Monday, June 1, 2009

காசிவிசுவநாதப் பாண்டியன் - வரலாற்றுப் பார்வை

தமிழ் நாட்டில் கலை, இலக்கிய வரலாற்றில் எட்டையபுரம் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. எட்டையபுரத்தை ஆண்ட குமார எட்டேந்திர மன்னர் கர்நாடக சங்கீத சாகித்ய கர்த்தாவாக விளங்கினார். இவர் நாதஜோதி முத்துசுவாமி தீட்சிதர், பாலுசுவாமி தீட்சிதர், சுப்பராம தீட்சிதர் ஆகிய கர்நாடக சங்கீத வித்வான்களை ஆதரித்தார். எட்டையபுரத்து அரசர் ராம வெங்கடேசுவர எட்டப்ப மன்னர் "சுத்தசேவன்' என்ற நாடகத்தை எழுதியுள்ளார்.

வெங்கடேசுவர எட்டப்ப மன்னரின் இளைய குமாரர் காசி விசுவநாதப் பாண்டியன். இவர் 1888-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி எட்டையபுரத்தில் பிறந்தார். அங்கேயே ஆரம்பக்கல்வி பயின்றார். பின்னர் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் உயர் கல்வி பயின்றார். சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியக் கலை பயின்று ஓவியத்தில் பட்டம் பெற்றார்.
விசுவநாதப் பாண்டியன் ஓவியராகவும், நாடக ஆசிரியராகவும் விளங்கினார். இவர் நாடகம் எழுதியதோடு நாடகக் கலைஞர்களை ஆதரிக்கும் புரவலராகவும் விளங்கினார். சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், காசிவிசுவநாதப் பாண்டியன் ஆகிய மூவரும் தமிழ் நாடக மும்மூர்த்திகளாவர்.

காசிவிசுவநாதப் பாண்டியன், "தேவராச, ஜெகதீச தியேட்டரிக்கல் கம்பெனி' என்ற நாடகக் குழுவை அமைத்திருந்தார். இக் குழுவிலிருந்து பின்னாளில் பல நாடகக் கலைஞர்கள் உருவானார்கள். டி.பி.சங்கர நாராயணன், பி.எஸ்.வெங்கடாசலம், எஸ்.பி.வீராச்சாமி, நடிகமணி டி.வி.நாராயணசாமி ஆகிய நாடகக் கலைஞர்கள் இக்குழுவிலிருந்து உருவானவர்கள். இவர் சிறந்த ஓவியராக இருந்ததால், தம்முடைய நாடகக் குழுவிற்கு வேண்டிய திரைச் சித்திரங்களை தாமே வரைந்தார்.

கன்னட நாடகக் கலைஞர் குப்பி வீரண்ணாவைப் பின்பற்றிப் புதிய முறைகளில் பல்வேறு காட்சித் தட்டிகளையும் தயாரித்தார். எட்டையபுரத்தில் நிரந்தர நவீன நாடக அரங்கை அமைத்தார். இதற்கு ஸ்ரீராமசந்திர விலாஸ் தியேட்டர் என்று பெயர் சூட்டினார். நாடகக் குழுவில் இருந்த நடிகர்கள் அத்தனை பேருக்கும் கடுக்கன், தங்கச் சங்கிலி, காப்பு ஆகிய அணிகளை இவரே தம் அன்பளிப்பாகச் செய்து கொடுத்தார்.

பிரகலாதா, மாருதி விஜயம், கபீர்தாஸ், ராமதாஸ், மனோகரன், வி.சி.கோபாலரத்தினம் எழுதிய ராஜபக்தி, தயாளன், சுத்தசேவன் ஆகிய பல நாடகங்கள் இக்குழுவால் நடிக்கப்பட்டன. இக்குழுவினரின் நாடகங்கள் எட்டயபுரம் சுற்று வட்டாரத்திலும், சாத்தூர், மதுரை, அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களிலும் நடைபெற்றன.
இவர் சிறந்த இசைக் கலைஞரும் ஆவார். வீணை, ஆர்மோனியம், தபேலா போன்ற இசைக் கருவிகளை வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். கிராமபோன் இசைத் தட்டுக்கள் வராத காலம் அது. போனோகிராம் என்று ஒரு கருவியை வைத்து மெழுகினால் இசைத் தட்டுக்கள் தயாரித்து அதில் கஞ்சிரா மான்பூண்டியா பிள்ளையின் வாத்திய இசையையும், காஞ்சிபுரம் நாயனா பிள்ளையின் வாய்ப்பாட்டு இசையையும் பதிவு செய்து வைத்திருந்தார்.

இவர் சிறந்த நிழற்பட நிபுணராகவும் விளங்கினார். நாடகக் கலைஞர்களை நிழற்படங்களாக எடுத்துள்ளார். நாடக ஆசிரியர் எம்.கந்சாமி முதலியார், எம்.கே.இராதா, கே.கே.பெருமாள், கே.பி.காமாட்சி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.சகஸ்ரநாமம், டி.கே.எஸ். சகோதரர்கள் முதலிய கலைஞர்களின் நிழற்படங்கள் இவரால் எடுக்கப்பட்டவை. இவை தமிழ் நாடகக் கலையின் வரலாற்றைக் கூறும் வரலாற்றுப் பெட்டகங்களாகும்.
காசிவிசுவநாதப் பாண்டியன் சொந்தமாக நாடகக் குழு வைத்து, நாடகக் கலையை வளர்த்ததோடு தமிழ் நாட்டில் உள்ள நாடகக் குழுக்களை எட்டையபுரத்திற்கு வரவழைத்து அவர்களுடைய நாடகங்களை நடத்தி, அவர்களுக்கு பொன்னும், பொருளும் கொடுத்து உதவினார். சிறந்த நாடகக் கலைஞர்களுக்குப் பரிசு வழங்கி பாராட்டி ஊக்குவித்தார்.

நீண்ட காலமாகச் செயல்படாமல் இருந்த நாடகக் குழுவைக் கலைத்துவிட டி.கே.எஸ். சகோதரர்கள் முடிவு செய்த பொழுது காசிவிசுவநாதப் பாண்டியன், தன்னுடைய நாடகக் குழுவுக்காக தயாரித்த காட்சிகளையும், உடைகளையும் தந்து டி.கே.எஸ். நாடகக் குழு தொடர்ந்து நடைபெறுவதற்கு உதவினார்.
""1935 நவம்பரில் நாங்கள் பங்கு கொண்ட மேனகா படப்பிடிப்பிற்குப் பின் ஏறத்தாழ ஆறு மாத காலம் நாடகக் குழு நடைபெறவில்லை. குழுவை கலைத்துவிட்டு நாகர்கோவிலில் தங்கி வேறு தொழிலில் ஈடுபட எங்கள் பெரியண்ணா டி.கே.எஸ்.சங்கரன் முயன்று வந்தார். எங்கள் பால் அன்பு கொண்ட சில பெரியவர்கள் மீண்டும் நாடகக் குழுவைத் தொடங்கும்படி வற்புறுத்தி வந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் இருவர்: ஒருவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி, மற்றொருவர் எட்டையபுரம் இளைய ராஜா காசிவிசுவநாதப் பாண்டியன். அவர் கருணையோடு எங்களுக்கு உதவ முன் வந்தார்'' என்று டி.கே.சண்முகம் தன்னுடைய நாடக வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார். டி.கே.எஸ் சகோதரர்களின் நாடகக் குழு தமிழ் நாடக வரலாற்றில் ஒரு சகாப்தம் படைத்துள்ளது. இந்த மாபெரும் நாடகக் குழுவைக் காப்பாற்றியவர் கலைக் காவலர் காசிவிசுவநாதப் பாண்டியன்.
இவர், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் புலமை பெற்றிருந்தார். கன்னடம், மலையாளம் ஆகிய இரு மொழிகளைப் பேச, புரிந்து கொள்ளும் திறமை பெற்றிருந்தார். "தயாளன்' என்னும் நாடகம் இவரால் எழுதப்பட்டு அச்சிலும் வெளிவந்துள்ளது. தயாளன் நாடகம் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு சரித்திர நாடகம். இது அவரின் மொழிப் புலமையை வெளிப்படுத்தக் கூடிய நாடகமாக அமைந்துள்ளது. இந் நாடகம் இவருடைய நாடகக் குழுவால் நாடகமாக நடிக்கப்பட்டது. 1937-இல் சேலம் மாடர்ன் தியேட்டரின் கூட்டுறவோடு தயாளனை திரைப்படமாகத் தயாரித்தார். இதில் பிரபல நடிகர் பி.யூ.சின்னப்பா கதாநாயகனாக நடித்துள்ளார்.

காசிவிசுவநாதப் பாண்டியன் சிறந்த தேசபக்தரும் ஆவார். மகாகவி சுப்பிரமணிய பாரதியுடன் நெருங்கிய நட்பு கொண்டு, விடுதலை வீரர்களுக்கு பல உதவிகள் செய்து வந்தார். தன்னுடைய திரைப்பட அரங்கிற்கு "பாரத மாதா டாக்கீஸ்' என்று பெயர் சூட்டினார். இவருடைய திரைப்பட அரங்கில் பக்கிம்சந்திரரின் "வந்தே மாதர' கீதத்துடன் தான் திரைப்படக் காட்சி துவங்கும். ஆங்கிலேய ஆட்சியினர் இதைத் தடுத்தபோதிலும் இவர் தேசிய இயக்கத்துக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திரைப்பட அரங்கில் தான் காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்றன. மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் தேசிய இயக்கத்துக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார்.

1941-இல் காசிவிசுவநாதப் பாண்டியன் உடல் நலிவுற்று மதுரையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது டி.கே.எஸ். சகோதரர்களின் "சிவலீலா' நாடகம் பிரம்மாண்டமான காட்சிகளுடன் நடந்து வந்தது. உடல் நலிவுற்ற நிலையிலும் அந்த நாடகத்தைப் பார்த்து, கண்டு ரசித்து கலைஞர்களைப் பாராட்டினார். நாடகக் கலையின் வளர்ச்சிக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் பல கலைகளில் சிறந்து விளங்கியவருமான காசிவிசுவநாதப் பாண்டியன் 1941-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி அமரர் ஆனார். அவர் வளர்த்த நாடகக் கலை வாழ்ந்து கொண்டிருக்கிறது; அவரும் கலைஞர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாடகத் தமிழ் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டும் விதமாக இவருடைய திருவுருவப்படம் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 பேரு சொன்னாங்க:

said...

காசிவிசுவநாதப் பாண்டியனின் தந்தை குமார எட்டப்பமகாராஜா எனும் தாத்தாமகாராஜாவும் நாடகக் கலையை மதித்துப் போற்றியவர். இவர் கல்யாணராமையர் என்னும் நாடகநடிகரின் ஓவியத்தைப் போற்றிப் பாதுகாத்தமை பற்றியும் கல்யாணராமையரின் நாடகக் குழுவில் நடிகர்களாக இருந்த ராமுடு ஐயர், சங்கரதாஸ சுவாமிகள் ஆகியோரின் பெருமை பேசியது பற்றியும் தன் சக நாடகக்கலைஞர்களுக்கு பொற்பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தமை பற்றியும் அவ்வை சண்முகம் தன் "எனது நாடக வாழ்க்கை" நூலில் தனியொரு அத்தியாயத்தில் விளக்கியிருக்கிறார்.
அதனை அடுத்த அத்தியாயம் கலைவள்ளல் காசிப் பாண்டியனின் புகழ்பாடுகிறது.