Saturday, June 27, 2009

பருவமழை பல் இளித்தால்!!!

பசிபிக் கடல் பரப்பில் நிலவும் வெப்ப நிலைமைகளின் அடிப்படையில் நிகழாண்டின் தென்மேற்குப் பருவமழை தாமதமாகும் என்பதுடன் சராசரி அளவைக் காட்டிலும் குறைவாகப் பெய்யும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தக் கணிப்பு பொய்ப்பதில்லை என்பதற்கு முன்னோட்டமாக பிகாரில் இப்போதே கடுமையான வெப்பக் காற்று வீசத் தொடங்கி விட்டது.

இந்த ஆண்டுப் பருவமழை சராசரி அளவைவிடக் குறைவாகப் பெய்வதால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை இந்தியாவின் வடமேற்கு மத்திய மாநிலங்கள்தான். தமிழ்நாட்டில் சராசரியைவிட 23 சதவீதம் குறைவாகப் பருவமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளனர்.

பருவமழை குறைந்தால், விளைச்சல் குறையும்; விவசாயிகள் வீட்டு அடுப்பில் பூனை உறங்கும்; பதுக்கல் அதிகரிக்கும்; உணவுப் பொருள் விலை உயரும்; பதுக்கல்காரர்கள் வீட்டில் வெளிச்சம் பெருகும்; மக்கள் தவிப்பார்கள்; அரசியல்வாதிகள் குதிப்பார்கள்.

இதேபோன்று, 2002-ம் ஆண்டில் தென்மேற்குப் பருவ மழையில் தேசிய அளவில் 19 சதவீதம் குறைந்தபோது, இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு பரப்பளவுக்கு வறட்சி ஏற்பட்டது. உணவு உற்பத்தி 7 சதவீதம் குறைந்தது.

பருவமழை குறைந்து நீர்ப்பாசனம் பாதிக்கப்படும் என்றால், பொதுவாக பாதிக்கப்படுவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிர்தான்.

தமிழ்நாட்டில் வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. அணையில் போதுமான நீர் இல்லை. கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மழை வேண்டித்தான் தமிழ்நாட்டு கோயிலுக்கு வந்தேன் என்றும் மழை பெய்தால்தான் காவிரியில் தண்ணீர் என்றும் கூறிச் சென்றுள்ளார்.

தமிழ்நாட்டுத் தெய்வம் கர்நாடகத்துக்கு மழையைக் கொடுத்தாலும், தண்ணீரைக் கொடுப்பார்களா? இந்தச் சூழ்நிலையில் குறுவை சாகுபடி எந்த அளவுக்கு வெற்றிகரமாக அமையும் என்று தெரியவில்லை.

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, மின்பற்றாக்குறையும் விவசாயிகளுக்கு சேர்ந்து கொண்டுள்ளது. குறுவை சாகுபடிக்காக 16 மணி நேரம் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி கூறினாலும், இதை தஞ்சை நெற்களஞ்சியப் பகுதியில் மட்டும் அமல்படுத்தினால் பயன் இல்லை.

தமிழ்நாடு முழுவதும் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தஞ்சையைவிட அதிகமான நெல் உற்பத்தியை மற்ற மாவட்டங்கள்தான் வழங்குகின்றன. காவிரிப் பிரச்னைக்குப் பிறகு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் மாற்றுப்பயிர்களுக்கு மாறியதன் காரணமாக, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்ற பெயர் தஞ்சைக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதே கேள்விக்குறியான விஷயம்.

ஆக, தமிழ்நாட்டில் அனைத்து நெல் சாகுபடியாளர்களும் பயன்பெறும் வகையில் விவசாயத்துக்கு 16 மணி நேரம் மின்சாரம் அளித்தால்தான் உணவு உற்பத்தி குறையாமல் தடுக்க முடியும்.

சராசரியைவிட குறைவாகப் பருவமழை பெய்தாலும் ஏற்கெனவே பெய்துள்ள போதுமான மழை நிலத்தடி நீராக உள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்படாது என்ற கருத்தை வேளாண் வல்லுநர்கள் முன்வைக்கின்றனர்.

இது உண்மையாக இருந்தாலும்கூட, மின்சாரம் இருந்தால்தான் நீலத்தடி நீர் மற்றும் கிணற்றுப் பாசனத்துக்கு வழியுண்டு. குறிப்பாக தொண்டைமண்டலப் பகுதியில் கிணற்று நீரை நம்பித்தான் விவசாயம் செய்யப்படுகிறது. அவர்களுக்கு போதுமான நேரம் மின்சாரம் இல்லாவிட்டால், நிலத்தடி நீரையும் பயன்படுத்த இயலாத சூழ்நிலை உருவாகும்.

பருவமழை குறையும் என்று தெரிந்த பிறகு, யார் யார் என்னென்ன பயிர்களை சில மாதம் கழித்து சாகுபடி செய்யலாம், எந்த மாவட்டத்தில் நிலத்தடி நீர் அதிகம் உள்ளது என்பதை விவசாயிகளுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.

மேலும், பருவமழை குறைகிறது என்று தெரிந்தவுடன் அரிசி, பருப்பை பதுக்கும் வியாபாரத் தந்திரங்கள் எல்லா இடங்களிலும் நடக்கும். பதுக்கும் நபர்களை அடையாளம் காண்பதும், அவற்றைப் பறிமுதல் செய்வதும்தான் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளைக் கட்டுக்குள் வைக்க உதவும்!

Friday, June 26, 2009

மைக்கேல் ஜாக்சன்: ஓர் இசையின் வரலாறு!

உலக ரசிகர்களையே தனது பாப் இசையாலும், நளினமான நடன அசைவுகளாலும் மயங்கவைத்த பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஜாக்சனின் மறைவுச் செய்தி, உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் சோக கீதமாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

கடந்த 1958 ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் - கேத்ரின் எஸ்தர் என்ற ஏழை தம்பதியின் 7வது மகனாக பிறந்த பிறந்தார் மைக்கேல் ஜாக்சன். அந்த குடும்பத்தில் மொத்தம் 9 குழந்தைகள். வறுமையின் பிடியில் சிக்கி தவித்த நிலையிலும், இளம் வயதிலேயே இசையின் மீதும், நடனம் மீதும் அதிக நாட்டம் கொண்டிருந்தார் ஜாக்சன்.

பாடல் எழுதுவது, அதற்கு இசையமைப்பது, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே கொஞ்சம் நவரச நடிப்பு என அனைத்து திறமையையும் கலந்து 'பாப்' என்ற புதிய உலகை அவர் படைத்தார்.

11வது வயதிலேயே தனது சகோதரர்களுடன் இணைந்து அவர் நடத்திய, 'தி ஜாக்சன் 5' என்ற இசை நிகழ்ச்சி, பாப் பிரியர்களை பரவசப்படுத்தியது. இதற்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பை பார்த்து அதை ஆல்பமாகவும் வெளியிட்டார் ஜாக்சன்.

இதை தொடர்ந்து வெளியான 'ஐ வாண்ட் யூ பேக்' என்ற இசை ஆல்பமும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை ‌பெற்று, ஒட்டு மொத்த உலமும் ஜாக்சனை திரும்பி பார்க்க ஆரம்பித்தது. அதன் பிறகு ஜாக்சனின் இசைப்பயணம் வெற்றிக்கரமாக பயணிக்க தொடங்கியது.

இசையுலகில் கடந்த 1971 முதல் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்த ஜாக்சன், தனது நிகழ்ச்சிகளை ஆல்பங்களாகவும் வெளியிட்டு வந்தார். இது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களையும் அவருக்கு பெற்றுத் தந்தது.

1972ல் 'காட் டு தி தேர்', 1979ல் 'ஆப் தி வால்', 1982ல் 'திரில்லர்', 1987ல் 'பேட்', 1991ல் 'டேஞ்சரஸ்' மற்றும் 1995ல் 'ஹிஸ்டரி' போன்ற ஆல்பங்கள் உலகளவில் விற்பனையில் சக்கப்போடு போட்டன.

1980களில் பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த நிலையில், மேற்கத்திய கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் எம்.டி.வி. தனது ஒளிபரப்பை துவக்கியது. அந்த டிவியில் ஜாக்சன் நடத்திய 'பீட் இட்', 'பில்லி ஜூன்' மற்றும் 'திரில்லர்' போன்ற இசை நிகழ்ச்சிகள், அவரது புகழை உலகம் முழுவதும் பரப்பியதோடு, அந்த டிவியையும் குறுகிய காலத்தில் பிரபலப்படுத்தியது.

தொடர் வெற்றிகள் காரணமாக, 75 கோடி ஆல்பங்கள், 13 கிராமி விருதுகள் பெற்று, ஈடு இணையற்ற பாப் பாடகராக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார் மைக்கேல் ஜாக்சன்.

ஆனால், கடந்த 1990களின் கடைசியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்திக்க ஆரம்பித்தார் ஜாக்சன். பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் பலமுறை முகத்தை மாற்றியது மற்றும் பண விவகாரம் போன்றவற்றால் பெரும் சர்ச்சைகளில் சிக்கினார். தனது பண்ணை வீட்டில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் நீதிமன்ற படியேறினார். வழக்கு விவகாரங்களுக்காக தனது சொத்துக்கள், பண்ணை வீடுகள் போன்றவற்றை இழந்தார். எனினும், கடந்த 2005ம் ஆண்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

மைக்கேல் ஜாக்சனின் இல்லற வாழ்க்கையும் நீண்ட காலம் இனிமையானதாக நிலைத்திருக்கவில்லை. கடந்த 1996ல் பிரஸ்லி என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் 1999ல் டெபோரே என்ற பெண்ணையும் மணந்தார். எனினும், மைக்கேல் ஜாக்சனில் வினோத நடவடிக்கைகள் பிடிக்காமல் இந்த இரு திருமணங்களுமே விவாகரத்தில் முடிந்தது.

மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மிசேல் காதரின் என்ற மகளும், ஜோசப் ஜாக்சன் மற்றும் மைக்கேல் ஜாக்சன் -2 ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார் மைக்கேல் ஜாக்சன். இரு மாதங்களுக்கு முன்பு, ஜாக்சனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான செய்தியை அறிந்து அவரது ரசிகர்கள் கண்ணீர் வடித்தனர். எனினும், உடல்நிலை குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஜாக்சன் மீண்டும் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளதாகவும், அடுத்த மாதம் முதல் 2010ம் ஆண்டு வரை லண்டனில் சுமார் 50 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் அவரது பாப் இசையுலக ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்கவில்லை.

திடீர் மாரடைப்பு காரணமாக, நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சன், நினைவு திரும்பாமலேயே மரணத்தை தழுவினார்.

ஜாக்சனின் மரணச் செய்தி, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Wednesday, June 24, 2009

கச்சத் தீவு - அடுத்த ஊறுகாய்

தேர்தல் முடியும்வரை ‘இலங்கை படுகொலை', 'தமிழன் சாகிறான்', '5ம் கட்டப்போர்' என்றெல்லாம் ஊறுகாய் விற்ற தமிழ் அரசியலாரின் அடுத்தக்கட்ட வியாபாரம் கச்சத் தீவு என்றாகியுள்ளது. இதைப் பற்றிய வரலாற்றுப் பிண்ணனியைப் பார்ப்போம்.

இராமேஸ்வரத்திற்கும், அதனின்று வட கிழக்காக மன்னார் குடாவில் உள்ள நெடுந் தீவிற்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் தமிழ்நாட்டிற்கு உரித்தானதாக தொன்று தொட்டு இருந்துவந்த கச்சத் தீவை, 1974ஆம் ஆண்டு போடப்பட்ட ஒரு ஒப்பந்த்தின் வாயிலாக இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்துக் கொடுத்ததன் காரணமாகவும், அதன் பிறகு 1976ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தின் வாயிலாக கச்சத் தீவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் இரு நாடுகளும் எல்லை வரையறை செய்து கொண்ட காரணத்தினால் தமிழ்நாட்டின் மீனவர்கள் தொன்று தொட்டுப் பெற்றிருந்த மீன் பிடி உரிமை பறிபோனது. எனவே மீன் பிடி உரிமையை - அது வரலாற்று ரீதியாக தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமை என்பதால் - மீண்டும் நிலை நிறுத்த வேண்டுமெனில் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு (அரசியல் கட்சிகள் மட்டுமே அல்ல) நேர்மையுடன் கோரி வருகிறது.

தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை இதுவரை மறுத்தவர் யாருமில்லை. கச்சத் தீவுக் கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் அனுபவித்து வந்த மீன் பிடி உரிமை என்பது இன்றைக்கு அதனை தங்களுடைய சொத்துப் போல பாவித்துப் பரிமாறிக் கொண்ட இந்தியாவும் இலங்கையும் சுதந்திரம் பெற்ற நாடுகளாக பரிமளிப்பதற்கு முன்னரே இருந்த நீடித்த யதார்த்தமாகும். எனவே கச்சத் தீவை தாரை வார்த்ததன் மூலம் தமிழக மக்களின் வாழ்வுரிமையில் நமது நாட்டின் மத்திய அரசு அத்துமீறியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழக மீனவர்களைக் கலக்காமலேயே அவர்களின் மரபுரிமையை வேறொரு நாட்டிற்கு அளித்துள்ளது. இப்படி, ஒரு நாடு என்ற ரீதியில் மத்திய அரசிற்கு அப்படிப்பட்ட உரிமை உண்டென்று வாதிடுவோர் கூட, கச்சத் தீவை இழந்ததால் தமிழக மீனவர்கள் சந்தித்துவரும் அவலத்திற்கும், சிறிலங்க கடற்படையினரால் அவர்கள் கொல்லப்படுவதற்கும், துன்புறுத்தப்படுவதற்கும் அதுவே காரணமாகிறது என்பதையும் மறுக்கவில்லை.

எனவே, நமது மீனவர்கள் முழு உரிமையுடன் தங்களுடைய பாரம்பரிய கடற்பரப்பில் பாதுகாப்புடன் மீன் பிடிக்க வேண்டுமெனில், கச்சத் தீவை மீட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். இதனை நன்கு உணர்ந்துதான் கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது. ஆனால், அதனை மீட்கும் பிரச்சனை எழுப்பப்படும் போதெல்லாம், அது தாரை வார்க்கப்பட்ட போது நீ என்ன செய்தாய் என்று தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளின் தலைவர்களான கருணாநிதியும், ஜெயலலிதாவும் அறிக்கை போரில் இறங்கி அரசியல் நடத்தி திசை திருப்புவதும் வழமையாகிவிட்டது. அதுதான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், கச்சத் தீவை மீட்பதற்கு அனைத்துக் கட்சிக்களும் ஆதரவு அளித்தால், அப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவேன் என்று கூறிய தமிழக முதலமைச்சர் கருணாநிதி, “பேராசை கொண்டு எல்லை மீறிச் சென்று மீன் பிடிப்பதால்தான்” பிரச்சனை ஏற்படுகிறது என்று கூறியுள்ளது வருத்தத்திலும் சிரிப்பை வரவழைக்கிறது.
மீன்கள் அதிகம் இருக்கும் பகுதிக்குச் சென்றுதான் மீன் பிடிப்பார்கள், அதுதானே இயற்கை. இதில் பேராசைக்கு என்ன இருக்கிறது? கடலிற்குச் சென்று அளவோடு மீன் பிடிக்க வேண்டு்ம் என்ற முறை ஏதேனும் உண்டோ? தமிழரின் வாழ்வு குறித்த இலக்கியங்களைப் படித்துப் புத்தகங்களாக எழுதித் தள்ளிய முதலமைச்சர் ஏன் இப்படி பேசினார் என்பது புரியவில்லை.

‘பேராசை பிடித்து எல்லையைத் தாண்டிச் சென்று’ என்று கூறுகிறாரே முதல்வர், அந்த எல்லை என்றைக்கு வந்தது? 1974இல் வந்தது. யாரைக்கேட்டுக் கொண்டு எல்லையை நிர்ணயித்தார்கள்? 1974இல் தாரை வார்த்தார்களே (தாரை வார்த்தார்கள் என்று கூறுவதைக் கூட மிகுந்த விசனத்தோடு தனது அறிக்கையில் விளக்கியுமுள்ளார் முதலமைச்சர்), யாரைக் கேட்டுக் கொண்டு செய்தது மத்திய அரசு? அதனால்தானே அந்த நடவடிக்கை தவறு என்று கூறி, ‘வருத்தம் தெரிவித்து’ தமிழக சட்டப் பேரவை தீர்மானம் நிறைவேற்றியது அன்றைய திமுக அரசு?

எனவே கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததை எதிர்க்கும் முதலமைச்சர், அந்த ஒப்பந்த அடிப்படையில் இரு நாடுகளும் வரையறை செய்த எல்லைகளை தமிழக மீனவர்கள் மதித்து நடக்க வேண்டும் என்று கூறுகிறாரா? அப்படித்தானே மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர் மலைச்சாமி கேட்ட கே‌ள்விக்கு பதிலளித்த அன்றைய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “சர்வதேச எல்லையை மதித்து நடக்க மீனவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினார். அதே குரலை தமிழக முதலமைச்சரும் ஒலிக்கிறாரே!

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஒரு பிரச்சனையை அரசியலாக்குவது என்பது, அதனை அரசியல் ரீதியாக கொண்டு சென்று தீர்வைத் தேடுவது என்பதுதான் பொருளே தவிர, சராசரி அரசியலாக்கி, ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தித் தேர்தல் ஆதாயம் தேடுவது அல்ல. கச்சத் தீவு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. இதில் அரசியல் ரீதியாக அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும். சட்டப் பேரவையிலும், நீதி மன்றங்களிலும் தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட ஒன்றிணைந்து போராட வேண்டும். மாறாக, அதனை கட்சி அரசியலாக்குவது, பறிக்கப்பட்ட உரிமையை மீட்பதற்கான முயற்சிகளை மழுங்கடித்து, அதனை குழி தோண்டி புதைப்பதற்கான எண்ணத்தின் மறைமுக வெளிப்பாடேயாகும்.

அரசியல் தலைவர்களின் அறிக்கைகளை நாளும் படிக்கும் மக்கள் இதையெல்லாம் கண்டு வெட்கப்பட்டு கூனிக் குறுகி நிற்கிறார்கள்.

ஈழத்தில் சிறிலங்க அரசு திட்டமிட்டு நடத்திய இனப் படுகொலையை தடுத்து நிறுத்த முடியாமல் போனதற்கு இந்த ‘எதிரி அரசியல்’ பலவீனமே காரணம் என்பதை தமிழக மக்கள் நன்றாகவே புரிந்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இதுவரை 400க்கும் அதிகமான மீனவர்களை கொன்று குவித்த சிறிலங்க கடற்படையிடம் இருந்து இதற்கு மேலாவது மீனவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு நினைக்குமானால், கச்சத் தீவை மீட்பதற்குரிய நேர்மையான நடவடிக்கைகளில் அது ஈடுபட வேண்டும்.

இழந்த உரிமையை மீட்டுத் தந்தால் மட்டுமே அனுபவமிக்க அரசியல் தலைவராகத் திகழும் தமிழக முதல்வருக்கு அது பெருமை சேர்க்கும்.கச்சத் தீவுப் பிரச்சனையில் இவ்வளவு தெளிவு தமிழர்களிடையே இருந்தும், சிறிலங்க அரசிற்கும், அதன் அதிபருக்கும் வெஞ்சாமரம் வீசுவதை வழமையாகக் கொண்டுள்ள நமது நாட்டின் ஒரு பாரம்பரிய ஆங்கில நாளேடு, ‘கச்சத் தீவு ஒரு முடிவாகிவிட்ட விவகாரம்’ என்று தலையங்கம் தீட்டி தனது ராஜபக்ச விசுவாசத்தைக் காட்டியுள்ளது!

அது காட்டியுள்ள விசுவாசத்தில் குறையேதுமில்லை. ஆனால் எவ்வளவு துணிச்சலுடன் அது பிரச்சனையின் தன்மையையும், ஆழத்தையும் மறைக்கிறது என்பதை பார்க்கும் போது தனது வாசகர்களின் சிந்தனையை அது எந்த அளவிற்கு மதிப்பிட்டுள்ளது என்பதைப் புலப்படுத்துகிறது. “கச்சத் தீவு என்ற அந்த பயன்றற தீவு சர்வதேச எல்லையில் சிறிலங்கப் பகுதியில் உள்ளது” என்று ஆரம்பித்து, அப்பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமையைப் பெற்றுத் தரும் போலியான முயற்சியில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருவதாகக் கூறியுள்ளது! எப்படி இருக்கிறது கதை!

சர்வதேச எல்லையை வரையறை செய்வதற்கான இரண்டு ஒப்பந்தங்கள்தான் 1974லும், 1976லும் போடப்பட்டது என்று கூறுகிறது தனது தலையங்கத்தில்! முதல் ஒப்பந்தத்தில் பால்க் நீரிணையிலும், அடுத்த ஒப்பந்தத்தில் மன்னார் குடா பகுதியிலும் எல்லைகளை வரையறை செய்ய இந்த இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டனவாம்.அதன்படி, கச்சத் தீவில் சென்று வலைகளை காயப்போடவும், ஓய்வு எடுக்கவும், அங்குள்ள அந்தோனியார் கோயில் விழாவில் கலந்து கொள்ளவும் எந்த விதமான சட்ட ரீதியான ஆவணங்களும் இன்றி தமிழக மீனவர்களை அனுமதிக்க சிறிலங்க அந்த ஒப்பந்தங்களின்படி இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாம்.

எனவே, கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடிப்பது என்பது இந்த ஒப்பந்தங்களின் படி ஒப்புக் கொள்ளப்படவில்லை என்று கூறுகிறது அந்த நாளிதழ். அதுமட்டுமல்ல, கச்சத் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் மட்டும் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவில்லையாம், அங்கு மீன் வளம் குறைந்துள்ளதால், அதிக அளவிற்கு மீன்கள் கிடைக்கும் சிறிலங்க கடற்பகுதிக்குச் சென்று மீன் பிடிக்கிறார்களாம். அதற்கு அவர்கள் கொடுக்கும் விலைதான் ‘சில நேரங்களில்’ சிறிலங்க கடற்படையினர் சுட்டுவிடுகின்றனராம், ‘மற்ற நேரங்களில்’ அவர்களை கடற் புலிகள் சுட்டு விடுகின்றனராம். இதனைத்தான் தமிழ்நாட்டின் கட்சிகள் அரசியல் உணர்வுகளை (?) தூண்டிவிட பயன்படுத்திக் கொள்கின்றனவாம். அதற்காகத்தான் அவர்கள் கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்புகின்றனராம் என்று ‘மிகச் சீரிய முறையில்’ ஆராய்ந்து தலையங்கம் தீட்டியுள்ளது அந்த நாளேடு.

இது மட்டுமல்ல, தங்களுடைய பிரச்சனை கச்சத் தீவு அல்ல, சிறிலங்க கடற்பரப்பில் சென்று மீன் பிடிப்பதே என்றும், அதற்கு அனுமதி வேண்டும் என்றே தமிழக மீனவர்களே கூறுகின்றனராம்! ஆனால் அப்படிப்பட்ட உரிமையை இறையாண்மையுடைய சிறிலங்க அரசுதான் தர முடியுமா? அல்லது இறையாண்மை கொண்ட மத்திய அரசுதான் அப்படிக் கேட்க முடியுமா? என்று மிகுந்த மிகுந்த சட்ட ஞானத்துடன் கேட்டுள்ளது!

இனப் படுகொலை செய்வதற்கே இறையாண்மையை காரணம் காட்டும் அரசின் அறிவிக்கப்படாத அரசிதழாக உள்ள அந்த நாளிதழ், விடுதலைப் புலிகள் சிறிலங்க அரசால் இராணுவ ரீதியாக ஒடுக்கப்பட்டதால் ஏற்பட்ட கசப்புணர்வின் காரணமாக தமிழ் மொழி வெறியாளர்களே இப்படிப்பட்ட குரலை எழுப்புகிறார்கள் என்று கூறுகிறது. இந்திய, சிறிலங்க நாடுகளின் பிரதமர்கள் கையெழுத்துப் போட்டு நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை அவமதிப்பது என்ற பேச்சிற்கே இடமில்லை என்று சிறிலங்க சிங்கள அரசின் சார்பாக தனது குரலை ஓங்கி ஒலித்துள்ளது அந்த நாளிதழ்.

முதல் ஒப்பந்தத்தின் உண்மை என்ன?

இரு நாட்டுப் பிரதமர்களான இந்திரா காந்தியும், சிறிமாவோ பண்டார நாயகாவும் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதியும் (இந்திரா காந்தி கையெழுத்திட்ட நாள்), அதே மாதம் 28ஆம் தேதியும் (சிறிமாவோ பண்டாரநாயகா கையெழுத்திட்ட நாள்) செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரிவு 5-ன்படி (Article 5) கச்சத் தீவிற்கு இதுவரை சென்று வந்ததைப் போல மீனவர்களும், யாத்ரிகர்களும் (அங்குள்ள அந்தோனியார் கோயிலிற்கு) எந்த பயண ஆவணங்களுமின்றி சென்று வரலாம் என்று குறிப்பட்டுள்ளதை மட்டுமே அந்த நாளிதழ் சுட்டிக் காட்டுகிறது.

ஆனால் அந்த ஒப்பந்தம் குறித்த சுருக்கத்தில் (Summary), இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று அடிப்படையிலான நீர் எல்லைகளைச் சம தூர அடிப்படையில் வரையறை செய்துகொள்கிறது. ஆயினும், இரு தரப்பினரதும் பாரம்பரிய மீன் பிடி உரிமைகளை பாதுகாக்கிறது என்று தெளிவாக குறிப்பிடுகிறது. எப்படி இந்திய - சிறிலங்க கடற்பரப்பில் இரு நாட்டுக் கப்பல்களும் சென்று வந்த பாரம்பரிய போக்குவரத்து காப்பாற்றப்படும் என ஒப்பந்ததின் பிரிவு 6 கூறுகிறதோ, அதே அடிப்படையில்தான் பாரம்பரிய மீன் பிடி உரிமையும் பாதுகாக்கப்படும் என்று 1974 ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, மீன் பிடி உரிமை 1974 ஒப்பந்தத்திற்குப் பிறகும் இருந்தது நிரூபிக்கப்படுகிறது.

கச்சத் தீவு ஒப்பந்தத்திற்குப் பிறகும் அதனை ஒட்டிய கடற்பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமை இருந்ததை, அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் (மக்களவையில்) நடந்த விவாதத்திற்குப் பதிலளித்த அன்றைய அயலுறவு அமைச்சர் சுவரன் சிங் உறுதிபடுத்தியுள்ளார். எனவே இந்தியாவும், சிறிலங்காவும் எல்லை வரையறை செய்துகொண்டதனால் கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடி உரிமையை நமது மீனவர்கள் இழந்துவிட்டனர் என்று கூறுவது அப்பட்டமான அயோக்கியத்தனமாகும்.

கச்சத் தீவு யார் எல்லைக்குள்? எப்படி வந்தது?

அது மட்டுமல்ல, இந்தியா - இலங்கை இடையிலான கடற்பகுதி சம தூர அளவு (Equal distance from the coast lines) என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டதாகக் கூறப்படுவதிலும் பிழை உள்ளது. இதனை அப்பொழுது இந்திய அரசின் சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் சட்டங்கள் துறையின் இயக்குனராக இருந்த எஸ்.பி. ஜகோட்டா இவ்வாறு கூறியுள்ளார்: According to SP Jagota, then Director of the Legal and Treaties Division, “the boundary line between India and Sri Lanka followed the median line except as adjusted in the Palk Bay in relation to the settlement on the question of the Island of Kachchativu”

அதாவது, இரு நாடுகளின் கரைக்கு இடையிலான சம தூர அடிப்படையில்தான் கடல் எல்லை வகுக்கப்பட்டது, ஆனால் கச்சத் தீவுப் பகுதியில் மட்டும் அதனை அந்த சம தூர அளவு பின்பற்றப்படாமல் அதனை இலங்கை கடற்பகுதிக்குள் வருமாறு எல்லை வகுக்குப்பட்டது என்கிறார். இது அப்பகுதியின் இன்றைய சர்வதேச எல்லைக் கோட்டு வரைப் படத்தை பார்த்தாலே வளைத்து வரையப்பட்டது தெரியும். எனவே எல்லை வகுத்ததனால் கச்சத் தீவுப் பகுதி இலங்கைக்கு உரியதாகிவிட்டது என்று ஆங்கிலத்தில் கதை விட்டால் அது உண்மையாகிவிடாது.

