மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவதி ஸ்டாலினைச் தினமணி நாளிதழார் சந்தித்து உரையாடியதிலிருந்து...
உங்கள் ஊர், குடும்பம் பற்றி...
என் சொந்த ஊர் நாகை மாவட்டம், திருவெண்காடு. அப்பா ஜெயராமன், ஓய்வு பெற்ற ஆசிரியர். அம்மா சுசீலா, இல்லத்தரசி. எனக்கு ஒரு சகோதரரும், இரண்டு சகோதரிகளும் உண்டு.
உங்கள் திருமணம் பற்றி?
எங்கள் திருமணம் பெரியவர்களால், பார்த்து முடிவு செய்யப்பட்டது. என்னைப் பெண் பார்க்க காரணமாக இருந்தவர் முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறன்.
அரசியல் பின்னணி உண்டா?
பின்னணியெல்லாம் கிடையாது. ஆனால் என் அப்பா, குடும்பத்தார் அனைவருக்கும் அந்தக் காலத்திலேயே திராவிட கழகம், கலைஞர் என்றால் மிகவும் பிடிக்கும்.
"துர்காவதி', "சாந்தா'வாக மாறிய ரகசியம் என்ன?
நான் எப்பொழுதும் துர்காவதி தான். என் மாமனார்தான் என்னை சாந்தா என அழைப்பார். என் மாமனார், மாமியார் அவர்களின் வட்டத்துக்குதான் நான் சாந்தா. மற்றபடி, கையெழுத்து உள்ளிட்ட அனைத்திலும் துர்காவதி என்ற பெயரைத்தான் உபயோகிக்கிறேன். என் கணவர் இன்றளவும் என்னை துர்கா என்றுதான் அழைக்கிறார்.
கடவுள் பக்தி உண்டா?
ஆம். நான் தவறாமல் கோயில்களுக்குச் செல்வதுண்டு. வெள்ளிக்கிழமை பிறந்ததினால், என் ஊரில் உள்ள அம்மனின் பெயர்தான் எனக்கு வைக்கப்பட்டது. இந்த விஷயத்தில் யாரும் என்னை எதுவும் சொல்வதில்லை. என்னைத் தவிர என் கணவர், மகன், மகள் என யாரும் கோயில்களுக்கு செல்வது கிடையாது. வீட்டில் கூட ஒரு சிறிய பூஜை அறை உள்ளது!
ஸ்டாலின் அவர்களை ஒரு முறை உங்கள் குலதெய்வம் கோயிலுக்கு கூட்டிச் சென்றதாக செய்திகள் வந்ததே?
ஆம். நாங்கள் ஒரு முறை அந்த வழியாகச் செல்லும்போது, நான் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டேன், அப்போது அங்கிருந்த பூசாரி, என் கணவரை அழைத்து வரும்படி வற்புறுத்தினார். அவரின் வற்புறுத்தலின் பேரிலேயே, என் கணவரை வரச் சொன்னேன். அவரும் அங்கு கொடுத்த மரியாதைகளை ஏற்றுக் கொண்டார்.
தொண்டர்கள் யார் அழைத்தாலும், மறுக்காமல் கோயிலுக்குச் சென்று, அங்கு வழங்கப்படும் மரியாதையை ஏற்றுக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார் என் கணவர்.
உங்களுக்குத் திருமணம் முடிந்த 5 மாதத்திலேயே மிசாவில் உங்கள் கணவர் கைது செய்யப்பட்டார். அப்போது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது?
மிகவும் கவலையடைந்தேன். அப்போது கூட்டுக் குடும்பமாக இருந்ததால் எனக்கு ஆறுதல் கூற நிறையப் பேர் இருந்தனர்.
என் மாமியாரிடம் அப்போது கழகத் தொண்டர்களின் வீட்டுப் பெண்களில் சிலர் அவர்களின் கணவர்களை மிசாவில் கைது செய்யப்பட்டுவிட்டதைக் கூறி அழுதால், திருமணமாகி 5 மாதங்கள் ஆன என் மருமகளைப் பாருங்கள்... அவள் எவ்வளவு தைரியமாக இருக்கிறாள் என்று என்னை எடுத்துக்காட்டாக கூறி, வந்தவர்களைச் சமாதானப்படுத்துவார்.
சட்டசபையில் ஸ்டாலின் அவர்களின் உரையைக் கேட்கும்போது உங்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்?
என்ன திட்டங்கள் அறிவிக்கப் போகிறார் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.
உங்களிடம் புதிய திட்டங்கள் குறித்து கலந்து ஆலோசிப்பது உண்டா?
இல்லை. வீட்டில் அரசியல் இல்லை. நான் என்ன திட்டங்கள் அறிவிக்கப் போகிறீர்கள் எனக் கேட்டாலும், நாளைக்கு நேரில் வந்து பார் அல்லது செய்தித்தாளைப் பார்த்து தெரிந்து கொள் எனக் கூறி விடுவார்.
பெண்களுக்கு ஏதாவது திட்டங்கள் அறிவிக்க பரிந்துரைப்பீர்களா?
நான் பரிந்துரைக்காமலேயே அவர் நிறைய செய்தும், செய்து கொண்டும் இருக்கிறார். யாராவது என்னை வெளியிலோ அல்லது வீட்டிலோ சந்தித்து கோரிக்கைகள் கொடுத்தால், அதை உரிய நேரத்தில் அவரிடம் சேர்த்துவிடுவேன். எதையும் தவற விடமாட்டேன்.
திமுகவின் அனைத்து மாநாடுகளிலும் உங்களைப் பார்க்க முடிகிறதே?
ஆம். எல்லா மாநாடுகளிலும் தவறாமல் கலந்து கொள்வேன். கடலூரில் நடந்த மகளிர் மாநாட்டில் மட்டும் கலந்து கொள்ளவில்லை. காரணம் நாங்கள் அப்போது உடல் பரிசோதனைக்காக லண்டன் சென்றிருந்தோம்.
மாநாடு என்றில்லாமல், மனிதச் சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களில் வீட்டில் உள்ள பெண்கள் கலந்து கொள்வதுண்டு. ஒரு முறை உண்ணாவிரதத்தில் கூட கலந்து கொண்டிருக்கிறேன்.
கணவர் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டவுடன் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றினீர்களாமே?
இது எங்களின் குடும்ப வழக்கம். தஞ்சாவூர் பக்கத்தில் வீட்டிற்கு வெளிமாடத்திலிருக்கும் விளக்கை ஏற்றியபின்தான் வீட்டிற்குள் விளக்கேற்றுவார்கள். எங்கள் வீட்டு வாசலில் எப்போதுமே ஒரு காமாட்சி விளக்கு எரிந்து கொண்டிருக்கும். அதை தினமும் ஏற்றுவது வழக்கம். அன்றைக்குதான் ஏற்றினேன் என்று கூறுவது உண்மையல்ல.
கணவரைப் பார்த்து வியந்த குணம் எது?
கடின உழைப்பு. வேலை என்று வந்து விட்டால் உணவு,
உறக்கம் இல்லாமல் முழு மூச்சாக உழைப்பார். ஆட்சியில் இல்லாத சமயங்களிலும், கட்சி வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.
மருமகளாகவும், மாமியாராகவும் உங்கள் பங்கு என்ன?
முந்தைய கால கட்டங்களைப் போல தற்போது இல்லை. அப்போதெல்லாம் ஏதாவது செய்தாலும், எங்காவது சென்றாலும், மாமியாரிடம் சொல்லிவிட்டு, அனுமதி வாங்கித்தான் செல்ல வேண்டும். ஒரு பயம் கலந்த மரியாதை இருக்கும். இப்போது அந்த இறுக்கம் சற்று தளர்ந்து இருவரும் நண்பர்கள் போல பழகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உங்கள் மாமியாரிடம் உங்களுக்குப் பிடித்தது?
அவரின் எளிமை!
கணவன், மனைவி இருவரின் இளமையின் ரகசியம் என்ன?
சாப்பாடு விஷயத்தில் இருவருமே கவனமாக இருப்போம். கணவர் காலையில் நடைபயிற்சி, யோகா மேற்கொள்வார். நான் மாலை ஒரு மணி நேரம் யோகா பயிற்சி செய்வேன்.
சினிமா, சீரியல்களில் ஆர்வம் உண்டா?
நல்ல படங்கள் என்றால் தியேட்டரில் சென்று பார்ப்போம். கடைசியாக "யாவரும் நலம்' பார்த்தோம். சீரியல்களில் ஆர்வம் கிடையாது. என் கணவர் நடித்த சீரியல்களைக் கூட நான் சரியாகப் பார்த்தது கிடையாது. நானே சீரியல்களில் நடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
என் மகன் உதயநிதி ஸ்டாலின் படம் தயாரிப்பதில் கூட எனக்கு அவ்வளவாக விருப்பமில்லைதான். இருப்பினும் மகனின் விருப்பத்துக்கு தடை போடுவதில்லை.
சமையலில் நீங்கள் எப்படி?
வேறு யாரையும் சமையல் அறைக்குள் அனுமதிப்பதில்லை. நானே நின்று செய்தால்தான் எனக்கு திருப்தி. நான் வைக்கும் மீன் குழம்பு கணவருக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். வேறு யாராவது மீன் குழம்பு செய்தாலும் அதை உடனே கண்டு பிடித்துவிடுவார்கள்.
இனி... உங்கள் கணவர் அடைய வேண்டிய இலக்கு என எதைக் கூறுவீர்கள்?
மக்களின் எதிர்பார்ப்பை குறைவில்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும். அவர் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் உள்ளது.
ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்தது?
அவரின் தைரியம்! தவறோ, சரியோ தைரியமாய் ஒரே ஆளாய் முடிவெடுப்பது பிடிக்கும்.
மனைவி, மருமகள், மாமியார், பாட்டி என நீங்கள் ஏற்றுள்ள நான்கு கதாபாத்திரங்களில் உங்களுக்குப் பிடித்தது?
பாட்டிதான். நமது குழந்தைகளைப் பார்ப்பதே சந்தோஷம். குழந்தைகளின் குழந்தையைப் பார்ப்பது அதைவிடச் சந்தோஷம். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். தற்போது பாட்டிதான்!
நன்றி: தினமணி
Subscribe to:
Post Comments (Atom)
4 பேரு சொன்னாங்க:
//ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். தற்போது பாட்டிதான்! //
நல்ல பகிர்வு
தினமணி பத்திரிகை படித்து எவ்வளவு நாட்கள் ஆயிற்று? நினைவூட்டியதற்கு நன்றி.
மற்று கருத்துடையவர்கள் புகழ்வதில் தான் உண்மையான வெற்றி இருக்கிறது.
அதுவும் ஜெவிடம் இருக்கும் ஒரே நல்ல விஷயத் தை சொன்னவிதம் பிடித்த்திருந்தது...
உங்களுக்கான முதல் பின்னூட்டம். தொடர்கிறேன், நிறைய எழுதுதுங்கள்...
பிரபாகர்...
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
உண்மைகளைத் துணிவுடன் சொல்லியிருப்பது வரவேற்கத் தக்கது.
நேரில் பழகிய நண்பர்களும்
பல நல்லவற்றைச் சொல்லுகின்றனர்.
கோவில் மூட நம்பிக்கைகள் மனத்துணிவின்மையைக் காட்டுகின்றன.
இன்னும் நாட்கள்,பேரக் குழந்தைகள் மூலம் தன்னம்பிக்கையூட்டலாம்.
மூட நம்பிக்கைகளையாவது குறைத்து
வீட்டிலேயே வணங்கிக் கோவில்களைத் தவிர்க்கலாம்.
மனிதநேயத்தில் தான் உண்மையான மகிழ்வு என்பதை உணரவைக்கும் முதிர்ச்சி விரைவில் வந்துவிடும்.
Post a Comment