தமிழக திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த், தற்போது நடித்து வரும், "எந்திரன்' படத்துக்குப் பின் கண்டிப்பாக அரசியல் கட்சி துவக்குவார் என, அவரது ரசிகர் கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது, தி.மு.க., - த.மா.கா., கூட்டணி ஆட்சியைப் பிடிக்க நடிகர் ரஜினிகாந்த், அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த அ.தி.மு.க.,வுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்ததே காரணம்.அப்போதே ரஜினி அரசியலுக்கு வருவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. அவரது ரசிகர்களும் அதையே விரும்பினர். ஆனால், ரஜினி அரசியலுக்கு வரவில்லை.தமிழகத்தில் அடுத்தடுத்து நடிகர்கள் அரசியலுக்கு வந்து புதிய கட்சி துவக்கி வருகின்றனர். தங்களுக்கு இருந்த ரசிகர் மன்றங் களை ஒருங்கிணைத்து தே.மு.தி.க.,வை விஜயகாந்தும், அ.இ.ச.ம.க., கட்சியை சரத்குமாரும் துவக்கினர்.அதேபோல், நடிகர் டி.ராஜேந்தரும் லட்சிய தி.மு.க.,வை நடத்தி வருகிறார். நடிகர் விஜய்யும் விரைவில் புதிய கட்சியை துவக்குவார் என்று கூறப்படுகிறது.ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து, தன் நலம்விரும்பிகளிடம் ஆலோசனை செய்துள்ளதாகவும், அவர் தற்போது நடித்து வரும் எந்திரன் படம் ரிலீசுக்குப் பின் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் கட்சி துவக்குவார் என்றும் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றத்தில் மாவட்ட பொறுப்பில் இருக்கும் சிலர் கூறியதாவது:தலைவர் ரஜினி அரசியலுக்கு வரும் முடிவை எடுத்து விட்டார். தற்போது அவர் நடித்து வரும் எந்திரனுக்கு பிறகு, கண்டிப்பாக மன்றங்களை ஒருங்கிணைத்து, அரசியல் கட்சி துவக்கவுள்ளார் என்பது அவரது நடவடிக்கையில் இருந்து தெரிகிறது. கடந்த 1996ம் ஆண்டுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட எந்த மன்றத்துக்கும் இதுவரை பதிவு எண் கொடுக்கப்படவில்லை. தற்போது, அந்த ஆண்டுக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட மன்றங்களுக்கு பதிவு எண் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவராகவும் தன்னை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் மூடில் இருப்பதால் தான், மக்கள் மத்தியில் செல்வாக்கின் உண்மை நிலையை அறிய, ரசிகர் மன்ற விழாக்களுக்கும், ரசிகர்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் தன் நலனில் அதிக அக்கறையுள்ள அண்ணன் சத்திய நாராயணராவை அனுப்பி வருகிறார். அவருடன் ரஜினிக்கு மருமகன் உறவுமுறையில் உள்ள சந்திரகாந்த் என்பவரும் தற்போது பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மக்களின் நாடித்துடிப்பை பார்த்து வருகின்றனர்.எந்திரன் படம் இன்னும் எட்டு மாதங்களில் முடியும் என தெரிகிறது. ஆகையால், அடுத் தாண்டு கண்டிப்பாக ரஜினி அரசியலில் காலடி எடுத்து வைப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முடிவு எப்போது? சத்திய நாராயணராவ் பேட்டி:""எந்திரன் படம் முடிந்த பிறகு அரசியல் கட்சி துவங்குவது பற்றி ரஜினி நல்ல முடிவை அறிவிப்பார்,'' என்று அவரது அண்ணன் சத்தியநாராயணராவ் தெரிவித்தார்.திருச்சியில் நடந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வீட்டுத் திருமணங்களில் கலந்து கொள்ள நடிகர் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ், இவரது மருமகனும், கர்நாடக மாநில ரஜினி மன்ற தலைவருமான சந்திரகாந்த் ஆகியோர் நேற்று காலை திருச்சி வந்தனர்.சிதம்பரம் நகர ரசிகர் மன்ற நிர்வாகிகள், நடிகர் ரஜினி குறித்து தயாரித்த, "மக்கள் மனம் கவர்ந்த மன்னன்' "சிடி' வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சத்தியநாராயணராவ், நிருபர்களிடம் கூறியதாவது:ரசிகர் மன்ற நிர்வாகிகளின் அழைப்புக்கு இணங்கி திருமண விழாக்களில் கலந்து கொள்ள திருச்சி வந்துள்ளேன். அரசியல் கட்சி துவங்குவது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் ஏதும் நடத்தவில்லை. ரஜினி தற்போது எந்திரன் படப்பிடிப்பில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். அந்தப் படம் முடிந்ததும் அரசியல் கட்சி துவக்குவது குறித்து சரியான நேரத்தில், சரியான முடிவை அறிவிப்பார்.இவ்வாறு சத்தியநாராயணராவ் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
2 பேரு சொன்னாங்க:
:-))))))))))))))))))
அய்யோ பாவம்!!!
:-)
Post a Comment