Monday, August 31, 2009

ரஜினிகாந்த் கட்சி துவக்குவார் - ரசிகர்கள் மீண்டும் பரபரப்பு

தமிழக திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த், தற்போது நடித்து வரும், "எந்திரன்' படத்துக்குப் பின் கண்டிப்பாக அரசியல் கட்சி துவக்குவார் என, அவரது ரசிகர் கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1996ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது, தி.மு.க., - த.மா.கா., கூட்டணி ஆட்சியைப் பிடிக்க நடிகர் ரஜினிகாந்த், அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த அ.தி.மு.க.,வுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்ததே காரணம்.அப்போதே ரஜினி அரசியலுக்கு வருவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. அவரது ரசிகர்களும் அதையே விரும்பினர். ஆனால், ரஜினி அரசியலுக்கு வரவில்லை.தமிழகத்தில் அடுத்தடுத்து நடிகர்கள் அரசியலுக்கு வந்து புதிய கட்சி துவக்கி வருகின்றனர். தங்களுக்கு இருந்த ரசிகர் மன்றங் களை ஒருங்கிணைத்து தே.மு.தி.க.,வை விஜயகாந்தும், அ.இ.ச.ம.க., கட்சியை சரத்குமாரும் துவக்கினர்.அதேபோல், நடிகர் டி.ராஜேந்தரும் லட்சிய தி.மு.க.,வை நடத்தி வருகிறார். நடிகர் விஜய்யும் விரைவில் புதிய கட்சியை துவக்குவார் என்று கூறப்படுகிறது.ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து, தன் நலம்விரும்பிகளிடம் ஆலோசனை செய்துள்ளதாகவும், அவர் தற்போது நடித்து வரும் எந்திரன் படம் ரிலீசுக்குப் பின் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் கட்சி துவக்குவார் என்றும் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றத்தில் மாவட்ட பொறுப்பில் இருக்கும் சிலர் கூறியதாவது:தலைவர் ரஜினி அரசியலுக்கு வரும் முடிவை எடுத்து விட்டார். தற்போது அவர் நடித்து வரும் எந்திரனுக்கு பிறகு, கண்டிப்பாக மன்றங்களை ஒருங்கிணைத்து, அரசியல் கட்சி துவக்கவுள்ளார் என்பது அவரது நடவடிக்கையில் இருந்து தெரிகிறது. கடந்த 1996ம் ஆண்டுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட எந்த மன்றத்துக்கும் இதுவரை பதிவு எண் கொடுக்கப்படவில்லை. தற்போது, அந்த ஆண்டுக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட மன்றங்களுக்கு பதிவு எண் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவராகவும் தன்னை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் மூடில் இருப்பதால் தான், மக்கள் மத்தியில் செல்வாக்கின் உண்மை நிலையை அறிய, ரசிகர் மன்ற விழாக்களுக்கும், ரசிகர்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் தன் நலனில் அதிக அக்கறையுள்ள அண்ணன் சத்திய நாராயணராவை அனுப்பி வருகிறார். அவருடன் ரஜினிக்கு மருமகன் உறவுமுறையில் உள்ள சந்திரகாந்த் என்பவரும் தற்போது பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மக்களின் நாடித்துடிப்பை பார்த்து வருகின்றனர்.எந்திரன் படம் இன்னும் எட்டு மாதங்களில் முடியும் என தெரிகிறது. ஆகையால், அடுத் தாண்டு கண்டிப்பாக ரஜினி அரசியலில் காலடி எடுத்து வைப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

முடிவு எப்போது? சத்திய நாராயணராவ் பேட்டி:""எந்திரன் படம் முடிந்த பிறகு அரசியல் கட்சி துவங்குவது பற்றி ரஜினி நல்ல முடிவை அறிவிப்பார்,'' என்று அவரது அண்ணன் சத்தியநாராயணராவ் தெரிவித்தார்.திருச்சியில் நடந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வீட்டுத் திருமணங்களில் கலந்து கொள்ள நடிகர் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ், இவரது மருமகனும், கர்நாடக மாநில ரஜினி மன்ற தலைவருமான சந்திரகாந்த் ஆகியோர் நேற்று காலை திருச்சி வந்தனர்.சிதம்பரம் நகர ரசிகர் மன்ற நிர்வாகிகள், நடிகர் ரஜினி குறித்து தயாரித்த, "மக்கள் மனம் கவர்ந்த மன்னன்' "சிடி' வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சத்தியநாராயணராவ், நிருபர்களிடம் கூறியதாவது:ரசிகர் மன்ற நிர்வாகிகளின் அழைப்புக்கு இணங்கி திருமண விழாக்களில் கலந்து கொள்ள திருச்சி வந்துள்ளேன். அரசியல் கட்சி துவங்குவது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் ஏதும் நடத்தவில்லை. ரஜினி தற்போது எந்திரன் படப்பிடிப்பில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். அந்தப் படம் முடிந்ததும் அரசியல் கட்சி துவக்குவது குறித்து சரியான நேரத்தில், சரியான முடிவை அறிவிப்பார்.இவ்வாறு சத்தியநாராயணராவ் கூறினார்.

Saturday, August 29, 2009

விஜயகாந்த் + காங்கிரஸ் + விஜய் = தமிழகத்தில் ஆட்சி?

"திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க வேண்டும்' என, மாஜி மத்திய அமைச்சர் இளங்கோவன் அடிக்கடி வேண்டுகோள் விடுத்து வருகிறார். புதிய இளைஞர்களை கட்சியில் சேர்த்து, தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுலுக்கும் லட்சியமாக உள்ளது.

அதனால், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், மாஜி இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரை அழைத்து அவர்களின் கருத்துக்களை ராகுல் கேட்டறிந்து வருகிறார். தமிழக மக்களின் ஒட்டு மொத்த ஓட்டுகளை கவரும் வகையில் சினிமா பிரபலங்களை காங்கிரஸ் கூட்டணியில் இணைத்து வலுசேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ரகசிய திட்டத்தை தீட்டி, மாஜி மத்திய அமைச்சர் ஒருவர் ராகுலுக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார்.அவரது திட்டத்தின் முதல் கட்டமாக புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கடந்த 23ம் தேதி நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், முதல்வர் வைத்திலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். "அரசியலில் நுழைய விருப்பம். வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவேன்' என தனது ரசிகர்களுக்கு அரசியல் ஆசையை தூண்டி பேசினார் நடிகர் விஜய்.இந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் பேசும் போது, "மாணவ, மாணவிகளுக்கு விஜய் அதிகமான அறிவுரைகளை கூறியுள்ளார். அவற்றை முறையாக பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.

"காங்கிரசுடன் கூட்டணி வைக்கத் தயார்' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் பேசியுள்ளது, தமிழக காங்கிரசாருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
காங்கிரசை பலப்படுத்தி, தனித்து போட்டியிடும் வகையில், மாற்றியமைக்க ராகுல் ஒருபுறம் முயற்சி எடுத்து வரும் நிலையில், தற்போதுள்ள தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு இன்னொருபுறம் அச்சாரம் போடப்பட்டு வருகிறது."கூட்டணி தர்மத்திற்காக தி.மு.க., வை அனுசரிக்கிறோம், தமிழகத்தில் ஓராண்டுக்கு முன் 2010ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடத்த தி.மு.க., முடிவு செய்துள்ளது. பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என தி.மு.க., நினைக்கிறது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தொடர்ந்து நமக்கு சரிவு தான் ஏற்படும்' என்று வேலூர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் ஞானசேகரன் பரபரப்பாக பேசினார்.

தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்த ராகுல் எடுத்துவரும் முயற்சியின் ஒருபகுதியாகவே ஞானசேகரன் இப்படி பேசியதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி தொடருமா? என்ற கேள்வியை ஞானசேகரன் எழுப்பியுள்ளார்.டில்லியிலும் காங்கிரஸ் - தி.மு.க., தலைவர்கள் இடையே சுமூக உறவு இல்லை என கூறப்படுகிறது. இப்படி பல்வேறு திரைமறைவு அரசியலுக்கு மத்தியில், தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி வளர்ச்சி மற்றும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நடிகர் விஜயுடன் புது கூட்டணி அமைப்பது காங்கிரசுக்கு தமிழகத்தில் வெற்றியை தேடித் தரும் என்ற கருத்தை மாஜி மத்திய அமைச்சரின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.ராகுல் திட்டம் மற்றும் காங்கிரசாரின் விருப்பங்கள் எந்த அளவுக்கு பலனை அளிக்கப் போகின்றன என்பது விரைவில் தெரியவரும்.

சிறைகளில் தமிழ் இளைஞர்கள்? - சட்ட அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழும், சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுவிப்பது தொடர்பாக ஒரு விசாரணைத் திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்க சட்ட அமைச்சகத்திற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே கொலைத் தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடமாக காவலில் வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்புப் பகுதியைச் சேர்ந்த ஜே.ஏ. பிரான்சிஸ் என்பவர் தொடர்ந்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த சிறிலங்க உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம், சந்தேகத்தின் பேரில் கைது என்று சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பின், அவர்கள் மீது வழக்குத் தொடரவோ, சாட்சிகள் இல்லாத பட்சத்தில் அவர்களை விடுதலை செய்யவோ ஒரு அவசர வேலைத் திட்டத்தை நீதியமைச்சகத்தின் செயலருடன் சேர்ந்து தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு சட்ட அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரான்சிஸ் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அசோக என்.டி. சில்வா, “பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக விசாரணைகள் எதுவுமின்றிச் சிறைப்படுத்தியிருப்பது நீதியற்றச் செயல்” என்று கூறியுள்ளார்.

சிறிலங்க அரசின் இப்படிப்பட்ட கைதுகள், சிறைப்படுத்தல்கள் காரணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், அதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை நீதிபதி அசோக டி.என்.சில்வா கூறியுள்ளார்.

கொழும்புவில் உள்ள சிறைகளில் மட்டும் இப்படி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் 90 பேர் தங்களை விடுவிக்கக் கோரி சமீபத்தில் கால வரையற்ற பட்டினிப் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, August 28, 2009

ஜாமீனில் எடுக்காத அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி

திருட்டு வழக்கில் சிறையிலிருந்த போது, ஜாமீனில் எடுக்காத அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி, கிராம நிர்வாக அலுவலரிடம் சரணந்து தற்போது மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடலூர் மஞ்சக்குப்பம் நோதாஜி ரோட்டைச்சேர்ந்தவர் ஏழுமலை(57). இவரது மகன்கள் கோவிந்தசாமி(24), சம்பத்(22). இருவரும் புதுச்சேரி காட்டுக்குப்பத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.ஆட்டோ திருடிய வழக்கில் கடந்த 30ம் தேதி சம்பத் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது, அண்ணன் கோவிந்தசாமி ஒருமுறை கூட பார்க்கவில்லை. ஜாமீனில் எடுக்கவும் முயற்சிக்கவில்லை. தான் பதுங்கியிருந்த இடத்தை போலீசிற்கு காட்டிக் கொடுத்தது கோவிந்தசாமி தான் என்பது தெரியவந்ததால், சம்பத் ஆத்திரமடைந்தார்.

இந்நிலையில், நண்பர்களின் உதவியால் கடந்த 22ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த சம்பத் வீட்டிற்கு சென்று கோவிந்தசாமியிடம் தகராறு செய்தார். "நீ எனக்கு தம்பியே இல்லை' என கோவிந்தசாமி கூறியுள்ளார். ஆத்திரமடைந்த சம்பத் நேற்று முன்தினம் கன்னியக்கோவிலுக்கு சென்று குடித்துவிட்டு நள்ளிரவு வீட்டிற்கு வந்தார். கதவு பூட்டியிருந்ததால் பின் பக்கமாக சுவர் ஏறி குதித்து, வீட்டிற்குள் சென்று, தூங்கிக் கொண்டிருந்த கோவிந்தசாமியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார்.

புதுநகர் போலீசார் தேடி வந்த நிலையில், மஞ்சக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் தினகரன் முன் நேற்று காலை சரணடைந்தார். புதுநகர் போலீசில் சம்பத் ஒப்படைக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

விஜயகா‌ந்‌தி‌‌ற்கு ‌சி.‌பி.‌சி.ஐ.டி சம்மன்!!

செ‌ன்னை பனையூ‌ரி‌ல் ச‌மீப‌த்‌தி‌ல் நடைபெ‌ற்ற இர‌ட்டை கொலை வழ‌க்‌கி‌ல் தன‌க்கு தெ‌ரி‌ந்த ‌விவர‌‌ங்களை நே‌ரி‌ல் வ‌ந்து தெ‌ரி‌வி‌க்குமாறு தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌தி‌‌ற்கு ‌சி.பி.சி.ஐ.டி காவ‌ல்துறை‌யின‌ர் தா‌க்‌கீது அனு‌ப்‌பியு‌ள்ளன‌ர்.

பனையூ‌‌ர் த‌ம்‌ப‌தி‌யின‌ர் கொலையில் உண்மையான விசாரணை நடைபெறாது என்றும், வழக்கு விசாரணை நிலையிலேயே குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள் என்றும் ‌விஜயகா‌ந்‌த் கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றி‌யிரு‌ந்தா‌ர்.

மேலு‌ம் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்தாலும் அதையும் மக்கள் நம்பத்தயாராக இல்லை எ‌ன்று‌ம் கூ‌றி‌யிரு‌ந்த‌ா‌ர்.

இந்த வழக்கில் காவல்துறை சுதந்திரமாக செயல்படவிடப்படுமா? புலன்விசாரணை நியாயமாக நடைபெறுமா? உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா? அவர்கள் ஆளுங்கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

முறையாக குற்றம்சா‌ற்ற‌ப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்களா? அவர்களுக்கு தக்க ஆதாரங்கள் மூலம் காவல்துறை தண்டனையை பெற்றுத்தர முன்வருமா? எ‌ன்று‌ம் அடு‌க்கடு‌க்காக கேள்விகளை எழு‌ப்‌பி‌‌யிரு‌ந்தா‌ர் ‌விஜயகா‌ந்‌‌த்.

இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி காவ‌ல்துறை‌யின‌‌ர், இது தொடர்பாக விஜயகாந்துக்கு தா‌க்‌கீது அனுப்பியுள்ளனர். இந்த கொலை தொடர்பாக தெரிந்த தகவல்களை நேரில் வந்து தெரிவிக்குமாறு அந்த சம்மனில் கூறியிருப்பதாக தெரிகிறது.

சி.பி.சி.ஐ.டி காவ‌ல்துறை‌யின‌ரிடமிருந்து சம்மன் வந்திருப்பதையடுத்து, விஜயகாந்த் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட மூத்த தலைவர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த தா‌க்‌கீதுக்கு பதிலளிப்பது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Thursday, August 27, 2009

நடிகர் விஜய் ராஜ்யசபா எம்.பி ஆகிறார்!

வெகு விரைவில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார் நடிகர் விஜய். இவருக்கு ராஜ்யசபாவில் எம்.பி பதவியும், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவியும் வழங்கப்பட இருப்பதாக இன்றய இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. வரும் 2011 தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் விஜய் முக்கிய பாத்திரம் வகிப்பார் என்றும், ராகுல்காந்தியின் தமிழக சட்டசபை ஆட்சியை பிடிக்கும் கனவை நிறைவேற்ற பாடுபடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. திமுக ஆதரவாளராக இருந்த விஜய்யின் தந்தை சந்திரசேகர் இப்போது அரசியலில் புதிய அடி வைக்க இந்த வியூகத்தை பயன்படுத்தியுள்ளார். ஏற்கெனவே ஸ்டாலின் மகனின் திரைப்படத்தில் நடிப்பதற்கான சம்பள விவகாரத்தில் கருணாநிதி குடும்பத்திற்கும், விஜய் குடும்பத்திற்கும் முறுகல் ஏற்பட்டதாக செய்திகள் பரவியிருந்தன. இந்த நிலையில் விஜய் எடுத்துவைத்துள்ள அடி அவரைப் பொறுத்தவரை இலாபகரமானதாகவே இருக்கும். மு.கருணாநிதி குடும்பத்திற்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய நிலை அவருக்கு இல்லை.

ஏற்கெனவே அவர் நடித்த கடைசி மூன்று படங்களும் பலத்த அடி வாங்கியுள்ளன. தற்போது வரும் சிறிய பட்ஜட் படங்கள் பெரிய நடிகர் படங்களின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. கந்தசாமி படத்தை ஒரு கோடி பத்து இலட்சத்திற்கு வாங்கிய முதலீட்டாளர் தற்போது 40 இலட்சம் நஷ்டம் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் பல கோடிகளை இலகுவாகப் புரட்டும் அரசியல் தளத்திற்குள் விஜய் நுழைவது புத்தி சாதுர்யமானது என்று கருதப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் செல்லாக்காசாக இருக்கும் காங்கிரசை விஜய்யுடன் ரஜனி, அஜித் இணைந்து சென்றாலும் வெற்றிபெற வைப்பது கடினமாகவே இருக்கும். இருப்பினும் பேரம் படியாவிட்டால் விஜய் பல்டியடிக்கவும் இடமுண்டு.

Tuesday, August 25, 2009

இந்தியாவில் மதச் சிறுபான்மையினர் உரிமைகாக்க அமெரிக்காவின் ஆர்வம்!!!

சமீபத்தில் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டுக்கான (2009) கண்காணிப்புப் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள மதச் சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாகவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.

அதுமட்டுமல்ல; மதச் சுதந்திரத்தைப் பற்றி அதிகாரிகள், மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் விவாதிக்க இந்தியா வர இருப்பதாகவும் அதற்கு அனுமதி வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கேட்டுள்ளது. ஆனால், நல்லவேளையாக இந்திய அரசு அதற்கு விசா அளிக்க முன்வரவில்லை.

2007 டிசம்பரில் ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைக் கலவரம் வெடித்தது. இதில் 40 பேர் பலியாயினர்; 60 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்தனர். ஆனால், மாநில அரசு அதைத் தடுக்கவோ கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவோ போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறது அக்கமிஷன்.

இதேபோல 2002-ல் குஜராத்தில் ஹிந்து-முஸ்லிம் கலவரம் வெடித்தது. ஏராளமானோர் இதில் கொல்லப்பட்டனர். ஆனால், வன்முறைக்குக் காரணமானவர்களைக் கைது செய்து தண்டனையளிக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கமிஷன் தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் இந்தியாவில் வகுப்பு மோதலைத் தடுத்து நிறுத்தி மனிதநேயத்தைக் கடைபிடிக்குமாறு இந்தியாவை நிர்பந்திக்குமாறு அதிபர் பராக் ஒபாமாவை அமெரிக்க கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், பெலாரஸ், கியூபா, எகிப்து, இந்தோனேசியா, லாவோஸ், ரஷியக் குடியரசு, சோமாலியா, தாஜிகிஸ்தான், துருக்கி, வெனிசுலா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க கமிஷனின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.

இராக் விவகாரத்தில் எப்படி நடந்துகொண்டோம் என்பதை அமெரிக்கா முதலில் தன்னைத்தானே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளட்டும். முன்னாள் அதிபர் புஷ், முஸ்லிம்களுக்கு எதிராக எப்படிச் செயல்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆப்கானிஸ்தான் மீதும், இராக் மீதும் அமெரிக்கப் படைகள் எப்படி குண்டுமழை பொழிந்தன? அங்குள்ள சாமானியர்கள் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பதும், போர்க் கைதிகள் குவான்டமானோ சிறையில் என்ன சித்தரவதைக்குள்ளானார்கள் என்பதும் உலக மக்கள் அறிந்ததே. அமெரிக்காவின் பல பகுதிகளில் இனவெறி தாக்குதல் அதிகரித்து வருவதும், பள்ளிகளில் குழந்தைகள் துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொலை செய்யும் அளவுக்கு அங்கு ஆயுதக் கலாசாரம் தலைதூக்கி வருவதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்த நிலையில் அமைதி, மனித நேயம் குறித்துப் பேசவோ விவாதிக்கவோ அமெரிக்காவுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாகக் கூறிக்கொண்டு பிறநாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது எந்தவகையில் நியாயமானது?

அமெரிக்க கண்காணிப்புப் பட்டியலில் இஸ்ரேலும் பாகிஸ்தானும் இடம்பெறாதது ஏனோ? இரண்டும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகள் என்ற காரணத்தினால்தானே?

ஆப்பிரிக்க-அமெரிக்கரான பராக் ஒபாமா, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது வேண்டுமானால் அமெரிக்காவுக்கு புதுமையாக இருக்கலாம். இந்தியாவில் குடியரசுத் தலைவர் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகிய இருவரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அமெரிக்கச் சமுதாயத்தில் நடைபெறும் இனவெறித் தாக்குதலை இந்தியா சுட்டிக்காட்டினால் என்னவாகும்?

பாகிஸ்தானில்கூட அந்த நாட்டு அரசு சிறுபான்மையினருக்கு பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்து வருகிறது. முஸ்லிம்களை தீவிரவாதிகளைப் போல் சித்திரித்து வரும் அமெரிக்கா பாகிஸ்தானை கண்டுகொள்ளாதது ஏன்?

110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பல்வேறு மதத்தினரும், பல்வேறு இனத்தவர்களும் வாழ்கின்றனர். தவறுகள் ஏதேனும் நடந்திருந்தால் அதைச் சட்டவிதிகளுக்கு உட்பட்டு எதிர்கொள்ள நீதித்துறையும் நிர்வாகத்துறையும் இருக்கிறது. மேலும் சம்பவங்களைத் தோலுரித்துக் காட்ட பத்திரிகைகளும் தகவல் சாதனங்களும் உள்ளன.

மதச்சார்பின்மை பற்றியும், மதசகிப்புத்தன்மை பற்றியும் அமெரிக்கா நமக்குக் கற்றுத்தர வேண்டியதில்லை. சகோதரத்துவம், அமைதி ஆகியவற்றை நாம் காலம் காலமாகப் பின்பற்றி வருகிறோம். சரிதானே?

Saturday, August 22, 2009

ஷாருக்கான் என்ன கொக்கா?

ஹிந்தி நடிகர் ஷாருக்கான் அமெரிக்காவிற்குச் சென்றபோது அவரை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைத்து இரண்டு மணி நேரம் சோதனை போட்டதாகவும் அவருக்கு அதனால் அவமானம் ஏற்பட்டதாகவும் பிரபல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஹிந்து பத்திரிக்கை மூன்று நாட்கள் கலர் படங்களோடு அதுவும் முதல் பக்கத்தில் இச்செய்தியை வெளியிட்டிருந்தது. அமெரிக்காவில் ஒரு இந்தியர் அவமானப்படுத்தபட்டார் என்பதால் மட்டுமல்ல; ஒரு நடிகர் என்பதால் இதற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் போல் தெரிகிறது.

9/11-க்குப் பிறகு அமெரிக்கா முஸ்லீம் தீவிரவாதிகள் தன் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதில் மிகவும் குறியாக இருக்கிறது. அதனால் முஸ்லீம் பெயரான கான் என்னும் பெயர் கொண்டவர்களைத் தீவிரமாகச் சோதனை போடுகிறது. ஷாருக்கான் பெயரிலும் கான் இருப்பதால் அவரையும் சோதனை போட முடிவு செய்தனர் விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள். அதனால் அவரைச் சோதனை போட்டிருக்கிறார்கள். இதில் என்ன தவறு என்று எனக்குப் புரியவில்லை.

ஷாருக்கானைக் கடவுள் போல் நினைத்து வழிபடுவதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தியாவில் இருக்கலாம். அதனால் உலகமெங்கும் அவரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று எதிர்பார்ப்பது மடமையல்லவா? அமெரிக்காவில், அதுவும் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பிரிவில் வேலை பார்ப்பவர்கள் ஷாருக்கான் படங்களை விரும்பிப் பார்ப்பார்கள் என்றோ, அவரைப் பார்த்ததுமே அடையாளம் கண்டுகொண்டு அமெரிக்காவிற்குள் அவரை வரும்படி உபசரிப்பார்கள் என்றோ எப்படி எதிர்பார்க்க முடியும்? அவர்கள் அவர்களுடைய கடமையைச் செய்தார்கள் என்பதைத் தவிர அவர்கள் மேல் என்ன தவறு? அவரைக் கைது செய்து வேறு நாட்டிற்கு அனுப்பி சித்திரவதை செய்தார்களா என்ன?

இந்திய தூதரக அதிகாரிகளும் இதைப் பெரிதுபடுத்தியிருக்கிறார்கள். ஒரு சாதாரண இந்தியக் குடிமகனுக்கு இப்படி ஏற்பட்டிருந்தால் தூதரகம் இப்படி நடந்துகொண்டிருக்குமா? ஒரு நடிகருக்கு இப்படி நடந்தது என்பதால் மட்டுமே இப்படி பாய்ந்திருக்கிறது. நடிகர்கள் யாரும் இப்படித் தவறு செய்வதில்லை என்று சிலர் வக்காலத்து வாங்குகிறார்கள். இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு தாதாக்களொடு உறவு இருப்பதாகச் சந்தேகப்பட்டு நம் அரசே அவரைச் சிறையில் அடைத்து வைத்திருந்ததே. நடிகர்கள் என்பதால் மட்டுமே அவர்கள் மற்ற எல்லோரையும் விட நல்லவர்கள் என்று சொல்ல முடியுமா?

அமெரிக்கா தன்னை இப்படி நடத்தியதற்கு இனி அமெரிக்காவிற்கே போவதில்லை என்று ஷாருக்கான் முடிவெடுத்திருக்கிறாராம். குளத்தோடு கோபித்துக்கொண்டு போனவனுக்குத்தான் நஷ்டமே தவிர குளத்திற்கு எந்த நஷ்டமும் இல்லை. அமெரிக்காவிற்கே போவதில்லை என்று ஷாருக்கான் முடிவு செய்தால் அமெரிக்காவிற்கு எந்த நஷ்டமும் இல்லை. வேண்டுமானால் இவரை அமெரிக்காவிற்கு அழைத்து இந்திய சுதந்திர தினத்தில் கலந்துகொள்ள வைத்துவிட வேண்டும் என்று பித்தாய் இருந்தவர்களுக்கு இது நஷ்டமாக அமையலாம். இவர்கள் அமெரிக்கா செய்ததை எதிர்ப்பவர்கள் இனி எந்த அமெரிக்க கம்பெனிகளுக்கும் தாங்கள் வேலை செய்யப் போவதில்லை என்று முடிவு செய்து இந்தியாவிற்குத் திரும்புவார்களா? அமெரிக்க கம்பெனிகளைப் பகிஷ்காரம் செய்வார்களா?

ஆனானப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கலாம் அவர்களையே இப்படிச் சோதனை போட்டபோது அவர் அதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தக் கூட இல்லை. இந்த ஷாருக்கான் அவரை விட எந்த விதத்தில் உயர்ந்தவர்? இந்தியாவில் போல் இவரைப் பார்த்ததும் அமெரிக்காவிலும் எல்லோரும் இவரைத் தரிசிப்பார்கள் என்று ஷாருக்கான் எதிர்பார்த்ததன் எதிரொலிதான் அவருக்கு ஏற்பட்ட கோபம், அதன் விளைவாக விட்ட சவால் எல்லாம். உலகம் முழுவதும் இவரை அறியும் என்பது சுத்த அபத்தம். உலகில் இந்தியர்கள் - குறிப்பாக ஹிந்தியைப் புரிந்துகொள்பவர்கள் மட்டுமே இவரை எங்கும் அடையாளம் கண்டுகொள்வார்கள். இதை ஷாருக்கானும் அவரைக் கடவுளாக நினைக்கும் அவருடைய பக்தர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம். தவறு செய்ததாக யார் மீது சந்தேகம் ஏற்பட்டாலும் அவரைக் கைது செய்யும் உரிமை காவல் துறை அதிகாரிகளுக்கு உண்டு. சமீபத்தில் ஹார்வேர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு சில மணி நேரங்கள் அவர் காவல் துறை அதிகாரி ஒருவரால் விசாரிக்கப்பட்டார். அந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஒபாமா, அந்த அதிகாரி முட்டாள்தனமாகச் செயல்பட்டுவிட்டார் என்று கூறிவிட்டார். பின்னால் அவர் தான் அப்படிக் கூறியதன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

9/11-க்குப் பிறகு தீவிரவாதிகளின் தாக்குதல் மறுபடியும் நடந்துவிடுமோ என்று அமெரிக்கா பயந்துகொண்டிருக்கிறது. அமெரிக்க மக்களைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்க அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்கிறது, வெளிநாடுகளிலிருந்து வரும் எல்லோரையும் வரவேற்கும் அமெரிக்கா தீவிரவாதிகள் யாரையும் உள்ளே விடும் தவறைச் செய்யத் தயாராக இல்லை. அந்த முயற்சியில் கொஞ்சம் அதிகமாக நடந்துகொண்டாலும் அதில் தவறில்லை என்றே கூற வேண்டும்.

Friday, August 21, 2009

எங்கே போகிறது இந்திய கிரிக்கெட் அணி?

சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் ராகுல் திராவிடைச் சேர்த்திருப்பது முன்னாள் வீரர்களாலும் ஊடகங்களாலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, 2011 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணியை 2007 உலகக் கோப்பை தோல்வியிலிருந்தே தயார் செய்து வருவதாக கூறும் தேர்வு கொள்கைக்கு முரண்பாடாக அமைந்துள்ளது.

அவரது பேட்டிங் திறமை, அணியில் ஒரு வீரராக அவரது பங்களிப்பு ஆகியவற்றில் தன்னை பல்வேறு விதமாக நிரூபித்தவர்தான் திராவிட் என்பதில் ஐயமில்லை. 7-வது பேட்ஸ்மெனையோ, அல்லது கூடுதலாக ஒரு பந்து வீச்சாளரையோ ஒரு நாள் அணியில் சேர்க்கவேண்டிய நிர்பந்தமான காலக் கட்டங்களில் கங்கூலி தலைமியின் கீழ் விக்கெட் கீப்பர் பொறுப்பையும் ஏற்றவர் திராவிட். இந்த பொறுப்பேற்புகளை நாம் ஒரு போதும் மறுக்கப்போவதில்லை.

எனினும் அவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கியபோது 2011 உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு ஒரு பலமான அணியை தயார் செய்து, சிறப்பான அணியை உருவாக்கவே நீக்கம் செய்ததாக அணித் தேர்வுக் குழு கூறியது.

இந்த 2 ஆண்டுகளில் மீண்டும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இடம்பெற திராவிட் என்ன செய்து விட்டார்? ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் சில அபாரமான இன்னிங்ஸ்களை விளையாடினார். இதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட், அதுவும் மினி உலகக் கோப்பை என்று வர்ணிக்கப்படும் ஒரு முக்கியமான தொடருக்கு அணியை தேர்வு செய்யும்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் காட்டிய திறமையை கணக்கில் எடுத்துக் கொள்வது எப்படி என்று தெரியவில்லை!

ஒரு நாள் போட்டியிலிருந்து தன்னை நீக்கி விட்டதற்கு பாடம் புகட்ட டெஸ்ட் போட்டிகளில் அதிரடி இன்னிங்ஸ்கள் எதையும் விளையாடினாரா? இல்லை. இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இவர் கிரகாம் ஸ்வான், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துகளில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆஸ்ட்ரேலியாவில் கும்ளே தலைமை இந்திய அணி பயணம் மேற்கொண்டபோது சர்ச்சைக்குரிய அந்த தொடரில் அவர் நாம் வெற்றி பெற்ற பெர்த் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 91 ரன்களை எடுத்தார்.

அதே ஆஸ்ட்ரேலிய அணி மீண்டும் இந்தியா வந்த போதும் திராவிடின் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இந்த பேட்டிங் வரலாற்றை வைத்துத்தான் அவரை ஒரு நாள் அணிக்கு தேர்வு செய்வதா வேண்டாமா என்று முடிவு செய்யப்பட்டிருக்கவேண்டும். ஐ.பி.எல். கிரிக்கெட் எவ்வளவுதான் சவாலான ஆட்டமாக இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வீரருக்கு கொடுக்கப்படும் நெருக்கடி, அழுத்தம் கொடுக்கப்பட மாட்டாது என்பதை முன்னணி வீரர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

நியூஸீலாந்திற்கு இந்தியா பயணம் மேற்கொண்ட போது பலமான இந்திய 20- 20 அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வி தழுவியது. ஆனால் இருபதுக்கு 20 தோல்வியை வைத்து ஒரு நாள் கிரிக்கெட்டை நாம் கணிக்க முடியாது என்று பலரும் கூறியது பின்பு இந்தியா நியூஸீலாந்தை 3- 1 என்று வெற்றி பெற்றதன் மூலம் நிரூபணமானது. இப்படியிருக்கையில், இருபதுக்கு 20 போட்டிகளில் அதுவும் உள் நாட்டு 20- 20 தொடரான ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எடுக்கும் ரன்கள் எந்த அளவிற்கு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் பயனளிக்கும் என்பது தெரியவில்லை.

ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்ற பிறகு, இலங்கையில் இரண்டு ஒரு நாள் தொடர், நியூஸீலாந்து தொடர், இங்கிலாந்திற்கு எதிரான தொடர், சமீபமாக மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடர் என்று திராவிட் இல்லாமல் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதுவும் ஒரு சில போட்டிகளில் சேவாகும் இல்லை, சச்சின் டெண்டுல்கரும் இல்லை. இருப்பினும் தொடரை இந்தியா இழக்கவில்லை. மாறாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வரிந்து கட்டி ரன்களை குவித்த வீரர்களுடன் இருபதுக்கு 20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா தோல்வி தழுவியது. மீண்டும் சேவாக் அணியில் காயம் காரணமாக இடம்பெறமுடியவில்லை.

பின்னால் களமிறங்கி நன்றாக விளையாடக்கூடிய ரோஹித் ஷர்மாவை துவக்க வீரராக களமிறக்கி அவர் சரியாக விளையாடவில்லை என்று கூறி தற்போது அணியிலிருந்து நீக்கியிருப்பது சரியான முடிவாகத் தெரியவில்லை.

அப்படியே அவர் நீக்கப்பட்டிருந்தாலும் அவரது இடத்தில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வரும் வீரத் கோலியைத்தான் தேர்வு செய்திருக்கவேண்டும், கோலி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சில அபாரமான இன்னிக்ஸ்களை விளையாடியதோடு, ஆஸ்ட்ரேலியாவில் சமீபமாக நடைபெற்ற 4 நாடுகளுக்கு இடையிலான எமர்ஜிங் வீரர்கள் ஒரு நாள் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல அவரது பேட்டிங்கே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அவர் பந்து வீச்சிலும் சிக்கனமானவர். அனைத்திற்கும் மேலாக ஸ்லிப், பாயிண்ட், கல்லி மட்டும் அல்லாமல் எந்த இடத்திலும் அவர் மிகச்சிறந்த ஃபீல்டர்.

கோலி ஒரு எதிர்கால இந்திய வீரர். அவருக்கு வாய்ப்பளிக்காமல் 2 ஆண்டுகளில் எந்த வித ஒரு நாள் கிரிக்கெட்டிலும் பங்கு பெறாத திராவிடை எப்படி தேர்வு செய்ய முடியும்?

ராபின் உத்தப்பாவிற்கு கூட ஒரு வாய்ப்பு அளித்துப் பார்த்திருக்கலாம். ஆனால் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தினேஷ் கார்த்திக் மேல் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார். திராவிடிற்கு பதிலாக பத்ரிநாத்தை அணியில் எடுத்திருந்தால் கூட ஒரு நியாயம் இருந்திருக்கும். ஏனெனில் பத்ரிநாத்திற்கு வாய்ப்பே அளிக்காமல், தேர்வு செய்து பல தொடர்களில் ஓய்வறை பார்வையாளராக உட்கார வைக்கப்பட்டுள்ளார். வாய்ப்பு கொடுக்காமலேயே அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன் அடிப்படை என்னவென்றும் புரியவில்லை.

ஐ.பி.எல். கிரிக்கெட் இந்தியாவின் மறைந்திருக்கும் இளம் திறமைகளை கண்டுபிடிக்கத்தான் என்று கூறி கொண்டு மீண்டும் 35 வயதான திராவிடிடம் போய் தஞ்சமடைந்திருப்பது தேர்வுக் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என்பதோடு, இளம் வீரர்களின் நம்பிக்கையையும் தகர்ப்பதாக உள்ளது. அதே போல் காரணமில்லாமல் நீக்கப்பட்டிருக்கும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிராக்யன் ஓஜா. இவரை எமர்ஜிங் அணியில் தேர்வு செய்யாமல், அமித் மிஷ்ராவை தேர்வு செய்தனர். பிராக்யன் ஓஜா விளையாடிய வரையில் எதிரணியினரின் நடுக்கள வீரர்களை குறி வைத்து விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமையுடையவர் என்பதை நிரூபித்தார். அமித் மிஷ்ராவைக் காட்டிலும் தற்போது அனுபவசாலி ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

ஒரு புறம் இந்திய அணிக்கு நிலைத்தன்மையை ஏற்படுத்த அனுபவம் தேவை. அதாவது திராவிட் தேவை. மறு புறம் அனுபவம் பெற்று சிறப்பாக பங்களிக்க துடிக்கும் பிராக்யன் ஓஜா தேவையில்லை. ஒரு நாள் கிரிக்கெட் விளையாடாத அமித் மிஷ்ரா தேவை. இது போன்ற முரண்பாடுகள் இருக்கிறது என்பதை மட்டும் நாம் பார்த்தால் போதுமானது.

பிரவீண் குமார் மேற்கிந்திய தொடரில் சரியாக வீசவில்லை. ஆனால் அவர் மீண்டும் இடம்பெற்றுள்ளார். மேற்கிந்திய தொடரில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டுள்ளார். முனாஃப் படேலுக்காக பேசுவதற்கு ஆளில்லை என்பதனால் அவர் அணித் தேர்வில் பரிசீலிக்கப்படக்கூட இல்லை.

எமர்ஜிங் அணியில் சிறப்பாக வீசியதற்காக அமித் மிஷ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். எமர்ஜிங் அணியில் சிறப்பாக விளையாடிய வீரத் கோலி தேர்வு செய்யப்படவில்லை. பத்ரிநாத் தேர்வு செய்யப்படவில்லை. தினேஷ் கார்த்திக் அணியில் எப்படி தொடர்ந்து நீடிக்க முடிகிறது என்பது புதிராகவே உள்ளது. திராவிடை மீண்டும் அணியில் தேர்வு செய்திருப்பது பற்றி அனைவரும் வரவேற்பு கொடுத்துள்ள நிலையில் திராவிடின் ஒட்டு மொத்த ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் பங்களிப்பையும் நாம் ஒரு விமர்சனப் பார்வைக்கு உட்படுத்துவோம். ஏனெனில் திராவிட் அணிக்குள் வரும்போது வினோத் காம்ப்ளி போன்ற அதிரடி பேட்ஸ்மென் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வினோத் காம்ப்ளியின் டெஸ்ட் சராசரி 54 என்பது குறிப்பிடத்தக்கது.

1996ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு எதிராக சிங்கப்பூரில் தன் முதல் ஒரு நாள் போட்டியை விளையாட தொடங்கிய திராவிட் சரியாக 10-வது போட்டியில்தான் பாகிஸ்தானுக்கு எதிராக டொரோன்டோ மைதானத்தில் 90 ரன்களை எடுத்து முதல் அரைசதம் எடுத்தார். அதற்கு அடுத்த அரைசதம் 4 போட்டிகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியாவில் எடுக்கப்படுகிறது. 62 ரன்களை எடுக்கிறார். இந்தியா தோல்வியடைகிறது. 87 பந்துகளில் 62 ரன்களை திராவிட் எடுக்கிறார். இது பிரச்சனையில்லை. ஆனால் அவ்வளவு நேரம் பந்து வீச்சை பார்த்த சிறந்த வீரர் திராவிட் அந்தப் போட்டியை வென்றிருக்கவேண்டும். ஆனால் இல்லை.

அதன் பிறகும் சில அரை சதங்களை எடுக்கிறார். ஆனால் ஒவ்வொரு அரைசதத்திற்கு இடையிலும் குறைந்தது 4 அல்லது 5 போட்டிகள் இடைவெளி. அதாவது சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

மேலும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுப்பதும், அதிக சராசரியை வைப்பதும் பெரிய விஷயமல்ல. ஏனெனில் சொத்தை அணிகள் அதில் நிறைய இடம்பெறுகின்றன. இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை போன்ற பந்து வீச்சு பலமாக உள்ள அணிகளுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட ஒரு தினப் போட்டித் தொடரில் சீரான முறையில் ரன்களை திராவிட் குவித்திருக்கிறாரா என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றமே விஞ்சும்.

1996, 98, 2000, 2007, ஆகிய ஆண்டுகளில் 35 ரன்கள் சராசரியை பராமரிக்க போராடியுள்ளார் திராவிட். மேலும் அவரது உச்சகாலத்தில் கூட எதிரணியினரின் உத்தி வகுப்பு விவாதங்களில் திராவிடை ஒரு பெரிய அச்சுறுத்தலாக எந்த அணியும் கருதவில்லை. சச்சின், சேவாக், யுவ்ராஜ், ஏன் கயீஃப், தினேஷ் மோங்கியா போன்றோர் கூட எதிரணியினரின் உத்தி வகுப்பு விவாதங்களில் ஒரு அச்சுறுத்தலாக பேசப்பட்டிருப்பார்கள். ஆனால் திராவிட் ஒரு நாளும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்ததில்லை.

மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு போதும் 50 ரன்கள் சராசரியை அவரது உச்சகாலத்தில் கூட திராவிட் வைத்திருந்ததில்லை. தோனி தற்போது ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு நீண்ட நாட்களுக்கு முதலாம் இடத்தில் நீடிக்கிறார் என்றால் அவரது சீரான ரன் குவிப்புதான் காரணம். 50 ரன்கள் சராசரியையும் வைத்திருந்தார் தோனி. இப்போதும் இவரது சராசரி 50 ரன்களுக்கு சற்றே குறைவு.

தற்போது வந்துள்ள கௌதம் கம்பீர், யூசுஃப் பத்தான், சுரேஷ் ரெய்னா போன்றோரைக் கூட எதிரணியினர் தங்கள் வெற்றிக்கு பங்கம் விளைவிக்கும் அச்சுறுத்தலாகவே கருதுவர். ஆனால் உலகின் எந்த ஒரு முன்னணி கிரிக்கெட் அணியின் கேப்டனையும் அழைத்து திராவிட் பற்றி கேட்டால் ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் பேட்டிங் பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றே கூறுவார்கள். திடீரென அவரை அணியில் தேர்வு செய்து விட்டார்கள் என்பதற்காக அவர் 'லொட்டு' வைத்து நம்மை வெறுப்பேற்றிய காலங்களை நாம் மறக்க முடியாது.

மேலும் இப்போது அணியில் விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ரன்கள் ஓடுவதை ஒரு உத்தியாகவே இந்திய வீரரகள் வளர்த்து வருகின்றனர். திராவிட் இந்த இளம் வீரர்களின் ஓட்டத்திற்கு ஈடு கொடுப்பாரா என்பது சந்தேகமே. இவருடன் ஓட முடியாமல் கம்பீர், ரெய்னா, ஏன் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்கள் கூட ரன் அவுட் ஆகும் வாய்ப்பு உள்ளது.

சில சமயங்களில் பந்துகளை சாப்பிட்டு எதிர் முனையில் நிற்கும் இளம் வீரர்களுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் வெறுப்பேற்றும் தருணங்களையும் நாம் மறுக்க முடியாது. இருபதுக்கு 20 க்ரிக்கெட்டில் சில புதிய ஷாட்களை இவர் விளையாடி (அதாவது திராவிடிற்கு அது புதிய ஷாட்) ரன்களை எடுத்தார் என்பதற்காக அதே உத்தியை அவர் வரவிருக்கும் ஒரு நாள் தொடரிலும் கடைபிடிப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஒரு சில அரை சதங்களை வேண்டுமானால் அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியுமே தவிர அது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பாக இருக்குமா என்றெல்லாம் நாம் உடனடியாக கூற முடியாது.

ஆகவே அபிஷேக் நாயர் போன்ற வீரர்களை 11-ற்குள் எடுத்து திராவிடை குறைவாக பயன்படுத்தினால் நல்லது என்றே தோன்றுகிறது. மீண்டும் 3-ஆம் இடம் என்ற முக்கிய நிலையில் அவருக்கு நிரந்தரமாக ஒரு இடம் கொடுப்பது என்பது அணியை பின்னடைவிற்கு இட்டுச்செல்லும் என்பது உறுதி. தோனிக்கு இன்று இருக்கும் முக்கிய சவால் என்னவெனில் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதல்ல. திராவிடை எவ்வளவு சிக்கனமாக பயன்படுத்துகிறார் என்பதிலேயே உள்ளது.

Wednesday, August 12, 2009

யாகூ + மைக்ரோசாஃப்ட் = புதிய ஒப்பந்தம் | நோக்கம்?

யாகூ இணையத்தில் நவீன தேடல் தொழில்நுட்பத்துக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் கையேந்தியிருக்கிறது. இதற்காக கடந்த 29-ம் தேதி இரு நிறுவனங்களும் ஒப்பந்தமும் செய்து கொண்டிருக்கின்றன. உண்மையில் தோல்விக்கான யாகூவின் ஒப்புதல்தான் இந்த ஒப்பந்தம். யாகூவிடம் தனித்து வெற்றி பெறுவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை என்பதும் இதன்மூலம் வெளிப்படையாகியிருக்கிறது.

இரு நிறுவனங்களும் ஏதோ மனமுவந்து இந்தக் கூட்டுக்கு ஒப்புக்கொண்டிருக்கின்றன என நினைத்தால் அது தவறு. இந்த நிறுவனங்களுக்கு கைகோர்ப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதுதான் உண்மை.

கடந்த சில ஆண்டுகளாகவே கூகுளின் வளர்ச்சியை எதிர்கொள்ள முடியாத மைக்ரோசாஃப்ட், யாகூவைக் கைப்பற்றுவதில் குறியாக இருந்தது. கடந்த ஆண்டில் 44 பில்லியன் டாலர்களுக்கு ஒட்டுமொத்தமாக யாகூவை விலை பேசியது. இந்த பேரம் படியாமல் போனதால், இப்போது புதிய ஒப்பந்தம் போட்டு யாகூவை வளைத்திருக்கிறது மைக்ரோசாஃப்ட்.

இந்த ஒப்பந்தப்படி, யாகூ இணையதளத்தில் இயங்கிவரும் தேடும் வசதி, மைக்ரோசாஃப்டின் "பிங்' தேடுபொறியின் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும். இதற்குப் பதிலாக மைக்ரோசாஃப்டின் ஆன்லைன் விளம்பரங்களைச் சந்தைப்படுத்தும் பணியை யாகூ மேற்கொள்ளும். இதற்காக 400 பேர் கொண்ட யாகூ ஊழியர் குழுவை மைக்ரோசாஃப்ட் சுவீகரித்துக் கொள்ள இருக்கிறது. யாகூ தேடுபொறி, பிங் உதவியுடன் செயல்பட்டாலும் தேடல் வருவாயில் 88 சதவீதம் யாகூவுக்கே கிடைக்கும் என்கிறது இந்த ஒப்பந்தம்.

10 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்க இந்த ஒப்பந்தத்தின் முதல் நோக்கம், இணையத் தேடல் சந்தையில் 65 சதவீதத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் கூகுளை வீழ்த்துவதுதான் என்பதில் சந்தேகமேயில்லை.

இரண்டாவது நோக்கம், வீழ்ந்து கிடக்கும் யாகூவைச் சுதாரிக்கச் செய்வது. இதற்காக யாகூவுக்கு 4 பில்லியன் டாலர்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கொடுத்து உதவப் போவதாகவும் பேச்சு அடிபட்டது. இதனால், ஒப்பந்தம் கையெழுத்தாவதற்குச் சற்று முன்வரை யாகூவின் பங்குகளின் மதிப்பு சரசரவென உயர்ந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி, நிதியுதவி எதுவும் தரப்படாததால், யாகூ பங்குகள் சரியத் தொடங்கின. அதேநாளில் மைக்ரோசாஃப்ட் பங்குகளின் விலை சற்று உயர்ந்தது. இதிலிருந்தே ஒப்பந்தம் யாருக்குச் சாதகமானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

யாகூ முதலீட்டாளர்கள் இப்போது தலையில் கையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக யாகூவை விற்றிருந்தால்கூட, ஒரு பங்குக்கு 33 டாலர்கள் கிடைத்திருக்கும். ஆனால், இன்று அந்த விலையில் பாதிக்கும் கீழே பங்குகளின் மதிப்பு குறைந்து கொண்டிருக்கிறது.

