Saturday, August 22, 2009

ஷாருக்கான் என்ன கொக்கா?

ஹிந்தி நடிகர் ஷாருக்கான் அமெரிக்காவிற்குச் சென்றபோது அவரை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைத்து இரண்டு மணி நேரம் சோதனை போட்டதாகவும் அவருக்கு அதனால் அவமானம் ஏற்பட்டதாகவும் பிரபல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஹிந்து பத்திரிக்கை மூன்று நாட்கள் கலர் படங்களோடு அதுவும் முதல் பக்கத்தில் இச்செய்தியை வெளியிட்டிருந்தது. அமெரிக்காவில் ஒரு இந்தியர் அவமானப்படுத்தபட்டார் என்பதால் மட்டுமல்ல; ஒரு நடிகர் என்பதால் இதற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் போல் தெரிகிறது.

9/11-க்குப் பிறகு அமெரிக்கா முஸ்லீம் தீவிரவாதிகள் தன் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதில் மிகவும் குறியாக இருக்கிறது. அதனால் முஸ்லீம் பெயரான கான் என்னும் பெயர் கொண்டவர்களைத் தீவிரமாகச் சோதனை போடுகிறது. ஷாருக்கான் பெயரிலும் கான் இருப்பதால் அவரையும் சோதனை போட முடிவு செய்தனர் விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள். அதனால் அவரைச் சோதனை போட்டிருக்கிறார்கள். இதில் என்ன தவறு என்று எனக்குப் புரியவில்லை.

ஷாருக்கானைக் கடவுள் போல் நினைத்து வழிபடுவதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தியாவில் இருக்கலாம். அதனால் உலகமெங்கும் அவரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று எதிர்பார்ப்பது மடமையல்லவா? அமெரிக்காவில், அதுவும் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பிரிவில் வேலை பார்ப்பவர்கள் ஷாருக்கான் படங்களை விரும்பிப் பார்ப்பார்கள் என்றோ, அவரைப் பார்த்ததுமே அடையாளம் கண்டுகொண்டு அமெரிக்காவிற்குள் அவரை வரும்படி உபசரிப்பார்கள் என்றோ எப்படி எதிர்பார்க்க முடியும்? அவர்கள் அவர்களுடைய கடமையைச் செய்தார்கள் என்பதைத் தவிர அவர்கள் மேல் என்ன தவறு? அவரைக் கைது செய்து வேறு நாட்டிற்கு அனுப்பி சித்திரவதை செய்தார்களா என்ன?

இந்திய தூதரக அதிகாரிகளும் இதைப் பெரிதுபடுத்தியிருக்கிறார்கள். ஒரு சாதாரண இந்தியக் குடிமகனுக்கு இப்படி ஏற்பட்டிருந்தால் தூதரகம் இப்படி நடந்துகொண்டிருக்குமா? ஒரு நடிகருக்கு இப்படி நடந்தது என்பதால் மட்டுமே இப்படி பாய்ந்திருக்கிறது. நடிகர்கள் யாரும் இப்படித் தவறு செய்வதில்லை என்று சிலர் வக்காலத்து வாங்குகிறார்கள். இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு தாதாக்களொடு உறவு இருப்பதாகச் சந்தேகப்பட்டு நம் அரசே அவரைச் சிறையில் அடைத்து வைத்திருந்ததே. நடிகர்கள் என்பதால் மட்டுமே அவர்கள் மற்ற எல்லோரையும் விட நல்லவர்கள் என்று சொல்ல முடியுமா?

அமெரிக்கா தன்னை இப்படி நடத்தியதற்கு இனி அமெரிக்காவிற்கே போவதில்லை என்று ஷாருக்கான் முடிவெடுத்திருக்கிறாராம். குளத்தோடு கோபித்துக்கொண்டு போனவனுக்குத்தான் நஷ்டமே தவிர குளத்திற்கு எந்த நஷ்டமும் இல்லை. அமெரிக்காவிற்கே போவதில்லை என்று ஷாருக்கான் முடிவு செய்தால் அமெரிக்காவிற்கு எந்த நஷ்டமும் இல்லை. வேண்டுமானால் இவரை அமெரிக்காவிற்கு அழைத்து இந்திய சுதந்திர தினத்தில் கலந்துகொள்ள வைத்துவிட வேண்டும் என்று பித்தாய் இருந்தவர்களுக்கு இது நஷ்டமாக அமையலாம். இவர்கள் அமெரிக்கா செய்ததை எதிர்ப்பவர்கள் இனி எந்த அமெரிக்க கம்பெனிகளுக்கும் தாங்கள் வேலை செய்யப் போவதில்லை என்று முடிவு செய்து இந்தியாவிற்குத் திரும்புவார்களா? அமெரிக்க கம்பெனிகளைப் பகிஷ்காரம் செய்வார்களா?

ஆனானப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கலாம் அவர்களையே இப்படிச் சோதனை போட்டபோது அவர் அதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தக் கூட இல்லை. இந்த ஷாருக்கான் அவரை விட எந்த விதத்தில் உயர்ந்தவர்? இந்தியாவில் போல் இவரைப் பார்த்ததும் அமெரிக்காவிலும் எல்லோரும் இவரைத் தரிசிப்பார்கள் என்று ஷாருக்கான் எதிர்பார்த்ததன் எதிரொலிதான் அவருக்கு ஏற்பட்ட கோபம், அதன் விளைவாக விட்ட சவால் எல்லாம். உலகம் முழுவதும் இவரை அறியும் என்பது சுத்த அபத்தம். உலகில் இந்தியர்கள் - குறிப்பாக ஹிந்தியைப் புரிந்துகொள்பவர்கள் மட்டுமே இவரை எங்கும் அடையாளம் கண்டுகொள்வார்கள். இதை ஷாருக்கானும் அவரைக் கடவுளாக நினைக்கும் அவருடைய பக்தர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம். தவறு செய்ததாக யார் மீது சந்தேகம் ஏற்பட்டாலும் அவரைக் கைது செய்யும் உரிமை காவல் துறை அதிகாரிகளுக்கு உண்டு. சமீபத்தில் ஹார்வேர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு சில மணி நேரங்கள் அவர் காவல் துறை அதிகாரி ஒருவரால் விசாரிக்கப்பட்டார். அந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஒபாமா, அந்த அதிகாரி முட்டாள்தனமாகச் செயல்பட்டுவிட்டார் என்று கூறிவிட்டார். பின்னால் அவர் தான் அப்படிக் கூறியதன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

9/11-க்குப் பிறகு தீவிரவாதிகளின் தாக்குதல் மறுபடியும் நடந்துவிடுமோ என்று அமெரிக்கா பயந்துகொண்டிருக்கிறது. அமெரிக்க மக்களைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்க அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்கிறது, வெளிநாடுகளிலிருந்து வரும் எல்லோரையும் வரவேற்கும் அமெரிக்கா தீவிரவாதிகள் யாரையும் உள்ளே விடும் தவறைச் செய்யத் தயாராக இல்லை. அந்த முயற்சியில் கொஞ்சம் அதிகமாக நடந்துகொண்டாலும் அதில் தவறில்லை என்றே கூற வேண்டும்.

0 பேரு சொன்னாங்க: