சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் ராகுல் திராவிடைச் சேர்த்திருப்பது முன்னாள் வீரர்களாலும் ஊடகங்களாலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, 2011 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணியை 2007 உலகக் கோப்பை தோல்வியிலிருந்தே தயார் செய்து வருவதாக கூறும் தேர்வு கொள்கைக்கு முரண்பாடாக அமைந்துள்ளது.
அவரது பேட்டிங் திறமை, அணியில் ஒரு வீரராக அவரது பங்களிப்பு ஆகியவற்றில் தன்னை பல்வேறு விதமாக நிரூபித்தவர்தான் திராவிட் என்பதில் ஐயமில்லை. 7-வது பேட்ஸ்மெனையோ, அல்லது கூடுதலாக ஒரு பந்து வீச்சாளரையோ ஒரு நாள் அணியில் சேர்க்கவேண்டிய நிர்பந்தமான காலக் கட்டங்களில் கங்கூலி தலைமியின் கீழ் விக்கெட் கீப்பர் பொறுப்பையும் ஏற்றவர் திராவிட். இந்த பொறுப்பேற்புகளை நாம் ஒரு போதும் மறுக்கப்போவதில்லை.
எனினும் அவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கியபோது 2011 உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு ஒரு பலமான அணியை தயார் செய்து, சிறப்பான அணியை உருவாக்கவே நீக்கம் செய்ததாக அணித் தேர்வுக் குழு கூறியது.
இந்த 2 ஆண்டுகளில் மீண்டும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இடம்பெற திராவிட் என்ன செய்து விட்டார்? ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் சில அபாரமான இன்னிங்ஸ்களை விளையாடினார். இதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட், அதுவும் மினி உலகக் கோப்பை என்று வர்ணிக்கப்படும் ஒரு முக்கியமான தொடருக்கு அணியை தேர்வு செய்யும்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் காட்டிய திறமையை கணக்கில் எடுத்துக் கொள்வது எப்படி என்று தெரியவில்லை!
ஒரு நாள் போட்டியிலிருந்து தன்னை நீக்கி விட்டதற்கு பாடம் புகட்ட டெஸ்ட் போட்டிகளில் அதிரடி இன்னிங்ஸ்கள் எதையும் விளையாடினாரா? இல்லை. இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இவர் கிரகாம் ஸ்வான், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துகளில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆஸ்ட்ரேலியாவில் கும்ளே தலைமை இந்திய அணி பயணம் மேற்கொண்டபோது சர்ச்சைக்குரிய அந்த தொடரில் அவர் நாம் வெற்றி பெற்ற பெர்த் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 91 ரன்களை எடுத்தார்.
அதே ஆஸ்ட்ரேலிய அணி மீண்டும் இந்தியா வந்த போதும் திராவிடின் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இந்த பேட்டிங் வரலாற்றை வைத்துத்தான் அவரை ஒரு நாள் அணிக்கு தேர்வு செய்வதா வேண்டாமா என்று முடிவு செய்யப்பட்டிருக்கவேண்டும். ஐ.பி.எல். கிரிக்கெட் எவ்வளவுதான் சவாலான ஆட்டமாக இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வீரருக்கு கொடுக்கப்படும் நெருக்கடி, அழுத்தம் கொடுக்கப்பட மாட்டாது என்பதை முன்னணி வீரர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
நியூஸீலாந்திற்கு இந்தியா பயணம் மேற்கொண்ட போது பலமான இந்திய 20- 20 அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வி தழுவியது. ஆனால் இருபதுக்கு 20 தோல்வியை வைத்து ஒரு நாள் கிரிக்கெட்டை நாம் கணிக்க முடியாது என்று பலரும் கூறியது பின்பு இந்தியா நியூஸீலாந்தை 3- 1 என்று வெற்றி பெற்றதன் மூலம் நிரூபணமானது. இப்படியிருக்கையில், இருபதுக்கு 20 போட்டிகளில் அதுவும் உள் நாட்டு 20- 20 தொடரான ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எடுக்கும் ரன்கள் எந்த அளவிற்கு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் பயனளிக்கும் என்பது தெரியவில்லை.
ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்ற பிறகு, இலங்கையில் இரண்டு ஒரு நாள் தொடர், நியூஸீலாந்து தொடர், இங்கிலாந்திற்கு எதிரான தொடர், சமீபமாக மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடர் என்று திராவிட் இல்லாமல் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதுவும் ஒரு சில போட்டிகளில் சேவாகும் இல்லை, சச்சின் டெண்டுல்கரும் இல்லை. இருப்பினும் தொடரை இந்தியா இழக்கவில்லை. மாறாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வரிந்து கட்டி ரன்களை குவித்த வீரர்களுடன் இருபதுக்கு 20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா தோல்வி தழுவியது. மீண்டும் சேவாக் அணியில் காயம் காரணமாக இடம்பெறமுடியவில்லை.
பின்னால் களமிறங்கி நன்றாக விளையாடக்கூடிய ரோஹித் ஷர்மாவை துவக்க வீரராக களமிறக்கி அவர் சரியாக விளையாடவில்லை என்று கூறி தற்போது அணியிலிருந்து நீக்கியிருப்பது சரியான முடிவாகத் தெரியவில்லை.
அப்படியே அவர் நீக்கப்பட்டிருந்தாலும் அவரது இடத்தில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வரும் வீரத் கோலியைத்தான் தேர்வு செய்திருக்கவேண்டும், கோலி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சில அபாரமான இன்னிக்ஸ்களை விளையாடியதோடு, ஆஸ்ட்ரேலியாவில் சமீபமாக நடைபெற்ற 4 நாடுகளுக்கு இடையிலான எமர்ஜிங் வீரர்கள் ஒரு நாள் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல அவரது பேட்டிங்கே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அவர் பந்து வீச்சிலும் சிக்கனமானவர். அனைத்திற்கும் மேலாக ஸ்லிப், பாயிண்ட், கல்லி மட்டும் அல்லாமல் எந்த இடத்திலும் அவர் மிகச்சிறந்த ஃபீல்டர்.
கோலி ஒரு எதிர்கால இந்திய வீரர். அவருக்கு வாய்ப்பளிக்காமல் 2 ஆண்டுகளில் எந்த வித ஒரு நாள் கிரிக்கெட்டிலும் பங்கு பெறாத திராவிடை எப்படி தேர்வு செய்ய முடியும்?
ராபின் உத்தப்பாவிற்கு கூட ஒரு வாய்ப்பு அளித்துப் பார்த்திருக்கலாம். ஆனால் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தினேஷ் கார்த்திக் மேல் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார். திராவிடிற்கு பதிலாக பத்ரிநாத்தை அணியில் எடுத்திருந்தால் கூட ஒரு நியாயம் இருந்திருக்கும். ஏனெனில் பத்ரிநாத்திற்கு வாய்ப்பே அளிக்காமல், தேர்வு செய்து பல தொடர்களில் ஓய்வறை பார்வையாளராக உட்கார வைக்கப்பட்டுள்ளார். வாய்ப்பு கொடுக்காமலேயே அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன் அடிப்படை என்னவென்றும் புரியவில்லை.
ஐ.பி.எல். கிரிக்கெட் இந்தியாவின் மறைந்திருக்கும் இளம் திறமைகளை கண்டுபிடிக்கத்தான் என்று கூறி கொண்டு மீண்டும் 35 வயதான திராவிடிடம் போய் தஞ்சமடைந்திருப்பது தேர்வுக் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என்பதோடு, இளம் வீரர்களின் நம்பிக்கையையும் தகர்ப்பதாக உள்ளது. அதே போல் காரணமில்லாமல் நீக்கப்பட்டிருக்கும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிராக்யன் ஓஜா. இவரை எமர்ஜிங் அணியில் தேர்வு செய்யாமல், அமித் மிஷ்ராவை தேர்வு செய்தனர். பிராக்யன் ஓஜா விளையாடிய வரையில் எதிரணியினரின் நடுக்கள வீரர்களை குறி வைத்து விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமையுடையவர் என்பதை நிரூபித்தார். அமித் மிஷ்ராவைக் காட்டிலும் தற்போது அனுபவசாலி ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
ஒரு புறம் இந்திய அணிக்கு நிலைத்தன்மையை ஏற்படுத்த அனுபவம் தேவை. அதாவது திராவிட் தேவை. மறு புறம் அனுபவம் பெற்று சிறப்பாக பங்களிக்க துடிக்கும் பிராக்யன் ஓஜா தேவையில்லை. ஒரு நாள் கிரிக்கெட் விளையாடாத அமித் மிஷ்ரா தேவை. இது போன்ற முரண்பாடுகள் இருக்கிறது என்பதை மட்டும் நாம் பார்த்தால் போதுமானது.
