Friday, February 26, 2010

வழக்கம்போல சிகரெட், புகையிலை பெட்ரோல் டீசல் வரி உயர்வு!!

இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்து பட்ஜெட் உரையைப் படிக்கத் துவங்கினார். முன்னதாக மத்திய அமைச்சரவை கூடி பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தது. ‌சிகரெட், புகையிலை , பெட்ரோல், டீசல் சுங்க வரி உயர்வு அறிவிக்கப்பட்டதும் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வெளிநடப்பு செய்தனர்.

* ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி இல்லையாம்;
* 1.60 லட்சம் முதல் 5 லட்சம் வரை 10 சதவீதம் வரி; 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை 20 சதவீதம்;
* 8 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம்
* விவசாயிகள் கடனைத் திருப்ச் செலுத்த அவகாசம்
* குறித்த காலத்தில் பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்தினால் வட்டிக்குறைப்பு
* மின்சார உற்பத்திக்கு கூடுதல் நிதி
* திருப்பூர் ஜவுளித்துறை மேம்பாட்டிற்கு 200 கோடி ரூபாய்
* பள்ளிக் கல்விக்கு 31 ஆயிரத்து 36 கோடி
* 25 லட்சம் ரூபாய் வரையான வீடுகளைக் கட்டுவதற்கான ஒரு சதவீத வரிக்குறைப்பு நீடிப்பாம்!
* பாதுகாப்புத்துறைக்கு ஒரு ‌லட்சத்து 47 ஆயிரத்து 344 கோடி ஒதுக்கீடு
* எதிர்பார்க்கப்படும் வரி வருவாய்- ரூ.7,46,656 கோடி; இதர வருவாய்- 1,48,118 கோடி
* எதிர்பார்க்கப்படும் செலவு: 11.8 லட்சம் ‌கோடி
* அரசின் மொத்தக் கடன் 3 லட்சத்து 45 ஆயிரத்து 10 கோடி
* சிகரெட் மற்றும் புகையிலை மீதான வரி அதிகரிப்பு
* கச்சா எண்ணெய் மீதான சுங்க வரி 5 சதவீதமாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 7.5 சதவீதமாகவும் அதிகரிப்பு
* பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிப்பு
* டி.வி., குளிர்சாதான பெட்டிக்கு வரி உயர்வு
* உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி குறைப்பு

சிகரெட், புகையிலை , பெட்ரோல் , டீசல் மீதான வரி அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டதும் சபையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அதை ஆட்சேபிக்கும் வகையில் கோஷம் எழுப்பியதால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. பின்னர் பா.ஜ., சமாஜ்வாடி, இடதுசாரி உள்ளிட்ட எதிர்க் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர். இன்று தாக்கலான பட்ஜெட் சமானிய மக்ளுக்கு எதிரானது என பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.

ஒட்டு மொத்த உற்பத்தியைப் பெருக்குவதே அரசின் லட்சியம். விலைவாசி உயர்வு குறித்து அரசு கவலை கொண்டுள்ளது. அதைச் சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரும் பொருளாதார நிச்சயமற்ற நிலையிலிருந்து இந்தியா மீண்டுள்ளது. பொது விநியாக முறை நவீனப்படுத்தப்படும் ஏற்றுமதி நிலைமை ஊக்கம் அளிப்பதாக உள்ளது. பருவ மழை தவறியதால் வறட்சி ஏற்பட்டு, உணவுப் பொருள் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டு, பணவீக்கம் அதிகரித்தது.

நேரடி வரிவிதிப்பு முறையையும் பொதுவான விற்பனை வரி முறையையும் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. நிதி நிலையை ஸ்திரமாக்கவும் மேம்படுத்தவும் ஒரு உயர்மட்டக் குழு ஏற்படுத்தப்படும். கைவினைப் பொருட்கள், தரை விரிப்புகள், கைத்தறி மற்றும் சிறு, நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் வரிச் சலுகை மேலும் ஓராண்டிற்கு தொடரும்.

சிறப்பு பொருளாதார மண்டலஙக்ளின் வளர்ச்சி உறுதி செய்யப்படும். வற்ட்சி காரணமாக விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் தரப்படும். பயிர்க்கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தினால் அதற்கான வட்டி விகிதம் 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும். ரயில்வேக்கு வரும் நிதி ஆண்டில் 16 ஆயிரத்து 752 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுளள்ளது, குறைந்த செலவில் மின்சாரம் உற்ப்த்தி செய்யும் வகையில் கொள்கை மாற்றி அமைக்கப்படும்.

மின்சாரத் துறைக்கு 5 ஆயிரத்து 130 கோடி ஒதுக்கப்படும். திருப்பூர் ஜவுளித்துறை மேம்பாட்டிற்காக தமிழக அரசுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பதில் தனியார் பங்களி்ப்பும் ஏற்கப்படும். பள்ளிக் கல்விக்கு 31 ஆயிரத்து 36 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சுகாதார மற்றும் குடும்ப நலத்திற்கான திட்ட ஒதுக்கீடு 22 ஆயிரத்து 300 கோடியாக இருக்கும். கிராமப்புற மேம்பாட்டிற்கு 66 ஆயிரத்து 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சாலை போக்குவரத்திற்கான ஒதுக்கீடு 19 ஆயிரத்து 894 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மேம்பாட்டிற்கு 5 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கப்படும். 25 லட்சம் ரூபாய் வரையான வீடுகளைக் கட்டுவதற்கான ஒரு சதவீத வரிக்குறைப்பு 2011ம் ஆண்டு மார்ச்31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. சேரி மேம்பாட்டிற்கு ஆயிரத்து 270 கோடி ஒதுக்கப்படும் என்றாராம்.

பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி காலை 10.10 மணி அளவில் பார்லி.,க்கு வந்தார். அவரை புகைப்படக்காரர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர். அவருடன் நிதிதுறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் இணைந்து வந்தார்.

பட்ஜெட் தாக்கலில் பெட்ரோல்- டீசல் உற்பத்தி வரி உயர்ந்தத‌ை அடுத்து பெட்ரால் விலை லிட்டருக்கு ரூ. 2.67 ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.58 ம் உயர்கிறது. இந்த விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறதாம்.

Monday, February 22, 2010

ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

போலி ரயில் டிக்கெட் தயாரித்து நாடு முழுவதும் பயணம் செய்த வட மாநில ஆசாமிகள் மூவர், கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள பல வங்கிகளின் பெயரைக் கொண்ட போலி செக்குகளை அச்சடித்து, வினியோகித்த கும்பல் பற்றி, சி.பி.ஐ., கண்டறிந்துள்ளது. அக்கும்பலோடு தொடர்புடைய ஒருவனை, சி.பி.ஐ., கைது செய்து, அவனிடமிருந்து, 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான போலி செக்குகள் கைப்பற்றப்பட்டன.

தமிழகம், கர்நாடகா, கேரளா (திராவிட நாட்டில்) ஆகிய மாநிலங்களில், 2007ம் ஆண்டு முதல், போலி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்த இலங்கை ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். இப்படி எல்லாக் குற்றங்களையும், நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்த போலி ரயில் டிக்கெட்டுகள் விவகாரத்தைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில், தென்னக ரயில்வேயைப் பொறுத்தவரை, அதன் பணியாளர்கள் கில்லாடிகள். சலுகைக் கட்டணத்தில் ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களை, "போதுமான சான்றுகள் இல்லை” என்று, வழியிலேயே இறக்கி விடுவர் அல்லது அபராதக் கட்டணம் என்று, ஒரு பெரும் தொகையைக் கறந்து விடுவர். அதேபோல, ஈ-டிக்கெட், தத்கல் போன்றவை மூலம் பயணம் செய்யும் பயணிகளும், ஒரிஜினல் சான்று இல்லாது பயணித்தால், டிக்கெட் இல்லாப் பயணிகளாகவே கருதப்பட்டு, அபராதத் தொகையைப் போட்டுத் தாளித்து விடுவர்.

அது மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள எந்த ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட்டு முன்பதிவு செய்தால், நீங்கள் விரும்பும் ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் கிடைக்காது. இங்கிருந்து புறப்படும் அத்தனை ரயில்களுமே, முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் முழுமையாக நிறைந்தே புறப்படுகின்றன. இந்த நிலையில், போலி ரயில் டிக்கெட்டுகள் எப்படி சாத்தியமாகும்? நமக்குத் தெரிந்து, முன்பதிவு செய்த டிக்கெட்டுக்களுக்கு மட்டுமே, கேன்சல் செய்யும்போது, கால அளவுக்குத் தக்கவாறு, 10 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை கழித்துக் கொண்டு திருப்பி வழங்குவர். ஒதுக்கீடற்ற டிக்கெட்டுகளை திருப்பிக் கொடுத்து பணம் பெறும் வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆக, கோளாறு எங்கேயோ உள்ளது என்பது தான், மம்தா கண்டுபிடிக்க வேண்டிய விஷயம்.

அடுத்து என்ன பஸ் டிக்கெட்டா?

Sunday, February 21, 2010

தே.மு.தி.க. எங்கே போகிறது?

தமிழகத்தில் கடைசியாக நடந்த திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, விஜயகாந்த் கட்சியின் பலம் என்னவென்பது வெட்ட வெளிச்சமானது. அதன்பிறகு, பல கட்சிகளில் இருந்து தே.மு.தி.க.,விற்கு தாவிய பலரும், சத்தமின்றி கழன்று வருகின்றனர். பத்து சதவீத மாற்று கட்சியினர் மட்டுமே தற்போது கட்சியில் எஞ்சியுள்ளனர். தீவிர விசுவாசிகள் தற்போது கட்டம் கட்டப்பட்டு, 10 சதவீதமுள்ள மாற்று கட்சியினரை தக்க வைப்பதற்காக அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தீவிர ஆதரவாளர்களுக்கு, தி.மு.க., பாணியில் இதயத்தில் மட்டுமே இடம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் விஜயகாந்தின் தீவிர ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். மாநிலம் முழுவதுமுள்ள அதிருப்தியாளர்களின் ஒட்டு மொத்த குமுறல்கள், கடந்த 16ம் தேதி நாகை மாவட்ட நிர்வாகிகள் மூலம் வெளிப்பட்டது.

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி நாங்கள் தான்; வரும் 2011ம் ஆண்டு கோட்டையை ஆளப் போவது எங்கள் கட்சி தான் என்று விளம்பரப்படுத்திக் கொண்டிருந்த தே.மு.தி.க.,வின் அஸ்திவாரம் சமீபகாலமாக ஆட்டம் காணத் துவங்கியுள்ளது.

நாகை மாவட்டத்தில் இருந்து வாகனங்களில் திரண்டு வந்த அவர்கள் அ.தி.மு.க.,வினர் பாணியில் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட்டனர். அவர்களை சந்தித்து பேசுவதற்கு விஜயகாந்த் முன்வரவில்லை. விஜயகாந்த் உத்தரவுப்படி, அவர்களை கட்சி அலுவலகம் வரவழைத்து மாநில நிர்வாகிகள் சிலர் சந்தித்து பேசினர். பிரச்னையை பெரிதாக்கிவிட வேண்டாம் என்பதற்காக, இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால், நாங்கள் கொட்டி தீர்த்த குமுறல் களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என்ற புலம்பல் சத்தம், விஜயகாந்தின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தானே இயக்கி நடிக்கும் விருதகிரி பட வேலையில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக விஜயகாந்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாவட்டச் செயலர், ஒன்றியச் செயலர் போன்ற பதவிகளில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டது. இதனால், 20 ஆண்டுகளுக்கு மேலாக மன்ற பணியில் இருந்து கட்சி பணி வரை தங்களை கட்சிக்கு அர்ப்பணித்த மூத்த நிர்வாகிகள் ஒதுக்கப்பட்டு, மாற்று கட்சியில் இருந்து வரும் வசதி, செல்வாக்கு படைத்தவர்களுக்கு "சிவப்பு கம்பளம் விரித்து" பதவிகள் வழங்கப்படுகிறது. தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்டச் செயலராக பொறுப்பேற் றுள்ள, பால அருள்செல்வன் என்பவர் தன்னை கவனிப்பவர்களுக்கு மட்டும் பதவிகளை வழங்கியுள்ளார். இதனால் கோபமான தொண்டர்கள், "கேப்டன்" வீட்டை முற்றுகையிடும் நிலை ஏற்பட்டது. "ஊழலை வேரோடு அழிக்க வந்துள்ளோம்" என்று களம் இறங்கிய தே.மு.தி.க. கட்சிக்குள்ளேயே, மாவட்ட அளவிலான பதவிகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கட்சியின் செயல்பாடு இப்படியே போனால், தொண்டர்கள் எதிர்காலம், குடும்பத்தினரின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலை அதிகரித்து வருகிறது.

கட்சியினரிடம் கேப்டன், "கூடி கலைவது கும்பல்; கூடி நிலைப்பது கூட்டம்" என அடிக்கடி பேசுவார். ஆனால் கூட்டமாக இருந்த தே.மு.தி.க.,வினர் இப்போது கும்பலமாக மாறி வருகின்றனர். இதை எப்போது தான் கேப்டன் புரிந்து கொள்வார் என்று தெரியவில்லை. சினிமா தொழிலுக்கு முழுக்கு போட்டு விட்டு இனியாவது அவர் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும். தனித்து போட்டி பார்முலாவால் இருள் சூழ்ந்து கிடக்கும் எங்கள் வாழ்க்கையில் கூட்டணி பார்முலா மூலம் அவர் ஒளி ஏற்ற வேண்டும். வரும் 24ம் தேதி அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் வருகிறது. அன்று அவருக்கு மரியாதை நிமித்தமாக கேப்டன், போன் மூலமாவது வாழ்த்து சொல்லி கூட்டணிக்கு அச்சாரமிடுவார் என என்னை போன்ற தீவிர விசுவாசிகள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். தே.மு.தி.க.,வினரின் இந்த எதிர்பார்ப்புக்கு விடை காணும் நாள் நெருங்கி வருவதால் அக்கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சிகள் மட்டத்திலும் பரபரப்பு எழுந்துள்ளது.

Wednesday, February 3, 2010

வங்கம் தந்த வரலாற்று நாயகன்

இந்தியத் திருநாட்டின் இருள்படர்ந்த ஆங்கிலேய அன்னிய ஆட்சிக்காலக்கட்டத்தில், அதே பிரிட்டிஷ் நாட்டுக்கு உயர்கல்வி பயில்வதற்காகச் சென்று, அங்கிருந்தே காலனியாதிக்க நுகத்தடியிலிருந்து தாய்நாட்டை விடுவிக்கிற உத்வேகத்தோடு திரும்பி வந்து, விடுதலைப் போராட்ட வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு தலைமுறையே உண்டு. அதில் ஒருவராக இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் நம்மிடையே கலங்கரை விளக்கமாய் நின்று இலங்கிய வரலாற்று நாயகர்களின் வரிசையில் எஞ்சி நின்ற ஒருவர்தான் ஜோதிபாசு.


இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைமை, விடுதலைப் போராட்டத்தில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து செயலாற்றித்தான் தங்கள் அரசியல் பயணத்தைத் தொடங்கியது என்பது வரலாற்றுப் பதிவு. அந்தப் பாரம்பரியத்துக்கும் சொந்தக்காரர்தான் 96 வயதுவரை வாழ்ந்து வழிகாட்டிய ஜோதிபாசு.


சட்டப்படிப்புக்காக ஜோதிபாசு 1935-ம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். ஜோதிபாசு லண்டன் சென்ற காலத்திற்கு முன்பாகவே மகாத்மா காந்தி தனது பாரிஸ்டர் பட்டப்படிப்பை முடித்துத் திரும்பி விட்டிருந்தார். அங்கு இந்திய மாணவர்கள் ஒன்று சேர்ந்து இயங்கிய இந்தியா லீகின் தலைவராக இருந்தவர் சுதந்திர இந்தியாவின் நேரு அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இடம்பெற்ற வி.கே.கிருஷ்ண மேனன். இவரையும் உள்ளிட்டு இங்கிலாந்தில் ஜோதிபாசுவுடன் சேர்ந்து செயல்பட்டவர்களின் பட்டியல் மிக நீண்டது.


ஹிரேன் முகர்ஜி, புபேஷ் குப்தா, ரஜனி படேல், பி.என்.ஹக்சர், மோகன் குமாரமங்கலம், இந்திரஜித் குப்தா, நிகில் சக்ரவர்த்தி, என்.கே.கிருஷ்ணன், அருண் போஸ், பெரோஸ் காந்தி போன்றவர்கள் பின்னாளில் இந்திய அரசியல் சமூக அரங்கில் சிறப்பிடம் பெற்று விளங்கியவர்கள். இவர்களில் பலர் ஒன்றாகச் சேர்ந்து இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு பிரிட்டிஷ் மண்ணிலேயே ஆதரவும், நிதியும் திரட்டும் பணியில் முனைந்து லண்டன் மஜ்லிகள் அமைப்பைத் தொடங்கினர். அந்த அமைப்பின் முதல் செயலாளராகத் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கியவர் ஜோதிபாசு.

அந்த நாள்களில் இங்கிலாந்தில் செயல்பட்ட இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் ஓர் ஆதர்ச சக்தியாகத் திகழ்ந்தவர் ஜவாஹர்லால் நேரு. நேரு இங்கிலாந்துக்குச் சென்ற இரு சந்தர்ப்பங்களில் லண்டன் மஜ்லிகள் சார்பாக ஜோதிபாசு அவருக்கு வரவேற்பு விழா நடத்தியது குறிப்பிடத்தக்கது.


தாய்நாட்டின் விடுதலைக்கான வேட்கை ஆர்த்தெழுந்த அந்த இளமைப் பருவத்தில் ஜோதிபாசு உள்ளிட்ட இந்திய இளைஞர்களின் நெஞ்சங்களில் ஏகாதிபத்திய நாடுகளின் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் எதிரான உணர்வுகளும் பற்றிப் படர்ந்தன. இதன் தொடர்ச்சியாக அவர்களிடையே மார்க்சியம் மற்றும் இடதுசாரி அரசியல் ஆர்வமும் ஈடுபாடும் வளரலானது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக விளங்கிய ஹரி பாலிட், ரஜனி பாமி தத், பென் ப்ராட்லி போன்றோரோடு ஜோதிபாசுவுக்கு ஏற்பட்ட தொடர்பும் நெருக்கமும் அவரை ஒரு கம்யூனிஸ்டாகப் பரிணமிக்கச் செய்தது. அதன் விளைவாக லண்டனிலிருந்து நாடு திரும்பிய சில நாள்களிலேயே கட்சியின் முழுநேர ஊழியராக ஜோதிபாசுவின் வாழ்க்கை தொடங்கி விட்டது.


ஆரம்பநாள் கம்யூனிஸ்டுகள் அனைவரையும் போலவே ஜோதிபாசுவும், கட்சியின் முடிவுக்கிணங்க தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டார். முதலில் துறைமுகத் தொழிலாளர்களின் மத்தியிலும், அடுத்து ரயில்வே தொழிற்சங்க இயக்கத்திலும் தன்னைப் பிணைத்துக் கொண்ட ஜோதிபாசுவுக்கு, அதன் வாயிலாகவே சட்டமன்ற நுழைவுக்கும் வழி திறந்தது. அன்றைய வங்காள மாகாண சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் ரயில்வே தொழிலாளர்களை வாக்காளர்களாகக் கொண்ட தொகுதி ஒன்றில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு ஜோதிபாசு முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினரானார். அந்த வெற்றியின் பின்னணி முக்கியமானது.


1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காங்கிரஸ் தலைமை அறிவித்தது. மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டார்கள். இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த சூழலில், ஒரு கட்டத்தில் அது பாசிச எதிர்ப்பு யுத்தமாக உருவெடுத்தது. அப்போது கம்யூனிஸ்டுகள் எடுத்த நிலைப்பாடு, சர்வதேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சரியானதே என்றாலும், கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. இது இன்றளவும் இந்திய அரசியலில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களால் விவாதப் பொருளாக ஆக்கப்பட்டு வந்துள்ள ஒரு பிரச்னை. 1946-ல் மாகாண சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஜோதிபாசு உள்ளிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு எதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டு பிரதானமாக முன்வைக்கப்பட்டது. அதையும் எதிர்கொண்டுதான் ஜோதிபாசுவின் சட்டமன்றப் பிரவேசம் நிகழ்ந்தது.


சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் பெறும் சம்பளத்தைக் கட்சிக்குக் கொடுத்து விடுவேன், கட்சி எனக்கு ஊதியம் வழங்கும் என்று ஜோதிபாசு தனது சுயசரிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது இன்றைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பின்பற்றப்படும் நடைமுறை.


