Sunday, July 12, 2009

சீனாக்காரன் வைக்கப் போறான் ஆப்பு!

இந்தியா மீது 2012-க்குள் சீனா போர் தொடுக்கும் என பாதுகாப்புத் துறை நிபுணர் பரத் வர்மா எச்சரித்துள்ளார். இது குறித்து இந்தியன் டிபென்ஸ் ரெவியூ பத்திரிகையில் அதன் ஆசிரியரான பரத் வர்மா எழுதியுள்ளதாவது:

ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இந்தியாவுக்கு இறுதியாகப் பாடம் புகட்ட வேண்டும் என சீனா நினைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக சீன ஏற்றுமதி நிறுவனங்கள் பல மூடப்பட்டுவிட்டன.

இதனால், முன்னெப்போதும் இல்லாதவகையில் சீனாவில் சமூக அமைதி சீர்குலைந்து வருகிறது. இதனால் சமூகத்தின் மீது இருந்து வந்த கம்யூனிஸ்டுகளின் பிடி தளர்ந்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகி வருகிறது.

இவை மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு எதிராக சீனாவின் வலது கரம் போல செயல்பட்டு வந்த பாகிஸ்தான் உள்நாட்டுச் சண்டையில் மூழ்கியுள்ளது. இது, இந்தியாவுக்கு எதிராக செயல்பட பாகிஸ்தானுக்கு ஊக்கம் அளித்து வந்த சீனாவுக்கு எரிச்சலை அதிகப்படுத்தி உள்ளது.

இத்துடன், அமெரிக்காவுடன் இந்தியாவின் நெருக்கம் அதிகமாவதும் சீனாவுக்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்க கூட்டுறவால் தொழில்நுட்ப அளவில் இந்தியா தன்னை மிஞ்சிவிடும் என சீனா அஞ்சத் தொடங்கியுள்ளது.

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜப்பான் போன்ற மேற்கத்திய நாடுகள் மீது போர் தொடுப்பது விவேகமானதாக இருக்காது. ஒரே கல்லில் பல மாங்காய் அடிப்பது போல, பொருளாதார தேக்கம், வேலையின்மை போன்றவற்றில் இருந்து மக்களை திசைதிருப்பவும், ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டவும், மென்மையான இலக்கான இந்தியா மீது போர் தொடுத்து இந்தியாவின் வடகிழக்குப் பிரதேசங்களைக் கைப்பற்றுவதே சீனாவின் திட்டம்.

இதை எதிர்கொள்வதற்கு இந்தியா தயாராக உள்ளதா? பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து ஊடுருவல்காரர்கள் மூலம் இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதுடன் நேரடியாக இரு நாடுகளும் போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதா என கேள்வி எழுப்பினால் இல்லை என்பதே பதிலாக உள்ளது.

நிர்வாகத் துறைக்கு ராணுவ சிந்தனையை அளித்து போருக்குத் தேவையான நிதி மற்றும் ஆதாரப் பொருள்களைத் திரட்டுவதே சீனா மற்றும் பாகிஸ்தானின் சவாலை எதிர்கொள்வதற்கான தீர்வாக அமையும் என பரத் வர்மா கூறியுள்ளார்.

0 பேரு சொன்னாங்க: