Monday, July 27, 2009

என்னது! உனக்கும் வாயு தொல்லையா?

இரண்டு வகையில் மனிதர்களுக்கு உடலில் வாயு அதிகரிக்கக்கூடும். அதிக நடை, சைக்கிள் சவாரி, அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்தல் போன்ற காரணங்களால் அதிகரிக்கும் வாயுவானது, மற்ற தோஷங்களின் சேர்க்கை இல்லாமல் தானாகவே கூடுகிறது. அதுபோன்ற நிலைகளில் தசைப் பிடிப்பு, தசை இறுக்கம், உட்கார்ந்தால் நிம்மதி போன்ற அறிகுறிகளைக் காண்பிக்கும். ஆனால் சிலருக்கு ஒரே இடத்தில் அதுவும் முக்கியமாகத் தரையில் அமர்ந்திருந்து எழ முயலும்போது அதிகரிக்கும் வாயுவானது, "ஆவரண வாயு' என்று அழைக்கப்படுகிறது. அதாவது வாயுவின் சுதந்திரமான நடைக்கு உடலிலுள்ள தசைகளாலும், தசைநார்களாலும் ஏற்படும் தடை, அதன் சீற்றத்திற்குக் காரணமாகிறது. உங்களுக்கு ஆவரண வாயுவினால் வலி ஏற்படுகிறது.

இதில் முதலாவதாகக் கூறிய தனி வாயுவின் சீற்றத்தில் மூலிகைத் தைலங்களைத் தடவிவிடுவதால் குணம் கிடைக்கும். ஆனால் இரண்டாவதாகக் கூறிய ஆவரண வாயுவில் மூலிகைத் தைலத்தைத் தடவினால் வலி மேலும் கூடிவிடும். வாயுவிற்கு ஏற்பட்டுள்ள தடையை முதலில் நீக்க வேண்டும். அதற்கு குதிரை சாணகம், யானையின் சாணகம் போன்றவற்றில் ஒன்றை எடுத்து பசுவின் சிறுநீர் கலந்து உருண்டை பிடித்து நிழலில் காய வைக்க வேண்டும். நன்றாகக் காய்ந்த சாணகத்தை உதிர்த்து, துணியில் மூட்டைகட்டி, இரும்புச் சட்டியில் சூடாக்கி சுமார் 10 - 12 நாட்கள் இடுப்பில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். காலையில் மலம், சிறுநீர் ஆகியவற்றைக் கழித்த பிறகு, வெறும் வயிற்றில் அதாவது உணவிற்கு முன்பாக இந்த ஒத்தடத்தைக் கொடுக்க வேண்டும். ஒத்தடத்தின் மூலம் இடுப்பில் கிடைக்கும் வெதுவெதுப்பான சூட்டைத் தக்க வைத்துக் கொள்ள, ஒரு துணியால் இடுப்பைக் கட்டிக் கொள்ள வேண்டும். காலையில் குளிக்கக் கூடாது. மாலையில் குளிக்கலாம்.

இப்படி 10 - 12 நாட்கள் கொடுத்த ஒத்தடத்தின் விளைவாக, வாயுவின் சுதந்திரமான நடைக்கு ஏற்பட்ட தடை நீங்கிவிடும். ஆனால் அது இடுப்பில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறையாது. வாயு விட்டுச் சென்ற தாக்கத்தைக் குணப்படுத்த, மூலிகைத் தைலங்களை இடுப்பில் ஊறவிடுதல், தேய்த்து விடுதல் ஆகியவற்றைச் செய்ய, இடுப்புப் பகுதியிலுள்ள எலும்புகளும் தசை நார்களும் நரம்புகளும் வலுப்படும்.

குடலில் வாயுவின் சஞ்சாரமும், மலச்சிக்கலும் தங்களுக்கு இருந்தால், மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் பலன்களைத் தராது. அதனால் குடல்வாயுவை அதிகரிக்கச் செய்யும் பருப்புகள், கடலை வகையறாக்கள், குளிர்ச்சியான உணவு வகைகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். குடல் பகுதி சுத்தமாக இருக்கவும், இடுப்புவலிக்குச் சிறந்த நிவாரணியாகவும் உள்ள கந்தர்வஹஸ்தாதி விளக்கெண்ணெய் மருந்தை 10-15 மி.லி. காலை மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் நக்கிச் சாப்பிட, குடல் வாயு மட்டுப்பட்டு மலச்சிக்கல் ஏதும் இல்லாமல் இருப்பதால் முன் குறிப்பிட்ட ஒத்தடம் மற்றும் எண்ணெய்த் தேய்ப்பு முறைகள் உங்களுக்கு விரைவில் நல்ல பலனைத் தரும்.

செயல்முறை தவறுகளாகிய குளிர்ந்த தரையில் மல்லாக்கப்படுத்தல், ஒரே நிலையில் நெடுநேரம் அமர்ந்திருத்தல், குனிந்த நிலையில் அதிக வேலை, குளிர்ந்த நீரைக் குளிக்கவும், குடிக்கவும் பயன்படுத்துதல் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

0 பேரு சொன்னாங்க: