சமீபத்தில் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டுக்கான (2009) கண்காணிப்புப் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள மதச் சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாகவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.
அதுமட்டுமல்ல; மதச் சுதந்திரத்தைப் பற்றி அதிகாரிகள், மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் விவாதிக்க இந்தியா வர இருப்பதாகவும் அதற்கு அனுமதி வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கேட்டுள்ளது. ஆனால், நல்லவேளையாக இந்திய அரசு அதற்கு விசா அளிக்க முன்வரவில்லை.
2007 டிசம்பரில் ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைக் கலவரம் வெடித்தது. இதில் 40 பேர் பலியாயினர்; 60 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்தனர். ஆனால், மாநில அரசு அதைத் தடுக்கவோ கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவோ போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறது அக்கமிஷன்.
இதேபோல 2002-ல் குஜராத்தில் ஹிந்து-முஸ்லிம் கலவரம் வெடித்தது. ஏராளமானோர் இதில் கொல்லப்பட்டனர். ஆனால், வன்முறைக்குக் காரணமானவர்களைக் கைது செய்து தண்டனையளிக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கமிஷன் தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் இந்தியாவில் வகுப்பு மோதலைத் தடுத்து நிறுத்தி மனிதநேயத்தைக் கடைபிடிக்குமாறு இந்தியாவை நிர்பந்திக்குமாறு அதிபர் பராக் ஒபாமாவை அமெரிக்க கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், பெலாரஸ், கியூபா, எகிப்து, இந்தோனேசியா, லாவோஸ், ரஷியக் குடியரசு, சோமாலியா, தாஜிகிஸ்தான், துருக்கி, வெனிசுலா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க கமிஷனின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
இராக் விவகாரத்தில் எப்படி நடந்துகொண்டோம் என்பதை அமெரிக்கா முதலில் தன்னைத்தானே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளட்டும். முன்னாள் அதிபர் புஷ், முஸ்லிம்களுக்கு எதிராக எப்படிச் செயல்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆப்கானிஸ்தான் மீதும், இராக் மீதும் அமெரிக்கப் படைகள் எப்படி குண்டுமழை பொழிந்தன? அங்குள்ள சாமானியர்கள் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பதும், போர்க் கைதிகள் குவான்டமானோ சிறையில் என்ன சித்தரவதைக்குள்ளானார்கள் என்பதும் உலக மக்கள் அறிந்ததே. அமெரிக்காவின் பல பகுதிகளில் இனவெறி தாக்குதல் அதிகரித்து வருவதும், பள்ளிகளில் குழந்தைகள் துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொலை செய்யும் அளவுக்கு அங்கு ஆயுதக் கலாசாரம் தலைதூக்கி வருவதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இந்த நிலையில் அமைதி, மனித நேயம் குறித்துப் பேசவோ விவாதிக்கவோ அமெரிக்காவுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாகக் கூறிக்கொண்டு பிறநாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது எந்தவகையில் நியாயமானது?
அமெரிக்க கண்காணிப்புப் பட்டியலில் இஸ்ரேலும் பாகிஸ்தானும் இடம்பெறாதது ஏனோ? இரண்டும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகள் என்ற காரணத்தினால்தானே?
ஆப்பிரிக்க-அமெரிக்கரான பராக் ஒபாமா, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது வேண்டுமானால் அமெரிக்காவுக்கு புதுமையாக இருக்கலாம். இந்தியாவில் குடியரசுத் தலைவர் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகிய இருவரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அமெரிக்கச் சமுதாயத்தில் நடைபெறும் இனவெறித் தாக்குதலை இந்தியா சுட்டிக்காட்டினால் என்னவாகும்?
பாகிஸ்தானில்கூட அந்த நாட்டு அரசு சிறுபான்மையினருக்கு பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்து வருகிறது. முஸ்லிம்களை தீவிரவாதிகளைப் போல் சித்திரித்து வரும் அமெரிக்கா பாகிஸ்தானை கண்டுகொள்ளாதது ஏன்?
110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பல்வேறு மதத்தினரும், பல்வேறு இனத்தவர்களும் வாழ்கின்றனர். தவறுகள் ஏதேனும் நடந்திருந்தால் அதைச் சட்டவிதிகளுக்கு உட்பட்டு எதிர்கொள்ள நீதித்துறையும் நிர்வாகத்துறையும் இருக்கிறது. மேலும் சம்பவங்களைத் தோலுரித்துக் காட்ட பத்திரிகைகளும் தகவல் சாதனங்களும் உள்ளன.
மதச்சார்பின்மை பற்றியும், மதசகிப்புத்தன்மை பற்றியும் அமெரிக்கா நமக்குக் கற்றுத்தர வேண்டியதில்லை. சகோதரத்துவம், அமைதி ஆகியவற்றை நாம் காலம் காலமாகப் பின்பற்றி வருகிறோம். சரிதானே?
Subscribe to:
Post Comments (Atom)
2 பேரு சொன்னாங்க:
உங்களைப் பற்றி முழுமையாக தெரியவில்லை. ஆனால் உங்கள் எழுத்துக்களைப் பார்க்கும் போது என்னுடைய இறந்து போன தகப்பனார் நினைவுக்கு வந்து போகிறார். காரணம் அவர் வாழ்ந்த வரைக்கும் வீட்டுக்கு கடைக்கு தினமணி செய்தித்தாள் மட்டும் தான் வரும். கல்லூரி வரைக்கும் அதைமட்டுமே படித்து விட்டு கோபம் கோபமாக வரும். வெவ்வேறு இடங்களில் படங்கள் பார்ப்பதாக தினந்தந்திக்கு அலைவதுண்டு.
அத்தனை கண்ணியமான எழுத்துக்களையும் தௌிவான விஷயங்களையும் மட்டுமே மறைமுகமாக படிக்க உதவிய திரு ஏ.என். சிவராமன் அவர்களுக்கும் உங்களுக்கும் பெரிதான வித்யாசம் எனக்குத் தெரியவில்லை.
தேவியர் இல்லம். திருப்பூர்.
http://texlords.wordpress.com
texlords.aol.in
THANKS SIR..
Post a Comment