ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் "ஏழைகளின் ஊட்டி'யாக ஏலகிரி திகழ்கிறது.
வெயிலூராக மாறிவிட்ட வேலூர் மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையில் இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரி மலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1410.60 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் கோடையில் இதமான, மிதமான வெப்பநிலையில் தென்றல் வீசுவது சிறப்பு.
திருப்பத்தூரில் இருந்து 26 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஏலகிரிக்கு பஸ் வசதி உள்ளது. திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் பொன்னேரி கூட்டுச் சாலை பஸ் நிறுத்தத்தில் இருந்து ஏலகிரி 14 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவில் பொன்னேரி கூட்டுச் சாலை உள்ளதால் ரயில் மூலமும் சுற்றுலாப் பயணிகள் ஏலகிரிக்கு வர முடியும்.
மலைக்கு வாகனங்கள் செல்லும் பாதையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஒவ்வொரு வளைவிலும் தரைப் பகுதியைக் காணும் பார்வை மையங்கள் உள்ளன. மலையின் உச்சியில் இருந்து தொலைதூர இயற்கைக் காட்சிகளைக் காண வனத் துறை பராமரிப்பில் தொலைநோக்கி பார்வை மையம் உள்ளது.
ஏலகிரி 28.2 சதுர கி.மீட்டர் பரப்பில் 14 குக்கிராமங்களைக் கொண்டது. மலையில் புங்கனூர் ஏரிப் பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இதற்கு நுழைவுக் கட்டணம் ரூ.3.
இதன் அருகில் சிறார்களைக் கவரும் வகையில் மான்கள், முதலைகள், மலைப் பாம்புகள் மற்றும் பறவைகள் அடங்கிய உயிரியல் பூங்கா ஒன்று இருந்தது. தற்போது இப்பூங்கா அகற்றப்பட்டு வெறிச்சோடி கிடக்கிறது.
புங்கனூர் ஏரியில் ஆண்டு முழுதும் நீர் உள்ளது. இதில் பயணிகள் படகு சவாரி செய்ய பெரியவர்களுக்கு ரூ.10-ம், சிறியவர்களுக்கு ரூ.5-ம் வசூலிக்கப்படுகிறது.
படகு சவாரிக்காக பயணிகள் நடந்து செல்லும் நடைபாதை சீர்கெட்டுள்ளது. ஏரியின் நடுவில் உள்ள நீரூற்று பழுதடைந்துள்ளது. ஏரியின் கரைகளைச் சுற்றி பார்த்தீனியம் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. சுற்றுச் சாலைப் பகுதி பராமரிப்பின்றி உள்ளது.
ஏலகிரியில் பொதுப் பணித் துறை, வனத்துறை பராமரிப்பில் சுற்றுலா மாளிகைகள், தமிழ்நாடு கட்டட மையத்தின் விருந்தினர் மாளிகை ஆகியன உள்ளன. ஓட்டல் ஹில்ஸ், ஓ நிலா, தாஜ் கார்டன், ஓட்டல் நீலகிரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகளும் உள்ளன.
அத்தனாவூர் முருகன் கோயில், பழப் பண்ணை, தாமரைக்குளம் அம்மன் கோயில், தாயலூர் பட்டுப் பூச்சிப் பண்ணை, புங்கனூர் ஏரி அருகே வனத்துறையின் மூலிகைப் பண்ணை, சுவாமிமலை சிவன் ஆலயம் உள்ளிட்டவை பயணிகளைக் கவரும் இடங்கள்.
மலையில் நிலாவூரில் இருந்து 8 கி.மீட்டர் தொலைவில் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இவ்வழியாகச் செல்ல பாதை இல்லை. இதைக் காண விரும்பும் பயணிகள் திருப்பத்தூர் வழியாக 37 கி.மீட்டர் சுற்றி வரும் நிலை உள்ளது. இதனால் நிலாவூர்-ஜலகம்பாறைக்கு பாதை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் விருப்பம்.
மலையில் பெரிய மடுவு என்ற இடத்தில் மற்றொரு நீர்வீழ்ச்சி உள்ளது.
மே மாதத்தில் பெங்களூர், ஆந்திரம், கேரளம், புதுவை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர். மே இறுதியில் அரசு இப்பகுதியில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தி வருகிறது.
அடுத்தப் பதிவில் குற்றாலமலையைப் பற்றி எழுதறேன்.
Thursday, July 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 பேரு சொன்னாங்க:
Post a Comment