Saturday, August 29, 2009

விஜயகாந்த் + காங்கிரஸ் + விஜய் = தமிழகத்தில் ஆட்சி?

"திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க வேண்டும்' என, மாஜி மத்திய அமைச்சர் இளங்கோவன் அடிக்கடி வேண்டுகோள் விடுத்து வருகிறார். புதிய இளைஞர்களை கட்சியில் சேர்த்து, தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுலுக்கும் லட்சியமாக உள்ளது.

அதனால், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், மாஜி இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரை அழைத்து அவர்களின் கருத்துக்களை ராகுல் கேட்டறிந்து வருகிறார். தமிழக மக்களின் ஒட்டு மொத்த ஓட்டுகளை கவரும் வகையில் சினிமா பிரபலங்களை காங்கிரஸ் கூட்டணியில் இணைத்து வலுசேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ரகசிய திட்டத்தை தீட்டி, மாஜி மத்திய அமைச்சர் ஒருவர் ராகுலுக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார்.அவரது திட்டத்தின் முதல் கட்டமாக புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கடந்த 23ம் தேதி நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், முதல்வர் வைத்திலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். "அரசியலில் நுழைய விருப்பம். வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவேன்' என தனது ரசிகர்களுக்கு அரசியல் ஆசையை தூண்டி பேசினார் நடிகர் விஜய்.இந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் பேசும் போது, "மாணவ, மாணவிகளுக்கு விஜய் அதிகமான அறிவுரைகளை கூறியுள்ளார். அவற்றை முறையாக பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.

"காங்கிரசுடன் கூட்டணி வைக்கத் தயார்' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் பேசியுள்ளது, தமிழக காங்கிரசாருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
காங்கிரசை பலப்படுத்தி, தனித்து போட்டியிடும் வகையில், மாற்றியமைக்க ராகுல் ஒருபுறம் முயற்சி எடுத்து வரும் நிலையில், தற்போதுள்ள தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு இன்னொருபுறம் அச்சாரம் போடப்பட்டு வருகிறது."கூட்டணி தர்மத்திற்காக தி.மு.க., வை அனுசரிக்கிறோம், தமிழகத்தில் ஓராண்டுக்கு முன் 2010ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடத்த தி.மு.க., முடிவு செய்துள்ளது. பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என தி.மு.க., நினைக்கிறது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தொடர்ந்து நமக்கு சரிவு தான் ஏற்படும்' என்று வேலூர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் ஞானசேகரன் பரபரப்பாக பேசினார்.

தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்த ராகுல் எடுத்துவரும் முயற்சியின் ஒருபகுதியாகவே ஞானசேகரன் இப்படி பேசியதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி தொடருமா? என்ற கேள்வியை ஞானசேகரன் எழுப்பியுள்ளார்.டில்லியிலும் காங்கிரஸ் - தி.மு.க., தலைவர்கள் இடையே சுமூக உறவு இல்லை என கூறப்படுகிறது. இப்படி பல்வேறு திரைமறைவு அரசியலுக்கு மத்தியில், தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி வளர்ச்சி மற்றும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நடிகர் விஜயுடன் புது கூட்டணி அமைப்பது காங்கிரசுக்கு தமிழகத்தில் வெற்றியை தேடித் தரும் என்ற கருத்தை மாஜி மத்திய அமைச்சரின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.ராகுல் திட்டம் மற்றும் காங்கிரசாரின் விருப்பங்கள் எந்த அளவுக்கு பலனை அளிக்கப் போகின்றன என்பது விரைவில் தெரியவரும்.

0 பேரு சொன்னாங்க: