Wednesday, July 29, 2009

காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங்காலுந்தானே மிச்சம்!

அன்றும் அடைமழை, ஒரு வாரமாக! பெண்ணையாறும், கண்மாயும் நிரம்பி கழனி கொல்லையெல்லாம் தண்ணீரால் நிரம்பி வழிந்தது.

"என்னடா சனியன், ஒண்ணு பேஞ்சு கெடுக்குது; இல்லன்னா காஞ்சு கெடுக்குது”

மயில்சாமி வீட்டுத் திண்ணையில் மழைக்கு ஒதுங்கிய பெரிசுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.

தென்பெண்ணையின் தென்கோடி நன்செய் பூமியில் போன மழைக்கு உழுது விதைக்கப்பட்டு இந்த மழைக்கு அறுவடைக்குத் தயாராகக் காத்துக்கிடந்த அரைக்காணி நிலம், தண்ணீரால் சூழ்ந்து கிடந்தது. வெள்ளையம்மாளின் மொத்த உழைப்புக்கு ஆண்டவன் கொடுத்த நெல் பரிசை வீடு கொண்டு வந்து சேர்க்க முடியாமல் நான்கைந்து நாட்களாக தவியாய் தவிக்கிறாள்.

"ஆளாளுக்கு ஆறுதல் சொல்லியும் தேத்த முடியல இந்த வெள்ளையம்மாள” பாட்டிகளும், கிழவர்களும் கூட பேசிக்கொண்டிருந்தனர். "அழாதேம்மா அந்த ஆண்டவன் நம்மள காப்பாத்துவான்” மகள் வடிவு சொன்னதும்தான் சற்று முகம் கொடுத்து பேசினாள் மற்றவர்களிடம்.

வெள்ளையம்மாள் கடின உழைப்பின் மறுபெயர். காட்டாற்று வெள்ளம்போல் கஷ்டங்கள் கரைபுரண்டு வந்தாலும் கவலைப்படாத நெஞ்சுறுதி. அது அவளது அப்பன் மயில்சாமியிடம் இருந்து வந்தது. இத்தனையும் இருந்ததால்தான் ஒரு சோடி வெள்ளாடும், ஒற்றைக் காறாம் பசுவையும் தகப்பன் கொடுத்த சீதனமாய் வைத்துக்கொண்டு சின்னசாமிக்கு மனைவியாகி இந்தக் கரிசல் பூமியில் காலடி வைத்து வைராக்கியத்தோடு உழைத்து அரைக்காணி நிலம் வாங்கி ஊர் மெச்சும்படி குடியானாள். அப்படிப்பட்ட நெஞ்சுரம் கொண்டவள் தண்ணீரில் கிடக்கும் விளைச்சலைக் கண்டு வெலவெலத்துப் போனாள்.

அடை மழையின் அடிப்படைக்குக் காரணமான கருத்துத் திரண்ட மேகங்கள் எல்லாம் அன்று இரவோடு இரவாகக் காணாமல் போயின. காலைக் கதிரவன் ஒளிக்கீற்றை பூமிக்கு அனுப்பியிருந்தான். புல், பூண்டில் இருந்து தழைச்செடி கொடிகளெல்லாம் மழைநீரால் சிலிர்த்துப் போன காலம் மாறிப்போய் வெய்யிலில் சற்றே உலர்த்திக் கொண்டிருந்தன.

"அம்மா...அம்மா... இங்கே வந்து பாறேன். சூரியன் வந்துடுத்தும்மா மழை நின்னுப்போச்சி” சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஆடினாள் வடிவு.

"அட ஆமான்டீ நெசந்தான்! வடிவு, சீக்கிரம் போயி வடமலை அண்ணனைக் கூட்டியா, நானும் போயி கண்ணாயிரம் அண்ணனைக் கூட்டியாறேன்” என்று அவசரமாக மேலத் தெருவுக்குக் கிளம்பினாள்.