இருந்தாலும், இந்தப் புதிய கூட்டு மூலம் தேடுபொறிச் சந்தையிலும் பங்குகளின் விலையிலும் ஒரு குறிப்பிட்ட இலக்கை (அறிவிக்கப்படவில்லை) ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (இதுவும் அறிவிக்கப்படவில்லை) எட்ட முடியாவிட்டால் உறவை முறித்துக் கொள்ளலாம் என்னும் விதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது யாகூவுக்கு மிகச் சாதகமானது. எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், சிறிய அளவில் நிதியுதவியை அளிக்க மைக்ரோசாஃப்ட் முன்வந்திருக்கிறது. இப்போதைய நிதிநெருக்கடியைச் சமாளிக்க இந்த நிதி யாகூவுக்கு உதவும்.

இன்னொரு பக்கம், இந்த ஒப்பந்தத்துக்குப் பின்னால் யாகூவை வீழ்த்தும் சதி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அதாவது, யாகூ இணையதளத்தில் பிங் தொழில்நுட்பத்துடன் கூடிய தேடல் வசதி அமைக்கப்பட்டாலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது இணையதளங்களில் பிங் தேடும் வசதியைத் தொடர்ந்து இயக்கும். இதுபோக, தனியாக பிங் இணையதளமும் செயல்படும். இவற்றுக்கு எந்தக் கட்டுப்பாடும் ஒப்பந்தத்தில் இல்லை. இதனால், தேடல் சந்தையில் மைக்ரோசாஃப்டின் பங்கு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும்.

அதேநேரம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமது தேடல் தொழில்நுட்பத்தை விட பிங் தொழில்நுட்பம் சிறந்தது என யாகூ மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறது. இதனால் பிங் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அந்தப் பரபரப்பு, யாகூ இணையதளத்தில் தேடுவதைவிட பிங் இணையதளத்துக்கே சென்று தேடலாம் என்கிற மனோபாவத்தை இணையத்தைப் பயன்படுத்துவோர் மத்தியில் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதனால் பிங் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஆக, பிங் தேடுபொறியைப் புதிதாகப் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர், யாகூவைக் கைவிட்டுவிட்டு வந்தவர்களாக இருப்பார்களேயொழிய, கூகுளிலிருந்து வந்தவர்களாக இருக்கப்போவதில்லை. இதனால், கூகுளை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறாமல் போவதுடன், தனது தேடல் சந்தையையும் யாகூ இழக்க வேண்டியிருக்கும்.

எப்படியோ மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆக்டோபஸ் கரங்களில் யாகூ சிக்கிவிட்டது. தூக்கி விடுவதும் போட்டு உடைப்பதும் கால மாற்றங்களைப் பொறுத்தது.

Tuesday, August 11, 2009

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? என்பது பற்றிய சில யோசனைகளை பொது ம‌க்களு‌க்கு மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதனை ‌பி‌ன்ப‌ற்‌றி ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பரவுவதை தடு‌ப்போ‌ம்.

தினமு‌ம் குறை‌ந்தப‌ட்ச‌ம் ஒரு வேளை சு‌த்தமான ‌நீ‌ரி‌ல் கு‌ளியு‌ங்க‌ள். நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பை‌க் கொ‌ண்டு அடிக்கடி கைகளை கழுவுங்கள். குழாய் தண்ணீரில் குறைந்த பட்சம் 15 வினாடிகள் கைகளை அலசுங்கள்.

வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று ‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை‌, கா‌ல், முக‌ம், கழு‌த்து‌ப் பகு‌திகளை சு‌த்தமான த‌ண்‌ணீரா‌ல் ந‌ன்கு கழுவு‌ங்க‌ள். இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு உற‌க்க‌ம் அவ‌சிய‌ம். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு தானிய வகைகள், பசுமையான காய்கறிகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுங்கள்.

மது அருந்தினால் உடலில் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி குறையு‌ம். இதனா‌ல் பன்றி காய்ச்சல் போ‌ன்ற நோய்க்கிருமிக‌ள் உடலு‌க்கு‌ள் எ‌ளிதாக ஊடுருவு‌ம் எ‌ன்பதா‌ல் மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.

மிதமான உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால், தினசரி 30 முதல் 40 நிமிடம் வேகமான நடை‌ப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருங்கள்.

இருமுவதன் மூலமும், தும்முவதன் மூலமும் பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.

தேவை இல்லாமல் வெளியில் செல்வதையும், கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிருங்கள். கண்கள், மூக்கு, வாய் மூலம் நோய்க்கிருமிகள் உடலுக்குள் செல்லும் என்பதால் அவ‌ற்றை தொடுவதையும் தவிருங்கள்.உட‌ல் நல‌க் குறைவை‌த் த‌விர வேறு எ‌ந்த‌க் காரண‌த்‌தி‌ற்காகவு‌ம் குழ‌ந்தைகளை மரு‌த்துவமனை‌க்கு அழை‌த்து வரா‌தீ‌ர்க‌ள்.

குழ‌ந்தைகளை வெ‌ளி‌யி‌ல் கொ‌ண்டு செ‌ல்வதை‌த் த‌விரு‌ங்க‌ள். வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு வ‌ந்தது‌ம் குழ‌ந்தைகளை‌த் தூ‌க்கா‌தீ‌ர்‌க‌ள். உடனடியாக உடலை சு‌த்த‌ம் செ‌ய்த ‌பி‌ன்னரே அடு‌த்த வேலையை‌த் துவ‌க்கு‌ங்கள‌். இருமல், காய்ச்சல் இருந்தால் மரு‌த்துவரை சந்தித்து ஆலோசித்து, அவரது யோசனைகளின்படி மருந்து சாப்பிடுங்கள்.

சாதாரண கா‌ய்‌ச்ச‌ல் எ‌ன்று ‌நீ‌ங்களாக எ‌ந்த மரு‌ந்தையு‌ம் வா‌ங்‌கி சா‌ப்‌பிடா‌தீ‌ர்க‌ள். கா‌ய்‌ச்ச‌ல் வ‌ந்தவ‌ரி‌ன் அரு‌கி‌ல் செ‌ல்வதை த‌வி‌ர்‌த்து‌விடு‌ங்க‌ள். குழ‌ந்தைகளையு‌ம் அனு‌ப்ப வே‌ண்டா‌ம்.
வெ‌ளி நாடு ம‌ற்று‌ம் வெ‌ளி மா‌நில‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வ‌ந்தவ‌ர்களை செ‌ன்று பா‌ர்‌ப்பதை‌த் த‌வி‌ர்‌த்து‌விடு‌ங்க‌ள்.

பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க அவ்வப்போது அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை தெரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொள்ளுங்கள்.