Wednesday, June 24, 2009

கச்சத் தீவு - அடுத்த ஊறுகாய்

தேர்தல் முடியும்வரை ‘இலங்கை படுகொலை', 'தமிழன் சாகிறான்', '5ம் கட்டப்போர்' என்றெல்லாம் ஊறுகாய் விற்ற தமிழ் அரசியலாரின் அடுத்தக்கட்ட வியாபாரம் கச்சத் தீவு என்றாகியுள்ளது. இதைப் பற்றிய வரலாற்றுப் பிண்ணனியைப் பார்ப்போம்.

இராமேஸ்வரத்திற்கும், அதனின்று வட கிழக்காக மன்னார் குடாவில் உள்ள நெடுந் தீவிற்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் தமிழ்நாட்டிற்கு உரித்தானதாக தொன்று தொட்டு இருந்துவந்த கச்சத் தீவை, 1974ஆம் ஆண்டு போடப்பட்ட ஒரு ஒப்பந்த்தின் வாயிலாக இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்துக் கொடுத்ததன் காரணமாகவும், அதன் பிறகு 1976ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தின் வாயிலாக கச்சத் தீவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் இரு நாடுகளும் எல்லை வரையறை செய்து கொண்ட காரணத்தினால் தமிழ்நாட்டின் மீனவர்கள் தொன்று தொட்டுப் பெற்றிருந்த மீன் பிடி உரிமை பறிபோனது. எனவே மீன் பிடி உரிமையை - அது வரலாற்று ரீதியாக தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமை என்பதால் - மீண்டும் நிலை நிறுத்த வேண்டுமெனில் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு (அரசியல் கட்சிகள் மட்டுமே அல்ல) நேர்மையுடன் கோரி வருகிறது.

தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை இதுவரை மறுத்தவர் யாருமில்லை. கச்சத் தீவுக் கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் அனுபவித்து வந்த மீன் பிடி உரிமை என்பது இன்றைக்கு அதனை தங்களுடைய சொத்துப் போல பாவித்துப் பரிமாறிக் கொண்ட இந்தியாவும் இலங்கையும் சுதந்திரம் பெற்ற நாடுகளாக பரிமளிப்பதற்கு முன்னரே இருந்த நீடித்த யதார்த்தமாகும். எனவே கச்சத் தீவை தாரை வார்த்ததன் மூலம் தமிழக மக்களின் வாழ்வுரிமையில் நமது நாட்டின் மத்திய அரசு அத்துமீறியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழக மீனவர்களைக் கலக்காமலேயே அவர்களின் மரபுரிமையை வேறொரு நாட்டிற்கு அளித்துள்ளது. இப்படி, ஒரு நாடு என்ற ரீதியில் மத்திய அரசிற்கு அப்படிப்பட்ட உரிமை உண்டென்று வாதிடுவோர் கூட, கச்சத் தீவை இழந்ததால் தமிழக மீனவர்கள் சந்தித்துவரும் அவலத்திற்கும், சிறிலங்க கடற்படையினரால் அவர்கள் கொல்லப்படுவதற்கும், துன்புறுத்தப்படுவதற்கும் அதுவே காரணமாகிறது என்பதையும் மறுக்கவில்லை.

எனவே, நமது மீனவர்கள் முழு உரிமையுடன் தங்களுடைய பாரம்பரிய கடற்பரப்பில் பாதுகாப்புடன் மீன் பிடிக்க வேண்டுமெனில், கச்சத் தீவை மீட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். இதனை நன்கு உணர்ந்துதான் கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது. ஆனால், அதனை மீட்கும் பிரச்சனை எழுப்பப்படும் போதெல்லாம், அது தாரை வார்க்கப்பட்ட போது நீ என்ன செய்தாய் என்று தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளின் தலைவர்களான கருணாநிதியும், ஜெயலலிதாவும் அறிக்கை போரில் இறங்கி அரசியல் நடத்தி திசை திருப்புவதும் வழமையாகிவிட்டது. அதுதான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், கச்சத் தீவை மீட்பதற்கு அனைத்துக் கட்சிக்களும் ஆதரவு அளித்தால், அப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவேன் என்று கூறிய தமிழக முதலமைச்சர் கருணாநிதி, “பேராசை கொண்டு எல்லை மீறிச் சென்று மீன் பிடிப்பதால்தான்” பிரச்சனை ஏற்படுகிறது என்று கூறியுள்ளது வருத்தத்திலும் சிரிப்பை வரவழைக்கிறது.
மீன்கள் அதிகம் இருக்கும் பகுதிக்குச் சென்றுதான் மீன் பிடிப்பார்கள், அதுதானே இயற்கை. இதில் பேராசைக்கு என்ன இருக்கிறது? கடலிற்குச் சென்று அளவோடு மீன் பிடிக்க வேண்டு்ம் என்ற முறை ஏதேனும் உண்டோ? தமிழரின் வாழ்வு குறித்த இலக்கியங்களைப் படித்துப் புத்தகங்களாக எழுதித் தள்ளிய முதலமைச்சர் ஏன் இப்படி பேசினார் என்பது புரியவில்லை.

‘பேராசை பிடித்து எல்லையைத் தாண்டிச் சென்று’ என்று கூறுகிறாரே முதல்வர், அந்த எல்லை என்றைக்கு வந்தது? 1974இல் வந்தது. யாரைக்கேட்டுக் கொண்டு எல்லையை நிர்ணயித்தார்கள்? 1974இல் தாரை வார்த்தார்களே (தாரை வார்த்தார்கள் என்று கூறுவதைக் கூட மிகுந்த விசனத்தோடு தனது அறிக்கையில் விளக்கியுமுள்ளார் முதலமைச்சர்), யாரைக் கேட்டுக் கொண்டு செய்தது மத்திய அரசு? அதனால்தானே அந்த நடவடிக்கை தவறு என்று கூறி, ‘வருத்தம் தெரிவித்து’ தமிழக சட்டப் பேரவை தீர்மானம் நிறைவேற்றியது அன்றைய திமுக அரசு?

எனவே கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததை எதிர்க்கும் முதலமைச்சர், அந்த ஒப்பந்த அடிப்படையில் இரு நாடுகளும் வரையறை செய்த எல்லைகளை தமிழக மீனவர்கள் மதித்து நடக்க வேண்டும் என்று கூறுகிறாரா? அப்படித்தானே மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர் மலைச்சாமி கேட்ட கே‌ள்விக்கு பதிலளித்த அன்றைய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “சர்வதேச எல்லையை மதித்து நடக்க மீனவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினார். அதே குரலை தமிழக முதலமைச்சரும் ஒலிக்கிறாரே!

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஒரு பிரச்சனையை அரசியலாக்குவது என்பது, அதனை அரசியல் ரீதியாக கொண்டு சென்று தீர்வைத் தேடுவது என்பதுதான் பொருளே தவிர, சராசரி அரசியலாக்கி, ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தித் தேர்தல் ஆதாயம் தேடுவது அல்ல. கச்சத் தீவு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. இதில் அரசியல் ரீதியாக அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும். சட்டப் பேரவையிலும், நீதி மன்றங்களிலும் தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட ஒன்றிணைந்து போராட வேண்டும். மாறாக, அதனை கட்சி அரசியலாக்குவது, பறிக்கப்பட்ட உரிமையை மீட்பதற்கான முயற்சிகளை மழுங்கடித்து, அதனை குழி தோண்டி புதைப்பதற்கான எண்ணத்தின் மறைமுக வெளிப்பாடேயாகும்.

அரசியல் தலைவர்களின் அறிக்கைகளை நாளும் படிக்கும் மக்கள் இதையெல்லாம் கண்டு வெட்கப்பட்டு கூனிக் குறுகி நிற்கிறார்கள்.

ஈழத்தில் சிறிலங்க அரசு திட்டமிட்டு நடத்திய இனப் படுகொலையை தடுத்து நிறுத்த முடியாமல் போனதற்கு இந்த ‘எதிரி அரசியல்’ பலவீனமே காரணம் என்பதை தமிழக மக்கள் நன்றாகவே புரிந்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இதுவரை 400க்கும் அதிகமான மீனவர்களை கொன்று குவித்த சிறிலங்க கடற்படையிடம் இருந்து இதற்கு மேலாவது மீனவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு நினைக்குமானால், கச்சத் தீவை மீட்பதற்குரிய நேர்மையான நடவடிக்கைகளில் அது ஈடுபட வேண்டும்.

இழந்த உரிமையை மீட்டுத் தந்தால் மட்டுமே அனுபவமிக்க அரசியல் தலைவராகத் திகழும் தமிழக முதல்வருக்கு அது பெருமை சேர்க்கும்.கச்சத் தீவுப் பிரச்சனையில் இவ்வளவு தெளிவு தமிழர்களிடையே இருந்தும், சிறிலங்க அரசிற்கும், அதன் அதிபருக்கும் வெஞ்சாமரம் வீசுவதை வழமையாகக் கொண்டுள்ள நமது நாட்டின் ஒரு பாரம்பரிய ஆங்கில நாளேடு, ‘கச்சத் தீவு ஒரு முடிவாகிவிட்ட விவகாரம்’ என்று தலையங்கம் தீட்டி தனது ராஜபக்ச விசுவாசத்தைக் காட்டியுள்ளது!

அது காட்டியுள்ள விசுவாசத்தில் குறையேதுமில்லை. ஆனால் எவ்வளவு துணிச்சலுடன் அது பிரச்சனையின் தன்மையையும், ஆழத்தையும் மறைக்கிறது என்பதை பார்க்கும் போது தனது வாசகர்களின் சிந்தனையை அது எந்த அளவிற்கு மதிப்பிட்டுள்ளது என்பதைப் புலப்படுத்துகிறது. “கச்சத் தீவு என்ற அந்த பயன்றற தீவு சர்வதேச எல்லையில் சிறிலங்கப் பகுதியில் உள்ளது” என்று ஆரம்பித்து, அப்பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமையைப் பெற்றுத் தரும் போலியான முயற்சியில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருவதாகக் கூறியுள்ளது! எப்படி இருக்கிறது கதை!

சர்வதேச எல்லையை வரையறை செய்வதற்கான இரண்டு ஒப்பந்தங்கள்தான் 1974லும், 1976லும் போடப்பட்டது என்று கூறுகிறது தனது தலையங்கத்தில்! முதல் ஒப்பந்தத்தில் பால்க் நீரிணையிலும், அடுத்த ஒப்பந்தத்தில் மன்னார் குடா பகுதியிலும் எல்லைகளை வரையறை செய்ய இந்த இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டனவாம்.அதன்படி, கச்சத் தீவில் சென்று வலைகளை காயப்போடவும், ஓய்வு எடுக்கவும், அங்குள்ள அந்தோனியார் கோயில் விழாவில் கலந்து கொள்ளவும் எந்த விதமான சட்ட ரீதியான ஆவணங்களும் இன்றி தமிழக மீனவர்களை அனுமதிக்க சிறிலங்க அந்த ஒப்பந்தங்களின்படி இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாம்.

எனவே, கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடிப்பது என்பது இந்த ஒப்பந்தங்களின் படி ஒப்புக் கொள்ளப்படவில்லை என்று கூறுகிறது அந்த நாளிதழ். அதுமட்டுமல்ல, கச்சத் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் மட்டும் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவில்லையாம், அங்கு மீன் வளம் குறைந்துள்ளதால், அதிக அளவிற்கு மீன்கள் கிடைக்கும் சிறிலங்க கடற்பகுதிக்குச் சென்று மீன் பிடிக்கிறார்களாம். அதற்கு அவர்கள் கொடுக்கும் விலைதான் ‘சில நேரங்களில்’ சிறிலங்க கடற்படையினர் சுட்டுவிடுகின்றனராம், ‘மற்ற நேரங்களில்’ அவர்களை கடற் புலிகள் சுட்டு விடுகின்றனராம். இதனைத்தான் தமிழ்நாட்டின் கட்சிகள் அரசியல் உணர்வுகளை (?) தூண்டிவிட பயன்படுத்திக் கொள்கின்றனவாம். அதற்காகத்தான் அவர்கள் கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்புகின்றனராம் என்று ‘மிகச் சீரிய முறையில்’ ஆராய்ந்து தலையங்கம் தீட்டியுள்ளது அந்த நாளேடு.

இது மட்டுமல்ல, தங்களுடைய பிரச்சனை கச்சத் தீவு அல்ல, சிறிலங்க கடற்பரப்பில் சென்று மீன் பிடிப்பதே என்றும், அதற்கு அனுமதி வேண்டும் என்றே தமிழக மீனவர்களே கூறுகின்றனராம்! ஆனால் அப்படிப்பட்ட உரிமையை இறையாண்மையுடைய சிறிலங்க அரசுதான் தர முடியுமா? அல்லது இறையாண்மை கொண்ட மத்திய அரசுதான் அப்படிக் கேட்க முடியுமா? என்று மிகுந்த மிகுந்த சட்ட ஞானத்துடன் கேட்டுள்ளது!

இனப் படுகொலை செய்வதற்கே இறையாண்மையை காரணம் காட்டும் அரசின் அறிவிக்கப்படாத அரசிதழாக உள்ள அந்த நாளிதழ், விடுதலைப் புலிகள் சிறிலங்க அரசால் இராணுவ ரீதியாக ஒடுக்கப்பட்டதால் ஏற்பட்ட கசப்புணர்வின் காரணமாக தமிழ் மொழி வெறியாளர்களே இப்படிப்பட்ட குரலை எழுப்புகிறார்கள் என்று கூறுகிறது. இந்திய, சிறிலங்க நாடுகளின் பிரதமர்கள் கையெழுத்துப் போட்டு நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை அவமதிப்பது என்ற பேச்சிற்கே இடமில்லை என்று சிறிலங்க சிங்கள அரசின் சார்பாக தனது குரலை ஓங்கி ஒலித்துள்ளது அந்த நாளிதழ்.

முதல் ஒப்பந்தத்தின் உண்மை என்ன?

இரு நாட்டுப் பிரதமர்களான இந்திரா காந்தியும், சிறிமாவோ பண்டார நாயகாவும் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதியும் (இந்திரா காந்தி கையெழுத்திட்ட நாள்), அதே மாதம் 28ஆம் தேதியும் (சிறிமாவோ பண்டாரநாயகா கையெழுத்திட்ட நாள்) செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரிவு 5-ன்படி (Article 5) கச்சத் தீவிற்கு இதுவரை சென்று வந்ததைப் போல மீனவர்களும், யாத்ரிகர்களும் (அங்குள்ள அந்தோனியார் கோயிலிற்கு) எந்த பயண ஆவணங்களுமின்றி சென்று வரலாம் என்று குறிப்பட்டுள்ளதை மட்டுமே அந்த நாளிதழ் சுட்டிக் காட்டுகிறது.

ஆனால் அந்த ஒப்பந்தம் குறித்த சுருக்கத்தில் (Summary), இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று அடிப்படையிலான நீர் எல்லைகளைச் சம தூர அடிப்படையில் வரையறை செய்துகொள்கிறது. ஆயினும், இரு தரப்பினரதும் பாரம்பரிய மீன் பிடி உரிமைகளை பாதுகாக்கிறது என்று தெளிவாக குறிப்பிடுகிறது. எப்படி இந்திய - சிறிலங்க கடற்பரப்பில் இரு நாட்டுக் கப்பல்களும் சென்று வந்த பாரம்பரிய போக்குவரத்து காப்பாற்றப்படும் என ஒப்பந்ததின் பிரிவு 6 கூறுகிறதோ, அதே அடிப்படையில்தான் பாரம்பரிய மீன் பிடி உரிமையும் பாதுகாக்கப்படும் என்று 1974 ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, மீன் பிடி உரிமை 1974 ஒப்பந்தத்திற்குப் பிறகும் இருந்தது நிரூபிக்கப்படுகிறது.

கச்சத் தீவு ஒப்பந்தத்திற்குப் பிறகும் அதனை ஒட்டிய கடற்பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமை இருந்ததை, அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் (மக்களவையில்) நடந்த விவாதத்திற்குப் பதிலளித்த அன்றைய அயலுறவு அமைச்சர் சுவரன் சிங் உறுதிபடுத்தியுள்ளார். எனவே இந்தியாவும், சிறிலங்காவும் எல்லை வரையறை செய்துகொண்டதனால் கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடி உரிமையை நமது மீனவர்கள் இழந்துவிட்டனர் என்று கூறுவது அப்பட்டமான அயோக்கியத்தனமாகும்.

கச்சத் தீவு யார் எல்லைக்குள்? எப்படி வந்தது?

அது மட்டுமல்ல, இந்தியா - இலங்கை இடையிலான கடற்பகுதி சம தூர அளவு (Equal distance from the coast lines) என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டதாகக் கூறப்படுவதிலும் பிழை உள்ளது. இதனை அப்பொழுது இந்திய அரசின் சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் சட்டங்கள் துறையின் இயக்குனராக இருந்த எஸ்.பி. ஜகோட்டா இவ்வாறு கூறியுள்ளார்: According to SP Jagota, then Director of the Legal and Treaties Division, “the boundary line between India and Sri Lanka followed the median line except as adjusted in the Palk Bay in relation to the settlement on the question of the Island of Kachchativu”

அதாவது, இரு நாடுகளின் கரைக்கு இடையிலான சம தூர அடிப்படையில்தான் கடல் எல்லை வகுக்கப்பட்டது, ஆனால் கச்சத் தீவுப் பகுதியில் மட்டும் அதனை அந்த சம தூர அளவு பின்பற்றப்படாமல் அதனை இலங்கை கடற்பகுதிக்குள் வருமாறு எல்லை வகுக்குப்பட்டது என்கிறார். இது அப்பகுதியின் இன்றைய சர்வதேச எல்லைக் கோட்டு வரைப் படத்தை பார்த்தாலே வளைத்து வரையப்பட்டது தெரியும். எனவே எல்லை வகுத்ததனால் கச்சத் தீவுப் பகுதி இலங்கைக்கு உரியதாகிவிட்டது என்று ஆங்கிலத்தில் கதை விட்டால் அது உண்மையாகிவிடாது.

ஆனால் 1976ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையில் நடந்த கடிதப் பறிமாற்றத்தில் சிறிலங்காவின் கடல் எல்லைப் பகுதியிலும், வரலாற்று ரீதியான நீர்ப் பகுதிகளிலும், அதன் தனித்த ஆளுமைக்குட்பட்ட பொருளாதார மண்டலங்களிலும் (Exclusive Economic Zone) இந்தியாவின் மீனவர்களோ அல்லது மீன் பிடி படகுகளோ செல்வதில்லை என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை 2006ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் எம். அப்பாதுரை கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதமரின் சார்பில் பதிலளித்த அயலுறவு இணை அமைச்சர் இ. அகமது தெரிவித்துள்ளார்.

ஆக கடிதப் பறிமாற்றத்தின் மூலம் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமை இந்திய அரசால் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இப்படி உரிமை பறிக்கப்பட்ட விவரமே தெரியாமல்தான் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டிருந்தனர் என்பது வேறு கதை. ஆக, இந்திய அரசு (அவசர நிலை காலத்தில்) தாரை வார்த்த உரிமையின் காரணமாக தாங்கள் தொன்று தொட்டு அனுபவித்துவந்த வாழ்வாதாரத்தை, மீன் பிடி உரிமையை தமிழக மீனவர்கள் இழந்துள்ளனர் என்பது ஐயத்திடகிடமின்றி நிரூபனமாகிறது.

கச்சத் தீவை சுற்றியுள்ள கடற்பகுதியில் மீன் பிடிக்க உரிமை இல்லாத போது அங்கு சென்று வலைகளை காயப்போட என்ன அவசியம் உள்ளது? அங்கு செல்வது என்று எத்தனித்தாலே அது எல்லையை கடப்பதாக ஆகிவிடுமே? எல்லையை மதித்து நடக்க வேண்டும் என்றுதானே பிரணாப் முகர்ஜியும், தற்பொழுது தமிழக முதல்வரும் நமது மீனவர்களை வற்புறுத்துகிறார்கள்? எனவே, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமை அங்கு நிலை நாட்டப்பட வேண்டுமெனில் கச்சத் தீவை மீட்பதே ஒரே வழி. இரு நாடுகளும் ஒப்பந்தம் போட்டுக் கொண்ட காரணத்தினாலேயே அதற்கு எந்தப் புனிதமும் வந்துவிடாது என்பதை இதுநாள்வரை முறிந்து போன எத்தனையோ சர்வதேச ஒப்பந்தங்களை உதாரணமாகக் காட்ட முடியும்.

பெருபாரி பரிமாற்றத்தில் நீதிமன்றம் தலையிட்டதே!

இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச ஒப்பந்தத்தை இறையாண்மை உள்ள எந்த நாடும் அவமதிக்கக் கூடாது என்று கூறும் பத்திரிக்கை தர்மம், மேற்கு வங்க மாநிலத்தின் கடற்பரப்பில் உள்ள பெருபாரித் தீவை அம்மாநில அரசின் ஒப்பதலின்றி வங்கதேசத்திற்கு இந்தியா அளித்த ஒப்பந்தத்தை எதிர்த்து மேற்கு வங்க அரசு உச்ச நீதி மன்றத்தை நாடியதையும், சாதகமான தீர்ப்பைப் பெற்றதையும் மறந்தது ஏனோ?

கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததில் அரசமைப்பு நெறிகளை இந்திய (இந்திரா காந்தி) அரசு காற்றில் பறக்க விட்ட சட்ட விவரங்களையெல்லாம் யாரும் மறந்துவிடவில்லை. நமது நாட்டிற்குச் சொந்தமான ஒரு நிலப் பகுதியை வேறொரு நாட்டிற்குத் தரவேண்டுமெனில் அது தொடர்பான (எல்லை மறுவரையறை செய்யும்) சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் கச்சத் தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதில் அப்படிப்பட்ட வழிமுறை கையாளப்படவில்லை. கச்சத் தீவு இந்தியாவிற்கு (தமிழ்நாட்டிற்கு, அதுவும் குறிப்பாக சேது நாட்டு கடல் எல்லைக்குட்பட்டது என்பதற்கான ஆவணங்கள் இன்றளவும் டெல்லியிடம் உள்ள நிலையில்) சொந்தமானது என்பது ஐயத்திற்கிடமற்ற உண்மையாக இருப்பினும், அது தகராறுக்கு உட்பட்ட பகுதி (disputed territory) என்ற நிலையை டெல்லி எடுத்து, அதனடிப்படையில் அந்நிய நாட்டுடன் நல்லுறவு பேண தாரை வார்த்ததாகக் கூறியுள்ளது. இதெல்லாம் இன்றளவும் உயிரோடிருக்கும் விவரங்கள்தான். இதையெல்லாம் நீதி மன்றத்தில் நிரூபிக்க முடியும். அப்பொழுது தெரியும் இந்திய - இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தத்தின் புனிதம்.

எனவேதான், கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி இந்திய அரசமைப்புப் பிரிவு 32இன் கீழ் உச்ச நீதி மன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்துள்ளார். கச்சத் தீவை மீட்க சட்ட ரீதியான சரியான அணுகுமுறை இதுவேயாகும். எனவே கச்சத் தீவு என்பது ‘முடிந்துவிட்ட விவகாரம்’ என்று யாரும் இதற்கு மேலாவது தமிழனுக்கு காது குத்துவதை நிறுத்திக் கொள்ளட்டும்.

0 பேரு சொன்னாங்க: