Sunday, November 29, 2009

நீலகிரி மரணத்தின் "ஓலகிரி" ஆகாமல் மாற வழி

அதீத ஆபத்தையும், இழப்பையும் உண்டாக்கியுள்ள, உண்டாக்கி வரும் நிலச்சரிவுகள் எப்படி ஏற்படுகின்றன? என்ற கேள்விக்கு பல விதமான உணர்ச்சிகரமான விடைகள் மிகுந்த ஆத்திரத் துடன் நமக்குக் கிடைத்தாலும், விஞ்ஞானப் பூர்வமான, உணர்வுப் பூர்வமான விடை என்ன? என்பதையும் நாம் அவசியம் பார்க்க வேண்டும்.

பொதுவாக எந்த மலைப் பிரதேசத்திலும், மலைப்பகுதியின் பரந்த மையப் பகுதிகளில் சரிவு நிகழ்வதே கிடையாது. அதே சமயம் மலையின் சரிவுப் பகுதிகளில் தான் இது அதிகம் நிகழ்கிறது. இதற் கான காரணங்கள் தான் என்னென்ன?முதலாவதாக மலைகளில் மட்டுமே இந்தச் சரிவுகள் நிகழ்வதிலிருந்து நமக்கு ஒரு உண்மை புலப்படும். அதாவது பாறைகளால் உருவாகியுள்ள மலைப் பகுதிகளின் மேல், குறிப்பிட்ட உயரத்தில், ஒரு அடி முதல் 20, 40 அடிகள் வரை என்று மண் மேவியுள்ளது. இது பல நூறு வருடங்களாக இறுகிப் படிந்துள்ளது.இந்நிலையில் மழைக் காலம் துவங்கி மழை விட்டு விட்டோ, தொடர்ந்தோ பெய் யும் போது மழை நீர் உட் புகுந்து, உட்புகுந்து மண் பகுதியை ஆக்கிரமிக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு தான் மிக முக்கிய நிகழ்வு.இந்த மழைநீர் சிறிது ஆழம் சென்ற பிறகு தொடர் மழை இல்லை என்றால் மீண்டும் அந்த மண் பகுதி காய்ந்து இயல்பு நிலைக்கு வந்துவிடும்.பிறகு சிறிது காலம் கழித்து மழை என்றாலும் கவலை இல்லை.

அப்படி இல்லாமல் தொடர் மழை அதுவும் கனமழை அதுவும், வெயிலே காணாத நிலை என்றால் நிச்சயம் நிலச்சரிவுக்குக் கொண் டாட்டம் தான். எப்படி?15 முதல் 20 அடி உயரத்திலான மண்பகுதிக்குள் மழை நீர் அந்த இடத்தின் மூலமோ பக்கத்து இடங்களின் மூலமோ அடைந்து இந்த அளவு மண் முழுவதுமே ஈரமாக்கப்படும் போது முற்றிலும் இதன் அடிப்பகுதியில் தாங்கும் பாறையின் தொடர்பை இழந்து விடுகிறது. உடனடியாக மரம், செடி, வீடுகளுடன் சரிவை அடைகிறது. இது தவிர்க்க இயலாத ஒன்று.காரணம் மரம், செடி, வளர்க்கும் போதோ, வீடுகள் கட்டும் போதோ அந்த இடத்தின் மண் ஆதிக்க உயரம் என்ன என்பதை யாரும் அறிய முற்படுவதே இல்லை.அவசரம், மேலும் அறியாமை, குருட்டு நம்பிக்கை இதற்கான காரணங்கள். ஆக மழை தொடர்ந்து தாக்கும் போது ஈரமான முழுப் பகுதியும் பாறைகளுடனான தொடர்பை இழந்துவிடுகிறது. சரிகிறது.

நிலைமை இப்படி இருக்க, தற்போதைய சரிவுகளின் தீவிரத்திற்கான மற்ற காரணங் களோ மிக மிக பயமூட்டுவதும், சிந்திக்க வைப்பதுமானது. அது என்ன?அதுதான் 2004க்குப் பிறகான, அதாவது சுனாமி தாக்குதலுக்குப் பிறகான புவிநிலை. அப்போது கடலுக்கடியில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப் பும் அதனால் வெளியான 1400 கி.மீ., நீள 200 கி.மீ., அகல 5000 அடி உயர தீவு வடிவான லாவா, கேம்மா, வெளிப்பட் டால் உருவான கடலடித் தீவின் போது தென் ஆசியப் பகுதி முழுவதும் ஏற்பட்ட நிலத்தடி அதிர்வு மறுக்க முடியாத மாபெரும் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது என்பது உண்மையே.கடந்த பல மாதங்கள் முன், கூட இதே நீலகிரி பகுதியில் வெப்ப வாயும், புகையும், சத்தமும் கூடிய வெடிப்பு ஏற்பட்டு பலமுறை கிலி உண்டாக்கியது நினைவுக்கு வரலாம்.

இதே போல் பல இடங்களிலும் கூட, இன்றைய தேதி வரையிலும் கூடத் தொடரும் நிலநடுக்கம் என்ற செயலால் பூமியின் மேற்பரப்பு முழுவதுமே நடுக்கத்துக்கும் சிறு சிறு அசைவுக்கும் ஆட்பட்டே வருகிறது என்பதே உண்மை. இவ்வகை நடுக்கம் என்பது பாறை மீது படிந்திருக்கும் மண்பகுதியை தளர்த்தவும், மழை நீர் உட்புக எளிமைப் படுத்தவும் உதவுகிறது என்பதும் பேருண்மை.

ஆக இவற்றுடன் மலைப் பகுதிகளில் முக்கியமாக பாறைகளுக்கு வெடி வைத் தல், மழை நேரங்களில் அதிக பாரத்துடனான வாகன ஓட்டம், கட்டுமானப் பொருட் களுடனான சவாரி என்பவையும் சரிவுக்கு சலாம் போடுகின்றன.அதிர்வால் ஏற்பட்ட பாறைச் சரிவை நீக்க மீண்டும் வெடிகளையே வெடிக்கின்றனர் என்பது வேடிக்கை தான்.இந்நிலையில் மழைச் சரிவுகளில் மரங்கள் வளர்ப்பது என்பது நல்லது என்ற கூற்றை விட உயரம் குறைந்த பயிர் களை வளர்ப்பதே சாலச்சிறந் தது.ஏனென்றால் மழைக்காலங் களில் மிகவும் ஆபத்தைச் சந்திக்கப் போகும் சரிவுப் பகுதிகளில் மழை நீருடன் கனமான மரங்களும் சேரும்போது மண்பகுதி அடியோடு, மிகுந்த, பாதிப்போடு, வேகத் தோடு சரியும் என்பதுடன் இதன் விழும் தொலைவும் கூடும் என்பதே நிஜம். அங்கும் புதியசரிவை கனமான பெரிய மரங்கள் உண்டாக்கும்.

தீர்வுகள் தான் என்ன?மலைப்பகுதிகளின் சரிவுப் பகுதிகளில் மழைநீர் நிற்கும் நேரத்தையும் மிகவும் குறைப்பது. அதற்கான சரியான வடிகால் பகுதிகளை அமைப்பது. இதன் மூலம் குறுகிய அளவிலான ஆழத்தை நீர் அடையும் போதே, நிலம் காக்கப்படும்.குறிப்பாக மழைப்பாதைகளின் மேற்புறங்களில் கசிவுநீர் செங்குத்தாக விழாமல் பக்கவாட்டுப்பகுதிகளில் கடத்தி விழ வைப்பது.எந்த வகையிலும் மழைநீரை அதிகம் உட்புறம் எடுத்துச் செல்லும் படியான வகையிலும், ஈரத்தை நிறுத்தி வைக்கும் வகையிலும் இல்லாமல் இருக்க மரம், தாவரம் சாலைச் சரிவுகளில் வளர்ப்பதை தடுப்பது. பாறை மீது மண் இல்லாத நிலை ஏற்படும் வரை சரிவும் நீடிக்கும். அதிக பாரம் ஏற்றிய வாகனங்களை அனுமதிக்கக் கூடாது. கட்டுப்பாடு தேவை ரயில் பாதையை தடை செய்து விஞ்ச் அமைப்பது. தனித்த பாறைகளை அகற்றுவது. சாலைகளை அதிக கனத்துடன் அமைக்காதிருப்பது. மினி பஸ் விடுவது.

மழை சீசன்களில் வாகனத்தைக் குறைப்பது. இடிதாங்கிகளை அமைப்பது, 50 சதுர கி.மீ., கட்டடப்பகுதி என்றால் பெரும்பாலான பகுதி கட்டட அடியில் ஈரத்தை தொடர்ந்து காத்து வருவது ஆபத்தை உண்டாக்கிறது. இதன் மூலம் அதிக வெயிலில் மண் இறுகி மீண்டும் கூடுதல் பலம் பெறும் வாய்ப்பு தடையாகிறது. அடைமழையின் போது மண்ணின் தளர்வு நிலை தடுக்கப்பட வேண்டும். எனவே கட்டுமானத்துக்குத் தடை அவசியம். மலைப்பகுதிகளில் வெடி வெடிப்பதை தடுப்பதன் மூலம் காய்ந்த மண் பகுதியின் இறுக்கம் பாதுகாக்கப்படும். இல்லையேல் தளர்ந்து விடும்.இப்பகுதிகளில் கட்டடம் கட்டும் முன்பாக கட்டடத் திற்கான மொத்தப்பரப்பின் அடித்தளத்திற்காக மண் ஆழத்தையுமே பார்ப்பது என்பது இயலாத காரியம் எனவே சாய்வுப் பகுதிகளை கட்டடம் கட்டும் பகுதியாக அனுமதிக்காமல் இருப்பது.

டன் பாறையை உடைத்தும், அடித்தளமிடல் வேண்டும். தொடர்ந்து வந்த பாதிப்புகளால் சுற்றுலா பயணிகளின் வரவு மிக குறையும் போது பேராசையால் முதலீடு செய்த பல நிறுவனங்களுக்கு தொடர்ந்து நட்டமும், ஈ ஓட்டும் நிலையும் தான் ஏற்படும்.முதலீடு விரையமாகும். பெரிய கட்டடங்களின் முதலீட்டுக்கும், பாதுகாப்புக்கும் உறுதியே கூற முடியாது.உறுதியான கட்டடங்களுக்கும், மரங்களுக்கும், மேலிருந்து சரியும் கட்டடம் மற்றும் மரங்கள் இழப்பை ஏற்படுத்துகின்றன.ஓட்டல் பிற தங்குமிட கழிவு நீர் வடிகாலை கசியாத குழாய் மூலம் தூரத்தில் வெளியேற்றுவது அவசியம்.இனி, சிந்தித்து செயல்படுவதின் மூலமே நீலகிரி, "மரணத்தின் ஓலகிரி" ஆகாமல் தடுக்கப்படும்.

Tuesday, November 17, 2009

இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படுவது ஏன்?

ஆஸ்திரேலியாவில் இரண்டரை லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இந்திய சமூகத்தினர் அங்கு நல்ல பணிகளில் இருந்து வருகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்கள், படித்து முடித்த பிறகு, அங்கேயே நல்ல வேலைகளைப் பெற்று நிரந்தரக் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அண்மையில் இந்திய மாணவர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவங்களை வைத்து, அந்த நாட்டை மதிப்பிட்டு விடக்கூடாது.

இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க வருகிறார்கள். இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து படிக்கும் மாணவர்களை, உயர்கல்விக்காகப் படிக்க வருபவர்கள், தொழிற் கல்விக்காக படிக்க வருபவர்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். உயர்கல்விக்காகப் படிக்க வரும் மாணவர்கள் தாக்கப்படுவது என்பது மிகவும் குறைவு. தொழிற் கல்விக்காக படிக்க வரும் மாணவர்கள்தான் இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள்.

இந்திய மாணவர்களில் ஒருபிரிவினர், இளநிலைப் பட்டங்களைப் படித்து விட்டு, உயர்கல்விக்காக ஆஸ்திரேலியா வருகிறார்கள். மற்றொரு பிரிவினர் பிளஸ் 2 படிப்பை முடித்து விட்டு, கேட்டரிங் டெக்னாலஜி, ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மெண்ட், ஹேர் டிரஸ்ஸிங் போன்ற தொழிற் கல்வி படிக்க வருபவர்கள். இவர்கள் பெரும்பாலும் இந்தியாவில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆங்கிலத்தில் சரிவர பேச முடியாத நிலையில் இருக்கிறார்கள். பிளஸ் 2 முடித்து விட்டு, ஆங்கிலம் நன்கு பேச முடியாத மாணவர்களுக்கு தகுந்த பகுதி நேர வேலை கிடைப்பது மிக அரிதாக உள்ளது. வட மாநிலங்களில் இருக்கும் சில ஏஜண்டுகளும் அந்த மாணவர்களுக்கு சரியான தகவல்களைக் கூறுவதில்லை. நீங்கள் ஆஸ்திரேலியா போய்விட்டால், படித்துக் கொண்டே அங்கு வேலை செய்து கொள்ளலாம் என்று மாணவர்களுக்கு அவர்கள் நம்பிக்கையூட்டி விடுகிறார்கள். அவர்களை நம்பி ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க வந்துவிட்டு அந்த மாணவர்கள் சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். கட்டாயமாக வேலைக்குச் சென்றால்தான் படிப்பைத் தொடர முடியும் என்ற நிலையில், ஆஸ்திரேலியாவில் அவர்களுக்கு உரிய பகுதி நேர வேலை கிடைப்பதில்லை. ஆங்கில அறிவு இருந்தால் மட்டுமே, பகல் நேரங்களில் வேலைவாய்ப்பு எளிதாகக் கிடைக்கும்.

ஆங்கில அறிவு போதுமான அளவுக்கு இல்லாத நிலையில், மணிக்கு 2 டாலர்கள், 3 டாலர்கள் என்ற சம்பளத்தில், தங்கியிருக்கும் இடத்திற்கு வெகுதொலைவில் இரவு நேரத்தில் பணி செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். ஆஸ்திரேலியாவில் தனியாகச் செல்வது உகந்தது அல்ல என்ற பகுதிகளின் வழியாக, இந்த மாணவர்கள் பணி முடிந்த பிறகு இரவு நேரத்தில் கடந்து வரவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் போதைப் பொருட்களை உட்கொள்பவர்கள், அதிகமாக மது அருந்தியவர்களினால் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இவர்கள், இரவு நேரங்களில் இந்தப் பகுதிகளின் வழியாக நடந்து செல்லும்போது, போதை பழக்கத்துக்கு ஆளானவர்கள் இவர்களை மிரட்டி பணம் கேட்கிறார்கள். பணம் இருந்தால் பிடுங்கிக் கொள்கிறார்கள். போதையில் இருக்கிற அவர்கள், எதிரே வருபவர்கள் யார், எந்த நாட்டினர் என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளக்கூடிய மனநிலையில் இருப்பதில்லை. அடித்து அவர்களிடம் பணத்தைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் நடப்பதில்லை.இரவு நேரங்களில் மட்டுமே நடக்கின்றன. எனவே, தொழிற் கல்வி படிப்புகளில் சேர்ந்து படிக்கச் செல்லும் மாணவர்கள், முன்னதாகவே முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு, ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் சேருவது நல்லது.

ஆஸ்திரேலிய கல்வித்துறையின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத கல்வி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. அண்மையில், நான்கு கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், 300 இந்திய மாணவர்கள் உட்பட, இரண்டு ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர் என்ற செய்தி வெளியானது. விளம்பரங்களைப் பார்த்தும் ஏஜண்டுகள் மூலமும், அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் சில நேரங்களில் மாணவர்கள் சேர்ந்து விடுகிறார்கள். அதுபோன்ற கல்வி நிலையங்கள் மூடப்பட்டு விடுகின்றன. அதுபோன்ற சூழ்நிலைகளில், ஆஸ்திரேலிய அரசு தலையிட்டு, அந்த மாணவர்களை வேறு கல்வி நிலையங்களுக்கு மாற்றுகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் இயங்கும் கல்வி நிறுவனங்களைத் தொடர்ந்து தணிக்கை செய்யும் பணியில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டு வருகிறது. விதிமுறைகளை மீறி செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து வருகிறது.

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க வரும் மாணவர்களுக்கான விதிமுறைகளை இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது. http://www.hcindiaau.org/students_guidelines.html ஆஸ்திரேலியாவில் படிக்கும் மாணவர்கள், ஏதாவது பிரச்சினைகளை எதிர் கொண்டால், இந்திய தூதரக அலுவலகத்துடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் சிட்னி, மெல்போர்ன், கான்பெரா, பெர்க் ஆகிய நகரங்களில் 24 மணி நேர தொலைபேசி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் இருப்பவர்கள் கான்பெராவில் உள்ள அலுவலகத்துடன் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம். இந்திய மாணவர்கள் செய்யும் புகார்களின் அடிப்படையில், ஆஸ்திரேலிய அரசும் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக்கு வெளிநாட்டுப் படிப்புக்கு ஏற்ற வகையில், ஆங்கில மொழி அறிவு தேவை. தொழில் படிப்புகளில் சேரும் பிளஸ் 2 மாணவர்கள், தங்களது படிப்பின் ஒரு பகுதியாக, தொழில் நிறுவனங்களில் செய்யும் பயிற்சிப் பணிக் காலம் எவ்வளவு என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த காலகட்டப் பணிகளுக்கு ஊதியம் இல்லாமலும் இருக்கலாம். அங்கு படிக்க வரும் மாணவர்கள், வாரத்திற்கு 20 மணி நேரம் பகுதி நேர வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் மூலம் நாம் எவ்வளவு வருவாய் ஈட்ட முயலும் என்பதையும், எந்த அளவுக்கு பொருளாதார வசதி இருக்கிறது என்பதையும், மாணவர்கள் உணர்ந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

பொதுவாக ஒரு செமஸ்டருக்கு மூன்று ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் வரை படிப்புக் கட்டணம் இருக்கும். அங்கு தங்கும் இடம், உணவு உள்ளிட்ட செலவுகளுக்கு மாதம் ஆயிரம் டாலர் அளவுக்கு பணம் தேவைப்படும். பகுதி நேர வேலையின் மூலம் இந்தப் பணத்தைச் சம்பாதிக்கக்கூடிய மாணவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நல்ல ஆங்கில அறிவு இல்லாவிட்டால், பகுதி நேர வேலைக்கு நல்ல பணிகள் கிடைக்காது. எனவே, ஊதியமும் அந்த அளவுக்கு ஈட்டமுடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவில் நமக்கான உரிமை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் சேரும் கல்வி நிறுவனங்கள் குறித்த விதிமுறைகளை ஆஸ்திரேலிய தூதரகங்கள் மூலம், முன்னதாகவே தெரிந்து கொண்டால் பல பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.

Wednesday, November 11, 2009

பூங்காக்களில் காதல் லீலை : பாழாகும் சமூக ஒழுங்கு

கோவை மாநகராட்சி வ.உ.சி., பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலையில் ஆண், பெண் ஜோடிகள் பொது இட மென்றும் பாராமல் ஒழுங்கீனமான செயலில் ஈடுபடுகின்றனர். சமூக ஒழுங்கை சீர்குலையச் செய்யும் இவர் களை, மாநகராட்சி நிர்வாகமும், போலீசும் வேடிக்கை பார்ப்பது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.

கோவை நகரவாசிகள், பள்ளி மாணவ, மாணவியரின் பிரதான பொழுது போக்கும் இடம் வ.உ.சி., பூங்கா மற்றும் மிருகக் காட்சி சாலை. பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்படுகிறது. மிருகக் காட்சி சாலை, செவ்வாய் தவிர பிற நாட்களில் காலை 10.00 முதல் மாலை 7.00 மணி வரை செயல்படுகிறது. மிருகக் காட்சிசாலையை பார்வையிட நகர் பகுதி பள்ளிகளில் இருந்து மட்டுமின்றி, புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் அதிகம் வருகின்றனர்.

ஒழுங்கீன செயல்கள்: வ.உ. சி., பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டதும் ஆண், பெண் ஜோடிகள் நுழைந்து ஆங்காங்கு ஆக்கிரமித்துக் கொள் கின்றனர். புல்வெளியில், புதர் மறைவில், மரத்தின் பின்னால் என பல இடங்களிலும் தனியாக அமர்ந்து சேஷ்டையில் ஈடுபடுகின்றனர். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தும், மடியில் படுத்தபடியும் காதல் விளையாட்டு புரிகின்றனர். இவர்களில் பலரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், பூங்காவுக்கு வருவோரை பற்றிய எவ்வித கவலையும் கொள்வதில்லை. சமீபத்தில், இது போன்ற ஜோடிகளின் அத்துமீறல் அதிகரித்ததை தொடர்ந்து, ரேஸ் கோர்ஸ் போலீசுக்கு அதிகளவில் புகார்கள் சென்றன. மாலை நேரத்தில் திடீர் ரெய்டு நடத்திய போலீசார், பூங்காவில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டிருந்த ஜோடிகளை பிடித்து கடும் எச்சரிக்கைக்கு பின் அனுப்பினர். ஓரிரு நாட்கள் போலீஸ் கண்காணிப்பும் தொடர்ந்த காரணத்தால், ஜோடிகளின் சில்மிஷ வேலைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. பின்னாளில் போலீசாரின் கண்காணிப்பு படிப்படியாக குறைந்து, தற்போது அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதை வேடிக்கை பார்த்து ரசிக்கவும், மொபைல் போன் கேமராவில் படம் பிடிக்கவும் சில வாலிபர்கள் சுற்றித்திரிகின்றனர்; சில ஜோடிகளை படம் பிடித்து மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட போட்டோவை காண் பித்து மிரட்டி பணம் பறித்த சம்பவங்களும் நடந் துள்ளன. எனினும் ஆண், பெண் ஜோடிகள் வருவது குறைந்தபாடில்லை.

மாணவர்கள் "கட்': வ.உ.சி., பூங்காவில் காதல் ஜோடிகளின் சில்மிஷ செயல்கள் ஒரு புறம் அதிகரித்திருக்க, மறுபுறம் பள்ளி மாணவர்கள் வகுப்பை "கட்' அடித்துவிட்டு, பூங்கா மற்றும் வ.உ.சி.,மைதானத்தில் சுற்றித்திரிவதும் அதிகம் நடக்கிறது. புத்தக மூட்டைகளை மைதானத்தின் ஓரத்தில் வைத்துவிட்டு, அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடுகின்றனர். மாலை நேரத்தில் பள்ளி வகுப்பு முடிந்து செல்வதை போல, வீட்டுக்கு கிளம்பிச் செல்கின்றனர். இந்த மாணவர்களில் சிலர் புகை பிடிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர்.

கஞ்சா ஆசாமிகள்: கஞ்சா விற்கும் நபர்கள், பாலியல் தொழிலுக்கு ஆள் பிடிக்கும் புரோக்கர் நடமாட்டமும் வ.உ.சி., பூங்கா மற்றும் மைதானம் பகுதியில் அதிகரித் துள்ளது. கையில் "பேக்'குடன் சுற்றித் திரியும் நபர்கள் கஞ்சா பொட்டலங்களை திறந்தவெளியில் சர்வ சாதாரணமாக விற்கின்றனர். இதை வாங்கவும் "வாடிக்கையாளர்கள்' வருகின்றனர். இவர்கள், பள்ளி மாணவர்களிடம் பேச்சுக் கொடுப்பதால், மாணவர்களையும் கஞ்சா புகைக்கும் பழக்கம் தொற்றிக் கொள்ளும் அபாயமிருக்கிறது. இது போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்கவும், பொதுமக்கள் வந்து செல்லும் வ.உ.சி., பார்க்கில் ஆண், பெண் ஜோடிகளின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வரவும் மாநகர போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Wednesday, November 4, 2009

செல்பேசி தொழில்நுட்ப வளர்ச்சி - பாதிப்பும் அச்சுறுத்தலும்

தகவல் தொடர்புக்கான கண்டுபிடிப்புகளில் பெரிய சாதனையாகக் கருதப்படும் தொலைபேசியின் வழித்தோன்றலான செல்பேசி இன்று அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. நம்மில் கணிசமானோரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்பேசிகள் உண்டு. கையடக்க செல்பேசிகளை விதவிதமான வடிவங்களில், நவீன வசதிகளுடன் அறிமுகம் செய்வதில் தனியார் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதன் விளைவாக டார்ச் லைட்டில் தொடங்கி கேமரா, விடியோ என்று ஒவ்வொரு நாளும் புதுப்புது வசதிகள் செல்பேசிகளில் கூடிக் கொண்டே போகின்றன. இந்நிலையில், சீன நாட்டுத் தயாரிப்பு செல்பேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "வாய்ஸ் சேஞ்சர்' என்ற வசதி பலரின் தூக்கத்தைக் கெடுப்பதாக மாறியிருக்கிறது. சில முக்கிய நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் இந்த வசதி தற்போது வரத் தொடங்கிவிட்டது.

அதாவது, இந்த வசதியுள்ள செல்பேசிகளில், "வாய்ஸ் சேஞ்சர்" பகுதியில் முதியவர், நடுத்தர வயது ஆண், இளைஞர், குழந்தை, இளம்பெண், நடுத்தர வயது பெண், மூதாட்டி என்று 7 வகையான குரல் பிரிவுகள் இருக்கும். இதில், ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு நாம் பேச விரும்பும் நபரைத் தொடர்பு கொண்டால், எதிர் முனையில் இருப்பவருக்கு நம்முடைய குரல் நம் குரலாக ஒலிக்காது; மாறாக, நாம் தேர்ந்தெடுத்த முதியவர் குரலோ பெண் குரலோ ஒலிக்கும் மிகவும் தத்ரூபமாக.

பொழுதுபோக்குக்காக நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்காக இந்தத் தொழில்நுட்ப வசதியை செல்பேசி நிறுவனங்கள் வழங்கினாலும், சிலர் தவறான வழியில் இந்த வசதியைப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. உதாரணமாக, நாம் இளம்பெண் குரலைத் தேர்ந்தெடுத்துப் பேசினால், எதிர்முனையில் இருப்பவர் தன்னிடம் பேசுவது இளம்பெண் என்றுதான் நினைத்துக் கொள்வார்.

இந்த வசதியை தவறாகப் பயன்படுத்துவதால், ஏற்படும் விளைவு எத்தனை மோசமானதாக இருக்கும் என்பதற்கு அண்மையில் மதுரையில் நிகழ்ந்த பொறியாளர் முத்துவிஜயன் கொலைச் சம்பவம் ஓர் உதாரணம். மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த முத்துவிஜயனிடம் செல்பேசியில் பேசிய ஒருவர் தனது பெயர் பிரியா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கியுள்ளார். முத்துவிஜயனும் அவரை நம்ப, நாளடைவில் இருவரும் அடிக்கடி பேசத் தொடங்கியிருக்கின்றனர். அனைத்து விஷயங்களைப் பற்றியும் மனம்விட்டு பேசியுள்ளனர். பிரியா தனக்குப் பணம் தேவைப்படும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, முத்துவிஜயனிடம் இருந்து பணம் பெற்றிருக்கிறார்.

ஒரு நாள் முத்துவிஜயனுக்கு உண்மை தெரிய வந்தது; ப்ரியா என்ற பெயரில் "வாய்ஸ் சேஞ்சர்” வசதியைப் பயன்படுத்தி தன்னிடம் பேசியது ஓர் ஆண் என்று. இருவருக்கும் இடையே பிரச்னை வெடித்தது. முத்துவிஜயன் கொல்லப்பட்டார். பெரும் சிரமத்துக்குப் பிறகு எதிரிகளை போலீஸôர் கைது செய்தனர்.

முத்துவிஜயன் ஓர் உதாரணம்தான். வெளியே தெரியாமல் எத்தனையோ "வாய்ஸ் சேஞ்சர்' மோசடிகள் பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவமானத்துக்குப் பயந்து இந்த மோசடிகள் அவரவருக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றன. பொதுவாக, தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை பலர் தனக்குள்கூட சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை. ஆதலால், இத்தகைய பிரச்னைகள் சமயத்தில் ஒருவரின் மனநலனையே பாதிக்கக்கூடும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.

ஆனால், உளவியல் அடிப்படையிலும், குற்றச் செயல்கள் அடிப்படையிலும் மிக மோசமான பாதிப்புகளை உருவாக்கும் இத்தகைய தொழில்நுட்ப வசதியைக் கட்டுப்படுத்த நம்முடைய சட்டத்தில் இடமில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். இதுகுறித்து காவல் துறையினர் கூறியது, "செல்பேசியில் குரலை மாற்றிப் பேசி மோசடியில் ஈடுபடும் நபர்கள் பற்றி புகார்கள் வந்தால் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். மற்றபடி தொழில்நுட்ப வளர்ச்சியைக் கட்டுப்படுத்த எங்களுக்கு அதிகாரமில்லை" என்கின்றனர்.

பிரச்னைக்குரிய இத்தகைய தொழில்நுட்ப வசதிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம். அதேபோல, தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களுக்கும், இதுபோன்ற வசதிகளைக் கொண்ட செல்பேசிகள் வைத்திருப்பவர்களுக்கும் சுயகட்டுப்பாடு அவசியம்!