Saturday, July 18, 2009

அச்சமுண்டு! அச்சமுண்டு! - அச்சமின்றிப் பார்க்கலாம் | திரைவிமர்சனம்

முற்றிலும் மாறுபட்ட ஒரு படம். முழுக்க முழுக்க அமெரிக்காவில் படம் பிடிக்கப்பட்ட படம். அமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸி நகரில் வசித்து வருகிறார் கணினிப் பொறியாளாரான பிரசன்னா; அவரின் மனைவி சினேகா இவர்களுக்கு அக்சயா என்ற எட்டு வயதுப் பெண் குழந்தையும் உண்டு.

இவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு வண்ணப் பூச்சு (பெயின்ட்) அடிப்பதற்காக அமெரிக்க வன்ணம் தீட்டும் நபரை அழைக்கிறார்கள். அவரும் வண்ணம் தீட்ட ஒப்புக்கொள்கிறார். அவ்வாறு வரும் அந்த நபர், சிறுவர்களைக் கடத்திக் கற்பழித்துக் கொல்லும் சைக்கோ குணம் படைத்தவன். இவனது சைக்கோ பார்வை, சினேகா - பிரசன்னா இவர்களின் எட்டு வயதுப் பெண் குழந்தையின் மீதும் விழுகிறது. பிறகு அக்குழந்தையைக் கடத்த அவன் போடும் திட்டம் என்ன? அதை எப்படி பிரசன்னாவும் சினேகாவும் முறியடித்தார்கள் என்பதை அச்சமில்லாமல் 'அச்சமுண்டு! அச்சமுண்டு!' மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அருண் வைத்தியநாதன்.படப்பிடிப்பு அமெரிக்காவில் நடத்தப்பட்டதுடன் படமே அமெரிக்க பாணியில் எடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் சினிமாவின் எந்தச் சாயலும் இல்லாமல் இயல்பாக இருக்கிறது திரைக்கதை.

முதல் முறையாக ரெட் ஒன் எனப்படும் கேமராவில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை போல பல தமிழ்ப் படங்களில் இக்கேமராவைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அந்த அளவிற்குப் படத்தின் காட்சிகள் ஒரு அழகான ஆல்பம் பார்த்த அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. இதற்காக ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் கிரிஸ் பிரெய்லிச்சுக்கு ஒரு பாராட்டு.

பிரசன்னா - சினேகா இவர்களுக்கு அப்படி ஒரு பொருத்தம். நிஜமான கணவன் - மனைவியாக வாழ்ந்து இருக்கிறார்கள். பிரசன்னாவின் அமைதியான நடிப்பும் சினேகாவின் அழகான நடிப்பும் படத்திற்கு ஆரோக்கியமாக உள்ளது. படத்தில் உள்ள முத்தக் காட்சிகளில் கூட இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

பிரசன்னா - சினேகாவின் குழந்தையாக நடித்திருக்கும் அக்சயாவின் நடிப்பும் ஓகே தான். பிரசன்னா - சினேகா இருவரைத் தவிர படத்தில் வரும் அத்தனை முகங்களும் தமிழ்த் திரையில் பார்த்திராத முகங்களாக இருந்தாலும் எந்த ஒரு பதற்றத்தையும் வெளிப்படுத்தாமல் நடித்திருக்கிறாகள்.

கார்த்திக் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் உள்ளன. இரண்டுமே இனிமை. பின்னணி இசையிலும் பின்னியிருக்கிறார் இந்த இளைய ஞானி.

'அச்சமுண்டு! அச்சமுண்டு!' என்று தலைப்பு இருந்தாலும் படத்தை அச்சமின்றிப் பார்க்கலாம். படம் பார்ப்பவரை அச்சப்பட வைப்பதற்காக இயக்குநர் முயன்றிருப்பது, சில காட்சிகளில் தெரிகிறது. எந்த ஒரு காட்சியையும் நீளமாகச் சொல்லாமல் சுருக்கமாகச் சொல்லியிருக்கும் இயக்குநர் அருண் வைத்தியநாதனுக்கு ஒரு சபாஷ் சொல்வேன்.

4 பேரு சொன்னாங்க:

said...

"அச்சமுண்டு! அச்சமுண்டு! - திரைபடதை அச்சமின்றிப் பார்க்கலாம்
என முடிவெடுத்துள்ளேன்.

திரைக்கதையை சொல்லாமல் விமர்சித்த விதம் அருமை

said...

Thanks sir

said...

:-)

said...

நீங்க சொன்ன விதம் படம் பார்க்க தூண்டுகிறது.