Thursday, July 16, 2009

ஊர் சுற்றலாம் வாங்க - கொல்லிமலை

கொல்லி மலை தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழல் மற்றும் மலேரியா உள்ளிட்ட பல நோய் தாக்குதல் பரவலாக இருந்ததன் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும்.

பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கிபி 200-ல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து பல பாடல்கள் உள்ளன. இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.

முனிவர்கள் தங்கள் தவத்தினை அமைதியான இடத்தில் செய்ய விரும்பி கொல்லி மலையைத் தேர்ந்தெடுத்ததாகவும், அவர்களின் தவத்தைக் கலைக்க நினைத்த தீய சக்திகளிடமிருந்து தங்களை காக்குமாறு கொல்லிப் பாவையிடம் வேண்டியதாகவும், அதற்கிணங்கி கொல்லிப் பாவை தனது வசியப் புன்னகையால் தீய சக்திகளை விரட்டியதாகவும் பல கதைகள் கூறப்படுகின்றன. கொல்லி மலையில், கொல்லிப் பாவைக்கு இன்றும் ஒரு கோவில் உள்ளது. கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் "எட்டுக்கை அம்மன்" என்று கூறுகின்றனர்.

அறப்பளீஸ்வரர் கோவில்

சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நான்கு பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட பகுதியாதலின் இதற்குச் 'சதுரகிரி' என்ற பெயர் வந்தது. இங்குள்ள ஈசன் 'அறப்பளி மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாளும் இறைவியார் தாயம்மை என்றும் அழைக்கப்படுகிறார்கள். அறை = சிறிய மலை. மலைமேல் உள்ள கோயில் = அறைப்பள்ளி. இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர். இப்பெயர் மருவி அறப்பளீஸ்வரர் என்றாயிற்று. இக்கோயிலுக்குப் பக்கத்தில் "மீன்பள்ளி" ஆறு ஓடுகிறது. இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் விளங்குவதாக ஐதீகம். இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது. எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது. இதன் பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூசை நிகழுகிறது. அம்பாள் சந்நிதி - நின்ற திருக்கோலம். மேற்சுவரில் மகா மேருவும் சுற்றிலும் அஷ்டலட்சுமி உருவங்களும் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலை வல்வில் ஓரி கட்டியதாக கூறப்படுகிறது. உறையூரில் வாழ்ந்த பெருஞ்செல்வர் திரு. அருணாசல முதலியார் என்பவர், பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார். பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளார். கொல்லி மலையில் (சதுரகிரியில்) எழுந்தருளியுள்ள அறப்பளீசுவரப் பெருமான் மீது, அம்பலவாண கவிராயர் என்பவர் "அறப்பளீசுர சதகம்" என்னும் அருமையான நூலைப் பாடியுள்ளார். அதன் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே' என்றமைத்துப் பாடியுள்ளமை சிறப்பிலும் சிறப்பு. இம் மலைக்கோயிலில் (அறை = மலை; பள்ளி = கோயில்) 19 கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 12 சோழர் காலத்தியவை.

ஆகாய கங்கை அருவி

கொல்லி மலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்நீர் வீழ்ச்சியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியை அடைய சுமார் 760 படிகட்டுகள் கீழிறங்கிச் செல்ல வேண்டும். படிகள் இறங்கி, ஏறுவது கடினமாகவுள்ளது.

முருகன் கோவில்
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேடர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஷ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன.

வியூ பாயிண்ட்
சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் வியூ பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வல்வில் ஓரி விழா
செம்மேட்டில் (செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் மையமான ஊராகும்; காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நூலகம், தொலைபேசி நிலையம் முதலியன இங்கே உள்ளன.) 'வல்வில் ஓரி' மன்னனின் சிலை குதிரை மீதுள்ள 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் 'வல்வில் ஓரி விழா' நடத்தப்படுகிறது. வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது.

வாசலூர்பட்டி படகுத் துறை

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும். அன்னாசி பழ ஆராய்ச்சி பண்ணை ஒன்றும் இங்கு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

கொல்லி மலையில் அதிகளவில் அபூர்வ மூலிகைகள் கிடைக்கின்றன. சித்த வைத்தியத்திற்கு இந்த மூலிகைகள் பெரிதும் உதவுகின்றன. இம்மலையில் சித்தர்கள் பலர் வாழ்ந்து, நோய் தீர்க்கும் மருந்துகளை கண்டறிந்து கொடுத்துள்ளனர். கொல்லை மலையில் பல சரக்குகளை விற்கும் சந்தை வாரந்தோறும் நடக்கிறது.

அடுத்தப் பதிவில் ஏலகிரியைப் பற்றி பார்ப்போம்.

5 பேரு சொன்னாங்க:

said...

thanks for the details

said...

திருச்சி துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை பகுதியில் இருந்து மேல் நோக்கி ஏறினாலும் கொல்லி மலை மீது ஏறலாம்.

அதற்கு உடம்பில் கொஞ்சம் வலு வேண்டும். அவ்வாறு ஏறினால் இயற்கையை முழுவதுமாக ரசிக்கலாம்.

said...

அது ஒரு ஒத்தையடி பாதை, தண்ணீர் கூட நாம் சுமந்து செல்லவேண்டும்!

said...

photos please upload

said...

நல்ல பகிர்வு