நாடு சுதந்திரமடைந்து, புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு, இந்தியா ஒரு ஜனநாயகக் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெற்ற 1952-ம் ஆண்டின் முதல் பொதுத் தேர்தலிலும் ஜோதிபாசு கோல்கத்தாவின் பாராநகர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரானார். 1972-ல் மேற்கு வங்கத்தில் அரங்கேறிய அரை பாசிச அடக்குமுறைக்கு இடையிலான மோசடித் தேர்தல் ஒன்றைத்தவிர, ஜோதிபாசு இத்தொகுதியிலிருந்தே வெற்றி பெற்று வந்தார். பின்னர் அவர் முதலமைச்சரான 1977-ம் ஆண்டுத் தேர்தலில் சத்கர்ச்சியா தொகுதிக்கு மாறினார். ஜனநாயக இந்தியாவின் அரசியல் வரலாற்றில் 23 ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சராக நீடித்த பெருமைக்குரிய ஒரே தலைவராக ஜோதிபாசு முத்திரை பதித்துள்ளார். இது அவரது நீண்ட நெடிய பொது வாழ்க்கையின் ஒரு சிறப்பம்சம் மட்டுமே. ஜோதிபாசுவின் வாழ்க்கைப் பயணம் இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் ஈட்டுத் தந்துள்ள பயன்களும், படிப்பினைகளும் பன்முகப்பட்டவை என்பதை நினைவு கூர வேண்டும்.


ஜோதிபாசு தன்னுடைய அரசியல் அனுபவங்களைப் பதிவு செய்ய முற்பட்டபோது அதற்கு அவரிட்ட தலைப்பு "மக்களோடு மக்களாக' என்பதே. அந்த நினைவலைகளை அறிமுகப்படுத்துகையில் அவர் குறிப்பிட்டார்: மக்களின் விடுதலையையே மையமாகக் கொண்ட எனது அரசியல் வாழ்வின்போது பல சிக்கலான பிரச்னைகளை நான் எதிர்நோக்கியிருக்கிறேன். மக்கள் வெற்றிக்கொடியை நாட்டியதையும் பார்த்திருக்கிறேன். அதேபோன்று, சில நேரங்களில் அவர்களின் தோல்விக்கு ஒரு சாட்சியமாகவும் விளங்கியிருக்கிறேன். மக்கள் மட்டுமே வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஏராளமான சோதனைகளுக்கும், துயரங்களுக்கும் மத்தியில் மக்களே இறுதியில் வெற்றியடையப் போகிறார்கள். இந்த உறுதியான நம்பிக்கைதான் ஜோதிபாசுவை நாட்டு மக்களும் குறிப்பாக மேற்கு வங்க மக்களும் ஆழமாக நேசித்ததற்கும், அவர் மக்களை நேசித்ததற்கும் அடிப்படையாக இருந்தது.


ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் என்ற முறையில் ஜோதிபாசுவின் அரசியல் போராட்டம் காங்கிரசுக்கு எதிரானதாகவே இருந்தது. ஆனால் கட்சி மாச்சரியங்களைக் கடந்து காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்கள் பலரிடத்தில் அவர் நட்பும் மரியாதையும் பாராட்டி வந்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, இந்திய வரலாற்றில் வகித்த முக்கியமான பாத்திரத்தை அங்கீகரித்துப் பாராட்ட ஜோதிபாசு தவறியதேயில்லை. தேசிய விடுதலை லட்சியத்தில் தனக்கிருந்த உறுதிப்பாட்டை உலக அரசியலின் இதர முற்போக்கு சக்திகளோடு இணைக்கும் அறிவுத்திறனை நேரு பெற்றிருந்தார் என்று மனந்திறந்து புகழாரம் சூட்டியவர் ஜோதிபாசு. ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவை வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதில் நேரு தீவிர ஆர்வமும், நம்பிக்கையும் கொண்டவராக விளங்கினார். கூட்டுச்சேரா இயக்கத்தை உருவாக்கிய நிறுவனர் என்ற முறையில் அவர் சர்வதேச அரசியலில் எந்தச் சவாலையும் சந்திக்கும் நாடாக இந்தியாவை ஆக்கினார் என்று ஜோதிபாசு குறிப்பிட்டது, நேருவின் வரலாற்றுப் பங்களிப்பு பற்றிய துல்லியமான மதிப்பீடாகும்.


கூட்டாட்சிக் கோட்பாட்டை அங்கீகரிக்காத மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகள் 1975-ம் ஆண்டின் அவசர நிலைமையின்போது உச்சகட்டத்தை எட்டியது.


இதுபற்றி இந்திரா காந்தியிடமே ஜோதிபாசு கேட்டபோது, அரசாங்கத்தின் அறிவுரையைக் கேட்கும் மனோநிலையில் மக்கள் இல்லை. மக்களைச் சரியான பாதைக்குக் கொண்டு வர ஓர் அதிர்ச்சி வைத்தியம் தேவைப்பட்டது என்று அவர் பதிலளித்தாராம். ஆனால், இரண்டாண்டுகளுக்குள்ளாக சர்வாதிகாரத்தை நிராகரித்து, அவசர நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து இந்திய ஜனநாயகப் பாரம்பரியம் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டதை ஜோதிபாசு வியந்து போற்றினார்.


