தமிழகத்தில் சுய நிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடுகள் நிரப்பப்படாமல், அவைகளை கல்லூரி நிர்வாகமே நிரப்புக் கொள்ள மறைமுகமாக அரசு உதவி வருகிறது என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக குற்றம் சாற்றியுள்ளது.
உமயாள் ஆச்சி செவிலியர் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 65 விழுக்காடு இடங்களுக்கு எந்த மாணவரையும் இதுவரை தமிழக அரசு பரிந்துரை செய்யாததால், அதனை நிர்வாகமே நிரப்பிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அக்கல்லூரி நிர்வாகம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் முக்குல் ரோஹடாகி விடுத்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
இவ்வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி பி. சதாசிவம் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, “தகுதி வாய்ந்த மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் அனுமதி பெறும் வாய்ப்பை நீங்கள் (தமிழக அரசு) பறித்துவிடுகிறீர்கள். சுய நிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டை நிரப்பாமல் விடுவதன் மூலம் அந்த இடங்களை பெரும் தொகையை பெற்றுக் கொண்டு மற்ற மாணவர்களுக்கு ஒதுக்க உங்கள் (தமிழக அரசின்) அலுவலர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுகின்றனர். உங்கள் அலுவலர்களுக்கு எல்லாம் தெரியும், ஆயினும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதிருப்பதற்கு காரணம், அவர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதுதான்” என்று கடுமையாக தமிழக அரசு மீது குற்றம் சாற்றியது.
தமிழ்நாட்டில் உள்ள சுய நிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்கள் கல்லூரி நிர்வாகத்தினரால் பெரும் நன்கொடை வாங்கிக் கொண்டு நிரப்பப்படுவதாக பொதுமக்களும் மாணவர்களும் கூறிவரும் குற்றச் சாற்றை இன்று உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் மருத்துவ கல்வி இடங்களை ரூ.20 இலட்சம் முதல் 40 இலட்சம் வரை பெற்றுக் கொண்டு மாணவர்களைப் பரிந்துரை செய்கிறார் என்ற குற்றச்சாற்று நிலவிவரும் வேளையில் உச்ச நீதிமன்றமும் குற்றம் சாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
0 பேரு சொன்னாங்க:
Post a Comment