Saturday, June 27, 2009

பருவமழை பல் இளித்தால்!!!

பசிபிக் கடல் பரப்பில் நிலவும் வெப்ப நிலைமைகளின் அடிப்படையில் நிகழாண்டின் தென்மேற்குப் பருவமழை தாமதமாகும் என்பதுடன் சராசரி அளவைக் காட்டிலும் குறைவாகப் பெய்யும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தக் கணிப்பு பொய்ப்பதில்லை என்பதற்கு முன்னோட்டமாக பிகாரில் இப்போதே கடுமையான வெப்பக் காற்று வீசத் தொடங்கி விட்டது.

இந்த ஆண்டுப் பருவமழை சராசரி அளவைவிடக் குறைவாகப் பெய்வதால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை இந்தியாவின் வடமேற்கு மத்திய மாநிலங்கள்தான். தமிழ்நாட்டில் சராசரியைவிட 23 சதவீதம் குறைவாகப் பருவமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளனர்.

பருவமழை குறைந்தால், விளைச்சல் குறையும்; விவசாயிகள் வீட்டு அடுப்பில் பூனை உறங்கும்; பதுக்கல் அதிகரிக்கும்; உணவுப் பொருள் விலை உயரும்; பதுக்கல்காரர்கள் வீட்டில் வெளிச்சம் பெருகும்; மக்கள் தவிப்பார்கள்; அரசியல்வாதிகள் குதிப்பார்கள்.

இதேபோன்று, 2002-ம் ஆண்டில் தென்மேற்குப் பருவ மழையில் தேசிய அளவில் 19 சதவீதம் குறைந்தபோது, இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு பரப்பளவுக்கு வறட்சி ஏற்பட்டது. உணவு உற்பத்தி 7 சதவீதம் குறைந்தது.

பருவமழை குறைந்து நீர்ப்பாசனம் பாதிக்கப்படும் என்றால், பொதுவாக பாதிக்கப்படுவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிர்தான்.

தமிழ்நாட்டில் வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. அணையில் போதுமான நீர் இல்லை. கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மழை வேண்டித்தான் தமிழ்நாட்டு கோயிலுக்கு வந்தேன் என்றும் மழை பெய்தால்தான் காவிரியில் தண்ணீர் என்றும் கூறிச் சென்றுள்ளார்.

தமிழ்நாட்டுத் தெய்வம் கர்நாடகத்துக்கு மழையைக் கொடுத்தாலும், தண்ணீரைக் கொடுப்பார்களா? இந்தச் சூழ்நிலையில் குறுவை சாகுபடி எந்த அளவுக்கு வெற்றிகரமாக அமையும் என்று தெரியவில்லை.

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, மின்பற்றாக்குறையும் விவசாயிகளுக்கு சேர்ந்து கொண்டுள்ளது. குறுவை சாகுபடிக்காக 16 மணி நேரம் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி கூறினாலும், இதை தஞ்சை நெற்களஞ்சியப் பகுதியில் மட்டும் அமல்படுத்தினால் பயன் இல்லை.

தமிழ்நாடு முழுவதும் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தஞ்சையைவிட அதிகமான நெல் உற்பத்தியை மற்ற மாவட்டங்கள்தான் வழங்குகின்றன. காவிரிப் பிரச்னைக்குப் பிறகு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் மாற்றுப்பயிர்களுக்கு மாறியதன் காரணமாக, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்ற பெயர் தஞ்சைக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதே கேள்விக்குறியான விஷயம்.

ஆக, தமிழ்நாட்டில் அனைத்து நெல் சாகுபடியாளர்களும் பயன்பெறும் வகையில் விவசாயத்துக்கு 16 மணி நேரம் மின்சாரம் அளித்தால்தான் உணவு உற்பத்தி குறையாமல் தடுக்க முடியும்.

சராசரியைவிட குறைவாகப் பருவமழை பெய்தாலும் ஏற்கெனவே பெய்துள்ள போதுமான மழை நிலத்தடி நீராக உள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்படாது என்ற கருத்தை வேளாண் வல்லுநர்கள் முன்வைக்கின்றனர்.

இது உண்மையாக இருந்தாலும்கூட, மின்சாரம் இருந்தால்தான் நீலத்தடி நீர் மற்றும் கிணற்றுப் பாசனத்துக்கு வழியுண்டு. குறிப்பாக தொண்டைமண்டலப் பகுதியில் கிணற்று நீரை நம்பித்தான் விவசாயம் செய்யப்படுகிறது. அவர்களுக்கு போதுமான நேரம் மின்சாரம் இல்லாவிட்டால், நிலத்தடி நீரையும் பயன்படுத்த இயலாத சூழ்நிலை உருவாகும்.

பருவமழை குறையும் என்று தெரிந்த பிறகு, யார் யார் என்னென்ன பயிர்களை சில மாதம் கழித்து சாகுபடி செய்யலாம், எந்த மாவட்டத்தில் நிலத்தடி நீர் அதிகம் உள்ளது என்பதை விவசாயிகளுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.

மேலும், பருவமழை குறைகிறது என்று தெரிந்தவுடன் அரிசி, பருப்பை பதுக்கும் வியாபாரத் தந்திரங்கள் எல்லா இடங்களிலும் நடக்கும். பதுக்கும் நபர்களை அடையாளம் காண்பதும், அவற்றைப் பறிமுதல் செய்வதும்தான் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளைக் கட்டுக்குள் வைக்க உதவும்!

0 பேரு சொன்னாங்க: