Sunday, October 25, 2009

சூர்யாவுக்கு டாப்பூ, விஜய்க்கு ஆப்பூ - கலைஞர் குடும்ப சதி!!

புதிய "வேட்டைக்காரன்" படத்தை பாரம்பரியம் மிக்க ஏவி.எம். நிறுவனம் சார்பாக ஏவி.எம்.பாலசுப்ரமணியனும் பி.குருநாத்தும் தயாரிக்க, நடிகர் விஜய் நடித்திருக்கிறார்.
அவரோடு, தெலுங்கின் முன்னணி நடிகை அனுஷ்கா கை கோர்த்திருக்கிறார் கதாநாயகியாக! வியாபார ரீதியான இயக்குநர் தரணியின் உதவியாளர் பாபு சிவன் இயக்க விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

ஆக, ஒரு கமர்ஷியல் திரைப்பட கூட்டணியின் பின்புலத்தோடு கடந்த ஆண்டு இறுதியில் "வேட்டைக்காரன்" வெற்றிக் கனவோடு பயணிக்கத் தொடங்கினான். கடந்த இரண்டு வருடங்களாக, அவ்வப்போது தனது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி, மன்றத்துக்கென தனிக்கொடி, இயக்கம், இலச்சினை (ப்ர்ஞ்ர்) உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் விஜய்யின் இந்தப் பயணத்தை அரசியலில் வெற்றிக் கூட்டணி அமைத்து வருபவர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர்.

சுமார் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுவதாக எதிர்பாராத அறிவிப்பு வந்தது. பொதுவாக, எந்த நிறுவனம் தயாரித்த படமாக இருந்தாலும் அதை தங்களது விளம்பர சக்தியைக் காட்டி மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதே சன் பிக்சர்ஸின் வழக்கம் எனக் கூறப்படுவதுண்டு. அப்படிப்பட்ட படங்கள் ரசிகர்களின் மனதில் இடம்பெறாவிட்டாலும் கூட சன் டி.வி.யின் "டாப் டென்" பட வரிசையில் முதலிடம் பெற்றுவிடும்.

படத்தைத் தயாரித்து வியாபாரம் செய்ய முடியாமலோ அல்லது பணம் குறைந்தால் கூட பரவாயில்லை; நல்ல விளம்பரம் கிடைக்கும்; அதை வைத்து அடுத்த படத்தில் காலூன்றிவிடலாம் என நினைப்போர் தங்களது படங்களை "சன்" வசம் தருவதாகவும் பேச்சு உண்டு. விளம்பரங்களில் ஏவி.எம்.மின் "வேட்டைக்காரன்", இளைய தளபதியின் "வேட்டைக்காரன்" என்றெல்லாம் பயன்படுத்த முடியாது; சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் "வேட்டைக்காரன்" என்றுதான் வரும். அதனால் வேட்டைக்காரனாக இருந்துகொண்டு சன் பிக்சர்ஸ் கூண்டில் அடைபடுவதை விஜய் தரப்பும் தயாரிப்பு தரப்பும் ஆரம்பத்தில் விரும்பவில்லை என்றே அவர்களது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சன் பிக்சர்ஸ் வசம் படம் போய்விட்டால் தங்களுக்கு சென்னை ஏரியா விநியோக உரிமை கிடைக்காது என்பதும் விஜய் வட்டாரத்தில் மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஆனாலும் என்ன காரணத்தாலோ, வேறு வழியில்லாமல் வேட்டைக்காரனே வலையில் சிக்கிக்கொண்டான். படம் சன் பிக்சர்ஸ் வசம் மாறியது, விஜய் தரப்பே எதிர்பார்க்காத... குறிப்பாக, அறியாத ஒன்று எனவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கிடையில் சில நல விரும்பிகள் மூலம் தில்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியையும் சந்தித்துவிட்டு வந்தார். உடனே காங்கிரஸில் சேரப் போகிறார்; இளைஞரணித் தலைவர் ஆகப்போகிறார் போன்ற ரீதியில் தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் செய்தியாளர்களை திடீரென அழைத்து "எனக்கு எல்லாமே சினிமாதான்; "வேட்டைக்காரன்" படம்தான் என் தற்போதைய இலக்கு. இப்போதைக்கு அரசியலில் ஈடுபட மாட்டேன்" என திடீரெனப் பின்வாங்கினார் நடிகர் விஜய்.

அவராகப் பின்வாங்கவில்லை; சில சக்திகளும் சூழ்நிலைகளும்தான் அவரை அப்படிப் பேசச் செய்தன என்று கூறியவர்களும் உண்டு. விஜய்யும் அவரது குடும்பத்தினரும் எதிர்பார்த்தது போல, தில்லி காங்கிரஸ் வட்டாரங்களில் அவருக்கு வரவேற்பு இருக்கவில்லை என்று தெரிகிறது. தனது தந்தைக்கு மத்திய அமைச்சர் பதவி, தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அல்லது தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பதவி, தனது ரசிகர் மன்றத்தினருக்கு வட்ட, மாவட்ட, மாநில அளவில் கட்சிப் பதவிகள் என்றெல்லாம் கனவுகள் கண்ட நடிகர் விஜய், காங்கிரஸ் மேலிடத்தின் "ஆகட்டும் பார்க்கலாம்" நமுட்டுச் சிரிப்பைப் பார்த்ததும் தகர்ந்தன. அதிகபட்சம் நடிகர் விஜய் மாநிலங்களவை உறுப்பினராக்கப் படலாம் என்பதுதான் காங்கிரஸ் தரப்பில் வாக்குறுதியாக இருந்ததாம்.

அது ஒரு புறம் இருக்க, "இளைய தளபதி"யின் அரசியல் ஆசையும், காங்கிரஸில் இணைந்து கட்சியை பலப்படுத்தும் முயற்சியும் ஆளும் திமுக தரப்பை எரிச்சலூட்டியதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? அதையடுத்து உருவான அரசியல் திட்டமே "உறவாடிக் கெடு" ப்ராஜெக்ட். அதன் முன்னோட்டம்தான் "வேட்டைக்காரன்" படம் கைப்பற்றப்பட்டதன் பின்னணி என்கிறார்கள்.

தீபாவளிக்கு வர வேண்டிய படம் வெளிவரவில்லை. இதற்கு துணை முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த "ஆதவன்" படம்தான் காரணம். கலைஞர் தொலைக்காட்சி தொடங்கக் காரணமாக இருந்த காரணிகளைக் காலமும் பணமும் மாற்றிவிட்ட சூழ்நிலை நிலவுவதால் வேட்டைக்காரனும் ஆதவனும் ஓரிடத்துப் பிள்ளைகளாகிவிட்டனர். அதனால் தீபாவளிக்கு "ஆதவன்" அதன் பிறகு "வேட்டைக்காரன்" என முடிவு செய்யப்பட்டது. விஜய்யின் முந்தைய பட வெளியீடுகளின்போது இருந்த அவருடைய தலையீடு முதல்முறையாகத் தகர்ந்தது. "வேட்டைக்காரன்" வெளிவராமல் தள்ளிப் போவதால், அடுத்த படத்தின் தயாரிப்பும், ரிலீசும் தள்ளிப் போகும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்படி தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று "வேட்டைக்காரன்" தள்ளித் தள்ளிப் போகிறதே என்கிற கவலையில் "விஜய்" வட்டாரம் நிலைகுலைந்து போயிருக்கிறதே... சினிமாவைப் பொருத்தவரை ஆறிய கஞ்சி பழங்கஞ்சி தானுங்களே..!

Wednesday, October 21, 2009

சோனியா சாதித்த போஃபர்ஸ் - இந்தியா எங்கே போகிறது?

1985-ல் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு, பிரிட்டன், ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகிய மூன்றில் எந்த நாட்டு பீரங்கிகளை வாங்குவது என்பது தெரியாமல் குழப்பத்தில் இருந்தது. இந்நிலையில் சுவீடனைச் சேர்ந்த போஃபர்ஸ் நிறுவனம் இரண்டு தரகர்கள் மூலம் பேரத்தை முடிக்கத் திட்டமிட்டது. ஆனால், அதன் முயற்சி உடனடியாகப் பலிக்கவில்லை. ஆனால், அந்த ஆண்டின் பிற்பகுதியில் லண்டனைச் சேர்ந்த ஏஇ சர்வீசஸ் (ஏஇஎஸ்) என்ற நிறுவனம் போஃபர்ஸ் நிறுவனத்தை அணுகி ஆயுதப் பேரத்தைச் சுமுகமாக முடித்துத் தருவதாக உறுதியளித்தது.

அதாவது, 1986-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் ஆயுத பேரத்தை முடித்துக் கொடுத்தால் 3 சதவிகித கமிஷன் தர வேண்டும் என்றும் அப்படியில்லை எனில் எதுவும் தர வேண்டாம் என்று, ஏஇஎஸ் நிறுவனம் கூறியது. இதை போஃபர்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக இரு நிறுவனத்துக்கும் இடையே 1985-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி உடன்பாடு ஏற்பட்டது. ஏஇஎஸ் நிறுவனத்தின் பின்னணியில் ஓர் ஆணோ அல்லது பெண்ணோ செயல்படுகிறார்கள். அவர்களால் ராஜீவ் காந்தி அரசிடமிருந்து ஆயுத விற்பனைக்கான கான்ட்ராக்டைப் பெற்றுத் தர முடியும் என்பது உறுதியாகத் தெரிந்ததால்தான் போஃபர்ஸ் நிறுவனம் அதனுடன் உடன்பாடு செய்துகொண்டது.

சொல்லிவைத்தபடியே ஏஇஎஸ் நிறுவனம் கெடு தேதிக்கு 7 நாள்கள் முன்னதாக, அதாவது மார்ச் 22-ம் தேதி ஆயுத விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் பெற்றுவிட்டது. அடுத்த 6 மாதத்துக்குள் அந்த நிறுவனம் முதல்கட்டமாக 7.3 மில்லியன் டாலரைக் கமிஷனாகப் பெற்றது. இந்தப் பேரத்துக்காக அந்த நிறுவனத்துக்குக் கிடைக்க வேண்டிய தொகை 36.5 மில்லியன் டாலர். கமிஷன் பணம் இத்தாலிய வர்த்தகரான குவாத்ரோச்சிக்குச் சென்றதும், பேரத்தின் பின்னணியில் அவர் செயல்பட்டதும் பின்னர் தெரியவந்தது.

போஃபர்ஸ் நிறுவனம் 1986-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி, ஜூரிச்சிலுள்ள நார்டுபினான்ஸ் வங்கியில், ஏஇஎஸ் நிறுவனக் கணக்கில் (வங்கிக் கணக்கு எண்: 18051-53) 7.3 மில்லியன் டாலரைச் செலுத்தியது. இதற்கு இரண்டு வாரங்கள் கழித்து, அதாவது செப்டம்பர் 16-ம் தேதி ஏஇஎஸ் நிறுவனம் அதிலிருந்து 7 மில்லியன் டாலரை எடுத்து குவாத்ரோச்சி மற்றும் மரியா இருவரின் கட்டுப்பாட்டில் உள்ள கால்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கணக்கில் சேர்த்தது.

1988-ல் போஃபர்ஸ் ஊழல் விவகாரம் விசுவரூபம் எடுத்ததும் குவாத்ரோச்சியும், மரியாவும் அந்தப் பணத்தை வட்டியுடன் எடுத்து வேறு இடங்களில் மறைத்து வைத்தனர். 1988-ம் ஆண்டு ஜூலை 25-ல் 7.9 மில்லியன் டாலரை கால்பர் நிறுவனத்திலிருந்து எடுத்து ஜெனீவாவில் உள்ள வெடல்ஸன் ஓவர்சீஸ் எஸ்ஏ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தனர். 1990 மே 21-ம் தேதி 9.2 மில்லியன் டாலரை அங்கிருந்து எடுத்து சானல் தீவுகளில் உள்ள ஐஐடிசிஎல் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தனர். பின்னர் அதே ஆண்டு ஜூன் 5-ம் தேதி 2.4 மில்லியன் டாலரை ஸ்விஸ் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து கார்ஃபின்கோ என்ற வங்கியில் ரோபஸ்டா என்ற ரகசியக் கணக்கில் போட்டனர். ஜூன் 12-ம் தேதி 5.3 மில்லியன் டாலர் ஆஸ்திரியாவில் உள்ள வங்கியில் "அராபிகா', "ரொபஸ்டா', "லக்ஸர்' என்ற ரகசிய கணக்கில் போடப்பட்டது.

பின்னர் 2003 ஜூனில் இன்டர்போல் அமைப்பு குவாத்ரோச்சி, மரியா இருவருக்கும் லண்டனில் உள்ள ஸ்விஸ் வங்கிக் கிளையில் இரண்டு கணக்குகள் மூலம் முறையே 3 மில்லியன் டாலர், 1 மில்லியன் டாலர் இருப்பதைக் கண்டுபிடித்தது. சிபிஐ வேண்டுகோளின் பெயரில் இவ்விரு கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த குடும்பத்தினரைச் சுற்றிச்சுற்றி வந்த போஃபர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பான உண்மைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் சிக்னலுக்காகக் காத்திருக்கிறது மத்திய அரசு.

போஃபர்ஸ் ஊழல் விவகாரத்தில் இத்தாலிய வர்த்தகரான குவாத்ரோச்சி மீதான வழக்கை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிவிட்டால் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் மூலம் இந்தியப் பணத்தை கொள்ளையடித்த ஒரு கும்பலின் கதை எளிதில் முடிந்துவிடும். அரசுத் தரப்பினரே குற்றவாளிகளுடன் சேர்ந்துகொண்டு இந்த ஊழல் விவகாரத்தை மூடி மறைக்க நினைக்கும்போது உச்ச நீதிமன்றம் உள்பட எந்த நீதிமன்றம்தான் நீதியை நிலைநாட்ட முடியும்?

உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுவிட்டால் ஊழல் பேர்வழிகள் உச்ச நீதிமன்றமே எங்களுக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது; இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி; பொய் வழக்குப் போட்டு அரசியல் ரீதியில் எங்களைப் பழிவாங்க நினைத்தவர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள் என்று பேசக்கூடும். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது போஃபர்ஸ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வெளிப்படையாகவே பாதுகாத்து வந்தார். ஆனால், 1991-ம் ஆண்டு பிரதமராக வந்த பி.வி. நரசிம்மராவ், ஒருபுறம் குவாத்ரோச்சியைப் பிடிக்க வேண்டும் என்ற சிபிஐயின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் மறுபுறம் குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பியோடவும் உதவினார்.

பின்னர் 1999-ல் குவாத்ரோச்சிக்கு நெருக்கமானவரான சோனியா காந்தி அரசியலில் நுழைந்தார். தனது நாட்டைச் சேர்ந்தவரான குவாத்ரோச்சி நேர்மையானவர் என்று சான்றிதழ் அளித்தார். பின்னர் பத்திரிகையாளர்கள் சோனியா காந்தியைச் சந்தித்தபோது, போஃபர்ஸ் ஊழல் வழக்கில் குவாத்ரோச்சியின் பெயர் அடிபடுகிறதே என்று கேட்டதற்கு, "அவரைச் சந்தேகத்துக்குரிய நபராகத்தான் சிபிஐ கருதுகிறதே தவிர, அவருக்கு இதில் நேரடித் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை' என்று கூறினார்.

மேலும் குவாத்ரோச்சி குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களை ஆளுங்கட்சியினர்தான் (தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு) அளிக்க வேண்டும் என்றார் சோனியா. போஃபர்ஸ் விவகாரத்தில் குவாத்ரோச்சி பணம் பெற்ற விவகாரம் ஆதாரங்களுடன் இருந்தபோதிலும் வழக்கு பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முதன்முறையாகப் பதவியேற்றதும் செய்த முதல்வேலை முடக்கி வைக்கப்பட்ட இந்த வங்கிக் கணக்கை விடுவித்ததுதான். அடுத்த கட்டமாக ஆர்ஜென்டினாவில் பிடித்து வைக்கப்பட்ட குவாத்ரோச்சி தப்பிக்க வழிசெய்தது.

இப்போது இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு போஃபர்ஸ் ஊழல் வழக்கை முழுமையாகக் குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதுவும் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன். குவாத்ரோச்சியைப் பாதுகாக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம் அல்ல; இந்த விவகாரத்தின் மூலம் சோனியாவுக்கு எந்தத் தொந்தரவும் வந்துவிடக்கூடாது என்கிற எண்ணம்தான் முக்கிய காரணம்.

1993-ல் குவாத்ரோச்சியின் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையின்போது சோனியா, மரியா, குவாத்ரோச்சி ஆகிய மூவரும் நெருங்கிய குடும்ப நண்பர்கள் எனத் தெரியவந்தது. அவர்கள் அனைவரும் விடுமுறையை ஒன்றாகக் கழித்ததும், ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டதும், ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டதும், ஒருவரின் குழந்தைகள் மற்றொருவர் அரவணைப்பில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் மேலும் சிக்கல் ஏற்படுமே என்பது தெரிந்துதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த வழக்கைக் கைவிட முடிவு செய்தது.

சுவீடனில் போஃபர்ஸ் வழக்கை விசாரித்த சுவீடன் நாட்டுப் புலனாய்வு அதிகாரியான ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம், இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சோனியா காந்தியிடம் விசாரிக்க வேண்டும், அவருக்கும் குவாத்ரோச்சிக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஏற்கெனவே இந்திய அரசிடம் தெரிவித்திருந்தார். ஆனால், அதுகுறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்த வழக்கை மூடிமறைப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகிறது.

இப்போது உள்ள இளந்தலைமுறையினர் போஃபர்ஸ் ஊழல் விவகாரம் வெளியானபோது குழந்தைகளாக இருந்திருப்பார்கள். எனவே அவர்களுக்கு போஃபர்ஸ் ஊழல் 320 மில்லியன் டாலர் தொடர்புடையது என்பது தெரியாது. ஏஇஎஸ் நிறுவனத்துக்கான கமிஷன் 36.5 மில்லியன் டாலர் தொகையும் இதில் அடங்கும். இந்த ஊழல் விவகாரம் வெளியானபோது 20 சதவிகிதத் தொகையே அதாவது 64 மில்லியன் டாலரே வழங்கப்பட்டிருந்தது. ஆயுத ஒப்பந்தத்துக்கான மொத்தத் தொகையில் அப்போது இந்திய அரசு 20 சதவிகிதம் மட்டுமே கொடுத்திருந்ததால் அப்போது வழங்கப்பட்ட கமிஷன் தொகையும் 20 சதவிகிதம்தான். இந்த ஊழல் விவகாரம் வெளியானதால் இந்திய அரசு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டது. இதையடுத்து கமிஷன் பணமும் கொடுக்கப்படவில்லை.

இப்போது குவாத்ரோச்சி மீதான வழக்கை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் போஃபர்ஸ் நிறுவனத்துக்குச் சேரவேண்டிய 227 மில்லியன் டாலரும், குவாத்ரோச்சிக்கு கமிஷன் பாக்கி 29 மில்லியன் டாலரும் கிடைக்க வழியேற்பட்டுள்ளது.
அதாவது குவாத்ரோச்சிக்கு 29 மில்லியன் டாலர் கமிஷனாகக் கிடைக்கும் என்றால் இந்திய ரூபாயில் அவருக்குக் கிடைக்க இருப்பது ரூ. 140 கோடி. இந்த ஊழல் விவகாரத்தில் கிடைக்கும் மொத்த லஞ்சப் பணத்தை ரூபாயில் கணக்கிட்டால் அது ரூ.600 கோடியைத் தாண்டிவிடும். இதற்காக 20 ஆண்டுகள் காத்திருந்ததில் நஷ்டம் ஒன்றும் இல்லையே?

Thursday, October 8, 2009

சாம்பியன்ஸ் கோப்பையும், காக்கா கதையும்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு சாம்பியன்ஸ் கோப்பை கிடைக்காமல் போனது பற்றி இப்போது தெருமுனைகளிலும், பஸ் ஸ்டாப்களிலும் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது.

ஏன் தோற்றீர்கள் என தோனியிடம் கேட்டால், தம்மையும் பிரெட் லீயையும் போல பவுலர்கள் யாருமில்லாததுதான் காரணம் என்பார். நமது பந்துவீச்சாளர்களின் பேச்சைப் பார்த்தால், "எப்படிப் போட்டாலும் அடிக்கறாங்கப்பா' என எதிரணியினர் மீது பழிபோடத் தயாராக இருப்பது தெரிகிறது

சிலர் தென்னாப்பிரிக்க பிட்சை காரணம் சொல்வார்கள். வேறு சிலர் டக்வொர்த் லீவிûஸ வம்புக்கு இழுப்பார்கள். இன்னும் சிலர் பந்து, பேட், ஸ்டம்ப் கேமரா, ஷூ, எதிரணியினர் ஹேர்ஸ்டைல், அம்பயரின் தொப்பி, சைடு ஸ்கிரீன், சனிப்பெயர்ச்சி, சீயர் லீடர்ஸ் இல்லாதது என எதையாவது சொல்லி ரசிகர்களை இம்சிப்பார்கள்.

ஆனால், ரசிகர்கள் இப்போது பாகிஸ்தான் வீரர்கள் மீதுதான் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள்தானே இந்திய அணியை ஜெயித்தும் கெடுத்தார்கள்; ஆஸ்திரேலியாவிடம் தோற்றும் கெடுத்தார்கள்.

இந்திய அணி தோற்றுப் போனதற்கு வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும். சமீபகாலமாக இந்திய அணிக்குச் சிறந்த கேப்டன்கள் கிடைக்கவில்லை. கவாஸ்கர், கபில்தேவ், ஸ்ரீகாந்த், அசாருதீன், டெண்டுல்கர், கங்குலி, திராவிட் என யாருமே வெற்றிகரமாக இருந்ததில்லை. இந்திய அணிக்குக் கேப்டனாகிவிட்டால், அவர் சிறந்த கேப்டனாக இருக்கவே முடியாது என்கிற சூழ்நிலை உருவாகிவிட்டது. அப்படியிருக்கையில் சில வெற்றிகளைப் பெற்றதுமே தமது தலைமையால்தான் அணி ஜெயிக்கிறது என்று தோனி எண்ணிக்கொண்டார். அதனால்தானோ என்னவோ, யுவராஜ், சேவக் ஆகியோருடன் முட்டிக் கொண்டார்.

ஆல் ரவுண்டராக ஆட வேண்டும் என்கிற தோனியின் எண்ணம் நியாயமானதுதான். ஆனால், ஆல் இன் ஆல் ரவுண்டராக வரலாற்றில் இடம்பிடிக்கப் போராடும் அவரது நிலையை நினைத்தால் ஆப்பசைத்த குரங்கின் கதைதான் நினைவுக்கு வருகிறது. ஒருவர் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் ஜொலிக்கலாம். அல்லது பவுலராகவும் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாகச் செயல்படலாம். கீப்பராகவும் பவுலராகவும் செயல்படுவேன் என அடம்பிடித்தால் எப்படி? வேறு யாராவது கேப்டனாக இருந்தால் இந்த மாதிரியான வாய்ப்பெல்லாம் இவருக்குத் தருவார்களா?

அடுத்தது, ராகுல் திராவிட் வருகையினால் ஏற்பட்ட அசாதாரணமான நிலை. அவரது ஆட்டம் அணிக்குப் பலமா அல்லது பலவீனமா என்பதை திருவுளச் சீட்டு மூலமாகத்தான் அறிய வேண்டும். அந்த அளவுக்கு நன்மையும் செய்கிறார், இம்சையும் செய்கிறார். ரசிகர்கள், எதிரணியினர், அம்பயர் என அனைவரின் பொறுமையையும் அவர் சோதிப்பார். ஆவேசம் வந்தாலன்றி பந்தை செல்லமாகத் தட்டி மட்டுமே பழக்கப்பட்டவர். கிரீஸýக்குள் பந்து கிடந்தாலும் ரன் எடுப்பது போல பாவ்லா காட்டியே கடுப்பேற்றுவார். இதனால், அவரோ அல்லது உடன் ஆடுபவரோ அவுட் ஆகி வெளியேறுவதுதான் மிச்சம். அவரது வருகை அணியின் ரன் சேர்க்கும் முறையை மாற்றிவிட்டது என்பது மட்டும் தெளிவு.

சேவாக்கும் யுவராஜும் தற்செயலாக சாம்பியன்ஸ் கோப்பையில் ஆடவில்லையா, அல்லது தோனி புகழைக் கொஞ்சம் தட்ட வேண்டும் என்று திட்டமிட்டே புறக்கணித்தார்களா எனத் தெரியவில்லை. எப்படியோ தாங்கள் இருவரும் அணியில் இருந்தால்தான் பலம் என்பதை தோனிக்குப் புரிய வைத்துவிட்டார்கள். இதற்காக ஒரு கோப்பையை இழக்க வேண்டுமா?

அடுத்தது, ஐபிஎல் அணியில் எல்லோரும் டி20 ஆட்டங்கள் நிறைய ஆடிவிட்டதால், பழக்கத்தை மாற்ற முடியாமல் தடுமாறுகிறார்கள். 5 ஓவர் தொடர்ந்து வேகப்பந்து வீசுவதும், 10 ஓவர்களுக்கு மேல் பேட் செய்வதும், 50 ஓவர்கள் ஃபீல்டிங் செய்வதும்கூட வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கும். இதுவும் அணியின் மோசமான ஃபார்முக்கு காரணம்.

அதற்காக இந்திய அணி, எப்போது நல்ல ஃபார்மில் இருந்தது எனக் கேட்கக்கூடாது. நம் அணி அவ்வப்போது சாம்பியனாகும், பிறகு நோஞ்சான்களிடம் கூடத் தோற்கும். இது நீண்டகால உண்மை. அதை மறந்துவிட்டு, கோப்பையை ஜெயிப்பார்கள் என்று கனாக் காண்பது அறியாமை.

காரணம் எதுவாக இருந்தாலும், இந்திய அணியின் தோல்வி வேறொரு திருப்பத்துக்கான அறிகுறியாக இருக்கலாம் என்றே தெரிகிறது. அசாருதீன் கேப்டனாக இருந்தபோது, அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பதவி பறிக்கப்பட்டு டெண்டுல்கரிடம் வழங்கப்பட்டது. பின்னர் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு கங்குலியிடமும், பின்னர் திராவிட்டிடம் வழங்கப்பட்டது. கடந்த உலகக் கோப்பையில் தோற்றதும் தோனிக்கு கிரீடம் சூட்டப்பட்டது. இப்படி காகம் வடை திருடிய கதைபோல் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பதவி போய்கொண்டிருக்கிறது.

இது எல்லா அணிகளுக்கும் பொதுவானதுதான் என்றாலும், கேப்டன்கள் அனைவரும் பதவிக்கு வந்ததும் ஃபார்மை பறிகொடுப்பதும், பதவிபோன பிறகு நன்றாக ஆடி தொடர்ந்து அணியில் நீடித்திருப்பதும் இந்திய அணியின் பிரத்யேக அடையாளம். சமீபகால கேப்டன்களில் டெண்டுல்கர் தவிர வேறு யாருக்கும் பதவி போன பிறகு உரிய மரியாதை தரப்படவில்லை.

இப்போதைய நிலையில், காகத்தின் வாயிலிருக்கும் வடையைப் பறிப்பதற்குரிய இன்னொரு தருணம் வந்துவிட்டதாகவே தெரிகிறது. வடையைத் தக்கவைத்துக் கொள்வது காகத்தின் சாமர்த்தியம்.

Thanks: Dinamani

Wednesday, October 7, 2009

தமிழ்மொழியை கொண்டாடினர் அன்று! இன்று?

மொழிகளிலே, தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடினார், பல மொழி கற்ற பாரதியார். அதற்கு முன்பே, அந்தச் சிறப்பை பறை சாற்றினார், ஓர் ஆங்கிலேயப் பாதிரியார். தமிழ் உயர்தனிச் செம்மொழி என்பதை, பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உலகறியச் செய்தார், இங்கிலாந்து நாட்டில் பிறந்த அவர். பல மொழி கற்றவர்களால் தான், ஒரு மொழியின் உயர்வையும், தனிச் சிறப்பையும் எடுத்துரைக்க முடியும். ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட அவர், லத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மொழிகளும் கற்றவர். எனினும், தமிழ் மீது அவருக்கு தணியாத காதல். 66 ஆண்டு, தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்காக, வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழ் இலக்கியங்களை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்காக, சொந்த சேமிப்பு அனைத்தையும் செலவிட்டார்.

"தேமதுரத் தமிழோசை, உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்று பாரதியார் பாடுவதற்கு முன்பே, அந்தப் பணியைச் செய்தார் அவர். யார் அவர் என்ற கேள்விக்கு விடை தேவையா? டாக்டர். ஜி.யூ.போப். எந்தத் தமிழனும் சொல்லாத ஒன்றைச் சொல்லி, அதை நிறைவேறச் செய்தவர் அவர். "நான் காலமானதும், தமிழ் மாணவனின் கல்லறை இது என்று எழுதி வைக்கப்பட வேண்டும்!' என்றார்.
"ஒரு தமிழ் மாணவன் இங்கே உறங்குகிறான்...' என்று, நினைவுச் சின்னத்தில் வரையப்பட வேண்டும் என்று விரும்பினார்.
ஆக்ஸ்போர்டில், அந்த நினைவுச் சின்னத்தைக் கண்டு நெகிழும் அரிய வாய்ப்பு கிடைத்தது. தென்னிந்தியாவின் எஸ்.எம்.ஜார்ஜ் உக்லோ போப், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தேவாலய கல்லூரியின் தமிழ், தெலுங்கு விரிவுரையாளர்.
பிறப்பு: ஏப்ரல் 24, 1820. மறைவு: பிப்ரவரி 11, 1908. வாழ்நாள் முழுவதும், அவர் ஆற்றிய கீழ்த்திசை இலக்கிய, தத்துவ ஆய்வுப் பணிகளின் நினைவாக, அவருடைய குடும்பத்தினரும், தென்னக தமிழ் நண்பர்களும் நாட்டி வைத்த நினைவுச் சின்னம்.

தமிழ் மாணவர் எனும் பெருமிதத்துடன், இறுதி வரை தொண்டாற்றி மறைந்த ஜி.யூ.போப்பின் கல்லறையை, ஆங்கில வாசகங்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. அமைதி தவழும் அந்த இடத்தில் மரியாதை செலுத்திய நேரத்தில், மாணவப் பருவத்திலும், அதற்குப் பிறகும், அவரைப் பற்றி படித்தறிந்தவை நினைவில் திரை விரித்தன.
தஞ்சையில் ஜி.யூ.போப்பை அறியாத தமிழ் மாணவர்கள் அன்று இருந்ததில்லை; அறியாத தலைமுறையினருக்கு, அவரைப் பற்றிய அறிமுகம் அவசியம் தான். ஜான் போப் - கேத்தரின் உக்லோ தம்பதியரின் இரண்டாம் மகனாக, 1820ல் பிறந்தார் ஜார்ஜ் உக்லோ போப். கிறிஸ்தவ சமயப் பணிபுரிய, 19 வயதில் சென்னைக்குப் பயணமானார். தமிழும், சமஸ்கிருதமும் கற்கத் துவங்கினார். இங்கிலாந்து திருச்சபையில் இணைந்து பாதிரியார் ஆன அவர், தஞ்சாவூரில், 1845ல் பணியைத் துவங்கினார்.

தமிழக மக்களிடம், சமய போதனை செய்வதற்கு, தமிழ்ப் பயிற்சி தேவை என்பதை உணர்ந்தார்.உரையாடுவதற்காக தமிழ் கற்கத் துவங்கியவர், அது ஒரு இலக்கியக் கடல் என்பதை உணர்ந்தார். தமிழ் இலக்கியங்களில் ஊறித் திளைக்கத் துவங்கினார். தஞ்சையில், ஒரு தொடக்கப் பள்ளியை சீரமைத்தார். உயர்நிலைப் பள்ளியாக மேம்படுத்தி, அதன் முதல்வர் பொறுப்பையும் ஏற்றார். 1884ல், கல்லூரியாக அதை மாற்றி, சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்த்தார். இடைப்பட்ட காலத்தில், ஊட்டியில் ஆங்கிலப் பள்ளியையும், பெங்களூரூவில் ஒரு பள்ளியையும் நிறுவினார்.
ஜி.யூ.போப், தன் 62ம் வயதில், உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், இங்கிலாந்துக்குத் திரும்பினார். மான்செஸ்டரிலும், ஆக்ஸ்போர்டிலும், கல்விப் பணி தொடர்ந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், 1890 வரை, தமிழ், தெலுங்கு மொழி விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
அந்த காலக் கட்டத்தில் தான், 1886ல், சிலருடன் சேர்ந்து, திருக்குறளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அந்த நூலுக்கு அவர் வழங்கிய முன்னுரை, திருக்குறள் விளக்கவுரைகள், வியப்பில் ஆழ்த்துகின்றன.
அடுத்து, நாலடியார் ஆங்கில மொழிபெயர்ப்பை, 1893ல் வெளியிட்டார். திருவாசகத்துக்கு உருகியவர் போப். மாணிக்க வாசகர் மீது, அவருக்கு அதிக மதிப்பு. திருவாசக மொழி பெயர்ப்பும், ஆய்வும், அவருக்கு சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன.
ஜி.யூ.போப், அந்த ஆய்வை 1903ல் வெளியிட்ட போது, "ராயல் ஏஷியாடிக் சொசைட்டி' எனும் அரச ஆசியக் கழகம், அவருடைய கீழ்த்திசை மொழி அறிவாற்றலைப் பாராட்டி, தங்கப் பதக்கம் வழங்கிச் சிறப்பித்தது.

பிப்., 11, 1908ல், தன் 88வது வயதில் இறப்பெய்தினார் போப். ஆக்ஸ்போர்டு நகரில், அவர் உலா வந்த இடங்களைக் காணவும், அவரைப் பற்றிய அரிய தகவல்களைக் கேட்டு அறியவும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நகரின் தமிழ்ச் சங்கம், பல குறிப்புகளைத் தந்தது. அவரைப் போன்ற கடின உழைப்பாளியைக் காண்பது அரிது. முழு நேர போதனையுடன், தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம், பிரிட்டிஷ் அரும்பொருளக நூலகத்திற்காக, தமிழ் இலக்கியங்களின் அட்டவணைப் பட்டியலைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். கல்வி நிதி திரட்டி உதவுவதற்காக, ஆக்ஸ்போர்டில் சொற் பொழிவுகளை நடத்தி வந்தார்...
போப்பின் பேத்தி டோரத்தி போப் அவரைப்பற்றி விவரிக்கிறார்...
கிறிஸ்துவத்தைச் சார்ந்த அவர், சைவம், வைணவம், புத்தம், சமணம், யூதம், இஸ்லாம் அனைத்தையும் ஆய்ந்து தெளிந்தவர். எண்பது வயதை எட்டிய பிறகு, திருவாசகத்தை மொழி பெயர்க்கத் துவங்கி, ஆய்வுக் கட்டுரை வரைந்தார்.
போப், தமிழ் ஆய்வுப் பணிகளைப் பார்த்த பிறகு, படித்தறிந்த பிறகு தமிழக அறிஞர்கள் புத்தெழுச்சி பெற்று, ஆய்வுப் பணிகளில் இறங்கினர் என்று திராவிட மொழி அறிஞர் கால்டுவெல் கூறுகிறார்.

சைவ சித்தாந்த ஆய்வில், போப் துறைபோனவர் என எழுதுகிறார் ஆங்கில அறிஞர் பிரேசர். ஆசிரியர், சமய போதகர், ஆய்வாளர் என பல துறை ஈடுபாடுடையவர் ஜி.யூ.போப். ஆங்கிலம் பேசும் உலகில், குறிப்பாக, ஐரோப்பாவில், தமிழ் மொழியையும், பண்பாட்டையும் பரப்பிய முன்னோடி அறிஞர் அவர்.

Sunday, October 4, 2009

பாலியல் தொழில்! இந்தியாவில் பெண்கள், சிறுமிகளை கடத்தும் அவலம்!!

பாலியல் தொழிலுக்காகப் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்படுவது குறித்து தேசிய பெண்கள் ஆணையம் சமீபத்தில் நாடு முழுவதும் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்தச் சமூக அவலநிலையானது தென் மற்றும் கிழக்கு மாநிலங்களில்தான் அதிகமாக அரங்கேறுகிறது. கேரளம், ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் பாலியல் தொழிலுக்காகப் பெண்களையும், சிறுமிகளையும் கடத்தும் நிலை தொடர்கிறது.

இதையடுத்து தமிழகத்தில்தான் பெண்களும், சிறுமிகளும் அதிகம் கடத்தப்படுகின்றனர். இங்கு 93.33 சதவீத மாவட்டப் பகுதிகளில் இருந்து பெண்களையும் சிறுமிகளையும் சப்தமில்லாமல் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஒரிசாவில் 86.66 சதவீத மாவட்டப் பகுதிகளிலும், பிகாரில் 86.48 சதவீத மாவட்டப் பகுதிகளிலும் பெண்களையும், சிறுமிகளையும் கடத்தும் அவலம் நீடிக்கிறது.

இதுதவிர்த்து, பிற மாநிலங்களிலும் குறிப்பிட்ட சதவீதத்திலான பெண்களும், சிறுமிகளும் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படும் கொடுமை நடந்தேறுகிறது.இந்தியா முழுவதும் 28 லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழில் ஈடுபடும் பெண்களில் 2.4 சதவீதம் பேர் 15-35 வயதுக்கு இடைப்பட்டவர்கள். 43 சதவீதம் பேர் சிறுமிகள்.

இந்தத் தொழிலில் குறிப்பிட்ட சதவீதத்தினர் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றால், மற்றொரு குறிப்பிட்ட சதவீதத்தினர் தங்களது குடும்ப நபர்களாலேயே வலுக்கட்டாயமாக இத்தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள்.அந்தவகையில், 22 சதவீதப் பெண்கள் தங்களது குடும்பத்தாரின் வற்புறுத்தலின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 8 சதவீதம் பெண்கள் தங்களது கணவரின் நெருக்குதலின் பேரிலும் 18 சதவீதம் பேர் தங்களது நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரின் சூழ்ச்சி வலையிலும் சிக்கி இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலும் பின்தங்கிய பகுதியில்தான் பாலியல் தொழில் அதிகம் நடக்கிறது. வறுமையும், ஏழ்மையும்தான் அப்பாவிப் பெண்களை இத்தொழிலுக்கு இட்டுச் செல்லும் முக்கியக் காரணிகளாக உள்ளன.பின்தங்கிய வேலைவாய்ப்பற்றப் பகுதியில்தான் பெண்களுக்கு எதிராகப் பிற அநீதிகளும் அதிகம் அரங்கேறுகின்றன. பெண்களுக்கு எதிரான அநீதிக்கு பாலினப் பாகுபாடும் முக்கியக் காரணமாக உள்ளது.

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையைத் தடுக்க சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் சரியாக அமல்படுத்தப்படுவதில்லை. இதுவும் பெண்களுக்கு எதிராக துணிச்சலாக அநீதி இழைக்கப்படுவதற்கு காரணம்.தீர்வு என்ன?பெண்கள் இதுபோன்று பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு பொருளாதாரச் சூழ்நிலைதான் முக்கியக் காரணம். இதனால் அவர்களை முதலில் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக்க வேண்டும்.

அதேபோல, பெண்களுக்கு எதிரான அநீதியைத் தடுக்க நடைமுறையில் உள்ள சட்டத்தைத் திறன்படச் செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக அநீதி இழைப்பவர்களுக்கு கடுமையானத் தண்டனை வழங்கத் தயங்கக்கூடாது.இதையெல்லாம்விட பெண்கள் என்பவர்கள் சமுதாயத்தில் மதிக்கப்படக்கூடியவர்கள் என்ற மனநிலையை அனைவர் மத்தியிலும் உருவாக்க முயலவேண்டும்.

இவ்வாறு செய்தாலே பெண்களுக்கு எதிராக நடக்கும் 99 சதவீதக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று தேசிய பெண்கள் ஆணையத்தின் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனினும் பெண்களுக்கு எதிரான அநீதியை மட்டும் இன்னும் தடுத்து நிறுத்த முடியவில்லை. வியாபாரப் பொருள்களாய் பெண்கள் கருதப்படும் அவலநிலை இன்றும் நீடிக்கிறது. இந்த நிலை என்று மாறும்?

Friday, October 2, 2009

ஒரே வீட்டில் 90 பேர் கூட்டு குடும்ப வாழ்க்கை நடத்தும் அதிசயம்!!

சிவகாசி தாலுகா, மேட்டுப்பட்டி அருகே உள்ள கிராமம் பூசாரிபட்டி. ராஜகம்பளத்தார் என்னும் ஒரே சமுதாயத்தை பல குடும்பங்கள் இருந்தாலும், பெருமாள்சாமி (65)யின் சகோதர, சகோதரிகள் என 15 குடும்பங்களை சேர்ந்த 90 பேர் ஒரே குடும்பமாக பல ஆண்டுகளாக கூட்டுக்குடித்தனமாக வாழ்க்கை நடத்துகின்றனர்.

கிராமத்திலேயே பெருமாள் சாமிதான் முதல் பட்டதாரி. இவர் கூட்டு குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும் என்ற சூழ்நிலையால் 1974ல் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து குடும்ப பொறுப்பை ஏற்றார். கூட்டு குடும்பத்திற்கு இவர்தான் தலைவர். இவர்களின் மூதாதையர் காலத்தில் இருந்தே இன்று வரை ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். இவர்களின் ஒரு ஆண்டு தேவைக்கான நெல், நவதானியங்கள், காய்கறிகளை சொந்த நிலங்களில் சாகுபடி செய்து சேமித்து கொள்கின்றனர். கடைகளில் விலை கொடுத்து வாங்கும் பொருட்கள் என்றால் உப்பு, சீனி, டீ, காபி தூள்தான். ஆண்டுக்கு 500 மூடை நெல், 500 மூடை தானியங்கள் விளைவிக்கின்றனர்.

தினமும் மூன்று வேளை உணவுக்காக 1 மூடைக்கு குறைவில்லாமல் அரிசி, தானியங்கள் செலவிடப்படுகிறது. தீபாவளி, பொங்கல், ஆடி விசேஷ நாட்களில் 5,6 ஆடு வெட்டி அசைவ உணவு சாப்பிடுகின்றனர். அனைவரும் தினமும் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து அன்றாட பணிகளை துவக்கி விட வேண்டும் என்பது கட்டாயம். காலையில் கூல் குடித்து வேலைக்கு சென்று விடுவார்கள். ஆணும்,பெண்ணும் நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தும் அளவிற்கு கடின உழைப்பாளிகள். மதிய உணவினை அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கே சென்று வழங்க அதற்கென தனியாக ஆட்கள் உள்ளனர். மாலை ஆறரை மணிக்கு எல்லோரும் வீடு திரும்பி விட வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு ஒவ்வொருவருக்கும் பணி ஒதுக்கப்பட்டு விடும்.

சமையலுக்கு பெண்களும், தோட்டத்தில் களை எடுத்தல், உழவு, தண்ணீர் பாய்ச்சுதல், உரமிடுதல் வேலைகளை ஆண், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு விடும். சொந்தமாக நடத்தம் 2 பட்டாசு ஆலைகளில் குடும்ப ஆண்கள் 30 பேர் வேலை செய்கின்றனர். குடும்ப நிர்வாகம், வரவு, செலவு என ஒவ்வொரு வரும் ஒரு பொறுப்பு ஏற்றுக்கொள்கின்றனர். படிக்கும் வயது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அவர்கள் விரும்பிய வரை பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று படிக்கலாம். குறைந்த பட்சம் 8ம் வகுப்பு,10ம் வகுப்பு, பிளஸ்2 வரை படித்துள்ளனர். அதன்பின் சொந்த வேலைகளை கவனிக்க வந்துவிடுவார்கள். படிப்பில் ஆர்வம் உள்ளோர் தொடரலாம்.

பெருமாள்சாமியின் மகன் பி.இ., முடித்து லண்டனில் வேலை செய்து, பெங்களூரூவில் உள்ளார். முத்துக்குமார் பி.சி.ஏ., படிக்கிறார். மற்றொரு பெண் பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.இவர்கள் வெளியில் திருமணம் செய்வது இல்லை. உறவினர்களுக்குள்ளே திருமணம் செய்கின்றனர். வீட்டின் மூத்தவர் இன்னாருக்கு இன்னார் என மணமக்களை நிச்சயிப்பார் இதில் மறுப்பே இருக்காது. படித்து வெளியிடங்களில் வேலை பார்த்தாலம் இங்குள்ளவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என எழுதப்படாத சட்டம். பெண்களுக்கு 18 வயதில் திருமணம் செய்கின்றனர். நான்கு ஆண்டுக்கு ஒரு முறை 9ஜோடி, 11 ஜோடிகளுக்கு மொத்தமாக திருமணம் நடத்துகின்றனர்.

இக்குடும்பத்திற்கு 100 ஏக்கர் நிலங்கள் இருந்தாலும் அந்தந்த குடும்ப தலைவர்கள் பெயரில் சொத்து பத்திரம் இருக்கும். ஆனால் எல்லாம் பொதுவுடமை சொத்து. பண்டிகை நாட்களில் புது துணிகள் மொத்தமாக ரூ.1 லட்சத்திற்கு எடுத்து வருகின்றனர். வீட்டில் உள்ள மூத்த பெண், பெண்களுக்கு புடவைகளை எதை கொடுக்கிறாறோ அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்கின்றனர்.உறவு திருமணங்களால் குறைபாடுடைய குழந்தை பிறக்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மை. ஆனால் உறவு திருமணங்களால் ஆண்டவன் கிருபையால் எவ்வித குறைபாடும் இன்றி நலமாக உள்ளதாக பெருமைப்படுகின்றனர்.

பெருமாள்சாமி கூறுகையில், ஆண்டாண்டு காலமாக கூட்டு குடும்பமாக வசிக்கின்றோம். இதே போல் ஒற்றுமையுடன் அதிகம் பேருடன் வசிக்க வேண்டும் என ஆசை. எல்லோரும் கடினமாக உழைப்பதாலும், பாராம்பரிய உணவு பழக்கவழக்கத்தால் எவ்வித குறைபாடு இன்றி சுகமாக வாழ்கின்றோம் என தெரிவித்தார்.