பிரவீண் குமார் மேற்கிந்திய தொடரில் சரியாக வீசவில்லை. ஆனால் அவர் மீண்டும் இடம்பெற்றுள்ளார். மேற்கிந்திய தொடரில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டுள்ளார். முனாஃப் படேலுக்காக பேசுவதற்கு ஆளில்லை என்பதனால் அவர் அணித் தேர்வில் பரிசீலிக்கப்படக்கூட இல்லை.
எமர்ஜிங் அணியில் சிறப்பாக வீசியதற்காக அமித் மிஷ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். எமர்ஜிங் அணியில் சிறப்பாக விளையாடிய வீரத் கோலி தேர்வு செய்யப்படவில்லை. பத்ரிநாத் தேர்வு செய்யப்படவில்லை. தினேஷ் கார்த்திக் அணியில் எப்படி தொடர்ந்து நீடிக்க முடிகிறது என்பது புதிராகவே உள்ளது. திராவிடை மீண்டும் அணியில் தேர்வு செய்திருப்பது பற்றி அனைவரும் வரவேற்பு கொடுத்துள்ள நிலையில் திராவிடின் ஒட்டு மொத்த ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் பங்களிப்பையும் நாம் ஒரு விமர்சனப் பார்வைக்கு உட்படுத்துவோம். ஏனெனில் திராவிட் அணிக்குள் வரும்போது வினோத் காம்ப்ளி போன்ற அதிரடி பேட்ஸ்மென் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வினோத் காம்ப்ளியின் டெஸ்ட் சராசரி 54 என்பது குறிப்பிடத்தக்கது.
1996ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு எதிராக சிங்கப்பூரில் தன் முதல் ஒரு நாள் போட்டியை விளையாட தொடங்கிய திராவிட் சரியாக 10-வது போட்டியில்தான் பாகிஸ்தானுக்கு எதிராக டொரோன்டோ மைதானத்தில் 90 ரன்களை எடுத்து முதல் அரைசதம் எடுத்தார். அதற்கு அடுத்த அரைசதம் 4 போட்டிகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியாவில் எடுக்கப்படுகிறது. 62 ரன்களை எடுக்கிறார். இந்தியா தோல்வியடைகிறது. 87 பந்துகளில் 62 ரன்களை திராவிட் எடுக்கிறார். இது பிரச்சனையில்லை. ஆனால் அவ்வளவு நேரம் பந்து வீச்சை பார்த்த சிறந்த வீரர் திராவிட் அந்தப் போட்டியை வென்றிருக்கவேண்டும். ஆனால் இல்லை.
அதன் பிறகும் சில அரை சதங்களை எடுக்கிறார். ஆனால் ஒவ்வொரு அரைசதத்திற்கு இடையிலும் குறைந்தது 4 அல்லது 5 போட்டிகள் இடைவெளி. அதாவது சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
மேலும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுப்பதும், அதிக சராசரியை வைப்பதும் பெரிய விஷயமல்ல. ஏனெனில் சொத்தை அணிகள் அதில் நிறைய இடம்பெறுகின்றன. இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை போன்ற பந்து வீச்சு பலமாக உள்ள அணிகளுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட ஒரு தினப் போட்டித் தொடரில் சீரான முறையில் ரன்களை திராவிட் குவித்திருக்கிறாரா என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றமே விஞ்சும்.
1996, 98, 2000, 2007, ஆகிய ஆண்டுகளில் 35 ரன்கள் சராசரியை பராமரிக்க போராடியுள்ளார் திராவிட். மேலும் அவரது உச்சகாலத்தில் கூட எதிரணியினரின் உத்தி வகுப்பு விவாதங்களில் திராவிடை ஒரு பெரிய அச்சுறுத்தலாக எந்த அணியும் கருதவில்லை. சச்சின், சேவாக், யுவ்ராஜ், ஏன் கயீஃப், தினேஷ் மோங்கியா போன்றோர் கூட எதிரணியினரின் உத்தி வகுப்பு விவாதங்களில் ஒரு அச்சுறுத்தலாக பேசப்பட்டிருப்பார்கள். ஆனால் திராவிட் ஒரு நாளும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்ததில்லை.
மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு போதும் 50 ரன்கள் சராசரியை அவரது உச்சகாலத்தில் கூட திராவிட் வைத்திருந்ததில்லை. தோனி தற்போது ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு நீண்ட நாட்களுக்கு முதலாம் இடத்தில் நீடிக்கிறார் என்றால் அவரது சீரான ரன் குவிப்புதான் காரணம். 50 ரன்கள் சராசரியையும் வைத்திருந்தார் தோனி. இப்போதும் இவரது சராசரி 50 ரன்களுக்கு சற்றே குறைவு.
தற்போது வந்துள்ள கௌதம் கம்பீர், யூசுஃப் பத்தான், சுரேஷ் ரெய்னா போன்றோரைக் கூட எதிரணியினர் தங்கள் வெற்றிக்கு பங்கம் விளைவிக்கும் அச்சுறுத்தலாகவே கருதுவர். ஆனால் உலகின் எந்த ஒரு முன்னணி கிரிக்கெட் அணியின் கேப்டனையும் அழைத்து திராவிட் பற்றி கேட்டால் ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் பேட்டிங் பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றே கூறுவார்கள். திடீரென அவரை அணியில் தேர்வு செய்து விட்டார்கள் என்பதற்காக அவர் 'லொட்டு' வைத்து நம்மை வெறுப்பேற்றிய காலங்களை நாம் மறக்க முடியாது.
மேலும் இப்போது அணியில் விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ரன்கள் ஓடுவதை ஒரு உத்தியாகவே இந்திய வீரரகள் வளர்த்து வருகின்றனர். திராவிட் இந்த இளம் வீரர்களின் ஓட்டத்திற்கு ஈடு கொடுப்பாரா என்பது சந்தேகமே. இவருடன் ஓட முடியாமல் கம்பீர், ரெய்னா, ஏன் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்கள் கூட ரன் அவுட் ஆகும் வாய்ப்பு உள்ளது.
சில சமயங்களில் பந்துகளை சாப்பிட்டு எதிர் முனையில் நிற்கும் இளம் வீரர்களுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் வெறுப்பேற்றும் தருணங்களையும் நாம் மறுக்க முடியாது. இருபதுக்கு 20 க்ரிக்கெட்டில் சில புதிய ஷாட்களை இவர் விளையாடி (அதாவது திராவிடிற்கு அது புதிய ஷாட்) ரன்களை எடுத்தார் என்பதற்காக அதே உத்தியை அவர் வரவிருக்கும் ஒரு நாள் தொடரிலும் கடைபிடிப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஒரு சில அரை சதங்களை வேண்டுமானால் அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியுமே தவிர அது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பாக இருக்குமா என்றெல்லாம் நாம் உடனடியாக கூற முடியாது.
ஆகவே அபிஷேக் நாயர் போன்ற வீரர்களை 11-ற்குள் எடுத்து திராவிடை குறைவாக பயன்படுத்தினால் நல்லது என்றே தோன்றுகிறது. மீண்டும் 3-ஆம் இடம் என்ற முக்கிய நிலையில் அவருக்கு நிரந்தரமாக ஒரு இடம் கொடுப்பது என்பது அணியை பின்னடைவிற்கு இட்டுச்செல்லும் என்பது உறுதி. தோனிக்கு இன்று இருக்கும் முக்கிய சவால் என்னவெனில் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதல்ல. திராவிடை எவ்வளவு சிக்கனமாக பயன்படுத்துகிறார் என்பதிலேயே உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 பேரு சொன்னாங்க:
Post a Comment