Tuesday, July 14, 2009

நஷ்டகணக்கு | பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்றா?

மக்களவைத் தேர்தலின் போது, தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது என்கிற அளவுக்கு மாற்றம் இருந்தது. தேர்தல் முடிந்தது. மின்வெட்டு தொடங்கிவிட்டது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக, அறிவிக்கப்படாத மின்வெட்டு மெல்ல மெல்ல இருள் பரவுவதைப்போல ஆரம்பமாகிவிட்டது.இது முடிவே இல்லாத துயரம் என்பதாகவும், முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் மின்வாரியம் என்பதையும்தான் உணர்த்துகின்றன மின்வாரிய அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி சட்டப்பேரவையில் அளித்த தகவல்கள்.

நடப்பு ஆண்டு வருவாய் ரூ. 19,508 கோடி, செலவு ரூ. 26,612 கோடி, நஷ்டம் ரூ. 7,104 கோடி என்கிறார். அதேநேரத்தில், மின்வாரியத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு, 9,600 பேருக்கு பணிநிரந்தரம் என்றும் அறிவிக்கிறார். மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்காது என்பதால்தான் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம், தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டது என்கிறார். அதே சமயம் மின்வாரியம் தனியார்மயம் இல்லை என்றும் சொல்கிறார்.

தமிழ்நாட்டின் மின்பற்றாக்குறை தற்போது 1232 மெகாவாட். இது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2013-ம் ஆண்டில் 1875 மெகாவாட் அளவுக்கு மின்பற்றாக்குறை உயரும் என்று சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட அரசின் மின்சாரக் கொள்கைக் குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால், ""தமிழ்நாட்டில் 46 சதவீத மின்சாரம் இலவச திட்டங்களுக்குப் போகிறது. 54 சதவீத மின்சாரத்தை மட்டுமே விற்பனை செய்கிறோம்'' என்கிறார் அமைச்சர். அவரது பேச்சிலேயே மின்வாரியத்தின் நஷ்டத்துக்கான காரணங்களும் எரியும் மின்விளக்கைப்போல பளிச் என்று இருக்கிறது.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மின்பற்றாக்குறை அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை என்பதை அரசின் கொள்கை குறிப்பே சொல்கிறது. அப்படியானால் மின்வாரியத்துக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவது உறுதி. இது மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதும் உறுதி.

300 சதவீதம் லாபம் ஈட்டிய கணினி நிறுவனங்கள்கூட, தொழிலில் இலேசான சரிவுக்கே ஆள்குறைப்பு சம்பளக் குறைப்பு செய்கின்றன. ஏர் இந்தியா நிறுவனம் தனது அதிகாரிகளை ஒரு மாத சம்பளத்தை விட்டுக்கொடுக்கும்படி கேட்கிறது. நஷ்டத்தில் இருக்கும் நிறுவனங்கள் இவ்வாறாக ஆள்குறைப்பு சம்பள குறைப்பு பற்றி யோசிக்கும்போது, ஆண்டுக்கு ரூ. 7,200 கோடி நஷ்டமடையும் தமிழ்நாடு மின்வாரியம் மட்டும் 40 சதவீத சம்பள உயர்வு, 9600 பேருக்கு பணி நிரந்தரம் என்பது ஆச்சரியம் தருகிறது.

நஷ்டத்தைப் போக்க, அல்லது குறைக்க வேண்டும் என்றால், செலவுகளைக் குறைக்க வேண்டும். செலவுகளைக் குறைக்கவும் மனமில்லை. வருவாயைப் பெருக்க வேண்டும் என்றால் ஒன்று, கட்டணங்களை உயர்த்தியாக வேண்டும். செயல்திறனை மேம்படுத்த வேண்டும். அல்லது சம்பளக் குறைப்பு செய்ய வேண்டும். அல்லது 46 சதவீத இலவச மின்விநியோக அளவைக் குறைக்க வேண்டும். இதில் எதையும் செய்வதற்கு அரசு தயாராக இல்லை. இதில் எந்த இடத்தில் கை வைத்தாலும், வாக்குவங்கியில் பலத்த அடிவிழும் என்பதால் அரசு தயங்குகிறது.

தமிழ்நாடு மட்டுமன்றி, எல்லா மாநில அரசு மின்வாரியங்களிலும் நஷ்டம் ஏற்பட முக்கியக் காரணம் மின்பகிர்மானத்தில் நடைபெறும் முறைகேடுகள்தான் என்று மத்திய மின்வாரிய ஒழுங்காற்று ஆணையம் கருதுகிறது. அது உண்மையும்கூட. டிரான்ஸ்பார்மர் ஆயில் முதல் அனைத்து தளவாடப் பொருள் வாங்குவதிலும் மாபெரும் ஊழல் நடைபெறுவதால் பகிர்மான மின்இழப்பு (டிரான்ஸ்மிஷன் லாஸ்) அளவுக்கு அதிகமாக இருக்கிறது. மின்திருட்டும் 15 சதவீதம் இருக்கிறது. இந்த மின்திருட்டை, பகிர்மான இழப்பு என்று கணக்கு காட்டும் ஊழலும் நடைபெறவே செய்கிறது - எல்லா மாநிலங்களிலும். ஆகவேதான் மின்பகிர்மானத்தை, முன்பு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததைப்போல, தனியாரிடம் கொடுத்துவிட மின்வாரிய ஒழுங்காற்று ஆணையம் தீர்மானித்தது. இதைச் செய்து முடிக்க அனைத்து மாநிலங்களுக்கும் காலஅவகாசமும் அளித்தது.

"தமிழ்நாடு மின்பகிர்மான வாரியத்தை தனியாக உருவாக்கியிருக்கிறோமே தவிர, தனியார்மயம் செய்யமாட்டோம்'' என்று அமைச்சர் இப்போது சொன்னாலும்கூட, ஒரே நாளில் அதனை தனியாருக்கு கொடுத்துவிட வேண்டிய காலத்தின் கட்டாயத்தை மத்திய அரசு ஏற்படுத்தவே செய்யும்.

ஒரு யூனிட் ரூ.8 முதல் ரூ.11 என்று கூடுதல் விலைகொடுத்து ரூ. 14,000 கோடி அளவுக்கு மின்சாரத்தை வாங்குவதால்தான் இந்த நஷ்டம் என்று அமைச்சர் சொல்கிறார். இந்த அளவுக்கு பற்றாக்குறையும், நெருக்கடியும் இருக்கும்போது ஏன் இலவச மின்சாரத்தின் அளவைக் குறைக்கக்கூடாது? இந்த இலவச மின்சாரம் ஏழை விவசாயிகளை விட, வசதிபடைத்தவர்களுக்கும், அடிப்படைத் தேவையை மீறி பொழுதுபோக்கு கேளிக்கைக்காகவும் வீணாவது ஏற்புடையதா?

நடப்பாண்டில் மின்வாரியத்தின் நஷ்டம் ரூ. 7,200 கோடி என்றால், இந்த நஷ்டத்தை ஈடு செய்யப்போவது தமிழக அரசுதான். தமிழக மக்கள் பணத்தைக் கொண்டுதான் நஷ்டத்தை தமிழக அரசு சரி செய்ய வேண்டும். 54 சதவீத மின்சாரத்துக்கு கட்டணம் செலுத்தும் அந்த பாவப்பட்ட மக்கள் மீதுதான் வாகனங்களுக்கான சாலைப் பாதுகாப்பு வரி என்பனபோன்ற வேறு தலைப்புகளில் சுமையாக வந்து விழப்போகிறது.

46 சதவீத மின்சாரத்தை இலவசமாகக் கொடுத்து, அந்த நஷ்டத்தை அரசு ஏற்கும் என்றால், மீதமுள்ள 54 சதவீத மின்சாரத்தையும் இலவசமாகக் கொடுத்தால் என்ன? என்று கேட்பது பாமரத்தனமாக இருக்கக்கூடும் என்றாலும், கேட்கத் தோன்றுகிறது. இருளோடு இருள் கலந்தாற்போல, நஷ்டத்தோடு இன்னும் கொஞ்சம் நஷ்டம். அவ்வளவுதானே!

எல்லா குடும்ப அட்டைகளுக்கும் இலவச கலர் டிவி எல்லா குடும்ப அட்டைகளுக்கும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி. இதேபோல, எல்லா குடும்பங்களுக்கும் இலவச மின்சாரம் என்றால் இன்பமாக இருக்காதா? அட, எல்லா குடும்பங்களுக்கும் "முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம்' என்றாவது அறிவிக்கலாமே!

1 பேரு சொன்னாங்க:

said...

//பகிர்மான மின்இழப்பு (டிரான்ஸ்மிஷன் லாஸ்) //
?????????

பகிர்மான மின்இழப்பு - distribution loss?

டிரான்ஸ்மிஷன் லாஸ்- tholai kadaththu மின்இழப்பு?