வடமலையண்ணனிடமும், கண்ணாயிரம் அண்ணனிடமும் வெள்ளையம்மாள் "அண்ணே நீங்க ரெண்டு பேரும் முன்னாடி போயி கம்மாவுக்கு கீழ்பக்கமாக வாய்க்கா தோண்டி தேங்கியிருக்குற தண்ணிய தொறந்துவுடுங்க” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது ஊர்க்காரர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.

"அட ஆமாய்யா நல்லா வெயில் காட்டுது வாய்க்காயில் தண்ணி வடிய ஆரம்பிச்சுட்டா போதும் ஆளும் பேருமா சேர்ந்து அறுத்துப் போட்டுடலாம்” என்றனர். "அட இன்னிக்கு ஒரு நாளைக்கு என் வேல கெட்டாலும் பரவால்ல” என்று கூட்டத்தில் படபடத்து சொன்னான் பாண்டி. ஒட்டுமொத்த ஊர்சனமும் வெள்ளையம்மாளுக்கு ஒத்தாசையாக இருந்தனர். இதற்கிடையே பெரிசு பெரியகருப்பு இந்த நேரத்துல அந்தப் பாவிப்பய சின்னச்சாமி இல்லியேய்யா” என்றதும் வடமலைக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. "யோவ் பெரிசு வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்கமாட்டே வெள்ளையம்மாளே வெலவெலத்து போயிருக்கு” எந்த நேரத்துல என்ன பேசணும்னு உனக்குத் தெரியுதா என்றான். அதற்குப் பெரிசு "நான் சொல்லுறதுல என்னடா தப்பு. இந்த சீமையில இல்லாத வேலையா மெட்ராசுல கெடக்கு. பாவிப்பய போயி ரெண்டு வாரமாச்சு, ஒத்த புள்ளய வச்சுக்கிட்டு ஒண்டியா வயல அறுக்கணும்... அடிக்கணும்னு வெள்ளையம்மாளுக்கு எவ்ளோ வேல, நெனச்சுப் பாத்தானாய்யா” என்று வேகமாகப் பேசினார். பதிலுக்கு கண்ணாயிரம் "யோவ் பெரிசு... நீ போயி அறுத்துப் போட்டிடுவியாக்கும்” என்றான் நக்கலாக.

"ஏண்டா வரமாட்டேனா... வெள்ளையம்மாளுக்காக நானும் வயலுக்கு வாரேண்டா... ஆளோட ஆளா நின்னு அரிபட்டம் போறன்டா” என்றதும் ஒட்டு மொத்த கூட்டமும் திக்குமுக்காடிற்று.

"சரிப்பா, பேசிக்கிட்டே இருந்தா? பொழுது போவுதுல்ல... வெள்ளையம்மா, நீ போயி செட்டியார் கடையில எல்லா ஆளுக்கும் டீ, பன்னு வாங்கியாந்துடு. நானும் வடமலையும் முன்னாடி போயி காவா தோண்டி தண்ணிய வடிய விடுறோம்” என்று சொல்லி மண் வெட்டியோடு சென்றான் கண்ணாயிரம்.

செட்டியார் கடையில் இருந்து டீயோடும், பன்னோடும், ஓட்டமும் நடையுமாக திரும்பி வந்தாள் வெள்ளையம்மா. குலசாமி அய்யனாரப்பனை வேண்டிக்கொண்டாள். "வெளஞ்ச நெல்லு வீடு வந்து சேர்ந்தா பூ வச்சு பொங்க வச்சு படைக்கிறேன் சாமி. என்ன காப்பாத்து” என்று மனசில் சொல்லிக்கொண்டே வயலை அடைந்தாள். "எல்லாரும் வாங்க மொதல்ல டீயைக் குடிங்க... பன்னு தின்னுங்க” என்றாள். எல்லோரும் கரைக்கு வந்து டீயையும் பன்னையும் சுவைத்தனர். வயலில் மேவாய் தண்ணீர் விறுவிறுவென்று கீழ்நோக்கி வடிய ஆரம்பித்தது.

"ஏன்டா.. ஆளாளுக்கு மோதி அறுக்குற வழிய பாருங்க. சும்மா சொனங்கினா வேலைக்காவாது” என்று உரத்திச் சொன்னான் கண்ணாயிரம்.

"அவன் சொல்றதும் சரிதான். டேய் வடமலை, பெரிய அரிபட்டமா ஈசானி மூலைய பாத்து நீ போ. டேய் காத்தான் அதேமாரி நீயும் பெரிய அரிபட்டமா புடிங்க” என்றார் பெரிசு.

வடமலையும், பாண்டியும், கண்ணாயிரமும் காத்தானும் பெரிய பெரிய அரிபட்டமாக அறுத்துக்கொண்டு போனார்கள். அதைப் பார்த்து சந்தோஷப்பட்டு தானும் கையில் கொண்டு வந்த கருக்கரிவாளோடு வயலில் இறங்கி தனக்கென்று சின்னதாய் ஒரு அரிபட்டம் பிடித்து வெள்ளையம்மாள் அறுத்துச் சென்றாள். மற்ற எல்லோரும் அவளைப் போலவே சின்னச் சின்ன அரிபட்டம் பிடிக்க அறுவடை ஒரு வழியாக அனல் பறந்தது.

அனைவருக்கும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க வியர்வைக் கொத்துக் கொத்தாய் கொட்டித் தீர்த்தது. முக்கால்வாசி வயல் அறுப்பு முடியும் தருவாய் வந்தது. "ஏம்மா வெள்ளையம்மா நீ அறுத்தது போதும். அறுத்த கதிரை அடிக்க களத்துமேட்டுல களம்பாரு. அரசமரத்தடிய கூட்டி சுத்தம் பண்ணு. களம், கல்லு, மண்ணு இல்லாம சுத்தமாக இருக்கணும்” என்றார் பெரிசு பெரிய கருப்பு. "சரிப்பா” என்று சொல்லிக்கொண்டு மகள் வடிவை அழைத்து, "யம்மா வடிவு நீ போயி ரெண்டு முறம், ரெண்டு கூடை, சாக்கு எல்லாம் வீட்டில் இருந்து சீக்கிரம் எடுத்தா” என்று அனுப்பி வைத்தாள்.

"பெரிசு களம் மண்ணு பெரளாம சும்மா கட்டாந்தரையாட்டம் இருந்தாதான் அடிக்கும்போது வேலை குறையும். நீயும் அறுத்தது போதும் வெள்ளையம்மாளுக்கு ஒத்தாசையா வேலைய பாரு” என்றான் பாண்டி. "அதுவும் சரிடா நானும் போறேன்” என்று சொல்லி களம் சுத்தம் செய்ய வெள்ளையம்மாளோடு கிளம்பினார் பெரிசு.

சிட்டாகப் பறந்து சென்று சாக்கு, கூடை, முறங்களோடு அரசமரத்தடிக்கு வந்தாள் வடிவு. வெய்யில் காட்டக் காட்ட உலர்ந்த மண்தரை சற்றே இறுக ஆரம்பித்தது. கோரையும், பொக்கையுமாய் இருந்ததை பெரிசு சரிசெய்ய ஆரம்பித்தார். "வெள்ளையம்மா மொதல்ல மேற்கால பக்கமாய் கூட்ட ஆரம்பிச்சுடு” என்றதும் மேற்கால பக்கமிருந்து கூட்ட ஆரம்பித்து கீழ் பக்கமாய் முடித்தாள் வெள்ளையம்மா.

"களம் இன்னும் கொஞ்சம் காயணும். வெய்யில் படபட சரியாயிடும்” என்றார் பெரிசு. ஒரு வழியாக அனல் பறந்து அறுவடை முடிவுக்கு வந்தது. முகத்தில் வழிந்த வியர்வையைத் தலையில் கட்டியிருந்த துண்டால் துடைத்துக் கொண்டிருந்தனர். வானத்தை அண்ணாந்து பார்த்து "இன்னைக்கு பகல்ல மழை இருக்காது. மப்பு மந்தாரம் இல்லாம சுத்தமா இருக்குது” என்றான் காத்தான். அதற்கு வடமலை "ஏய் வாய வச்சுக்கிட்டு சும்மா இரு. நீ சொன்னாலே மழை வரும்” என்றான். "ஏம்பா நேரம் போய்க்கிட்டே இருக்கு ஆளாளுக்குப் போயி கொஞ்சம் பசி ஆறிட்டு வந்துவிட்டோம்னா ஆவ வேண்டிய வேலைய பாக்கலாம்ல” சற்று படபடப்போடு சொன்னான் பாண்டி. "அவன் சொல்றதும் சரிதான்” என்று சொல்லி அனைவரும் வயலிலிருந்து கிளம்பினார்கள்.

களத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்த வெள்ளையம்மாளைப் பார்த்து அனைவரும் "வெள்ளையம்மா அறுவடை முடிஞ்சுது. இனி அடிச்சி களத்த வேண்டியதுதான். எதுக்கும் அறுப்பு வயல நீயும் ஒருமுறை பாரு. சுத்தமா அறுத்துருக்கு. இன்னும் சொல்லப் போனா நாலுவிரல் அளவுலதான் வைக்கோல் அளவிருக்கு” என்றதும் சந்தோஷம் தலை தெறிக்க வேகமாக ஓடினாள் வயலைப் பார்க்க, விதைச்ச அழகும், பயிரான அழகும், கதிர் வந்த அழகும், கதிர் முற்றி விளைஞ்ச அழகும், இப்போது அறுத்து அரிக்கடையாய் கிடந்த அழகையும் பார்க்கும்போது அசந்துபோய் நின்றாள்.

வெள்ளையம்மாவின் வயல் அறுவடையைக் கேள்விப்பட்டு பக்கத்து ஊரான அரசூர் அரசினர் விதைப் பண்ணையில் இருந்து வேளாண்மை அதிகாரி இராசப்பன் தன் உதவியாளரோடு அங்கு வந்து சேர்ந்தார். "என்ன வெள்ளையம்மா ஒரு வழியா அறுவடை முடிஞ்சிது. இனி அடிச்சி களத்தில் அளக்க வேண்டியதுதானே” என்றார். அதற்கு வெள்ளையம்மா "ஆமாங்கய்யா எல்லாம் நீங்கள் சொன்ன யோசனைதான். நீங்க மட்டும் அன்னைக்குச் சுத்தமான, தரமான விதை நெல் மூட்டைய குடுக்காம இருந்திருந்தா இன்னைக்கு எந்த ஒரு கலப்பு நெல்லும் இல்லாம சுத்தமாக என்னால விளைய வைக்க முடியாதுங்க” என்றாள்.

"அட, எல்லாம் உன்னோட உழைப்பும், திறமையும்தான்” என்றார். "சரி வெள்ளையம்மா வேலைய பாரு. எனக்கு பக்கத்து ஊருல ஒரு வேலையிருக்கு. முடிச்சிட்டு வரும்போது களத்துக்கு வாரேன். எத்தன மூட்டை காணுங்கிறதுதான் என்னோட ஆர்வம்” என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார்.

ஒரு வழியாகச் சாப்பிட சென்ற ஆட்கள் அனைவரும் சாப்பாடு முடிந்து அரசமரத்தடி களத்தில் ஆஜரானார்கள். வெள்ளையம்மாளுக்கும் வடிவு சாப்பாடு கொண்டு வந்துவிட்டாள்.

"சூரியன் உச்சிய நெருங்குது. கீழ எறங்கிறதுக்குள்ள வேலைய முடிக்கணும்” பெரிசு எல்லோரையும் முடுக்கிவிட்டார். "ஏன்பா பாண்டி நீ ரெண்டு பொம்பள ஆள கூட்டிக்கிட்டுப் போய் கட்டு கட்டிவை. இங்கவாடா இசக்கி, நீயும் காத்தானும் களத்துல நின்னு கட்டுக்கட்டா கதிர அடியுங்க” என்றார் பெரிசு. அவர் சொல்லாமலே வடமலையும், கண்ணாயிரமும் ”நாங்க ரெண்டு பேரும் கட்டுக்கலக்குறோம்” என்றனர். ஒத்தாசைக்கு கூடமாட இடையில நின்னு தூக்குவதற்கு மாடசாமிய வச்சுக்கிறோம் என்றனர். விறுவிறுவென்று கட்டுகள் களத்திற்கு வந்துகொண்டிருந்தன. கட்டுகளை தேங்கவிடாமல் காத்தானும், இசக்கியும் அடித்துப் போட்டனர். "பெருசு பத்துக்கட்டு அடிச்சதும் முறத்தால அள்ளி விசிறி சுத்தம் பண்ணிக்கிட்டேயிரு” என்றான் காத்தான்.

சாப்பிட்டு முடித்த கையோடு சாக்குகளை கொண்டு வந்து சேர்த்தாள் வெள்ளையம்மா. வடிவும் சும்மா இருக்கவில்லை. அவளும் தன் பங்கிற்கு கட்டு கட்டும்போது இறையும் கதிர்களை பொறுக்கிப் போட்டு கொண்டிருந்தாள்.

கிட்டத்தட்ட பாதிக்குமேல் அடித்து முடிக்கப்பட்ட நிலையில் "பெரிசிடம் ரெண்டு மரக்கா வைத்துவிடுவோம். அப்பதான் அளந்துகட்ட சுலுவா இருக்கும்” என்று இசக்கி சொன்னான். அதுவும் நல்ல யோசனைதான் என்று சொல்லி ஒரு களம் தூற்றி முடித்து இரண்டாவது களம் நெல்லை வைத்து தூற்ற ஆரம்பித்தார் பெரிசு.

"வெள்ளையம்மா, நீ பட்ட கஷ்டமெல்லாம் நெல்லா கொட்டிக்கிடக்கு” என்று சொன்னான் காத்தான். இப்படி மாறிமாறி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கும்போது இலேசான கருமேகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வட்டமடித்துக் கொண்டு சூரியனை மறைத்துச் சென்று கொண்டிருந்தது. "மானம் பெரளுதுடா இசக்கி, வேலைய சுருக்கா முடிக்கணும். அடிச்ச நெல்ல அளந்து கட்டி வீடு கொண்டு போய் சேக்கணும். பேச்சைக் குறைச்சிட்டு ஆளாளுக்கு வேலைய பாருங்க” என எச்சரித்தார் பெரிசு. பெரிசு உஷார்படுத்தியதும் களத்தில் இருந்து வாய்வழிச் செய்தி வயலில் கட்டு கட்டுபவர்களுக்கும் கலக்குபவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு ஒட்டுமொத்த வேலையும் முடுக்கிவிடப்பட்டது.

"ஏண்டா காத்தான், ஒரு களம் நெல்ல சாக்குல அளந்துடுவோம்” என்றார் பெரிசு. "ஆமா... ஆமா அதுவும் சரிதான். ஏன் தாயி வெள்ளையம்மா சாக்கையெல்லாம் கொண்டா நெல்ல அளப்போம்” என்ற காத்தான் சொன்னதும் சாக்குகளைக் கொண்டு வந்து கொடுத்தாள். மரக்காலை வெள்ளையம்மாவிடம் கொடுத்து "முதல்ல தண்ணி பங்குக்கு கோயில் குத்தகை நெல்ல அளந்துபோடு. அப்புறமா எல்லாத்தையும் நான் அளந்துபோடுறேன்” என்றான். அதுபோலவே ஒரு மரக்கால் நெல்ல வெள்ளையம்மாள் அளந்து விட்ட பின்பு அளக்கும் வேலையை விறுவிறுப்பாக தொடங்கினான் காத்தான். கிட்டத்தட்ட கட்டு கட்டும் வேலை முடிந்து வயலில் இருந்து ஆட்கள் எல்லோரும் களத்துக்கு வந்துவிட்டனர். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சுழன்று கொண்டிருந்த கருமேகங்கள் ஒன்று திரண்டதைப் பார்த்ததும் அனைவருக்கும் அடிவயிற்றில் சொரசொரத்தது.

"ஈசானி மூலையில மப்பு கட்டி கருமேகம் திரளுது அப்படியும் மழைக்கு தப்பாது” பெரிசு எல்லோரையும் எச்சரித்தார். "ஏ வடமலை இரண்டாவது களத்த நாம அளப்போம்” என்று கண்ணாயிரமும் வேகமானான். முதல் களத்தை அளந்து முடித்து முப்பது மூட்டை கண்டிருக்கு என்று காத்தான் சொன்னதும் வெள்ளையம்மாளுக்குச் சந்தோஷம் களைகட்டியது. வடிவை அழைத்து "யம்மா ஆளுங்க எல்லாம் களைச்சி போற நேரம். செட்டியார் கடைக்குப் போயி எல்லாருக்கும் டீயும், சுண்டலும் அம்மா வாங்கி வர சொல்லுச்சுன்னு சொல்லி சீக்கிரம் வாங்கி வா” என்று அனுப்பி வைத்தாள். ஈசான்யம் கருத்ததின் விளைவாக இலேசான குளிர் காற்று வீசத் தொடங்கியது. ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த குப்பை கூளங்கள் காற்றில் பறக்கத் தொடங்கின. மழை வந்துவிடுமோ என்று எல்லோரும் பயந்துபோய் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர். மாட்டு வண்டிய ஓட்டிவர சென்ற மாடசாமி விறுவிறுவென்று வண்டியை கொண்டு வந்து சேர்த்தான். கண்ணாயிரமும், வடமலையும் மளமளவென்று மூட்டைகளை வண்டியில் ஏற்றினார்கள். இலேசாக வீசிய குளிர்காற்று சற்று வேகத்தைக் கூட்டியது. காத்தானும், பாண்டியும் இரண்டாவது களத்தின் மூட்டைகளை வண்டியில் ஏற்றத் தொடங்கினார்கள். வெள்ளையம்மாளைப் பார்த்து "ரெண்டாவது களத்துல இருபது மூட்டை அளந்திருக்கு ஆக மொத்தம் அம்பது மூட்டை” என்று சொல்லியதும் வெள்ளையம்மாள் பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஒட்டுமொத்த மூட்டைகளும் வண்டியில் ஏற்றப்பட்டன. "வெள்ளையம்மா, மழைக்கு முன்னாடி வீடு போயி சேருவோம். கூலியெல்லாம் வீடு வந்த பிறகு வாங்கிக்கிறோம்” பெரிசு சொன்னார். கூடை முறங்களை எல்லாம் வண்டியில் வைத்துவிட்டு கிளம்ப தயாராகும்போது டீ, சுண்டலோடு வந்து சேர்ந்தாள் வடிவு. அந்தச் சுண்டலையும் சுவைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள். வெள்ளையம்மாளைப் பார்த்து பெரிசு சொன்னார். "என்னோட நாற்பது வருஷ விவசாய வாழ்க்கையில அரைக்காணிக்கு அம்பது மூட்டை நெல்லு வெளஞ்சி நான் பார்த்ததில்லை. உன்னோட உழைப்புக்கும், நீ பட்ட கஷ்டத்துக்கும் அந்த ஆண்டவன் கொடுத்தது” என்று சொன்னார். சற்று நேரத்துக்கெல்லாம் விவசாய அதிகாரியும் அவரது உதவியாளரும் வந்தனர். அவர்களிடம் பெரிசு சொன்னார். "ஐயா அரைக்காணில அம்பது மூட்டை நெல் விளைஞ்சிருக்கு” என்றார். அவரிடம் அதிகாரி ஆச்சரியத்துடன் பேசினார். நம்ம ஒண்றியத்துல இருபது ஊர்களிலும் இதுபோன்ற விளைச்சல யாருமே பார்த்ததில்லை. இதுக்காக வெள்ளையம்மாளுக்குப் பாராட்டும் பரிசும் மேல் அதிகாரிக்கிட்ட சொல்லி ஏற்பாடு செய்வதாய் சொல்லி வெள்ளையம்மாளுக்கு பாராட்டு தெரிவித்து கிளம்பினார்.

1 பேரு சொன்னாங்க:

said...

நல்லாயிருக்கு, தொடர்ந்து எழுதுங்க