ஆனால் 1976ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையில் நடந்த கடிதப் பறிமாற்றத்தில் சிறிலங்காவின் கடல் எல்லைப் பகுதியிலும், வரலாற்று ரீதியான நீர்ப் பகுதிகளிலும், அதன் தனித்த ஆளுமைக்குட்பட்ட பொருளாதார மண்டலங்களிலும் (Exclusive Economic Zone) இந்தியாவின் மீனவர்களோ அல்லது மீன் பிடி படகுகளோ செல்வதில்லை என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை 2006ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் எம். அப்பாதுரை கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதமரின் சார்பில் பதிலளித்த அயலுறவு இணை அமைச்சர் இ. அகமது தெரிவித்துள்ளார்.

ஆக கடிதப் பறிமாற்றத்தின் மூலம் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமை இந்திய அரசால் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இப்படி உரிமை பறிக்கப்பட்ட விவரமே தெரியாமல்தான் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டிருந்தனர் என்பது வேறு கதை. ஆக, இந்திய அரசு (அவசர நிலை காலத்தில்) தாரை வார்த்த உரிமையின் காரணமாக தாங்கள் தொன்று தொட்டு அனுபவித்துவந்த வாழ்வாதாரத்தை, மீன் பிடி உரிமையை தமிழக மீனவர்கள் இழந்துள்ளனர் என்பது ஐயத்திடகிடமின்றி நிரூபனமாகிறது.

கச்சத் தீவை சுற்றியுள்ள கடற்பகுதியில் மீன் பிடிக்க உரிமை இல்லாத போது அங்கு சென்று வலைகளை காயப்போட என்ன அவசியம் உள்ளது? அங்கு செல்வது என்று எத்தனித்தாலே அது எல்லையை கடப்பதாக ஆகிவிடுமே? எல்லையை மதித்து நடக்க வேண்டும் என்றுதானே பிரணாப் முகர்ஜியும், தற்பொழுது தமிழக முதல்வரும் நமது மீனவர்களை வற்புறுத்துகிறார்கள்? எனவே, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமை அங்கு நிலை நாட்டப்பட வேண்டுமெனில் கச்சத் தீவை மீட்பதே ஒரே வழி. இரு நாடுகளும் ஒப்பந்தம் போட்டுக் கொண்ட காரணத்தினாலேயே அதற்கு எந்தப் புனிதமும் வந்துவிடாது என்பதை இதுநாள்வரை முறிந்து போன எத்தனையோ சர்வதேச ஒப்பந்தங்களை உதாரணமாகக் காட்ட முடியும்.

பெருபாரி பரிமாற்றத்தில் நீதிமன்றம் தலையிட்டதே!

இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச ஒப்பந்தத்தை இறையாண்மை உள்ள எந்த நாடும் அவமதிக்கக் கூடாது என்று கூறும் பத்திரிக்கை தர்மம், மேற்கு வங்க மாநிலத்தின் கடற்பரப்பில் உள்ள பெருபாரித் தீவை அம்மாநில அரசின் ஒப்பதலின்றி வங்கதேசத்திற்கு இந்தியா அளித்த ஒப்பந்தத்தை எதிர்த்து மேற்கு வங்க அரசு உச்ச நீதி மன்றத்தை நாடியதையும், சாதகமான தீர்ப்பைப் பெற்றதையும் மறந்தது ஏனோ?

கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததில் அரசமைப்பு நெறிகளை இந்திய (இந்திரா காந்தி) அரசு காற்றில் பறக்க விட்ட சட்ட விவரங்களையெல்லாம் யாரும் மறந்துவிடவில்லை. நமது நாட்டிற்குச் சொந்தமான ஒரு நிலப் பகுதியை வேறொரு நாட்டிற்குத் தரவேண்டுமெனில் அது தொடர்பான (எல்லை மறுவரையறை செய்யும்) சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் கச்சத் தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதில் அப்படிப்பட்ட வழிமுறை கையாளப்படவில்லை. கச்சத் தீவு இந்தியாவிற்கு (தமிழ்நாட்டிற்கு, அதுவும் குறிப்பாக சேது நாட்டு கடல் எல்லைக்குட்பட்டது என்பதற்கான ஆவணங்கள் இன்றளவும் டெல்லியிடம் உள்ள நிலையில்) சொந்தமானது என்பது ஐயத்திற்கிடமற்ற உண்மையாக இருப்பினும், அது தகராறுக்கு உட்பட்ட பகுதி (disputed territory) என்ற நிலையை டெல்லி எடுத்து, அதனடிப்படையில் அந்நிய நாட்டுடன் நல்லுறவு பேண தாரை வார்த்ததாகக் கூறியுள்ளது. இதெல்லாம் இன்றளவும் உயிரோடிருக்கும் விவரங்கள்தான். இதையெல்லாம் நீதி மன்றத்தில் நிரூபிக்க முடியும். அப்பொழுது தெரியும் இந்திய - இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தத்தின் புனிதம்.

எனவேதான், கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி இந்திய அரசமைப்புப் பிரிவு 32இன் கீழ் உச்ச நீதி மன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்துள்ளார். கச்சத் தீவை மீட்க சட்ட ரீதியான சரியான அணுகுமுறை இதுவேயாகும். எனவே கச்சத் தீவு என்பது ‘முடிந்துவிட்ட விவகாரம்’ என்று யாரும் இதற்கு மேலாவது தமிழனுக்கு காது குத்துவதை நிறுத்திக் கொள்ளட்டும்.

Monday, June 22, 2009

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

ந‌ம்‌மி‌ல் பலரு‌க்கு‌ம் தெ‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம் அடையாறு பு‌ற்றுநோ‌ய் மரு‌த்துவமனையை‌ப் ப‌ற்‌‌றி. ஆனா‌ல் அ‌ந்த ஆலமர‌த்‌தி‌ன் ஆ‌னி வே‌ர் யா‌ர் எ‌ன்று ‌சிலரு‌க்கு தெ‌ரி‌ந்‌திரு‌க்காது. ஆ‌ம். இ‌ந்த க‌ட்டுரையை‌ப் படி‌க்கு‌ம் மு‌ன்பு என‌க்கு‌ம் தெ‌ரியாது.

இந்தியத் திருநாட்டில் முதல் சட்டசபை பெண் உறுப்பினர், முத‌ல் பெ‌ண் மரு‌த்துவ‌ர் என்கிற பல சாதனைகளுட‌ன் வரலா‌ற்று‌ப் ப‌‌க்க‌ளி‌ல் இட‌ம்‌பிடி‌த்த இவ‌ரி‌ன் வா‌ழ்‌விய‌ல், ஒவ்வொரு பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு. அத‌ற்காகவே இ‌ங்கு நா‌ன் அதனை வெ‌ளி‌யிடு‌கிறே‌ன்.

ஒரு நா‌ள் தமிழக சட்டசபையில் அன‌ல் பற‌க்கு‌ம் ‌விவாத‌ம் நட‌‌ந்தது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக, கோயில்களில் பொட்டுக்கட்டுதல் என்கிற 'தேவதாசி'முறை வழக்கத்திலிருந்தது. அது ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அனல் பறக்கும் விவாதத்திற்குக் காரணமாக இருந்தது.

பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து.. தனது நெஞ்சுரத்தால் பெண் விடுதலைக்காகவும் தேவதாசி ஒழிப்புக்காகவும் தன்னை போராடிய அந்த வீரப்பெண், " 'தேவதாசி'முறை தமிழகத்திலிருந்து ஒழிக்கப்பட்டே தீரவேண்டும்.. வரும் காலத்தில் 'தேவதாசி' என்கிற பெயர் சரித்திரத்தில்கூட இடம்பெறக் கூடாது" என்று ஆவேசமாக முழக்கமிட்டார்.

அந்தப்பெண்ணின் வீரமுழக்கத்தை மறுக்கும் விதமாக.. சத்தியமூர்த்தி அவர்கள், "தேவதாசிகள் என்பவர்கள் ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள், அவர்கள் தேவர்களின் அதாவது தெய்வங்களின் அடிமை என்கிற புனிதத்தன்மை பெற்றவர்கள். அதை ஏன் ஒழிக்க வேண்டுமென்கிறீர்கள்?" என்று கேட்டார்.

சற்றும் தாமதிக்காமல்.. அந்தப் பெண், "தேவதாசி முறை புனிதமானது என்றால், தேவதாசி முறை ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றால், அந்தத் தொழிலை பிற்படுத்தப்பட்ட எங்கள் குலத்துப் பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா? உங்கள் உயர்ஜாதிக் குடும்பத்திலிருந்து எந்தப் பெண்ணையாவது தேவதாசி ஆக்குங்களேன்!" என்று அனல்தெறித்தார். சட்டசபையே ஒரு நொடி ஆடிப்போனது.

அந்தக் கனல் பொழிந்த குரலுக்குச் சொந்தக்காரர்தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி!

இந்தியத் திருநாட்டில் முதல் சட்டசபை பெண் உறுப்பினர் என்கிற வரலாற்றுப் பெருமைக்குச் சொந்தக்காரரான இவரின் வாழ்வியல், ஒவ்வொரு பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு.

1886 ஆம் வருடம் புதுக்கோட்டையில் நாராயணசாமிக்கும், சந்திரம்மாளுக்கும் மூத்தமகளாகப் பிறந்தார் முத்துலட்சுமி.

முத்துலட்சுமியின் குடும்பம் அன்று புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பெரும் மதிப்புக்குரிய குடும்பமாகத் திகழ்ந்தது. அவரது தந்தை நாராயணசாமி, மகாராஜா கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியபோதும் கரைபடியாத கரம் என்பதால்... வீட்டுக்குள் நான்கு பிள்ளைகளையும் படிக்க வைக்க முடியாத பணப்பற்றாக்குறை ஏற்பட்டது.

மூத்த பெண்ணான முத்துலட்சுமியை பள்ளிப் படிப்போடு நிறுத்தி விடலாமா? என்று நாராயணசாமி நினைத்தபோது... முத்துலட்சுமியின் கல்வியறிவை முடக்கி அவரை கிணற்றுத் தவளையாக்கிவிட வேண்டாம் என, அவர் படித்த பள்ளி ஆசிரியர்கள் நாராயண சாமியிடம் கெஞ்சினார்கள்.

முத்துலட்சுமி, அவர்களின் கெஞ்சுதலுக்கு நன்றி உபகாரமாக, பள்ளிக்கூடத்திலேயே அவர் ஒருவர் மட்டும் மெட்ரிக்குலேஷன் தேர்வில் வெற்றி பெற்று பள்ளியின், ஆசிரியர்களின் மானத்தைக் காப்பாற்றினார்.

அதற்கடுத்து புதுக்கோட்டை அரசர் கல்லூரியில் சேர்ந்தபோது, அவருக்கு கல்லூரி நிர்வாகம் ரத்தினக் கம்பள வரவேற்புத் தந்தது. அங்கே அவரது ஆங்கிலப் புலமை... ஆசிரியர்களை அசரவைத்தது.

அத்தனை திறமையும், புத்திக்கூர்மையும் கொண்ட முத்துலட்சுமிக்கு கண்பார்வைக் கோளாறு என்கிற குறையிருந்தது. இருப்பினும், படிப்பையே தனது பார்வையாக மாற்றிக்கொண்டார். அடுத்து, அவருக்குள்ளிருந்த உடல்நலக் குறைபாடு அவரை மருத்துவத் துறையில் கால் பதிக்கத் தூண்டியது.

மருத்துவக் கல்லூரி மாணவியாக அவர் கால் பதித்தபோது, அந்தக் கல்லூரி அவரை இருகரம்நீட்டி வரவேற்றது.

மருத்துவக் கல்லூரியில் சிறந்த மாணவியாக முத்துலட்சுமி திகழ்ந்தார். 1912_ல் மருத்துவராய் வெளியே வந்தார்.

அடுத்து, சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றியபோதுதான் அவருக்கு அரசியல் மீது ஆர்வம் பிறந்தது.

பெண்ணடிமைத்தனம் விலக வேண்டும், தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடுமைகள், அநீதிகள் அழிக்கப்பட வேண்டும். அதற்கு நாம் அரசியலில் இறங்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்குள் உதயமானது.

முத்துலட்சுமியின் அயராத உழைப்பு.... அவரை மருத்துவத்துறையில் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

அறுவை சிகிச்சைத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று 'முதல் இந்திய மருத்துவப் பெண்மணி' என்கிற வரலாற்றுச் சான்றிதழோடு வெளியே வந்தார்.

அடுத்து அவருடைய இலக்கு.. ஏழை எளிய மக்களுக்காக அதுவும் தனது பகுதி மக்களுக்கான சேவையில் தொடங்கியது. புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்கள் எல்லாம் அவர் கரம்பட்டு நலமானது..... அவர் சிகிச்சையால் புத்துயிர் பெற்றன.

அவரது வளர்ச்சியில்... சேவை மனப்பான்மையில்... புளங்காகிதம் அடைந்த அவரது பெற்றோர், அவருக்குத் திருமணம் செய்விக்க விரும்பினர். ஆனால், திருமணம், பெண்களை அடிமையாக்கும்_ஆணாதிக்கம் செலுத்தும் ஒரு சடங்கு என்று நினைத்ததால் அவர் மறுத்தார்.

இருப்பினும், அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் சுப்பராயுலு ரெட்டியாரின் மகன் டாக்டர் சுந்தர்ரெட்டியார்... முத்துலட்சுமியின் தந்தையை அணுகி... "முத்துலட்சுமியின் மனம் அறிந்தவன் நான். அவரைத் திருமணம் செய்ய விரும்புகிறேன்.." என்று பெண் கேட்டார்.