மத்திய, மாநில உறவுகளை ஓர் ஆரோக்கியமான அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டும் என்பதற்காக ஜோதிபாசு காங்கிரசல்லாத மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி இது தொடர்பான ஒரு பிரகடனத்தை நாட்டு மக்கள் முன்வைக்க முயற்சி மேற்கொண்டது இன்றும் கூடப் பொருத்தமானதொரு சீரிய நடவடிக்கையாகும். கூடவே மாநிலத்திற்குள்ளேயே எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் சுயாட்சி அதிகாரங்களை வழங்குவது என்பதையும், மாநில அரசின் அதிகாரங்களைப் பரவலாக்கி உள்ளாட்சி அமைப்புகளைப் பலப்படுத்துவதன் மூலம் ஜனநாயகம் முழுமை பெறும் என்பதையும் நடைமுறைப்படுத்திக் காட்டியவரும் அவரே. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை ஜோதிபாசுவின் ஆட்சிக்காலத்தில்தான் மேற்குவங்கம் பெற்றது. பின்னர் அது அகில இந்திய அளவில் விரிவாக்கம் பெற்றது.


வகுப்புவாத-அடிப்படைவாத அரசியல் என்பது இந்தியாவின் நீண்டகாலப் பாரம்பரியத்துக்கே எதிரானது என்று உறுதியான கருத்தின் அடிப்படையில், ரவீந்திரநாத் தாகூர் வலியுறுத்திய, வேற்றுமையில் ஒற்றுமை என்ற லட்சியத்தையும், மதச்சார்பின்மைக் கோட்பாட்டையும் உயர்த்திப் பிடிப்பதில் ஜோதிபாசு தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர்.


உலகப் போக்குகளிலிருந்து இந்தியா தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள இயலாது என்கிறபோதே, 1991-ல் நம்நாடு உள்நாட்டுப் பொருளாதாரத்தைத் தயார்படுத்திக் கொள்ளாமலேயே தாராளமயத்துக்கு இ ட்டுச் செல்லப்பட்டது என்று ஜோதிபாசு கருதினார். அறுபத்தி இரண்டு ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னும், மக்கள்தொகையில் 10 முதல் 15 சதவிகிதத்தினர் மட்டுமே பயன் அடைந்திருக்கக்கூடிய ஒரு சமூகத்தைத்தான் நாம் உருவாக்கியுள்ளோம். புறக்கணிக்கப்பட்டுள்ள 85 முதல் 90 சதவிகிதம் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நிலை இன்றில்லையே என்பது குறித்துத் தன் வேதனையை வெளிப்படுத்தியவர் ஜோதிபாசு.

÷1998-ம் ஆண்டு நவம்பர் 14 அன்று தில்லியில் ஜவாஹர்லால் நேரு நினைவுச் சொற்பொழிவை ஆற்றியபோது ஜோதிபாசு கூறியது, இன்றைய இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவாலும் அறைகூவலுமாகும். அவர் சொன்னார்: நம்முடைய சமூக-அரசியல் சூழலில் உள்ள மாசுபடுத்தும் கறைகளைப் போக்குவது அவசியமாகச் செய்யப்பட வேண்டிய ஒன்று. பொது வாழ்வில் ஒழுக்கம் என்பது பலியாகி வருகிறது.


இத்தகைய நிலைமைக்கு அரசியல்வாதிகளே பிரதானப் பொறுப்பாளியாவார்கள். இந்தப் போக்கை எதிர்த்துப் போராடுவதற்கான மக்களுடைய உணர்வு அதிகரிக்கப்பட வேண்டும். அழுகிப்போன இந்த நிலைமையைத் தடுத்து நிறுத்துவதில் ஒரு தலையாய பங்கை வகிக்கப் பொறுப்புணர்வு கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் முன்வர வேண்டும்.


வங்கம் தந்த வரலாற்று நாயகனின் இந்த வைரவரிகள் சமூகப் பிரக்ஞை கொண்ட அனைத்துத் தரப்பினரும் நெஞ்சில் பதித்து நிறைவேற்ற வேண்டிய கடமைச் சாசனம்!