Wednesday, June 3, 2009

அரசியல்வாதியின் மகன் ஏன் அரசியலில் ஈடுபடக்கூடாது?

முன்பெல்லாம் அரசியல் தலைவர்கள், தங்களுக்குப் பின் அனுபவம் உள்ள அடுத்த நிலைத் தலைவர்கள் கட்சித் தலைமைப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால், இன்றோ நிலைமை வேறுவிதமாக மாறிவிட்டது. அநேகமாக எல்லா மாநிலத்திலும் குடும்ப அரசியல் உள்ளது. மேலும் அரசியல் என்பது குடும்ப வியாபாரமாக மாறிவிட்டது. அரசியலில் நுழைந்தால் அதிக முதலீடு செய்ய வேண்டும்; பணக்காரர்கள் மட்டுமே அரசியலில் நீடிக்க முடியும் என்ற நிலை எழுந்துள்ளது.

ஆரம்ப காலத்தில் நேரு குடும்பத்தினரே அரசியலில் ஈடுபட்டு வந்தனர். அரசியல்வாதிகளின் மகன்கள், மகள்கள் அரசியலில் நுழைவது ஒன்றும் புதிதல்ல என்றாலும் இன்றையச் சூழ்நிலையில் பிராந்திய கட்சிகள் என்றாலே "குடும்ப அரசியல்” என்றாகிவிட்டது. "வாரிசு அரசியல்” நடத்தி வருவதாக காங்கிரஸ் கட்சியைக் குறைகூறி வந்த பாரதிய ஜனதா கட்சிகூட இப்போது அதே நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கிவிட்டது. கர்நாடக மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவின் மகனும் வாரிசு அரசியலில் நுழைந்துள்ளார். முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் மகன் இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று எம்.பி.யாகியுள்ளார். கடந்த தேர்தலில் எம்.பி.யாக இருந்த ஜஸ்வந்த் சிங்கின் மகன் மணவேந்திர சிங், இந்த முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போதைக்கு வாரிசு அரசியலில் ஈடுபடாமல் இருப்பது இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே என்று சொல்லலாம்.

15-வது மக்களவைக்கு முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களில் மத்தியப் பிரதேச மாநிலம் மண்டாஸர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மீனாட்சி நடராஜன், ஜான்ஸி தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்ற பிரதீப் ஜெயின் இருவரும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள். ஹரியாணாவில் தேவிலால், பன்ஸிலால் (இவருடைய பேத்தி ஸ்ருதி சௌத்ரி, பிவானியில் மகேந்திரகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.), பஜன்லால் ஆகியோர் குடும்பத்தினர் ஏற்கெனவே அரசியலில் உள்ளனர். இப்போது இவர்களுடன் ஹுடா குடும்பமும் சேர்ந்துகொண்டுள்ளது. முதல்வர் பி.எஸ்.ஹுடாவின் மகன் தீபேந்திர ஹுடா, ரோடக் தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் ஏற்கெனவே முலாயம் சிங்கும் அவரது குடும்பத்தினரும் அரசியலில் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தனி ஒருவராக அரசியலில் நுழைந்தாலும் இப்போது தனக்கு உதவியாக குடும்ப உறுப்பினர்களை இழுத்து வருகிறார். ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியும் அவரது குடும்பத்தினரும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்குப் போட்டியாக என்.டி.ஆர். குடும்பத்தினரும் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் திமுக தலைவரும் மாநில முதல்வருமான மு. கருணாநிதி, தனது குடும்பத்தினருக்காகப் பதவி கேட்டு தில்லியில் நடத்திய பேரம் அனைவரும் அறிந்த ரகசியம். இதுபோதாது என்று மாநிலத்தில் தனது மகன் மு.க. ஸ்டாலினை துணை முதல்வராக்கி தனது நீண்டநாள் ஆசையை பூர்த்தி செய்துள்ளார்.

இன்றைய இந்திய அமைச்சரவையில் பொறுப்பேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சச்சின் பைலட், ஜிதின் பிரசாத், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ம.பி. முன்னாள் துணை முதல்வர் சுபாஷ் யாதவின் மகன் அருண் யாதவ், இந்திரா காந்தி அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்த சி.பி.என்.சிங்கின் மகன் ஆர்.பி.என்.சிங், குஜராத் முன்னாள் முதல்வர் அமர்சிங் சௌதுரி மகன் துஷார் சௌத்ரி, மகாராஷ்டிரத்தில் முக்கியத் தலைவராக விளங்கிய வசந்த்தாதா பாட்டீலின் பேரன் பிரதீக் பாட்டீல், மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ. சங்மாவின் மகன் அகதா சங்மா, குஜராத் மாநில முன்னாள் முதல்வர் மாதவசிங் சோலங்கியின் மகன் பரத் சோலங்கி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அரசியல்வாதிகளே,
உங்கள் குடும்பத்தினர் எளிதில் அரசியலில் நுழைந்துவிடுவதுபோல் தங்களுக்கும் அந்த வாய்ப்புக் கிடைத்தால் அதன் மூலம் தங்கள் திறமையை நிரூபிக்கக்கூடிய பல இளைஞர்கள் இந்தியாவில் இல்லையா?
நாடாளுமன்றத்துக்கோ அல்லது சட்டப்பேரவைக்கோ போட்டியிட டிக்கெட் கேட்காமல் பல ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றும் தொண்டர்களும் இல்லையா?

இந்த நிலை நீடித்தால் இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகளில் இந்திய அரசியல் என்பது ஒரு குறிப்பிட்ட சில குடும்பத்தினருக்கு மட்டுமே சொந்தமானது என்றாகிவிடும் இல்லையா?

0 பேரு சொன்னாங்க: