Thursday, March 25, 2010

லெளகீக வாழ்க்கையில் இன்னொரு சாமியார்!

திருச்சியிலுள்ள வழிவிடு முருகன் கோவிலின் பூசாரிதான் நான் கடந்த 10 ஆண்டுகளாக சபரிமலை செல்லும்போதும் எனக்கு இருமுடி கட்டி மலைக்கனுப்பும் குருசாமி. மண்ணச்சநல்லூர் அவரது சொந்தவூர், வருடம் முழுவதுமே மாலை போட்டிருக்கும் தீவிர பக்தர் அவர். முதல்தடவை அவரைப் பார்த்ததும் பேசியதும் இன்னும் என் நினைவில்.......வத்தி சுத்திக்கோங்க!
பக்தர்கள் வராதபோது சாமியார் என்னைப் பார்த்து சினேக பாவத்துடன் புன்னகைத்தார். நானும் லேசாகச் சிரித்தேன்.

''தம்பி எந்த ஊரிலிருந்து வர்றீங்க?'' என்று கேட்டார்.

''சென்னையிலிருந்து வர்றேங்க''.

''எத்தனாவது தடவை இது?''.

''முதல் தடவையாக இப்பத்தான் வர்றேன்''.

''சென்னையில் என்ன வேலை செய்றீங்க?''

''தேடிகிட்டிருக்கிறேன்''

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது இடையிடையே பக்தர்கள் வரும்போது பேச்சு தடைப்படும். பக்தர்கள் வராதபோது பேச்சு மீண்டும் தொடரும். கொஞ்சம் ஆருடம் தெரிந்த அவர் என் பிறந்த நாளைக் கேட்டார். அமாவாசை என்றேன். நீங்க தினம் கோயிலுக்குப் போகாட்டியும் பரவாயில்லை. வருடாவருடம் சபரிமலையையாவது சென்று வாருங்கள் என்றார்.

"தம்பி மலை இயற்கை நமக்களித்த மிகப் பெரிய கொடை. மனிதர்கள், கோயில் கட்டலாம். குளம் வெட்டலாம், மாட மாளிகை கட்டலாம். விஞ்ஞானத்தினால் எதை, எதையெல்லாமோ கண்டுபிடிக்கலாம். ஆனால் ஒரு மலையை மனிதன் சிருஷ்டிக்க முடியாது. அதிலும் இந்த மலை நெருப்பை உள்வாங்கி, உள்வாங்கிக் கந்தக மலையாகயிருக்கிறது. மலை, இயற்கை, மரம், இதையெல்லாம் ரசிக்கின்ற மனம், சக மனிதன் மேல் இரக்கம் கொள்வது, மதிப்பது இதெல்லாம் இப்போது தமிழ்க் கவிதைகளில்தான் இருக்கிறது. நானும் நவீன இலக்கியம் படிச்சவன்தான். ரெம்பப் படிச்சதினாலதான் இந்தச் சாதாரண மனிதர்களோடு என்னால் அதிகமாக ஒட்ட முடியலை'' என்றார் சாமியார்.

சாமியாரை நான் இப்போது பார்க்கும் பார்வையில் மதிப்பு அதிகமாகயிருந்தது.

''சரி நேரமாகி விட்டது. நான் அடுத்த முறை வரும்போது அவசியம் உங்களை வந்து பார்க்கிறேன்'' என்று கூறி விடை பெற்றேன்.

அடுத்த வருடம் போகும்போது சாமியாரைப் போய்ப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் சாமியாரின் முகம் பெளர்ணமியானது.

''என்ன தம்பி இப்பத்தான் வர்றீங்களா?''

''ஆமாம் சாமி நேற்று வேலையிருந்தது. அதுதான் லேட்''

''பரவாயில்லை. இன்று மாலை முடிகட்டி இரவே கிளம்பிடலாம்.''

''ஐயா! நீங்க எப்படி சாமியாரானீர்கள்.''

சாமியார் சொன்னதைச் சுருக்கமாகச் சொல்கிறேன். சென்னையில் பெரிய தொழிலதிபர் பெயரைச் சொல்லி, (தமிழ்நாடு பூராவும் அவருக்கு நல்ல பெயரிருக்கிறது) அவரிடம்தான் பதினைந்து வருஷமாக உதவியாளராகப் பணியாற்றினாராம். இந்தத் சபரிமலைக்கு முதல் முதலாக அவரோடதான் வந்தாராம். தனக்கு அவர் பெரிசாக எதுவுமே செய்யலை என்றார். கொஞ்சம், கொஞ்சமாக வாழ்வின் மீது வெறுப்பு வந்து சாமியாரானாராம்.

''அந்தப் பெரிய மனிதர் ரொம்ப நல்லவர் என்று ஊருக்குள்ளே ஒரு பெயரிருக்கிறது. அவர் உங்களுக்கு ஏன் ஒன்றும் செய்யவில்லை?'' என்றேன்.

''இதைப் போய் நீ அவரிடம்தான் கேட்கணும். தம்பி, வாழ்க்கையில் எல்லா மனிதனுமே தன்னைச் சுற்றி ஒரு மாயத் தோற்றத்தைக் கட்டி எழுப்பி வைத்திருக்கிறான். அதை ஒவ்வொரு நிமிடமும் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வருகிறான். அது உடைந்து போனால் வாழ்க்கையே அவனுக்கு நிர்மூலமாகி விடும். ஒரு மனிதனைப் பற்றி உருவாகியிருக்கும் வெளித் தோற்றத்திற்கும் அவன் உள்ளத்துக்கும் சம்பந்தமே கிடையாது. இது நான் அனுபவத்தில் கண்டது.''

கேட்ட எனக்கு ஆச்சரியமாகயிருந்தது.

''ஒரு தடவை சபரிமலை வரும்போது திரும்ப சென்னைக்குப் போக மனமில்லை. இங்கேயே சுற்றித் திரிந்தேன். எனக்கு இந்த ஊர், இந்த மலை, இங்குள்ள மக்கள் எல்லாமே ரொம்பப் பிடிக்கும். இந்த கோவிலிலேயே தங்க ஆரம்பித்தேன். முதலில் என்னைப் பரதேசியாக நினைத்துக் காசு போட்டார்கள். அப்புறம்தான் கெளரவமாகப் பிச்சையெடுப்போம் என்று இதையெல்லாம் வாங்கி வந்தேன். இப்போது நான் சாமியார். மழை, பனி காலமானாலும் இங்கேயேதான் தங்குவேன்'' சொல்லி முடித்தார் சாமியார்.

இப்படித்தான் எனக்கும் அந்தச் சாமியாருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

போனவருடம் போகும்போது அந்த கோவிலுக்குப் போனேன். சாமியாரைக் காணவில்லை. அந்த இடம் வெறிச்சோடிக் கிடந்தது. "என்னாச்சி சாமியாரக் காணவில்லை. உடம்பு எதுவும் சரியில்லாமல் போச்சா?" அருகிலிருந்த இளநீர்க் கடைக்காரனிடம் விசாரித்தேன்.

''அந்தச் சாமியார் ஓடிப் போய்ட்டார் சார்'' என்றான்.

என்னது சாமியார் ஓடிட்டாரா? சாமியாருக்கு யார் மேல கோபம். எதுக்கு ஓடினார். வியாபாரம் நல்லா நடந்துகிட்டிருக்கும்போது கடையை இழுத்து மூடினது மாதிரியிருக்கே. எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. கொஞ்ச நேரம் அந்த இடத்திலே இருந்து விட்டு வந்து விட்டேன்.

பிறகு சென்னையில் நண்பர்களுடன் ஒரு நாள் இரவு வேளச்சேரியில் உள்ள ஒயின்ஷாப்பில்...................சாமியா கும்பிட? சரக்குதான்!

நான் குடிச்சுக்கிட்டிருக்கும்போது அங்கு ஒரு ஆள் குவார்ட்டர் பாட்டிலோட வந்தார். அவரும் என்னைப் பார்த்தார். நானும் அவரைப் பார்த்தேன். இவரை எங்கேயோ பார்த்தது மாதிரி எனக்குத் தோன்றியது.

குடித்துக் கொண்டே யோசனை பண்ணினேன். அவ்வப்போது நானும் பார்ப்பேன், அவரும் பார்ப்பார்.

''உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன் சார். எங்க என்று ஞாபகமில்லை'' என்றேன்.

''திருச்சி வழிவிடு முருகன் கோவில் சாமியார்'' என்றார்.

எனக்கு ஒரே ஆச்சரியம்!

''நீங்க எப்படி சார் மறுபடியும் லெளகீக வாழ்க்கைக்கு திரும்பினீர்கள்?'' என்றேன்.

''எங்கம்மாவுக்கு மூன்று ஆண் குழந்தைகள். நான்தான் மூத்தவன். அப்பா சிறு வயதிலேயே தவறிட்டார். அந்தப் பெரிய மனிதரிடம் நான் வேலை பார்க்கும்போது என் தம்பிகள் இரண்டு பேர்களையும் நல்லா படிக்க வைத்து, வேலையும் வாங்கிக் கொடுத்து திருமணம் பண்ணி வைத்தேன். இவனுக ரெண்டு பேர்களும் என் தாயை நல்லபடியாகக் கவனித்துக் கொள்வார்கள் என்று நினைத்துதான் பதினைந்து வருட போக வாழ்வைத் துறந்து மோன வாழ்க்கைக்குப் போனேன். ஒரு மனிதன் வாழும் தெய்வம் என்று இந்த உலகில் அடையாளம் காட்டணும் என்றால் அவனுடைய தாயைத்தான் அவன் காட்ட முடியும். தாயை விடப் பெரிய தெய்வம் இந்த உலகத்தில் கிடையாது. என் தம்பிகள் இரண்டு பேர்களும் என் தாயை நல்லபடியாகக் கவனிக்காமல் வீட்டை விட்டே துரத்திட்டார்கள். என் தாய் ரோட்டில் பிச்சையெடுக்கிறாள் என்று கேள்விப்பட்ட நான், எப்படி கோயிலில் சாமியாராக இருக்க முடியும். சொல்லுங்க பார்ப்போம்'' என்று சொல்லியபடியே கண்களில் தேங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

''அந்தப் பெரிய மனிதரைப் போய்ப் பார்த்தீர்களா?''

''தேவையில்லை. இப்போ ஒரு வீடு வாடகைக்கு எடுத்து என் அம்மாவோடு இருக்கிறேன். ஒரு பிரஸ்ல வேலை பார்க்கிறேன். என் அம்மா இறந்த பிறகுதான் லெளகீக வாழ்வைத் துறந்துட்டு சாமியாராகப் போவேன்'' என்றார். ''வர்றேன் சா(மி!)ர். மீண்டும் சந்திப்போம்'' என்று கூறி விடை பெற்றேன்.

வீட்டுக்கு கார் ஓட்டிட்டு வரும்போது யோசனை பண்ணினேன். இவருக்கு இவர் தாய் மேலிருக்கும் பாசம் ஏன்? இவர் தம்பிகளுக்கில்லாமல் போனது. வாழ்க்கைக்கு இன்னொரு பெண் துணை வந்ததும் பெற்ற தாய் மேல் உள்ள பாசம் குறைந்து விடுகிறதே. இவரும் திருமணம் பண்ணாமலே இருக்கட்டும் என்று அந்த ஐய்யப்பனை வேண்டிக் கொண்டேன்.

Wednesday, March 24, 2010

ஏன் என்று சொல்லுங்கள் பார்ப்போம்?

ஒரு ஊருல ராஜா இருந்தாராம், நல்ல ஆட்சி செய்தாராம்.ஆனால் அவரது அமைச்சரைப் பற்றி அவ்வப்போது அரசால் புரசலாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் அவர் காதில் விழுந்தனவாம். எந்த அரசாங்கக் காரியமானாலும் அவருக்கு 'வெட்டு' உண்டு என்றார்கள். ஊரெல்லாம், நாடெல்லாம் நிலம் வாங்கி குவித்து வருகிறார் என்றார்கள். அவரிடம் தனிக் கருவூலமே இருக்கிறது என்றார்கள். இந்தக் குரல் மெல்ல வலுவடைந்து அரண்மனைப் பக்கம் நகர்ந்து, அரசவையின் அத்தாணி மண்டபத்தையே அடைந்தது ஒரு நாள். ராஜா இனியும் தாமதிப்பது தமக்கே தீங்கு என உணர்ந்து 'விசாரணைக் கமிஷன்' போட்டார்.

கமிஷனின் தீர்ப்பு அமைச்சருக்கு எதிராக அமைந்தது. கடும் சிறை வாசமே தண்டனை என்றாயிற்று. ராஜாவோ பார்த்தார். அந்த அமைச்சர் பரம்பரை, பரம்பரையாக அமைச்சுப் பணியில் இருப்பவர். ஆகவே, அவருக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று யோசித்தார். 'பளிச்'சென்று ஒரு கருத்து மின்னலிட்டது . அரசவையைக் கூட்டினார். தண்டனையை அறிவித்தார். தண்டனையின்படி மறுநாளே அமைச்சர் இரு உதவியாளர்களுடன் கடற்கரைக்குச் சென்று கூடாரம் அமைத்துக் கொண்டு, கடல் அலைகளைக் கணக்கிட்டு நாள் தோறும் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்பது ஆணை.

"கடல் அலைகளைக் கணக்கிடுவதா. மாட்டிக்கொண்டார் அமைச்சர்" என்று அனைவரும் மகிழ்ந்தனர். அவையே திடுக்கிடும் வகையில் அமைச்சர் உடனே ஒப்புக்கொண்டார். சொன்னபடி மறுநாள் முதல் தனது பணியை நிறைவேற்றத் தொடங்கினார்.

சில நாட்கள் ஆயின. கணக்கு வந்த வண்ணம் இருந்தது. ராஜாவுக்கு சரிவர ஆராயாமல் தண்டனை தந்துவிட்டோமோ என்ற கவலை சூழ்ந்தது. அதே நேரத்தில் 'கிசு கிசு' எந்திரம் 'க்றீ'ச்சிடத் தொடங்கியது. அமைச்சர் முன்பு இருந்ததை விட அதிகமாக லஞ்சம் வாங்குகிறார் என்று வதந்தி பரவியது. உளவுத் துறையைக் கேட்டார். தயக்கத்துடன் 'ஆமாம் 'என்றார்கள். ராஜா யோசித்தார். மாறு வேடம் புனைந்து நேரில் பார்த்து விடுவது என்று முடிவு செய்தார்.

மறுநாள் காலையில் மாறுவேடம் பூண்ட ராஜா கடற்கரை சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை திடுக்கிட வைத்தது.

ஏன் என்று சொல்லுங்கள் பார்ப்போம்?

Tuesday, March 23, 2010

கதை கதையாம் காரணமாம்....

கங்கைக் கரை ஓரமாக உள்ள ஒரு கிராமத்தில் வாழும் யாதவகுலப் பெண்கள் சிலர் தினமும் தலையில் மோர், தயிர் மற்றும் வெண்ணெயைக் கலயங்களில் சுமந்து கொண்டு கங்கையின் மறுகரையிலுள்ள கிராமங்களில் விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தனராம். தினம்தோறும் காலையில் ஓடத்தில் கங்கையைக் கடப்பதும், சாயங்காலம் அதேபோல ஓடத்தில் ஏறித் தங்கள் கிராமத்துக்குத் திரும்புவதும் வழக்கமாம்.

ஒருநாள் மாலையில் மறுகரையில் இருந்த ஓடத்துக்காகக் காத்திருந்த அந்த யாதவப் பெண்களை அருகிலிருந்த கிருஷ்ணன் கோயிலில் நடந்து கொண்டிருந்த உபந்நியாசம் கவர்ந்திழுத்தது. அந்தப் பெண்களும், பக்தர்கள் கூட்டத்துடன் அமர்ந்து கேட்டனர். ஓடத்தில் ஏறித் தங்களது வீட்டுக்கு வந்த பிறகும், அந்தப் பெண்களின் மனதிலிருந்து உபந்நியாசகர் சொன்ன ஒரு கருத்து அகலவில்லை. நமது பக்தி அப்பழுக்கில்லாததாகவும், முழுமையானதாகவும் இருக்க வேண்டும். அப்படி இருக்குமேயானால், நமக்கு அளப்பரிய சக்தி ஏற்பட்டுவிடும். உதாரணத்துக்கு, "கிருஷ்ணா" என்று மனதை ஒருமுகப்படுத்தி வேண்டினால், கங்கையைக்கூட நடந்து கடந்து விடலாம் என்பதுதான் அந்த மோர் விற்கும் யாதவப் பெண்களை மிகவும் பாதித்த கருத்து.

அடுத்த நாள் அதிகாலையில் கங்கைக்கரையில் கூடிய அந்தப் பெண்கள் தாங்கள் ஏன் உபந்நியாசகர் சொன்னதைச் செய்து பார்க்கக்கூடாது என்று நினைத்தனர். கள்ளங்கபடமற்ற அந்தப் பெண்கள் கண்களை மூடி, மனதை ஒருமுகப்படுத்திக் கண்ணனை நினைத்தபடி, தயிர்க் கலயங்களுடன் நடக்கத் தொடங்கினர். என்ன அதிசயம்? நிஜமாகவே அவர்கள் கங்கையை நடந்து கடந்துவிட்டனர்.

அன்றுமுதல் தினமும் கண்ணனை நினைத்தபடி கங்கையை நடந்து கடக்கத் தொடங்கிய அந்தப் பெண்கள் ஓடக்காரனுக்குக் கொடுத்து வந்த கூலியை ஓர் உண்டியலில் சேர்த்து வைத்தனர். தங்களுக்கு இறையுணர்வை ஏற்படுத்திய, கங்கையை நடந்து கடக்க வழிவகை செய்த மகானான உபந்நியாசகரைத் தங்களது கிராமத்துக்கு அழைத்து வந்து கௌரவிக்க வேண்டும் என்கிற அவர்களது ஆசையை கிராமத்தவர்களும் ஆமோதித்தனர்.

உபந்நியாசகரும் ஒப்புக்கொண்டார். குறிப்பிட்ட நாளும் வந்தது. அந்தப் பெண்கள் உபந்நியாசகரை அழைத்துக் கொண்டு கங்கைக் கரைக்கு வந்தனர். மறுகரையில் தெரிவதுதான் தங்களது கிராமம் என்று உபந்நியாசகருக்குக் காட்டினார்கள். உபந்நியாசகர் கேட்டார்-"எங்கே ஓடம்?"

"ஓடமா?, நீங்கள் சொல்வதுபோல நாங்கள் "கிருஷ்ணா" என்றபடி நடந்துதான் போகிறோம்" என்றபடி அந்தப் பெண்கள் கங்கையின் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் நடக்கத் தொடங்கினர். உபந்நியாசகர் விட்டால் போதும் என்று பிடித்தார் ஓட்டம். எதற்கு இப்போ இந்த கதை என யோசிக்கிறீர்களா? ஊருக்கு உபதேசம் செய்யும் சிலபல பிரபல பதிவர்களுக்கு!

Tuesday, March 16, 2010

உள்ளூர பயம்!

என் விடலைப்பருவத்தில்
வெறித்துப்பார்த்து சிரித்த
வில்லங்க ஆண்களை
விவரமறியாமல் விட்டுவைத்தேன்
உள்ளூர பயம்!

பருவம் வந்தபின்
பள்ளி-கல்லூரி போகவர
பாதகர்களென்னை பார்வையிலேயே
அளவெடுக்க, கண்டும் காணாமலும்
விட்டேன், உள்ளூர பயம்!

எப்படியெல்லாமோ நூல்விட்டு
யாரையெல்லாமோ தூதனுப்பிய
கலிகால காந்தர்வர்கள்! - காதலை
எதிர்க்கவும் ஏற்கவுமியலாமல்
உற்றார் உறவிடமும் சொல்லாமல்
புதைந்தவை, உள்ளூர பயம்!

இரவு நேர பேருந்து
பயணத்தின் அரை உறக்கத்தினூடே...
ரகசியமாய் இடை வருடும்
பின் இருக்கை மிருகம்...
காமமும் கோபமும் ஒருசேர கிளர்ந்தெழ,
வருடலின் சுகம் மீறியும்
பளாரென அறைகிறேன்...
என் வருகையை எதிர்நோக்கி
தலையணை கட்டித்தூங்கும்
கணவன் முகம் நினைத்து...

Sunday, March 14, 2010

பேசாம கிரிக்கெட் வெளையாட கத்துக்கோங்க!

கிரிக்கெட் வருமானத்தின் இன்னொரு பரிணாம வளர்ச்சியாக, ஐ.பி.எல்., என்ற அமைப்பு துவக்கப்பட்டு, பல ஆயிரம் கோடிகளை குவித்து வருகிறது. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள், கடந்த 12ம் தேதி துவங்கி, 45 நாட்கள் நடக்க உள்ளன. இந்த காலகட்டம், மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடக்கும் சமயம். இரவு 12 மணி வரை, மாணவர்களை டிவி-முன் உட்கார வைத்து ஐ.பி.எல்., சம்பாதிப்பதால், மாணவர்களது படிப்பு கடுமையாக பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமா? ஐ.பி.எல்., அமைப்பில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்கத் திட்டமிட்டுள்ளனர். அதன் மூலம், அடுத்த ஆண்டு 90க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்படுமாம். இந்த அணியை வாங்க, குறைந்தபட்ச கேட்புத் தொகை 1,100 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல், ஏலம் கேட்டு அணியை வாங்க வேண்டும். ஓர் அணிக்கு 1,100 கோடி ரூபாய் என்றால், மொத்தமுள்ள 10 அணிகள் மூலம் எவ்வளவு சம்பாதித்திருக்கும் இந்த ஐ.பி.எல்.,? இந்த சம்பாத்தியத்தின் மூலம் மக்களுக்கு அல்லது ரசிகர்களுக்கு கிடைத்தது ஒன்றுமில்லை. கிரிக்கெட் போட்டிகளைக் கூட, டிவி-யில் இலவசமாக பார்க்க முடியாது. கட்டணச் சேனல்கள் மூலம் ஒளிபரப்பப்படுவதால், ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு, டிவி-சேனலுக்கு பணம் கட்ட வேண்டியுள்ளது.

இந்தியாவில் உள்ளது போன்ற கிரிக்கெட் மோகம், வேறு எந்த நாட்டிலும் கிடையாது. கிரிக்கெட் மட்டைகளோடு திரியும் சிறுவர்களை, நாடு முழுவதும் காணலாம். சிறிய காலியிடம் இருந்தால் கூட அங்கு நான்கு பேர், குச்சியை நட்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு சிறுவனும், தான் சச்சினாக வேண்டும் என்று கனவு கொண்டிருக்கிறான். ஆனால், நிஜத்தில் அதற்கான வாய்ப்பு எவ்வளவு தூரம் இருக்கிறது என்பது, மிகப் பெரிய கேள்விக்குறி. தேசிய அணியில் அதிகபட்சம் 15 பேர் தான் இடம்பிடிக்க முடியும். சரி, மாநில அணியிலாவது வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கினாலும், அதில் பெரிய இடத்து பிள்ளைகள் மற்றும் கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டப்பட்டவர்கள் தான், எளிதாக நுழைய முடிகிறது.

தென்மாநிலங்களை சுனாமி தாக்கியபோது, கிரிக்கெட் வாரியம் முன்வந்து ஒரு பைசாவாவது செலவிட்டதா? அதேபோல, நாட்டின் பல்வேறு பகுதிகளில் புயல், பூகம்பம் தாக்கியபோதெல்லாம் இந்த கிரிக்கெட் ஹீரோக்களும், வாரியமும் எங்கு இருந்தனர் என்பதே தெரியாது. தமிழகத்தில் சுனாமி தாக்கியபோது, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தான் இங்கு ஓடோடி வந்து, மக்களோடு மக்களாக தங்கியிருந்து, வீடு கட்டித் தர உதவினார். அதே நேரத்தில், இங்குள்ள ஹீரோக்களும், கிரிக்கெட் மூலம் கோடிகளை சம்பாதித்த ஹீரோக்களும் எட்டிப் பார்க்கவில்லை. இந்தியாவில், "டிவி' மற்றும் நேரடி ஒளிபரப்பு வசதிகள் வருவதற்கு முன், அதாவது, 30 ஆண்டுகளுக்கு முன், மேல்தட்டு பிரமுகர்களின் விளையாட்டாகவே கிரிக்கெட் இருந்தது. "டிவி' நேரடி ஒளிபரப்புடன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் தலைதூக்கியதும், மற்ற விளையாட்டுகளை நம் மக்கள் மறந்தே போய்விட்டனர். ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளை எடுத்துக் கொண்டால், மொத்தமே ஒன்றரை மணி நேரம் தான். போட்டி துவங்கும் முன், இடைவேளை மற்றும் போட்டி முடிந்த பின் என, மூன்று சமயங்களில் மட்டுமே விளம்பரங்கள் செய்ய முடியும். ஆனால், கிரிக்கெட்டில் ஓவர் முடிந்ததும், விக்கெட் விழுந்ததும், பந்து பவுண்டரி தாண்டும்போது, என, நிமிடத்துக்கு நிமிடம் விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வருமானமோ, பல கோடி ரூபாய்.

நிலைமை இப்படி இருந்தும், தங்களது குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற பெற்றோர், அவர்களுக்குத் தேவையான கிரிக்கெட் சாதனங்களை பல ஆயிரம் ரூபாய் செலவழித்து வாங்கித் தருகின்றனர். அதுமட்டுமா, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பயிற்சி அளிப்பதாகக் கூறி, பள்ளிகளில் பணம் கறக்கும் நிலைமையும் உள்ளது. குறிப்பாக, கோடைக்கால பயிற்சி முகாம் எனக் கூறி, சிறுவர்களிடம் ஆயிரக்கணக்கில் பறித்து விடுகின்றனர். ஆனால், உருப்படியான பயிற்சி எதையும் அளிப்பதாகத் தகவல் இல்லை. மக்களின் இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி, இந்திய கிரிக்கெட் வாரியம் கோடிகளை குவித்து வருகிறது. போதாத குறைக்கு, ஆடு, மாடுகள் போல கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர். உதாரணமாக, தமிழகத்தை எடுத்துக் கொண்டால், சென்னையைத் தவிர சர்வதேச போட்டிகள் நடத்துவதற்கான மைதானம் ஏதும் இல்லை. உலகக் கோப்பைக்காக, சென்னையை ஒட்டி மிகப் பிரமாண்டமான மைதானம் கட்ட, தமிழக அரசிடம் இருந்து நிலம் வாங்கிய கிரிக்கெட் வாரியம், அதை கட்டும் திட்டத்தை கைவிட்டது.

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பெராரி கார், பரிசுப் பொருளாய் கிடைத்தது. வெளிநாட்டு காரை நேரடியாக இறக்குமதி செய்யும்போது, 100 சதவீதம் வரி கட்ட வேண்டும் என்பது விதி. அந்த வகையில், அவர் கட்ட வேண்டிய வரி, ஒரு கோடி ரூபாய். புண்ணியவான் என்ன செய்தார் தெரியுமா? காரே ஓசி; அதற்கான வரியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என எழுதிக் கேட்டு, வாங்கியும் விட்டார். இப்படி வழங்கப்பட்ட கோடிகள், அளிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் திரும்பப் பெற்று, நாட்டிலேயே அதிகமான வரியை கிரிக்கெட் வாரியத்துக்கு விதிக்க வேண்டும். அதன் மூலம் வசூலாகும் தொகையை, ஏழை மக்களுக்குப் பயன்படுத்தாவிட்டாலும், கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காவது பயன்படுத்த வேண்டும். அதை விடுத்து, கிரிக்கெட்டைப் பயன்படுத்தி, ஏதோ ஒரு சில தனி நபர்கள் பண முதலைகளாவதை அனுமதிப்பது, மக்களை முட்டாளாக்கும் செயல்.

இப்போதுள்ள கிரிக்கெட் வாரியம், அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக் குள் வைத்துக்கொண்டு, தான் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறது. வாரியத்தில் உள்ளவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மிகப் பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் தான். மாநில மற்றும் தேசிய அளவில் கிரிக்கெட் வாரியத்துக்கான உறுப்பினர், தலைவர் தேர்தலின்போது நடக்கும் அடாவடிகள், வாய் பிளக்க வைப்பவை. கை மாறும் கோடிகள், ஆள் பிடிக்கும் குதிரை பேரங்கள், கோர்ட் படியேறும் கூத்துக்கள் என, அத்தனையும் தடாலடி தான். இப்படி பதவியைப் பிடிக்கும் நபர்கள் யாரும், கிரிக்கெட் வாரியம் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் இல்லை. அப்படி இருக்கும் போது, கிரிக்கெட் வாரியம் சம்பாதிக்கும் கோடிகளை, நாட்டின் வளர்ச்சிப் பணிக்கு செலவழிக்கலாம் அல்லது ரசிகர் பயனடையும் வகையில், அவர்களிடம் குறைந்த கட்டணம் வசூலித்தல், இலவச பயிற்சிகள், இலவசமாக போட்டிகளை, டிவி-யில் பார்க்கும் வசதி போன்றவற்றை வழங்கலாம். இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியது, மத்திய, மாநில அரசுகள் தான். வீரர்கள், வாரியம் என, இவர்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வரியைப் போட்டுத் தாளிக்க வேண்டிய அரசுகள், அவர்களுக்கு வரி விலக்கு அளித்து, சாமானிய மக்களின் வயிற்றில் நெருப்பைக் கொட்டுகின்றன.

Wednesday, March 10, 2010

காதற்போயின் சாதல்!

ஒரு நிமிஷம் கவியென மெல்லிய தாய் ஒலித்த குரல் கேட்டு திரும்பினாள் கவி.

அவளின் முகம் பார்த்த நிலையில் அடுத்த வார்த்தை வராதவனாய் அப்படியே ஸ்தம்பித்து மௌனமாய் சில நொடிகள் நின்றான் பிரபா!

ஏன் கவி, என்னை நீ என்னைக்கும் புரிஞ்சுக்க மாட்டியா, நா . உன்னை உண்மையிலே நா மனசார விரும்புறேன். என் மனசு எல்லாம் நீ தானியிருக்கிறாய்.

நீ மட்டும் எனக்கு கிடைக்கலைன்னா நா கண்டிப்பா சூசைட் பண்ணிக்குவேன் அதில எந்தவித மாற்றமும் இல்லையென அவன் பேசியதில் கண்களில் ஒருவித வெறி தெரிந்தது.

ஒரு நிமிடம் கவி ஆடி போய் விட்டாள். உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்காயென்னா? இப்படி கண்டபடி பேசற.

நீ நல்ல பையன் தான். அழகாகவும் அடக்கமாகவும் தானிருக்கிற. ஆனா, நீ சின்ன கிராமத்துல பொறந்தாலும் பல மைல் தூரமுள்ள பக்கத்து ஊருக்கு கஷ்டப்பட்டு பல நாட்கள் நடந்தே ஸ்கூலுக்குப் போயி நல்லபடியா 12 வது வகுப்பு வரை விடாத முயற்சியோடு படிச்சு முதல் மாணவனா எக்ஸாம்ல வெற்றி பெற்று வந்திருக்கிற.

உன்னுடைய கஷ்டத்தோட பலனா நல்ல மார்க்குபெற்று காலேஜ் அட்மிஷன் கிடைச்சிருச்சு என்ன, என்னை அப்படி ஆச்சர்யமா பாக்குற. எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்ன்னு யோசிக்கிற அப்படித்தானே அவளின் கேள்விக்கு அவன் தலையசைத்தான் ஆமாம்யென்பது போல்.

பற்கள் பளிச்சிட அவள் சிரித்தாள். இதெல்லாம் பர்ஸ்ட் டே நாம காலேஜ்க்கு வந்தன்னைக்கு நாம நம்மளை அறிமுகப்படுத்திக்கிட்டப்போ நீ சொன்னது. இதுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு யோசிக்கிறியா? இருக்கு! உன்னுடைய குடும்பம் ஏழைக் குடும்பமாயிருந்தாலும் உன்னை எப்படியாவது ஒரு பட்டதாரியா ஆக்கிடணும்னு உங்கப்பாவும் அம்மாவும் வயக்காட்டுல வெயில் மழைன்னு பாக்காம உடம்பை கூட சரியா கவனிச்சுக்காம உழைச்சு ஓடாய் ஒவ்வொரு நாளும் தேஞ்சுக்கிட்டு இருக்காங்க. ஒண்ணுக்கு பத்தா வட்டிக்கு கடன் வாங்கியாவது உனக்கு எப்படியாவது ஒரு நல்ல வாழ்க்கைப்பாதையை அமைக்க தங்களோட சுய கவுரவத்தையும், உயிருக்கும் மேலான குடும்ப மானத்தையும் அடமானம் வைக்கிறாங்க.

அண்ணன் படிச்சு வந்து நல்ல வேலைக்கு போயி கைநிறைய சம்பாரிச்சு தனக்காக வரன் தேடி தன்னை வாழ வைப்பான்னு கல்யாணக் கனவு கண்டுக்கொண்டிருப்பாள் உன் தங்கை. இப்படிப்பட்ட ஆசைகளை அழிக்கப் போகும் இந்த காதலை நான் ஏற்கவா சொல்லு பிரபா?

நாம இப்பதான் காலேஜ் வாசலை அடியெடுத்து வச்சிருக்கிறோம். அதுக்குள்ள நமக்கு இந்த காதல் தேவையா? காதல் வேண்டாம்ன்னு சொல்லலை ஆனா அது இப்ப வேணாம். உன்னை பெத்தவங்களுடைய ஆசையையும் எதிர்பார்ப்பையும் இந்த காதலால இழந்து விடாதே! திரும்ப பெற முடியாது.

கடமையை நிறைவேற்ற நல்லா படி பிரபா. நல்ல மார்க். வாங்கி ரேங்க் ஹோல்டரா வா. அப்புறம் நல்ல வேலையை தேடிக்கிட்டு எல்லா கடமையையும் நிறைவேத்திட்டு வா! அப்ப நம்ம காதல் பற்றி பேசுவோம் என இத்தனை நாள் மனதில் பூட்டி வைத்திருந்த எண்ணத்தை வெளிப்படுத்திய நிறைவோடு தோளிலிருந்து இறங்க காத்திருந்த துப்பட்டாவை புத்தகங்களை பிடித்திருந்த இரு கரங்களின் ஒன்றில் அதனை தோளுக்கே உயர்த்தி அவனுடைய பதிலுக்கு காத்திராமல் நடை போட்டாள் அவள்.

பிரபா கிளாஸை விட்டு வெளியேறிய புரொபசரை நோக்கி நடையில் வேகத்தை கூட்டினான். நடையில் மட்டுமல்ல மனதிலும். தவற விட்ட முன் பீரியடை பற்றிய குறிப்பு வாங்க!

பிரபா நானுமில்லை! அந்த கவி என் மனைவியுமல்ல!!

Tuesday, March 9, 2010

மகிழ்வித்து மகிழ்

மகிழ்வித்து மகிழ்
அங்கொன்றும் இங்கொன்றுமாயில்லாமல்
நல்ல நண்பனை...
பரபரப்பில்லாத மனதை...
இனம் புரிந்த மனைவியை...
கலவர பூமியில்
மகிழ்வித்து மகிழ் எங்கும்.

பிரபஞ்சப் பெருவெளியில்
ஜனனக் குரலாய்
பல திசை இரைச்சல்கள்.
அண்ட சராசரத்தின்
சவ்வு கிழிய
நெரிசல் வாழ்க்கையின்
ஈரக்கசிவுகள்
வழிநெடுகத்
மகிழ்வித்து மகிழ் எங்கும்.

காய்ந்த தலையும்
வெறித்த பார்வையும்
இளமையில் முதிர்ச்சியும்.
நம்
சந்ததியர்களுக்கு விட்டுச்
செல்வது
அமில நீரும்...
விஷக்காற்றும்...
மகிழ்வித்து மகிழ் எங்கும்!

Wednesday, March 3, 2010

தி(.மு.க)ட்டமிட்ட செயல்! - சுவாமிஜி-ரஞ்சிதா!!சன்-நக்கீரன் மற்றும் பிரபல பதிவர்களுக்கு

பிரபலபதிவர்களே, படித்துவிட்டு உங்கள் கருத்தையும் எழுதிவிட்டு செல்லுங்கள்! உங்களைப்போல் நான் கூட்டம் சேர்த்து கும்மியடிக்க முடியாது! நடிகை ரஞ்சிதா, சுவாமிஜி நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு மேலும் இதை விளக்குவதற்கு வார்த்தைகளில்லை என்று தியான பீடத்தின் பணிகள் குறித்து ஆசிரம வட்டாரம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறியுள்ளனர்.

திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். இவருக்கு தமிழகத்திலும், கர்நாடகாவிலும் ஆசிரமங்கள் உள்ளன. பெங்களூருவில் மைசூர் சாலையில் உள்ள பிடுதி பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்தியானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் உள்ளது. இதுதான் நித்தியானந்தாவின் ‌தலைமையகம். 32 வயதே நிரம்பிய நித்தியானந்தா, கதவை திற காற்று வரும் என்ற தலைப்பில் போதனைகளை கூறி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டிருக்கும் அவர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அவரது பக்தர்களை பெரும் கடுப்பேற்றியுள்ளது.

பெங்களூருலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் பிடுதி என்னும் ஊரில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் நித்யானந்தர் ஆசிரமம் அமைந்துள்ளது. நேற்று காலை 9 மணியளவில் திமுக-வின் பணயுதவியில் ஜெய் கர்நாடகா அமைப்பினர் 100 பேரும், பிரவீன் குமார் ஷெட்டியின் ரக்ஷன வேதிகே அமைப்பினர் 15 பேரும் ஆசிரமத்திற்கு வந்தனர். அவர்களை ஆசிரமத்திற்குள் நுழைய போலீசார் அனுமதிக்க வில்லை. ஆசிரமத்தின் பின் பக்கம் வழியாக உள்ளே நுழைந்தனர். வாசல் பகுதியில் இருந்த நித்யானந்தரின் பேனர்கள், படங்களை கிழித்தெறிந்தனர். அப்பகுதியில் இருந்த கண்ணாடி கூண்டிலான போலீஸ் அவுட் போஸ்ட்டை அடித்து நொறுக்கினர். அந்த இடத்தில் போலீசார் அதிகமாக இருந்ததால், அதற்கு மேல் யாரும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இரண்டு மணி நேரம் அங்கிருந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, நித்யானந்தர் படத்திற்கு செருப்பு மாலைகளை அணிவித்தும், செருப்பால் அடித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். ஆசிரம காம்பவுண்ட் சுவர் அருகிலுள்ள ஆசிரம குடிசைகள் திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் நான்கு குடிசைகளும், அப்பகுதியிலுள்ள மரங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. தீப்பிடித்து எரிந்த குடிசை வீடுகளில் எரிந்த நிலையில் படுக்கைகள் காணப்பட்டன. ஒவ்வொரு குடிசையிலும் இதுபோன்ற படுக்கைகள் எரிந்து சாம்பலாகியிருந்தது. தீப்பிடித்த பகுதிகளில் பாம்புகள் கருகிக் கிடந்தது தெரியவந்தது.

சேலத்தில், நித்யானந்தாவுக்கு எதிராக திமுகவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர அமைப்பாளர் பிரவீண் குமார் தலைமையில் பெரியபுத்தூர் பகுதியில் உள்ள நித்யானந்தா தியான மடத்துக்கு 15க்கும் மேற்பட்டவர்கள் நேற்று சென்றனர். தியான மடத்தின் போர்டை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உடைத்து நொறுக்கினர். மடத்துக்குள் புக முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் அங்கு திமுக-வினர் திரளாக வரத்துவங்கினர். அதனால், அங்கு அசம்பாவிதம் ஏற்படும் என்ற பீதியில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் அங்கிருந்த கூட்டத்தினரை கலைந்து செல்லுமாறு கூறி கலைத்தனர். அப்போது, இந்து மக்கள் கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் சிவபாபு அங்கு வந்து ஆசிரமத்தை மூடிவிட்டு, "ஆசிரமத்துக்குள் இருப்பவர்கள் அனைவரும் வெளியே செல்லுங்கள்” என கூறி கூச்சலிட்டார். போலீசார் அவரை மடக்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பின், அவரை பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி கைது செய்திருக்கலாம், செய்யவில்லை!

இந்நிலையில் ஆஸ்ரமத்தில் இருந்த நித்ய சத்யானந்த சுவாமிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மார்ச் 2ம் தேதி இரவில் வெளியான தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடம் பெற்ற தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. இந்த காட்சிகள் அனைத்திலும் கிராபிக்ஸ் செய்யப்பட்டு, திட்டமிட்டு சதி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளோம். விரைவில் இது குறித்து முடிவு செய்யப்படும். இந்த நேரத்தில் நாங்கள் பக்தர்களுக்கும், அபிமானிகளுக்கும் எங்களின் நிலைமையை தெளிவாக கூறுகிறோம். இதனால், மிகவும் மனமுடைந்த நிலையில் உள்ளோம். எங்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து பக்தர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

பொது வாழ்க்கையில் ஏழு ஆண்டுகளாக நித்யானந்த சுவாமிகள், பல சேவைகளை செய்துள்ளார். பல்வேறு நாடுகளிலிருந்து 20 லட்சம் பக்தர்கள், நித்யானந்த சுவாமிகளின் ஆதரவாளர்களாக உள்ளனர். வாழ்க்கையின் தத்துவம் குறித்து பல்வேறு நாடுகளில் சுவாமிகள் விளக்கியுள்ளார். இந்த நேரத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு மேலும் இதை விளக்குவதற்கு வார்த்தைகளில்லை என்று தியான பீடத்தின் பணிகள் குறித்து நீண்ட விளக்கமளித்துள்ளனர்.

சுவாமி நித்யானந்தா தொடர்பான காட்சிகளை ஒளிபரப்புவதையும், செய்திகள் பிரசுரிப்பதையும் தடை செய்யக் கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சன் தொலைக்காட்சியில் சுவாமி நித்யானந்தா நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையிலுள்ள சிவில் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனு விவரம்: உலகம் முழுவதும் 17 நாடுகளில் 45 லட்சம் பக்தர்கள் எனக்கு உள்ளனர். ஏழைகளுக்கு இலவச கல்வி, மருத்துவ உதவி போன்ற பல்வேறு சேவைகளை அளித்து வருகிறேன்.

எனது ஆசிரமத்தில் பணிபுரிந்த திமுக-வின் கையாள் பிரேமானந்தா (எ) லெனின் கருப்பன் என்பவர் என் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் இந்த விடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார். இதில் எனது உருவம் "மார்ஃபிங்” முறையில் பொருத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான காட்சிகளை தொடர்ந்து வெளியிட்டால் எனது பெயருக்கு களங்கம் ஏற்படும்.

எனவே, இந்தக் காட்சிகளை வெளியிடுவதற்கும், இதுதொடர்பான செய்திகளைப் பிரசுரிக்கவும் தடைவிதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. சென்னை நகர 15-வது உதவி நீதிபதி மாணிக்கவாசகர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி, வழக்கை மார்ச் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

வழக்காடிப் பார்ப்போம்! கண்ணால் கண்டது பொய்யா, காதால் கேட்டது பொய்யா?எனத்தெரியும்!!! அதுவரை நாட்டின் நல்லது கெட்டது அலசிப்பார்க்க நிறையவுள்ளது.... அதைப்பற்றி பேசுங்கள் எழுதுங்கள்...சன்-நக்கீரன் மற்றும் பிரபல பதிவர்களே.