அவர் தனது விடுதலை உணர்வுக்கு எந்த விதத்திலும் தடையாகவோ இடைஞ்சலாகவோ இருக்கமாட்டார் என்று உணர்ந்த பின்பு முத்துலட்சுமி திருமணத்திற்குச் சம்மதித்தார்.
டாக்டர் முத்துலட்சுமியை திருமணம் செய்துகொள்ள டாக்டர் சுந்தர்ரெட்டி விருப்பம் தெரிவித்தபோது, மூன்று நிபந்தனைகளை அம்மையார் விதித்தார்.

1. தம்மை சரிசமமாக நடத்த வேண்டும்.

2. தன் சொந்த விருப்பங்களுக்குக் குறுக்கே நிற்கக் கூடாது.

3. தம்மை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

சுந்தர்ரெட்டி இவற்றுக்கு இணங்கிய பிறகே 1914 ஏப்ரலில் 'தியாசபிகல் சொசைட்டி (பிரம்ம சமாஜ) சட்டத்தின்படி திருமணம் நடந்தது. முத்துலட்சுமி திருமதி ஆனார். ராம்மோகன், கிருஷ்ணமூர்த்தி என்கிற இரண்டு மகன்களைப் பெற்றார்.

அவரது கணவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணி மாற்றலாக, முத்துலட்சுமி புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தார். அந்த நேரத்தில் அவரது தங்கைக்கு புற்றுநோய் தாக்க... தான் ஒரு மருத்துவராக இருந்தும் அவரைக் காப்பாற்ற முடியாமல் பதறினார்.

புற்றுநோய் எனும் உயிர்க்கொல்லி நோயிலிருந்து இனி யாரையும் சாகவிடக் கூடாது என்கிற எண்ணம் அவருக்குள் உறுதியானது.

1925_ல் கணவர், குழந்தைகளுடன் லண்டனுக்குச் சென்று அங்கே செல்சியா மருத்துவமனையில் தாய், சேய் மருத்துவ ஆராய்ச்சியும், இராயல் புற்றுநோய் மருத்துவமனையில் புற்று நோய் பற்றிய ஆராய்ச்சியும் செய்ய ஆரம்பித்தார்.

அதோடு அங்கே நாற்பத்திரண்டு நாடுகள் கலந்துகொண்ட மகளிர் மாநாட்டில் இவரும் இந்திய மாதர் சங்கப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அப்போது... உலகம் முழுக்கப் பெண்களுக்குச் சுதந்திரம் மறுக்கப்படுவதும், ஆண்கள் ஆதிக்கத்தால் பெண்கள் அடிமைகளாய் கட்டுண்டு கிடப்பதும், பெண்கள் வெறும் போகப்பொருள் என்கிற நிலையிலிருப்பதும் அவருக்குள் ஒரு புரட்சித் தீயை உருவாக்கியது.

இங்கிலாந்திலிருந்து புற்றுநோய்க்கான ஆராய்ச்சியை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும் இந்திய மாதர் சங்கம் அவரை அரசியல் களத்திற்குள் இறக்கிவிட்டது. முத்துலட்சுமியின் வீரமும், விவேகமும் அவரை இந்தியத் திருநாட்டின் முதல் சட்டசபை உறுப்பினராக்கியது.

அந்த உறுப்பினர் எனும் கவசத்தால்... 'தேவதாசி...' 'பெண் அடிமை' 'பால்ய வயதுத் திருமணம்' எனும் பேய்களை ஓட்டினார்.

எல்லாவற்றிற்கும் மேலே... புற்றுநோய் நிவாரண மருத்துவமனையை அவர் சார்ந்திருந்த மாதர் சங்கம் சென்னையில் தொடங்கியது. அன்று சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட அந்தப் புற்றுநோய் மருத்துவமனை, இன்று பல்லாயிரக்கணக்கான புற்றுநோய் நோயாளிகளின் உயிர் காக்கும் தோழியாகச் செயல்பட்டு வருகிறது.

1954_ல் பன்னிரெண்டு படுக்கைகளோடு தொடங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இன்று புற்றுநோய் ஆய்வு மையம், புற்றுநோய் தடுப்பு, டாக்டர் முத்துலட்சுமி புற்றுநோய் அறிவியல் துறை கல்லூரி... என விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இன்று அந்த மருத்துவமனையில் பயன்பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு எண்பதாயிரம் பேர்.

பெண் விடுதலைக்காகவும்.. ஏழை, எளிய மக்களுக்காகவும் தனது வாழ்வின் பெரும்பகுதியைச் செலவழித்த முத்துலட்சுமி ரெட்டிக்கு 1937_ம் வருடம் சென்னை மாநகரத் தலைமையாரால் 'ஆல்டர் வுமன்' என்கிற பட்டம் வழங்கப்பட்டது. இது மட்டுமன்றி 1956_ல் இந்திய அரசின் பத்மபூஷண் விருதுக்கும் அவர் சொந்தக்காரர் ஆனார்.

1936_ல் சென்னை அடையாறில் குடியேறிய பிறகு.. முழு நேர மருத்துவ உதவிகளோடு.. மீனவக் குழந்தைகளின் கல்விக்காகவும் பாடுபட்டார். நூலகங்களை உருவாக்கினார். டாக்டர் சௌந்திரம் இராமச்சந்திரன் துணையோடு காந்திகிராமப் பணிகளைத் தொடங்கினார்.

தனது இறுதி மூச்சு உள்ளவரை பொதுநலமும்.. பெண்களின் சுதந்திர வாழ்க்கையுமே அவரின் ஒரே மூச்சாக இருந்தது.

1968_ம் வருடம் தனது 82_வது வயதில் அந்த இதயம் நின்றபோது, அவருக்காக பல ஆயிரம் இதய‌ங்க‌ள் துடி‌த்த‌ன். க‌ண்க‌ள் க‌ண்‌ணீ‌ர் ‌‌வி‌ட்டன.

டாக்டர் முத்துலட்சுமி மறைந்தாலும் அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் அவர் ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு பெ‌ரிய க‌ட்டுரை எ‌ன்றாலு‌ம், இதை‌ப் படி‌த்தது‌ம் நம‌க்கு எ‌த்தனை ‌விஷய‌ங்க‌ள் ‌விள‌ங்கு‌கிறது. எ‌ந்த வா‌ய்‌ப்பு‌ம் இ‌ல்லாம‌ல், தனது சொ‌ந்த முய‌ற்‌சி‌யா‌ல் வா‌ழ்‌ந்து வ‌ழிகா‌ட்டி மு‌த்துல‌ட்சு‌மி எ‌ங்கே...எ‌ல்லா வச‌தி, வா‌ய்‌ப்பு, சுத‌ந்‌திர‌ம் இரு‌ந்து‌ம் எ‌ந்த வள‌ர்‌ச்‌சியு‌ம் இ‌ன்‌‌றி வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் நா‌ம் எ‌ங்கே...

Sunday, June 7, 2009

அரசு வழங்கிய ஆவணம் செல்லாததாகி விட காரணம் ஆட்சியாளர்களே!

தமிழகத்தில் போலி ரேஷன் அட்டைகள் உள்ளதாக தமிழக அரசே அறிவித்துள்ளதால், அதை ஆவணமாகக் கருதி மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கவில்லை' என்று தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் நரேஷ்குப்தா கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வங்கிக் கணக்குகளைத் தொடங்க ரேஷன் அட்டையை ஆவணமாகக் கருதுவதில்லை என்பது பலரும் அறிந்த ஒன்று. இந் நிலையில், இன்று ரேஷன் அட்டையை ஆவணமாகக் கருத முடியாது என தேர்தல் ஆணையமும் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் மக்கள் தொகையைவிட ரேஷன் அட்டைகளில் இடம் பெற்றிருக்கும் நபர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதும், பல லட்சம் போலி ரேஷன் அட்டைகள் புழக்கத்தில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சொந்த ஊரில் ஒரு ரேஷன் அட்டை, பணிபுரியும் இடத்தில் ஓர் அட்டை வைத்துள்ளவர்களும் உண்டு. அரசு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்காக ஒரே ஊரில் பல முகவரிகளில் ரேஷன் அட்டைகள் வைத்திருப்பவர்களும், ரேஷன் கடையை நம்பி பிழைப்பு நடத்தும் "வியாபாரிகள்' பல ரேஷன் அட்டைகளை வைத்திருப்பதும் உண்டு.

போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்கும் நோக்கத்தோடு, ரேஷன் கடைகளில் பொருள்களை குடும்பத் தலைவர் அல்லது குடும்ப அங்கத்தினர் மட்டுமே வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அதிமுக ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரிசி வாங்க கூப்பன் முறை கொண்டு வரப்பட்டது. கூப்பனை ரேஷன் அட்டையோடு கொண்டு வந்தால் மட்டுமே அரிசி வாங்க முடியும் என்ற நிலை இருந்தது. இதன் மூலம் போலி ரேஷன் அட்டைகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, ரேஷன் அட்டைகளை புதுப்பிக்கவோ, புதிய ரேஷன் அட்டை வாங்கவோ முடியாத நிலை ஏற்பட்டது.

2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தவுடன், நிலைமையே மாறியது. கூப்பன் முறையும் நீக்கப்பட்டது. ரத்து செய்யப்பட்ட ரேஷன் அட்டைகள் "பல வழி'களின் மூலம் உயிர் பெற்றன. அங்கன்வாடி பணியாளர்களிடம் குறிப்பிட்ட காலத்துக்குள் ரேஷன் அட்டை கோரி விண்ணப்பங்கள் கொடுத்தவர்களுக்கு உடனுக்குடன் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டன. முறையான விசாரணைக்குப் பின்னும், அரசு உத்தரவின்படியும்தான் இந்த ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

இதனால், புதிதாக லட்சக்கணக்கான அட்டைகள் புழக்கத்திற்கு வந்தன. இந் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் போலி ரேஷன் அட்டைகளை கண்டறிந்து, அவற்றைக் களைய வீடு, வீடாகச் சென்று ஆய்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது. இதையடுத்து, ஆய்வு நடத்தப்பட்டு பல மாவட்டங்களில் சுமார் 30 ஆயிரம் முதல் 1 லட்சம் ரேஷன் அட்டைகள் "சந்தேகப்படும்படியான ரேஷன் அட்டைகள்' எனக் கூறி வருவாய்த் துறை ரத்து செய்தது.

தொடர்ந்து, இந்த அட்டைகளுக்கு பொருள்கள் வழங்கப்படாது என்றும் மேல்முறையீடு செய்ய வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், முறையான தணிக்கை நடக்கவில்லை என்றும் அரசு அலுவலர்கள் ஓரிடத்தில் அமர்ந்து சரிபார்த்ததன் விளைவாக உண்மையான அட்டைகள் ரத்து செய்யப்பட்டன என்று கூறி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"வாக்கு வங்கி' பாதிக்கும் என்ற அச்சம் காரணமாகவே போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்கவும், உண்மையான அட்டைகளை முறைப்படுத்தவும் ஆளுங்கட்சிகள் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுவதே உண்மை. விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் அட்டைகளை "அள்ளி' வழங்கிய அரசு இப்போது புதிய நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது.

"கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்பதுபோல் இப்போது புதிய அட்டைகள் வாங்க பல்வேறு கெடுபிடிகள் உள்ளன. இந்த வகையில், உரிய ஆவணங்கள் அளித்து பல மாதங்களாக அட்டைக்காக ஏராளமானோர் காத்திருக்கின்றனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தேர்தல் ஆணையம்... என தொடர்ந்து மத்திய அரசின் துறைகள் ரேஷன் அட்டையை ஒரு ஆவணமாகக் கருதாமல் போகும் நிலை ஏற்படலாம்.

இதனால், வங்கிக் கணக்கு, பான் கார்டு... என அடையாளத்துக்காக ஆவணங்களைப் பெறுவதில் ஏழை, எளிய மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். மக்களுக்கு அரசு வழங்கும் ஓர் ஆவணம் இன்று செல்லாததாகி வரும் சூழ்நிலைக்குக் காரணம் ஆட்சியாளர்களே.

Friday, June 5, 2009

காது குளிரக் கேட்பேன் - காதல் இல்லையென்று!

விடிந்த நேரத்தின்
விடியாத அறைக்குள்
சிரித்த முகம் நினைவில்...

அடுத்த அறை ஜன்னல்
அடிக்கடி திறந்துப் பார்ப்பேன் - வெளியில்
நீ இருப்பாயோயென்று!

முன்பெல்லாம் விட
நிறைய நேரம் கண்ணாடியில் - என
அம்மா திட்டுகிறாள்!

அப்பா சிரிப்பதன் அர்த்தம்,
சிலநேரம் அன்பாகவும்!
பலநேரம் அவஸ்தையாகவும்!!

உன்னால் மட்டுமே முடியுமென்று
எங்கள் இருவருக்குமேத் தெரியும்
நாங்கள் சொல்லி யார்தான்
நம்பிவிட போகிறார்கள்?

இன்னும் எத்தனை நாட்கள்?
அச்சேறும் நீ - வீதியில்
அரங்கேறும் நாள்தான்

என்னைப் பற்றிய கிசுகிசுக்கள்
‘எனக்கு முன்னமே தெரியும்
அவர்கள் நண்பர்கள் தானென்று'
காது குளிரக் கேட்பேன் - என்
நண்பனின் மணவோலையே!

Thursday, June 4, 2009

நடிகவேள் எம்.ஆர். ராதா - நூற்றாண்டைத் தாண்டி

ராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட எம்.ஆர். ராதா பிறந்தது சென்னையிலுள்ள சூளை, வருடம் 1907, தந்தை ராஜகோபால் நாயுடு முதலாம் உலகப் போரில் ரஷ்ய எல்லை பஸ்ஸோவியாவில் மரணமடைகிறார், தாய் ராசம்மமாள். உடன் பிறந்தவர்கள் அண்ணன் ஜானகிராமன், தம்பி பாப்பா. சிறுவனாக இருந்தபோது அம்மாவிடம் கோபித்து, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கியபோது தொடங்கியது ராதாவின் கலக வாழ்க்கை. எழும்பூரிலிருந்து சிறுவன் ராதாவை ஆலந்தூர் பாய்ஸ் கம்பெனி உரிமையாளர் ஆலந்தூர் டப்பி அரங்க நாயுடு சிதம்பரம் அழைத்து செல்கிறார். அங்கிருந்து தொடங்குகிறது ராதாவின் நாடக வாழ்க்கை.

ஆலந்தூர் பாய்ஸ் கம்பெனியிலிருந்து விலகி மைசூர் நாடக கம்பெனி, பிறகு சாமண்ணா நாடக கம்பெனி, அப்புறம் ஜெகந்நாதய்யர் கம்பெனி, 1924 ஆம் ஆண்டு ராதா நடித்த 'கதரின் வெற்றி' நாடகத்தை காந்தி, கஸ்தூரி பாய், பாரதி, ராஜாஜி ஆகியோர் கண்டு ரசிக்கிறார்கள். நாடக நடிகர் என்றால் ராதா மகிழ்ச்சியடைவார். நடிப்புன்னா ரீ-டேக் இல்லாமல் மூணு மணி நேரம் நாடகத்தில் நடிக்கிறதுதான் என்பது ராதாவின் வாதம். சினிமா? அது ரிட்டையர்ட்மெண்ட். மெக்கானிக்கும், எலெக்ட்ரீஷியனும் வாழ்க்கை ப்ளோவில் அவர் கற்றுக்கொண்டவை. கல்யாணத்திற்கும் இது உதவியது.

அந்தக் காலத்தில் நாடக நடிகர்களுக்கு யார் பெண் தருவது. மெக்கானிக் என்று தனது பார்ட் டைம் வேலையை சொல்லி முதல் மனைவி சரசுவதியை திருமணம் செய்தார் ராதா. சிறிது காலத்துக்குப் பின் சரசுவதியின் தங்கை தனலட்சுமியையும் மணந்து கொண்டார். ராதாவின் நாடகங்கள் அனைத்தும் சமூக சீரழிவுக்கு எதிரானவை. அதனாலேயே நாடகம் தொடங்கும் முன் நிஜ ஆகூசனுடனே கொட்டகை வாசல் திறக்கும். அதிலும் போர் வாள் நாடகத்தில் புராண ஆபாசங்களை போட்டு கிழித்திருப்பார் ராதா. விளைவு, சென்னையில் போர் வாளுக்கு தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட ராதாவின் இன்னொரு நாடகம், ராமாயணம். விடுவாரா ராதா? அதே நாடகத்தை தேவாசுரப் பாடல் என பெயர் மாற்றி அரங்கேற்றினார். ஆனாலும் பல இடங்களில் அடிதடி. இறுதியில் நாடகம் நடக்கும்போது ராமர் வேடத்திலேயே போலீசார் ராதாவை கைது செய்தனர்.

ராதாவின் கலை உச்சம், ரத்தக் கண்ணீர். திருவாரூர் தங்கராசு எழுதிய இந்நாடகம் 1949 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் திருச்சியில் அரங்கேறியது. ரத்தக்கண்ணீரை காங்கிரஸ் கட்சி பிரமுகர் பி.ஏ. பெருமாள் முதலியார் சினிமாவாக தயாரிக்க முன்வந்தபோது, அதில் நடிக்க ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் சம்பளம் கேட்டார் ராதா. அந்தக் காலத்தில் ஒளவையார் வேடத்தில் நடிக்க கே.பி. சுந்தரம்மாள் அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக பெற்றிருந்தார். அதைவிட 25,000 ரூபாய் அதிகமாக தந்தால் நடிக்கிறேன் என்று ராதா கூற, மறுபேச்சின்றி அந்த சம்பளம் அவருக்கு தரப்பட்டது. ராதாவை சினிமா நடிகராக்கிய படம் ராஜசேகரன். நாடகமானாலும், சினிமாவானாலும் பொது விதிகளை உடைப்பவர் ராதா. இழந்த காதல் நாடகத்தில் மனைவியை சவுக்கால் அடித்து கழுத்தை நெரித்து நாற்காலியில் உட்கார வைத்து பதினைந்து நிமிடம் பேசுவார். எப்படி? ஆடியன்சுக்கு முதுகு காட்டியபடி. நாடகத்தில் முகத்தை காட்ட வேண்டும், முதுகை காட்டக்கூடாது என்ற பொது விதி இழந்த காதலில் பொடிப் பொடியானது.

மயிலாடுதுறை தில்லையாடி வள்ளியம்மையை காண வந்த காந்தியடிகள் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். எங்கும் மக்கள் வெள்ளம். அந்நிய துணிகளை விலக்க வேண்டும் என்று தனது பேச்சில் வலியுறுத்துகிறார் காந்தி. கேட்டுக் கொண்டிருக்கும் ஜனம் உணர்ச்சிவசப்படுகிறது. ஆனால், ஒரேயொருவர் மட்டும் அங்கேயே, அப்போதே தான் போட்டிருந்த அந்நிய துணிகளை கழற்றி எறிகிறார். நல்லவேளை, உள்ளாடை உள்ளூர் தயாரிப்பு. இல்லையென்றாலும் அவர் கவலைப்பட்டிருக்க மாட்டார். சுற்றி நின்றிருந்தவர்கள் நிலைதான் தர்ம சங்கடமாகியிருக்கும்.

நியாயம் என்று தோன்றியதை எந்த சூழலிலும் செய்யத் துணிந்தவர் நடிகவேள் எம்.ஆர். ராதா. மேலே உள்ளது சின்ன உதாரணம். ராதாவை எப்படி வகைப்படுத்தலாம்? நாடக நடிகர்... சினிமா நடிகர்... மெக்கானிக்... எலெக்ட்ரீஷியன்... பெரியாரிஸ்ட்... கலகக்காரர்...

இறுதி மூச்சுவரை ராதா பின்பற்றியது பெரியார். இந்தியாவின் சிறந்த தலைவர் யார் என்று கேட்டால் பெரியார் என்றே சொல்வார் ராதா. அதே நேரம் தி.க. உட்பட எதிலும் உறுப்பினர் அல்ல ராதா. இறுதி வரை சுதந்திர பறவையாக வாழ்ந்தவர் அவர். ராதா கலகக்காரரா என்றால் இல்லை. வாழ்வதற்காக கூழை கும்பிடு, குறுக்கு வழி என்றிருப்பவர்கள் மத்தியில், தன்மானத்தை இழக்காத ராதாவின் சுயமரியாதை வாழ்க்கை மற்றவர்களுக்கு கலகமாக தோன்றியதில் வியப்பில்லை.

எம்.ஆர். ராதா நடிகவேள் ஆனது 1952-ல். திருச்சி தேவர் மன்றத்தில் ராதா போர் வாள் நாடகத்தை நடத்தினார். அப்போது பெரியார் முன்னிலையில் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அளித்த பட்டம்தான் நடிகவேள். பெரியாரின் 101வது பிறந்தநாளான 17-09-1979 அன்று பெரியார் இறந்த நேரமாக காலை 7.25 மணிக்கு உயிர் துறந்தார் எம்.ஆர். ராதா. தனது 72 ஆண்டு வாழ்க்கையில் அவர் புரிந்த பகுத்தறிவு பிரச்சாரமும், சமூக சீரழிவுக்கு எதிரான துணிச்சலான போராட்டங்களும் அளப்பரிய. அன்றைய பெருமைக்குரிய இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றி கார் வெறும் பெயிண்ட் அடித்த தகர டப்பாதான் என்று சொன்னவர் அவர். ராதாவின் சட்டென்று மாறும் மாடுலேஷன் குரலா, குறும்பு தெறிக்கும் நடிப்பா, பகுத்தறிவு பளீரிடும் வசனமா... எது அவரை தனித்துவப்படுத்துகிறது? இவை அனைத்துமே என்றாலும், பணத்துக்காகவும், புகழுக்காகவும் முதுகு வளைக்காத அந்த நேர்மையான துணிச்சல்... இன்று வரை எந்த நடிகனிடமும் காணக் கிடைக்காதது.

தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் ராதா ஒரு முறை உரையாற்றினார். சினிமாக்காரர்களை உயர்த்தாதீர்கள் என்பதாகியிருந்தது அவரது உரை. சினிமாவில் உழைப்பு குறைவு, கூலி அதிகம் என்றவர் முத்தாய்ப்பாக இவ்வாறு சொன்னார் :

ஒரு அலுவலகத்தில் அல்லது ஒரு தொழிலில் ஈடுபட்டபோது தவறு செய்தால் தண்டனை தருவார்கள் அல்லது எச்சரிக்கையாவது செய்வார்கள். ஆனால் சினிமாவில் ஒரு காட்சியில் சரியாக நடிக்காவிட்டால் நாற்காலியில் அமரச் செய்து பேன் போட்டு ஆப்பிள் ஜூஸ் கொடுப்பார்கள். அதனால்தான் சினிமாக்காரர்களை உயர்த்த வேண்டாம் என்கிறேன்.

திரைத்துறையில் இருந்து கொண்டே அதன் சீரழிவை பேச ராதாவைப் போலொரு துணிச்சல்காரர் இன்று இல்லை. ராதா விட்டுச் சென்ற அந்த வெற்றிடம் இன்று வரை வெற்றிடமாகவே உள்ளது. சூப்பர் ஸ்டார்களாலோ, உலக நாயகர்களாலோ, புரட்சி தளபதிகளாலோ கலைஞர்களாலோ நிரப்ப முடியாத உயரிய இடம் அது. ராதாவின் தனித்துவம் பிரகாசிக்கும் இடமும் அதுதான்!

Wednesday, June 3, 2009

அரசியல்வாதியின் மகன் ஏன் அரசியலில் ஈடுபடக்கூடாது?

முன்பெல்லாம் அரசியல் தலைவர்கள், தங்களுக்குப் பின் அனுபவம் உள்ள அடுத்த நிலைத் தலைவர்கள் கட்சித் தலைமைப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால், இன்றோ நிலைமை வேறுவிதமாக மாறிவிட்டது. அநேகமாக எல்லா மாநிலத்திலும் குடும்ப அரசியல் உள்ளது. மேலும் அரசியல் என்பது குடும்ப வியாபாரமாக மாறிவிட்டது. அரசியலில் நுழைந்தால் அதிக முதலீடு செய்ய வேண்டும்; பணக்காரர்கள் மட்டுமே அரசியலில் நீடிக்க முடியும் என்ற நிலை எழுந்துள்ளது.

ஆரம்ப காலத்தில் நேரு குடும்பத்தினரே அரசியலில் ஈடுபட்டு வந்தனர். அரசியல்வாதிகளின் மகன்கள், மகள்கள் அரசியலில் நுழைவது ஒன்றும் புதிதல்ல என்றாலும் இன்றையச் சூழ்நிலையில் பிராந்திய கட்சிகள் என்றாலே "குடும்ப அரசியல்” என்றாகிவிட்டது. "வாரிசு அரசியல்” நடத்தி வருவதாக காங்கிரஸ் கட்சியைக் குறைகூறி வந்த பாரதிய ஜனதா கட்சிகூட இப்போது அதே நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கிவிட்டது. கர்நாடக மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவின் மகனும் வாரிசு அரசியலில் நுழைந்துள்ளார். முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் மகன் இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று எம்.பி.யாகியுள்ளார். கடந்த தேர்தலில் எம்.பி.யாக இருந்த ஜஸ்வந்த் சிங்கின் மகன் மணவேந்திர சிங், இந்த முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போதைக்கு வாரிசு அரசியலில் ஈடுபடாமல் இருப்பது இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே என்று சொல்லலாம்.

15-வது மக்களவைக்கு முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களில் மத்தியப் பிரதேச மாநிலம் மண்டாஸர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மீனாட்சி நடராஜன், ஜான்ஸி தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்ற பிரதீப் ஜெயின் இருவரும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள். ஹரியாணாவில் தேவிலால், பன்ஸிலால் (இவருடைய பேத்தி ஸ்ருதி சௌத்ரி, பிவானியில் மகேந்திரகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.), பஜன்லால் ஆகியோர் குடும்பத்தினர் ஏற்கெனவே அரசியலில் உள்ளனர். இப்போது இவர்களுடன் ஹுடா குடும்பமும் சேர்ந்துகொண்டுள்ளது. முதல்வர் பி.எஸ்.ஹுடாவின் மகன் தீபேந்திர ஹுடா, ரோடக் தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் ஏற்கெனவே முலாயம் சிங்கும் அவரது குடும்பத்தினரும் அரசியலில் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தனி ஒருவராக அரசியலில் நுழைந்தாலும் இப்போது தனக்கு உதவியாக குடும்ப உறுப்பினர்களை இழுத்து வருகிறார். ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியும் அவரது குடும்பத்தினரும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்குப் போட்டியாக என்.டி.ஆர். குடும்பத்தினரும் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் திமுக தலைவரும் மாநில முதல்வருமான மு. கருணாநிதி, தனது குடும்பத்தினருக்காகப் பதவி கேட்டு தில்லியில் நடத்திய பேரம் அனைவரும் அறிந்த ரகசியம். இதுபோதாது என்று மாநிலத்தில் தனது மகன் மு.க. ஸ்டாலினை துணை முதல்வராக்கி தனது நீண்டநாள் ஆசையை பூர்த்தி செய்துள்ளார்.

இன்றைய இந்திய அமைச்சரவையில் பொறுப்பேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சச்சின் பைலட், ஜிதின் பிரசாத், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ம.பி. முன்னாள் துணை முதல்வர் சுபாஷ் யாதவின் மகன் அருண் யாதவ், இந்திரா காந்தி அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்த சி.பி.என்.சிங்கின் மகன் ஆர்.பி.என்.சிங், குஜராத் முன்னாள் முதல்வர் அமர்சிங் சௌதுரி மகன் துஷார் சௌத்ரி, மகாராஷ்டிரத்தில் முக்கியத் தலைவராக விளங்கிய வசந்த்தாதா பாட்டீலின் பேரன் பிரதீக் பாட்டீல், மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ. சங்மாவின் மகன் அகதா சங்மா, குஜராத் மாநில முன்னாள் முதல்வர் மாதவசிங் சோலங்கியின் மகன் பரத் சோலங்கி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அரசியல்வாதிகளே,
உங்கள் குடும்பத்தினர் எளிதில் அரசியலில் நுழைந்துவிடுவதுபோல் தங்களுக்கும் அந்த வாய்ப்புக் கிடைத்தால் அதன் மூலம் தங்கள் திறமையை நிரூபிக்கக்கூடிய பல இளைஞர்கள் இந்தியாவில் இல்லையா?
நாடாளுமன்றத்துக்கோ அல்லது சட்டப்பேரவைக்கோ போட்டியிட டிக்கெட் கேட்காமல் பல ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றும் தொண்டர்களும் இல்லையா?

இந்த நிலை நீடித்தால் இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகளில் இந்திய அரசியல் என்பது ஒரு குறிப்பிட்ட சில குடும்பத்தினருக்கு மட்டுமே சொந்தமானது என்றாகிவிடும் இல்லையா?

இசைக்கு இன்னொரு பெயர் இளையராஜா

தேனி மாவட்டம் பண்ணப்புரத்தில் பிறந்த இசைஞானியின் இயற்பெயர் ஞானதேசிகன் என்கிற ராசையா. ஜூன் 2, 1943-ல் பிறந்தார்.

தனது மிக இளம் வயதிலேயே ஆர்மோனியத்தை வாழ்க்கைத் துணையாக ஏற்றவர், இன்றுவரை இசையை ஒரு தவமாகக் கருதி, அந்த இசை உலகிலேயே வாழ்கிறார், தன்னைப் பற்றிய எந்த விமர்சனம் குறித்தும் கவலைப்படாமல்!

ராஜாவின் முதல் படம் அன்னக்கிளி வெளியாகி 33 வருடங்களாகிறது. இந்த 33 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1000 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிப் படங்களிலும் ராஜாவின் ஆர்மோனியத்துக்கு முக்கியப் பங்குண்டு.

மலேஷியா வாசுதேவன் என்ற அற்புதமான பாடகர் தொடங்கி எத்தனையோ கலைஞர்களை, பாடலாசிரியர்களை உருவாக்கியவர் இளையராஜா.

எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.

ஒரு முறை இத்தாலியில் இளையராஜா நிகழ்த்திய இசை நிகழ்ச்சியில் அவர் வாசித்த 'ஒன் நோட்' இசைத் துணுக்கில் அடங்கியிருந்த நுட்பத்தைப் பார்த்து, பிரபல இசை விமர்சகர் டங்கன் கிளண்டே, "இந்த மனிதர் என்னமோ ஜாலம் செய்கிறார். அது என்னவென்றுதான் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்னைப் போன்ற விமர்சகர்களின் கண்களுக்கும் அறிவுக்கும் எட்டாததாக உள்ளது அந்த இசையின் நுட்பம்" என்று எழுதினார்.

இந்தியாவின் இசை விமர்சகரான சுப்புடு, "இளையராஜா வேலி தாண்டாத வெள்ளாடு மாதிரி... அவரால் இந்த இசை மரபு வேலியை ரொம்ப சேப்டியா, சுலபமா தாண்ட முடியும். பல சாகஸங்கள் செய்ய முடியும். ஆனா, இசை மரபுகளை மதிக்கிறதோட, அந்த மரபுக்குள்தான் அதிசயங்கள் நிகழ்த்தணும் என்ற வைராக்கியத்தோடு வாழும் உன்னத கலைஞர் அவர். சிந்து பைரவியில் 'மரிமரி நின்னே...'வை அவர் கொடுத்த அழகு, நம்ம இசை மரபு எந்த அளவு சோதனை முயற்சிகளுக்கு இடம் கொடுக்கிறது என்பதற்கான அடையாளம்" என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன் திருவாசகம் ஆரட்டோரியோ ஒலித் தட்டை பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிடம் கொடுக்க இளையராஜாவை அழைத்துச் சென்றார் வைகோ. அப்போது, 'சார்... இவர்தான் எங்களின் கலாச்சாரக் குரலாக உலகெங்கும் ஒலிப்பவர்!' என்று இளையராஜாவை அறிமுகப்படுத்தினார் வைகோ. அதற்கு பிரதமர் சொன்ன பதில்: "I Know...Mr. Vaiko".

எந்த விருதையும் 'வாங்காத' அல்லது விருதுக்கு வணங்காத உயர்ந்த கர்வத்துக்கு சொந்தக்காரர் இசைஞானி. தனது இசையை சர்வதேச அரங்கில் லாபி பண்ண வேண்டும் என்ற 'திறமையை' வளர்த்துக் கொள்ள இன்றுவரை முயற்சித்தவரில்லை அவர்.

இருந்தும் மூன்று தேசிய விருதுகளை அவர் பெற்றுள்ளார் (சாகர சங்கமம், சிந்து பைரவி மற்றும் ருத்ர வீணை). ஆனால் ஆறு முறை அவருக்கு கிடைக்க வேண்டிய விருதுகள் இறுதி நேர 'ஜூரி ஆட்டத்தில்' கிடைக்காமல் போயிருக்கின்றன (மூன்றாம் பிறை, காதல் ஓவியம், நாயகன், தேவர் மகன், காலாபாணி மற்றும் ஹே ராம்).

இந்திப் படவுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் இளையராஜாவின் இசையை அப்பட்டமாகக் காப்பியடித்தே பிழைப்பை ஓட்டுகின்றனர் பல இசையமைப்பாளர்கள்.

பிரபல இசையமைப்பாளர் அனு மாலிக் தனது 'பேட்டா' (தக் தக் கர்னே லகா..., கோயல் சி தேரி போலி...), 'போல் ராதா போல்' (ஓ ப்யா ப்யா...) படங்களில் ராஜாவின் மிகப் புகழ்பெற்ற பாடல்களை அப்படியே உல்டா செய்து பெயர் வாங்கினார். அனாரி (சின்னத்தம்பி), விராசட் (தேவர் மகன்) படங்களில் அப்படியே ராஜாவின் பாடல்களைப் பயன்படுத்திக் கொண்டனர் பாலிவுட்டில். இந்த லிஸ்ட் ரொ...ம்ம்ம்பப் பெரியது!

இதுபற்றி ஒரு முறை ராஜாவிடம் கேட்டபோது, 'விடுங்கய்யா... இதுக்காக நான் சண்டை போட ஆரம்பிச்சா, இசை அமைக்க நேரம் இருக்காது. உருவாக்கிக் கொடுக்கறது என் சுபாவம்... திருடுவது அவர்கள் சுபாவம். எதில் யாருக்கு இன்பமோ அதைத் தொடர்கிறார்கள்!," என்றார் அமைதியாக.

இன்றைக்கு புதிய படங்களில் இளையராஜாவின் பிரபலமான பின்னணி இசையைப் பயன்படுத்துவதே ட்ரெண்டாகி விட்டது. சுப்பிரமணியபுரம், பசங்க, சர்வம் என பல படங்களில் 'இசை - இளையராஜா' என்று போடும் அளவுக்கு ராஜாவின் முந்தைய இசைக் கோர்வைகளைப் பயன்படுத்துவதைக் காணலாம். ராஜா என்ற கலைஞனின் இசை காலத்தை வென்றது என்பதை உணர்த்தும் செயலாகவே இதை பலரும் பார்க்கிறார்கள்.

சர்வதேச அளவில் சிம்பனி மற்றும் ஆரட்டோரியோ ஆகிய இசைக் கோர்வைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரே இந்திய இசைமேதை இளையராஜாதான் என்பது பிரிட்டன் இசை நடத்துடன் ஜான் ஸ்காட்டின் கருத்து.

ராஜா இசையமைத்த சிம்பனி இசை வெளிவராததில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவது உண்மையே. ஆனால் அதற்கான உண்மையான காரணத்தை ராஜா சொன்னால் தவிர வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை. இதுபற்றி ஒருமுறை அவரிடம் கேட்ட போது, 'என்றைக்கு அந்த இசை வெளிவர வேண்டும் என்று விதி இருக்கிறதோ அன்றைக்கு வந்துவிட்டுப் போகட்டும்' என்றார்.

அந்த சிம்பனி இசை வெளியீட்டு உரிமை ஏவிஎம் நிறுவனத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான திருவாசம் இசைக் கோர்வை, ராஜாவின் ஆரட்டோரியோ வடிவம். "ஒருவன் ஒழுக்க சீலனாக, நல்ல எண்ணம் கொண்ட மனிதனாக மாற ராஜாவின் இந்த திருவாசகம் இசைத் தொகுப்பை தினமும் காலையில் கேட்டால் போதும்" என உளமாரச் சொன்னவர் இசைமேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா.

ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி.

இசை அன்பர்கள் பலருக்கும் அவரது 'ஹவ் டு நேம் இட்', 'நத்திங் பட் விண்ட்' பேன்ற வெகு சில ஆல்பங்கள்தான் தெரியும். ஆனால் உண்மையில் 30க்கும் ,சினிமா இசை தவிர்த்த ஆல்பங்களை உருவாக்கியுள்ளார் இளையராஜா. அவற்றையெல்லாம் முழுசாகத் தொகுத்து வெளியிடும் முயற்சியும் நடக்கிறது.

'இசைக்கு இன்னொரு பெயர் இளையராஜா என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை!' என்பது ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல கவிஞர் குல்சாரின் கருத்து.

முதல் பெண் மக்களவைத் தலைவர் திருமதி.மீரா குமார் - ஓர் அலசல்

பாட்னாவில் கடந்த 1945ஆம் ஆண்டு பிறந்த மீரா குமாருக்கு தற்போது 64 வயதாகிறது. சட்டம் படித்த அவர், ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் பட்டமும் முடித்துள்ளார்.
கடந்த 1973ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார். ஸ்பெயின், இங்கிலாந்து, மொரிஷியஸ் நாடுகளில் இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்திய வெளியுறவுப் பணி (IFS) ஆற்றி வந்த மீரா குமார் கடந்த 1985ல் தமது வேலையை ராஜினாமா செய்து விட்டு முதல்முறையாக தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.யானார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னார் தொகுதியில் இருந்து கடந்த 1985ஆம் ஆண்டு முதல்முறையாக மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 1996, 1998ஆம் ஆண்டுகளில் டெல்லி கரோல்பாக் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 1999ஆம் ஆண்டு அதே தொகுதியில் வெற்றிவாய்ப்பை இழந்தார். 2004ஆம் ஆண்டு தமது தந்தை ஜெகஜீவன்ராமின் தொகுதியான சசாராம் தொகுதியில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

இடையில் 2000 முதல் 2002ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியிருந்தார். கடந்த 2004ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சமூகநீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறை கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றார். 5 முறை எம்.பி-யாகவும், கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் சமூக நீதித் துறை அமைச்சராகவும் பணியாற்றிய மீரா குமார், நாட்டின் முதல் பெண் மக்களவைத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ஜெகஜீவன்ராமின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தாயார் பெயர் இந்திராணி தேவி. தந்தை ஜெகஜீவன்ராம் சுதந்திரப் போராட்ட தியாகியும் கூட. மீரா குமாரின் கணவர் மஞ்சுல் குமார், உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. தற்போது மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் நீர்வள ஆதாரத்துறை அமைச்சராகப் பதவியேற்று, மே 29ஆம் தேதி அத்துறைக்கான பொறுப்பை ஏற்ற மறுநாளே மக்களவைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் இறுதி செய்யப்பட்டார். இதையடுத்து தமது மத்திய அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்து மக்களவைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார்.

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் புதிய மக்களவையின் தலைவராக போட்டியின்றி மீரா குமார் தேர்வு செய்யப்பட்டு, இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் பணி சிறக்க வாழ்த்துவோம்.........

Tuesday, June 2, 2009

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்! ஏன்?

கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம், என்.எல்.சி. நிறுவனம், தொழிலாளர் மண்டல ஆணையம் ஆகிய முத்தரப்பு பேச்சுவார்த்தை டெல்லியில் நடந்தது. இதில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ புத்தகம் வழங்குவது, மாதம் ரூ.750 சம்பள உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 200 பேருக்கு மருத்துவ அடையாள புத்தகமும், சம்பள உயர்வும் வழங்கப்பட்டது. எனினும், பெரும்பாலானோருக்கு இந்த சலுகைகள் வழங்கப்படவில்லை.

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் சுமார் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக, கடந்த 28ம் தேதி சங்கத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் வரும் 4ம் தேதி பேரணியாக புறப்பட்டு கோரிக்கை அடங்கிய மனுவை தலைமை அலுவலகத்தில் கொடுப்பது என்றும், 15ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதுகுறித்து ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க பொதுசெயலாளர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறப்புப் பேரவைக் கூட்டத்தின் முடிவு படி 4ம் தேதி பேரணியும், 15ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டமும் நடைபெறும்" என்று அறிவித்துள்ளார். நியாம்தானே?

பா.ஜ.க. கரியமுண்டா - மக்களவை துணை‌த் தலைவ‌ர்?

மக்களவை துணை‌த் தலைவ‌ர் பதவிக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடியினத்தைச் சேர்ந்த கரிய முண்டாவை தமது கட்சி வேட்பாளராக நிறுத்த பார‌திய ஜனதா முடிவு செய்துள்ளது. 

மக்களவை‌த் தலைவ‌ர் பதவிக்கு மீரா குமார் காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மரபுப்படி துணை‌த் தலைவ‌ர் பதவிக்கு எதிர்கட்சியை சேர்ந்த ஒருவரை நிறுத்துமாறு பார‌திய ஜனதாவிடம் அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. 

இதனையடுத்து பா.ஜனதா கட்சியின் மத்திய நாடாளுமன்ற குழு இன்று காலை டெல்லியில் கூடி, வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து ஆலோசித்தது. 

இந்த கூட்ட முடிவில் பார‌திய ஜனதா கட்சி சார்பில் மக்களவையில் 6 முறை உறுப்பினராக பதவி வகிக்கும் கரியமுண்டாவை துணை‌த் தலைவ‌ர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

Monday, June 1, 2009

காசிவிசுவநாதப் பாண்டியன் - வரலாற்றுப் பார்வை

தமிழ் நாட்டில் கலை, இலக்கிய வரலாற்றில் எட்டையபுரம் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. எட்டையபுரத்தை ஆண்ட குமார எட்டேந்திர மன்னர் கர்நாடக சங்கீத சாகித்ய கர்த்தாவாக விளங்கினார். இவர் நாதஜோதி முத்துசுவாமி தீட்சிதர், பாலுசுவாமி தீட்சிதர், சுப்பராம தீட்சிதர் ஆகிய கர்நாடக சங்கீத வித்வான்களை ஆதரித்தார். எட்டையபுரத்து அரசர் ராம வெங்கடேசுவர எட்டப்ப மன்னர் "சுத்தசேவன்' என்ற நாடகத்தை எழுதியுள்ளார்.

வெங்கடேசுவர எட்டப்ப மன்னரின் இளைய குமாரர் காசி விசுவநாதப் பாண்டியன். இவர் 1888-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி எட்டையபுரத்தில் பிறந்தார். அங்கேயே ஆரம்பக்கல்வி பயின்றார். பின்னர் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் உயர் கல்வி பயின்றார். சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியக் கலை பயின்று ஓவியத்தில் பட்டம் பெற்றார்.
விசுவநாதப் பாண்டியன் ஓவியராகவும், நாடக ஆசிரியராகவும் விளங்கினார். இவர் நாடகம் எழுதியதோடு நாடகக் கலைஞர்களை ஆதரிக்கும் புரவலராகவும் விளங்கினார். சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், காசிவிசுவநாதப் பாண்டியன் ஆகிய மூவரும் தமிழ் நாடக மும்மூர்த்திகளாவர்.

காசிவிசுவநாதப் பாண்டியன், "தேவராச, ஜெகதீச தியேட்டரிக்கல் கம்பெனி' என்ற நாடகக் குழுவை அமைத்திருந்தார். இக் குழுவிலிருந்து பின்னாளில் பல நாடகக் கலைஞர்கள் உருவானார்கள். டி.பி.சங்கர நாராயணன், பி.எஸ்.வெங்கடாசலம், எஸ்.பி.வீராச்சாமி, நடிகமணி டி.வி.நாராயணசாமி ஆகிய நாடகக் கலைஞர்கள் இக்குழுவிலிருந்து உருவானவர்கள். இவர் சிறந்த ஓவியராக இருந்ததால், தம்முடைய நாடகக் குழுவிற்கு வேண்டிய திரைச் சித்திரங்களை தாமே வரைந்தார்.

கன்னட நாடகக் கலைஞர் குப்பி வீரண்ணாவைப் பின்பற்றிப் புதிய முறைகளில் பல்வேறு காட்சித் தட்டிகளையும் தயாரித்தார். எட்டையபுரத்தில் நிரந்தர நவீன நாடக அரங்கை அமைத்தார். இதற்கு ஸ்ரீராமசந்திர விலாஸ் தியேட்டர் என்று பெயர் சூட்டினார். நாடகக் குழுவில் இருந்த நடிகர்கள் அத்தனை பேருக்கும் கடுக்கன், தங்கச் சங்கிலி, காப்பு ஆகிய அணிகளை இவரே தம் அன்பளிப்பாகச் செய்து கொடுத்தார்.

பிரகலாதா, மாருதி விஜயம், கபீர்தாஸ், ராமதாஸ், மனோகரன், வி.சி.கோபாலரத்தினம் எழுதிய ராஜபக்தி, தயாளன், சுத்தசேவன் ஆகிய பல நாடகங்கள் இக்குழுவால் நடிக்கப்பட்டன. இக்குழுவினரின் நாடகங்கள் எட்டயபுரம் சுற்று வட்டாரத்திலும், சாத்தூர், மதுரை, அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களிலும் நடைபெற்றன.
இவர் சிறந்த இசைக் கலைஞரும் ஆவார். வீணை, ஆர்மோனியம், தபேலா போன்ற இசைக் கருவிகளை வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். கிராமபோன் இசைத் தட்டுக்கள் வராத காலம் அது. போனோகிராம் என்று ஒரு கருவியை வைத்து மெழுகினால் இசைத் தட்டுக்கள் தயாரித்து அதில் கஞ்சிரா மான்பூண்டியா பிள்ளையின் வாத்திய இசையையும், காஞ்சிபுரம் நாயனா பிள்ளையின் வாய்ப்பாட்டு இசையையும் பதிவு செய்து வைத்திருந்தார்.

இவர் சிறந்த நிழற்பட நிபுணராகவும் விளங்கினார். நாடகக் கலைஞர்களை நிழற்படங்களாக எடுத்துள்ளார். நாடக ஆசிரியர் எம்.கந்சாமி முதலியார், எம்.கே.இராதா, கே.கே.பெருமாள், கே.பி.காமாட்சி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.சகஸ்ரநாமம், டி.கே.எஸ். சகோதரர்கள் முதலிய கலைஞர்களின் நிழற்படங்கள் இவரால் எடுக்கப்பட்டவை. இவை தமிழ் நாடகக் கலையின் வரலாற்றைக் கூறும் வரலாற்றுப் பெட்டகங்களாகும்.
காசிவிசுவநாதப் பாண்டியன் சொந்தமாக நாடகக் குழு வைத்து, நாடகக் கலையை வளர்த்ததோடு தமிழ் நாட்டில் உள்ள நாடகக் குழுக்களை எட்டையபுரத்திற்கு வரவழைத்து அவர்களுடைய நாடகங்களை நடத்தி, அவர்களுக்கு பொன்னும், பொருளும் கொடுத்து உதவினார். சிறந்த நாடகக் கலைஞர்களுக்குப் பரிசு வழங்கி பாராட்டி ஊக்குவித்தார்.

நீண்ட காலமாகச் செயல்படாமல் இருந்த நாடகக் குழுவைக் கலைத்துவிட டி.கே.எஸ். சகோதரர்கள் முடிவு செய்த பொழுது காசிவிசுவநாதப் பாண்டியன், தன்னுடைய நாடகக் குழுவுக்காக தயாரித்த காட்சிகளையும், உடைகளையும் தந்து டி.கே.எஸ். நாடகக் குழு தொடர்ந்து நடைபெறுவதற்கு உதவினார்.
""1935 நவம்பரில் நாங்கள் பங்கு கொண்ட மேனகா படப்பிடிப்பிற்குப் பின் ஏறத்தாழ ஆறு மாத காலம் நாடகக் குழு நடைபெறவில்லை. குழுவை கலைத்துவிட்டு நாகர்கோவிலில் தங்கி வேறு தொழிலில் ஈடுபட எங்கள் பெரியண்ணா டி.கே.எஸ்.சங்கரன் முயன்று வந்தார். எங்கள் பால் அன்பு கொண்ட சில பெரியவர்கள் மீண்டும் நாடகக் குழுவைத் தொடங்கும்படி வற்புறுத்தி வந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் இருவர்: ஒருவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி, மற்றொருவர் எட்டையபுரம் இளைய ராஜா காசிவிசுவநாதப் பாண்டியன். அவர் கருணையோடு எங்களுக்கு உதவ முன் வந்தார்'' என்று டி.கே.சண்முகம் தன்னுடைய நாடக வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார். டி.கே.எஸ் சகோதரர்களின் நாடகக் குழு தமிழ் நாடக வரலாற்றில் ஒரு சகாப்தம் படைத்துள்ளது. இந்த மாபெரும் நாடகக் குழுவைக் காப்பாற்றியவர் கலைக் காவலர் காசிவிசுவநாதப் பாண்டியன்.
இவர், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் புலமை பெற்றிருந்தார். கன்னடம், மலையாளம் ஆகிய இரு மொழிகளைப் பேச, புரிந்து கொள்ளும் திறமை பெற்றிருந்தார். "தயாளன்' என்னும் நாடகம் இவரால் எழுதப்பட்டு அச்சிலும் வெளிவந்துள்ளது. தயாளன் நாடகம் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு சரித்திர நாடகம். இது அவரின் மொழிப் புலமையை வெளிப்படுத்தக் கூடிய நாடகமாக அமைந்துள்ளது. இந் நாடகம் இவருடைய நாடகக் குழுவால் நாடகமாக நடிக்கப்பட்டது. 1937-இல் சேலம் மாடர்ன் தியேட்டரின் கூட்டுறவோடு தயாளனை திரைப்படமாகத் தயாரித்தார். இதில் பிரபல நடிகர் பி.யூ.சின்னப்பா கதாநாயகனாக நடித்துள்ளார்.

காசிவிசுவநாதப் பாண்டியன் சிறந்த தேசபக்தரும் ஆவார். மகாகவி சுப்பிரமணிய பாரதியுடன் நெருங்கிய நட்பு கொண்டு, விடுதலை வீரர்களுக்கு பல உதவிகள் செய்து வந்தார். தன்னுடைய திரைப்பட அரங்கிற்கு "பாரத மாதா டாக்கீஸ்' என்று பெயர் சூட்டினார். இவருடைய திரைப்பட அரங்கில் பக்கிம்சந்திரரின் "வந்தே மாதர' கீதத்துடன் தான் திரைப்படக் காட்சி துவங்கும். ஆங்கிலேய ஆட்சியினர் இதைத் தடுத்தபோதிலும் இவர் தேசிய இயக்கத்துக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திரைப்பட அரங்கில் தான் காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்றன. மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் தேசிய இயக்கத்துக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார்.

1941-இல் காசிவிசுவநாதப் பாண்டியன் உடல் நலிவுற்று மதுரையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது டி.கே.எஸ். சகோதரர்களின் "சிவலீலா' நாடகம் பிரம்மாண்டமான காட்சிகளுடன் நடந்து வந்தது. உடல் நலிவுற்ற நிலையிலும் அந்த நாடகத்தைப் பார்த்து, கண்டு ரசித்து கலைஞர்களைப் பாராட்டினார். நாடகக் கலையின் வளர்ச்சிக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் பல கலைகளில் சிறந்து விளங்கியவருமான காசிவிசுவநாதப் பாண்டியன் 1941-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி அமரர் ஆனார். அவர் வளர்த்த நாடகக் கலை வாழ்ந்து கொண்டிருக்கிறது; அவரும் கலைஞர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாடகத் தமிழ் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டும் விதமாக இவருடைய திருவுருவப்படம் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‌‌பஸ் கட்டணத்தை குறைக்காவிட்டால் பாமக தொடர் போராட்டம்

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு பஸ் கட்டணம் திடீரென குறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த பஸ் கட்டண குறைப்பை தொடர்ந்து அமல்படுத்த வலியுறுத்தி பாமக சார்பில் நேற்று தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, பஸ் கட்டண குறைப்பை அமல் படுத்தக்கோரி தொடர் முழக்கங்கள் மற்றும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:மக்களவை தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசு பஸ் கட்டணத்தை திடீரென குறைத்தது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்ததால் இந்த பஸ் கட்டண குறைப்பு உடனடியாக கைவிடப்பட்டது. அரசுக்கு உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை இருந்தால் இந்த கட்டணக் குறைப்பை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையெனில், இந்த கட்டணக் குறைப்பு தேர்தலுக்காக செய்யப்பட்ட நாடகம் என்பது உறுதியாகிவிடும்.

சென்னையில் இயங்கும் 2,700 பேரூந்துகளில் 500 பேரூந்துகளை தவிர, மற்ற பஸ்களில் விதவிதமான பெயர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. எனவே அனைத்து பேரூந்துகளிலும் ஒரே விதமான கட்டணத்தை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் பாமக தொடர்ந்து போராட்டம் நடத்தும் என அவர் கூறினார்.

சி‌ரிக்க வைத்த சிந்தனையாளர் - என்.எஸ்.கிருஷ்ணன்

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) பிறந்தது கன்னியாகும‌ரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசே‌ரி. அப்பா சுடலையாண்டி பிள்ளை, தாய் இசக்கியம்மாள். பிறந்த வருடம் 1908 நவ. 29 ஆம் நாள். ஏழு பே‌ரில் இவர் மூன்றாவது பிள்ளை. வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் படிப்பு தடைபடுகிறது.

என்.எஸ்.கே.-யின் ஆரம்ப நாட்கள் கடுமையானவை. காலையில் டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொறுக்கிப் போடும் வேலை. பிறகு மளிகைக் கடைக்கு பொட்டலம் மடிக்க‌ச் செல்வார். மாலையில் நாடகக் கொட்டாயில் தின்பண்டங்கள் விற்பார். நாடகம் அவரை மிகவும் ஈர்த்தது. மகனின் விருப்பம் அறிந்த தந்தை ஒழுகினசே‌ரியில் நாடகம் போட வந்த ஒ‌ரி‌ஜினல் பாய்ஸ் கம்பெனியில் அவரை சேர்த்துவிடுகிறார். சிறுவனின் நாடக வாழ்க்கை ஆரம்பமாகிறது.

பாய்ஸ் நாடக கம்பெனியிலிருந்து டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்தா நாடக சபையில் சேர்கிறார் கிருஷ்ணன். அங்கிருந்து பால மீனரஞ்சனி சங்கீத சபை. பல நாடக கம்பெனிகள் மாறினாலும் அவருக்கு டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபையே மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.

ஒப்பந்தத்தை மீறி பால மீனரஞ்சனி சங்கீத சபையிலிருந்து வெளியேறி மீண்டும் ஸ்ரீ பால சண்முகனாந்தா நாடக சபையில் சேர்கிறார். இதனால் கோபமுற்ற பால மீனரஞ்சனி சங்கீதா சபை ஜெகன்னாத அய்யா, கிருஷ்ணன் மீது பணம் கையாடல் செய்ததாக காவல் நிலையத்தில் பொய்யாக புகார் தருகிறார். ஆலப்புழையில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கைது செய்யப்படுகிறார்.

இந்த முதல் கைதுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டார் கிருஷ்ணன். அந்த கைது தமிழ்நாட்டையே உலுக்கியது.
நாடகத்தில் பல ப‌ரீட்சார்த்த முயற்சிகளை கலைவாணர் மேற்கொண்டார். வில்லு‌ப் பாட்டை நாடகத்தில் முதன் முதலாக புகுத்தியவர் இவரே. தேசபக்தி நாடகத்தில் காந்தி மகான் கதை என்ற பெய‌ரில் வில்லு‌ப் பாட்டை சேர்த்து காந்தியின் மது அரு‌ந்தாமை கொள்கையை‌ப் பரப்பினார். இந்த நாடகத்தில் கலைவாணர் ராட்டையுடன் வரும் காட்சிக்காக நாடகம் தடைசெய்யப்பட்டது.
கிந்தனார் நாடகத்தில் பாகவதர் வேடத்தில் கலைவாணர் செய்யும் காலட்சேபம் பிரசித்திப் பெற்றது. அன்பே கடவுள் என்ற முகவுரையுடனே காலட்சேபம் தொடங்கும். இதில் கலைவாணர் எழுதிய ரயில் பாடல் குறித்து திராவிட நாடு பத்தி‌ரிகையில் கட்டுரை ஒன்று எழுதினா‌ர் அண்ணர். சாதி, மத ஏற்றத்தாழ்வை ரயில் இல்லாமல் செய்ததை அந்த பாடலில் குறிப்பிட்டிருந்தார் கலைவாணர்.

கரகரவென சக்கரம் சுழல
கரும்புகையோடு வருகிற ரயிலே
கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே
ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே
மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி
மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே.

நாடகத்தில் கலைவாணர் செய்த சாதனைகள் பல. திரைத்துறையில் காலடி வைத்த பிறகும் அவரது நாடகம் மீதான தாகம் குறையவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே அவர் பலமுறை நாடகம் போட்டிருக்கிறார். நாடக கம்பெனி ஏதேனும் நொடித்துப் போனால் கலைவாணருக்கு சேதி வரும். அவர் சென்று ஒரு நாள் நடித்துவிட்டு வருவார். அந்த நாடகம் கலைவாணர் நடித்தார் எனபதற்காகவே மக்களிடம் வரவேற்பை பெறும்.

கலைவாண‌ரின் திரை வாழ்க்கையை தொடங்கி வைத்த படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதி. எஸ்.எஸ்.வாசன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் கலைவாணருக்கு மட்டுமில்லாது பல ஜாம்பவான்களுக்கு அறிமுகப் படமாக அமைந்தது. எம்.‌ஜி.ஆர்., எம்.‌ஜி.சக்கரபாணி, டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா, எம்.வி.மணி, கே.வி.தங்கவேலு ஆகியோர் இந்தப் படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்கள்.
தனது முதல் படத்திலேயே தனக்கான காட்சிகளை கலைவாணரே எழுதிக் கொண்டார். தமிழ் திரையில் நகைச்சுவைக்கென தனி ட்ராக் எழுதியவரும் அவரே. முதல் படம் சதிலீலாவதி என்றாலும் திரைக்கு முதலில் வந்த படம் மேனகா. இது கலைவாணர் நடித்து வந்த நாடகம். திரைப்படமாக எடுத்த போது நாடகத்தில் கலைவாணர் நடித்து வந்த சாமா அய்யர் வேடத்தை அவருக்கே அளித்தனர்.

சாமா அய்யர் கதைப்படி வில்லன். நாயகியை கடத்தி வந்து ஐயாயிரம் ரூபாய்க்கு விற்று விடுவார். அவருக்கு உடந்தையாக இருக்கும் தாசி கமலம், அவ‌ரிடமிருந்து பணத்தை அபேஸ் செய்ய சாமா அய்யரை மயக்கி பாட்டுப் பாடும் காட்சியும் படத்தில் உண்டு.

1935ல் எடுக்கப்பட்ட மேனகாவில் வில்லனாக காட்டப்பட்டவர் ஒரு அய்யர். ஆனால் இன்று...? அய்யர் என்றாலே அப்பாவிகள், அநீதியை கண்டு குமுறுகிறவர்கள். (அய்யர் என்றால் அக்மார்க் அம்மாஞ்சிகள் என்ற இன்றைய தமிழ் சினிமா கண்டுபிடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பது தனியே ஆராயப்பட வேண்டிய ஒன்று).

பாரதியார் பாடல்கள் முதலில் திரையில் ஒலித்தது ஏவி.எம். தயா‌ரித்த படத்தில் என்று இன்றளவும் கூறப்படுகிறது. அந்த கருத்து தவறானது. திருப்பூர் சண்முகானந்தா டாக்கீஸ் தயா‌ரித்து ராஜா சாண்டோ இயக்கத்தில் கலைவாணர் நடித்த மேனகா திரைப்படத்தில்தான் முதல்முதலாக பாரதியார் எழுதிய வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி, வாழிய வாழியவே பாடல் ஒலித்தது.

திரைத்துறைக்கு வரும் முன்பே நாகம்மை என்பவருக்கும் கலைவாணருக்கும் திருமணம் நடந்தது. நாகம்மை அவரது உறவுக்காரர். நடிக்க வந்த பிறகு உடன் நடித்த டி.ஆர்.ஏ.மதுரத்தை காதலித்து இரண்டாவதாக மணம்பு‌ரிந்து கொண்டார். (மதுரத்துக்குப் பிறந்த குழந்தை இறந்த பிறகு மதுரத்தின் சம்மதத்துடன் அவரது தங்கை வேம்புவை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்). கிருஷ்ணன், மதுரம் ஜோடி திரையில் புகழ்பெறத் தொடங்கியது.

தனது முதல் திருமணத்தை மறைத்தே மதுரத்தை திருமணம் செய்து கொண்டார் கிருஷ்ணன். இது தெ‌ரிய வந்த பிறகு கிருஷ்ணனுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தார் மதுரம். தியாகராஜ பாகவத‌ரின் அம்பிகாபதி படத்தில் இருவரும் நடித்திருந்தாலும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் இந்த‌ப் பி‌ரிவு அதிகநாள் நீடிக்கவில்லை. இருவரும் தனித்தனியாக நடித்தப் படங்கள் அவ்வளவாக வரவேற்பு பெறாததை உணர்ந்தவர்கள் மீண்டும் சேர்ந்து நடிக்கத் தொடங்கினர்.

கலைவாண‌ரின் திரை ஆளுமையை வடிவமைத்ததில் பெ‌ரியாருக்கும், பா.‌‌ஜீவானந்தத்துக்கும் பெரும் பங்குண்டு. ‌ஜீவானந்தம் கலைவாண‌ரின் நெருங்கிய நண்பர். பெ‌ரியா‌ரின் பிராமணருக்கு எதிரான கட்டுரைகள் கலைவாண‌ரிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. தான் நடிக்கும் படங்களில் பகுத்தறிவு சிந்தனைகளை இயல்பாக சேர்த்துக் கொண்டார் கலைவாணர். பாகவத‌ரின் பக்திப் படமான திருநீலகண்டர் படத்திலும் கடவுளை கிண்டல் செய்யும் பாடலை இடம்பெறச் செய்தார்.

இந்த இடத்தில் முக்கியமாக ஒன்றை குறிப்பிட வேண்டும். சிலரது நகைச்சுவையை‌ப் போல் என்.எஸ்.கே.யின் நகைச்சுவை பிறரை காயப்படுத்துவதில்லை. ஹாஸ்யம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி எழுதிய அறிஞர் வ.ரா. “கிருஷ்ணன் பிறரைக் கேலி செய்யும் விதமே வினோதமாக இருக்கிறது. யாரை அவர் கேலி செய்து கிண்டல் பண்ணுகிறாரோ அவரும் சேர்ந்து சி‌ரிக்கும்படியான விதத்தில் கிருஷ்ணன் கேலி செய்கிறார். பிறருடைய உள்ளத்தை குத்திப் பிளப்பதில்லை. அவர் பிறருடைய உள்ளத்தை வி‌ரிய‌ச் செய்கிறார்.” என்று எழுதுகிறார்.
1944 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மோசமான வருடம். 1944 நவ. 27 கலைவாண‌ரின் இரண்டாவது கைது நடந்தது. இந்துநேசன் பத்தி‌ரிகையாசி‌ரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு தொடர்பாக கலைவாணரும், தியாகராஜ பாகவதரும் வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர். லட்சுமிகாந்தனின் இந்துநேசன் ஒரு மஞ்சள் பத்தி‌ரிகை.
பிரபல நட்சத்திரங்களை பற்றி கற்பனையான கிசுகிசுக்களை எழுதி பத்தி‌ரிகையை நடத்தி வந்தார் லட்சுமிகாந்தன். அவரது பேனா கொடுக்குக்கு இரையாகாமல் இருக்க பலரும் அவருக்கு பணம் கொடுத்து வந்தனர். கலைவாணர் பணம் கொடுக்க மறுத்தார். கலைவாணர் பற்றியும் பாகவதர் குறித்தும் தனது பத்தி‌ரிகைகளில் கற்பனையான பல கதைகளை எழுதி வந்தார் லட்சுமிகாந்தன்.

தங்களது நிரபராதித்துவத்தை நிரூபிக்க கலைவாணருக்கும், பாகவதருக்கும் பல வருடங்கள் பிடித்தது. சிறை மீண்டபின் பழைய உற்சாகத்துடன் திரை வாழ்க்கையை‌த் தொடங்கினார் கலைவாணர். கே‌ரி கூப்பர் நடிப்பில் வெளிவந்த டெட்ஸ் கோஸ் டூ டவுன் படத்தை நல்லதம்பி என்ற பெய‌ரில் மதுரம், எஸ்.வி.சகஸ்ரநாமம், பானுமதி ஆகியோருடன் இணைந்து தயா‌ரித்தார். அண்ணா படத்தின் திரைக்கதையை எழுதி‌க் கொடுத்தார்.
இந்தப் படத்துக்குப் பிறகு கலைவாணருடன் அண்ணாவுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. கலைவாணர் வாங்கிக் கொடுத்த காரை அவர் திருப்பி அனுப்பினார். கலைவாணர் இயக்கிய முதல் படம் மணமகள். இன்றைய முதல்வர் கருணாநிதி படத்துக்கு வசனம் எழுதினார். நாட்டிய‌ப் பேரொளி பத்மினி அறிமுகமானதும் இந்தப் படத்தில்தான். கலைவாணர் இயக்கிய இன்னொரு படம் பணம்.

சொந்தமாக படம் தயா‌ரிக்கத் தொடங்கிய பிறகு கலைவாணருக்கு வாய்ப்புகள் குறைந்தன. செலவு இருமடங்கானது. ஆனாலும், கலைவாணரைத் தேடி உதவி பெற்று செல்கிறவர்கள் குறையவில்லை. தன்னிடம் இல்லாதபோது பிற‌ரிடம் கடன் வாங்கி உதவிகளை‌த் தொடர்ந்தார். இறுதிவரை அவரது உதவி செய்யும் குணத்தை தோல்விகளால் தடுக்க முடியவில்லை.

ஐம்பது வயதிற்குள் இதே புகழுடன் இறந்துவிட வேண்டும் என்று மதுரத்திடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார் கலைவாணர். அதே போல் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி தனது 49வது வயதில் மரணத்தை தழுவினார் கலைவாணர். ஒரு கலைஞனை எங்ஙனம் நினைவுகூர்வது என்பது இன்னும் நமக்கு கைவரப் பெறவில்லை. அவனது ஆளுமையின் சாராம்சத்தை புதிய தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதில் நமக்கு எப்போதும் தோல்வியே ப‌ரிசாகியுள்ளது. கலைஞனை, அவனது ஆளுமையை ஒரு பொருட்டாக மதிக்காததின் விளைவுகள் இவை என்ற பு‌ரிதலும் நமக்கில்லை.
பிறந்தநாள் அன்று நினைவுக்கூட்டம், ஒரு நினைவுச்சின்னம், அதிகபட்சம் தபால்தலை என நமது சடங்குகள் ஒரு வட்டத்தைவிட்டு வெளியேறியதில்லை. கலைவாணரும் இந்த வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளார்.

கலைவாணர் என்றதும் அவரது சிந்திக்க வைக்கும் சி‌ரிப்புக்கு முன்னால் நினைவுக்கு வருவது அவரது வள்ளல் குணம். பெரும்பாலான கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பிறருக்கு உதாரணமாக இருப்பதில்லை. கலைவாணர் விதிவிலக்கு.

“என்னிடம் வந்து சேரும் பணத்துக்கும், பணக்காரர்களிடம் வந்து சேரும் பணத்துக்கும் வித்தியாசம் உண்டு. என் பணம் ஏழைகளுக்கு உதவும், பணக்காரர்களின் பணம் ஏழைகளை உறிஞ்ச‌த்தான் உதவும்.” சொன்னது போலவே வாழ்ந்து காட்டினார். அதுதான் கலைவாணர்.
இந்த உதாரண குணத்தை இளைய தலைமுறை அறிய செய்திருக்கிறோமா என்றால் இல்லை. பா‌ரியையும், கோ‌ரியையும் பள்ளியில் சொல்லிக் கொடுப்பது நல்லதுதான். அத்துடன் திருட வந்தவனை திருடன் என்று மனைவியிடம்கூட சொல்லாமல் தன்னுடைய நாடகத்தில் வேலை பார்ப்பவன் என்று கூறி அவன் தேவைக்கு பணம் கொடுத்து உதவிய கலைவாணரையும் சொல்லிக் கொடுப்பதுதானே நியாயம்.
மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கும்போதும், கட்டுகட்டாக பணம் வைத்துச் சென்ற எம்.‌ஜி.ஆ‌ரிடம், சில்லரையாக வைத்தால் இங்கிருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பேனே என்று சொன்னவ‌ரின் கதை சிறார்களிடம் பதிய வைக்க வேண்டிய ஒன்றல்லவா.

சிறைக்கு சென்றுவந்த பிறகுதான் பம்மல் சம்பந்த முதலியார் அவருக்கு கலைவாணர் என்ற பட்டத்தை அளித்தார். ஏன்? அவரது வள்ளல் குணத்துக்கு முன்னால் சிறையும் ச‌ரி, தண்டனையும் ச‌ரி மாசு கற்பிக்க முடியவில்லை. உங்களுடைய கொள்கை என்ன என்று ஒருமுறை கேட்டதற்கு சுயம‌ரியாதை என்று பதிலளித்தார் கலைவாணர். அவரது கொள்ளை சுயம‌ரியாதை என்றால் அவரது குணம் அன்பு செய்வது.

இந்த இரண்டின் பிரதிபலிப்புதான் அவரது நாடகங்களும், சினிமாவும். இதுதான் அந்த கலைஞனின் சாராம்சம்... நினைவுச்சின்னம், நினைவுத் தபால்தலை போன்ற மரபான சடங்குகளால் கௌரவிக்க முடியாத கலைவாணர் என்ற மாமனிதனின் சாராம்சம்.