அளவிற்கு அவர் வசதிகள் பெருகின. புதுப் புது நண்பர்கள் வந்தனர். ஒருநாள் தீபா வீட்டிற்கு விருந்திற்கு வந்த ஒரு பெண், ''என்னங்க! இந்தச் சொறி நாயைப் போய் வீட்டிலே வளர்க்கறீங்களே? நல்ல பொமரேனியன் குட்டி கிடக்குது! ஒண்ணைத் தர்றோம்!'' என்று தீபா கணவரிடம் சொல்ல, அன்றுதான் இந்தக் கறுப்பு நாய்க்குக் கெட்ட காலம் தொடங்கியது.

அடுத்த நாள் வெள்ளை நிற பொமரேனியன் நாய், தீபா மடியில் கொஞ்சி விளையாடியது. கறுப்பு நாயைக் கண்டதுமே பொமரேனியன் விடாமல் வெறுப்புடன் குரைத்தது. முதல் இரண்டு நாட்கள் கறுப்பு நாயைத் தனியாக பின் வாசலில் கட்டி வைத்தார்கள். ஆனால் பொமரனியனோ இந்த நாயைக் கண்டால் விடாமல் தொண்டை கிழியக் குரைத்தது. சப்தம் தாங்கச் சகிக்காமல் பக்கத்து வீட்டுக்காரர்கள், தீபா வீட்டாரைத் திட்டத் தொடங்கினர். கறுப்பு நாயின் மீது தீபா குடும்பத்தாரின் அன்பு சிறிது சிறிதாக விலகத் தொடங்கியது தீபா முன்பு, பரிதாபமாய் வாலை அசைத்து அன்பிற்காக ஏங்கி நிற்கையில் அடித்து விரட்டப்பட்டது. அது வீட்டு வாசலிலேயே சோகமாய்ப் படுத்துக்கொண்டது.

ஒரு நாள் தீபாவின் கணவர் தன் மனைவியிடம் ''இதோ பாருங்க. இந்த நாயை நம்ம வீட்டிலே வச்சிருந்தோம்னா நம்ம ஸ்டேட்டஸ் குறைஞ்சிடும்'' என்று சொன்னார். உடனே கறுப்பு நாய் காரில் பக்கத்து ஊரிலேயே விட்டு வரப்பட்டது. ஆனால் அன்று மாலையே அலைந்து வீட்டை மோப்பம் பிடித்து வந்துவிட்டது. நன்றியுடன் தீபாவின் அன்பிற்காக ஏங்கி வாலை ஆட்டிக் கெஞ்சியது. நேற்று வந்த பொமரேனியன் இதைக் குரைத்து விரட்டியது.

அன்று இரவு கறுப்பு நாயை விரட்ட வேறு வழியில்லாமல் ஒரு நண்பரின் ஆலோசனையின் கீழ் தீபாவின் கணவர் விஷத்தை மாமிசத்தில் கலந்து அதன் முன் வைத்து விட்டுச் சென்றார். சில மாதங்களுக்கு முன் பக்கத்து வீட்டில் இறந்த ரோஸி என்ற தன் சகநாய் வாந்தி எடுத்த எச்சில் சோற்றின் வாடை இதிலும் வீச, கறுப்பு நாய் அந்த விஷச் சோற்றை வெறுப்புடன் நிராகரித்தது.

அன்று தீபா வீட்டிற்கு அவரது அக்கா வந்திருந்தார்கள். அக்காவின் மூன்று வயதுக் குழந்தை தவழ்ந்து தவழ்ந்து கறுப்பு நாயின் பக்கம் வந்து அந்தச் சோற்றைத் தின்ன முயல, கறுப்பு நாயும் எச்சரிக்கை உணர்வுடன் தன் கால்களால் குழந்தையின் கையைத் தட்டிவிட்டு ஊளையிட்டுக் காப்பாற்றியது. ஆனால் நாயின் கால் நகம் குழந்தையின் கைகளைச் சிறிது கீச்சிப் புண் ஆக்கிவிட, அதன் அழுகையில், தீபா குடும்பமே ''நாய் கடிச்சிடிச்சு! குழந்தையை நாய் கடிச்சிடிச்சு!'' எனக் கதறியது.

தீபா அன்புடன் வளர்த்த அந்தக் கறுப்பு நாயை முட்கள் போல் 'சிரா' நிறைந்த விறகுக் கட்டையால் அடித்துக் கொல்ல முயன்றார் 'ஓ' என்று வலியில் கத்தியது. ''சீ! வளர்த்த நாயை அடிக்காதே! எங்கயாவது கொண்டு விட்டுகிட்டு வா!" எனப் பக்கத்தது வீட்டு வயதான அம்மா சொல்ல, கறுப்பு நாய் காரில் பயணமானது. வீட்டிலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் விடப்பட்டது, அது சுற்றி சுற்றி வந்தது. தீபா வீட்டை அதனால் எட்ட இயலவில்லை. கறுப்பு நாய் தீபா வீட்டை விட்டு வெளியேறிச் சுமார் ஆறு மாதங்கள் கழிந்துவிடட்ன. இந்த ஆறு மாதங்களில் அது எவருக்கும சொந்தமில்லாமல், கல்லடி, கம்படியென எல்லாத் துயரங்களையும் பெற்றுகொண்டு ''சொறி'' நாயாகச் சந்தை, தெருவென அலைந்து கொண்டிருக்கிறது. எசமானி தீபா மட்டும் அடிக்கடி நினைத்துக் கண்ணீர் விடும்.

அன்று தன் எசமானியின் கார் டிரைவரை வைத்துக் காரை அடையாளம் கண்டு கொண்டது. டிரைவர் காரின் கதவைத் திறந்து போட்டு விட்டு, பூக்கடைக்குள் நுழைய இது தந்திரமாய்க் காருக்குள் நுழைந்து, இருக்கையின் அடியில் ஒளிந்து கொண்டது. காரினுள் பூக்கூடைகள் அடுக்கப்பட்டிருந்தன. பூவின் வாசம் நாயின் மூக்கை துளைத்தது.

வீட்டின் முன் கார் நின்றது. ஒரே கூட்டம். காரிலிருந்து வேகமாய்த் தாவிக் குதித்துச் சந்தோஷமாய் எசமானியைக் காணும் ஆசையில் வீட்டிற்குள் ஓடியது. ஒரு பதினைந்து வயதுச் சிறுவன் தன் சக நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

''பாவம்! தீபா சார்! ஹார்ட் அட்டாக்லே 'பட்'டுன்னு போயிட்டாங்க! இந்தக் கறுப்பு நாய் போனதிலேயிருந்து அவங்க குடும்பம் சீரழிஞ்சு போச்சு! இவங்க ஒரு பொமரேனியன் வளத்தாங்க! அது பக்கத்து வீட்டுப் பொட்டை நாய் கூட எங்கோ ஓடிப் போச்சு! பாவம் இது நன்றியுள்ள நாய்! அடிச்சுத் துரத்தின பிறகும் எவ்வளவு நன்றியா வீடு தேடி வந்திருக்கு! இது இந்திய நாயல்லவா!''

கறுப்பு நாய், எசமானியின் முகத்தைக் காணும் ஆவலில் கண்ணீர் மல்க நின்றது.