திருச்சியிலுள்ள வழிவிடு முருகன் கோவிலின் பூசாரிதான் நான் கடந்த 10 ஆண்டுகளாக சபரிமலை செல்லும்போதும் எனக்கு இருமுடி கட்டி மலைக்கனுப்பும் குருசாமி. மண்ணச்சநல்லூர் அவரது சொந்தவூர், வருடம் முழுவதுமே மாலை போட்டிருக்கும் தீவிர பக்தர் அவர். முதல்தடவை அவரைப் பார்த்ததும் பேசியதும் இன்னும் என் நினைவில்.......வத்தி சுத்திக்கோங்க!
பக்தர்கள் வராதபோது சாமியார் என்னைப் பார்த்து சினேக பாவத்துடன் புன்னகைத்தார். நானும் லேசாகச் சிரித்தேன்.
''தம்பி எந்த ஊரிலிருந்து வர்றீங்க?'' என்று கேட்டார்.
''சென்னையிலிருந்து வர்றேங்க''.
''எத்தனாவது தடவை இது?''.
''முதல் தடவையாக இப்பத்தான் வர்றேன்''.
''சென்னையில் என்ன வேலை செய்றீங்க?''
''தேடிகிட்டிருக்கிறேன்''
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது இடையிடையே பக்தர்கள் வரும்போது பேச்சு தடைப்படும். பக்தர்கள் வராதபோது பேச்சு மீண்டும் தொடரும். கொஞ்சம் ஆருடம் தெரிந்த அவர் என் பிறந்த நாளைக் கேட்டார். அமாவாசை என்றேன். நீங்க தினம் கோயிலுக்குப் போகாட்டியும் பரவாயில்லை. வருடாவருடம் சபரிமலையையாவது சென்று வாருங்கள் என்றார்.
"தம்பி மலை இயற்கை நமக்களித்த மிகப் பெரிய கொடை. மனிதர்கள், கோயில் கட்டலாம். குளம் வெட்டலாம், மாட மாளிகை கட்டலாம். விஞ்ஞானத்தினால் எதை, எதையெல்லாமோ கண்டுபிடிக்கலாம். ஆனால் ஒரு மலையை மனிதன் சிருஷ்டிக்க முடியாது. அதிலும் இந்த மலை நெருப்பை உள்வாங்கி, உள்வாங்கிக் கந்தக மலையாகயிருக்கிறது. மலை, இயற்கை, மரம், இதையெல்லாம் ரசிக்கின்ற மனம், சக மனிதன் மேல் இரக்கம் கொள்வது, மதிப்பது இதெல்லாம் இப்போது தமிழ்க் கவிதைகளில்தான் இருக்கிறது. நானும் நவீன இலக்கியம் படிச்சவன்தான். ரெம்பப் படிச்சதினாலதான் இந்தச் சாதாரண மனிதர்களோடு என்னால் அதிகமாக ஒட்ட முடியலை'' என்றார் சாமியார்.
சாமியாரை நான் இப்போது பார்க்கும் பார்வையில் மதிப்பு அதிகமாகயிருந்தது.
''சரி நேரமாகி விட்டது. நான் அடுத்த முறை வரும்போது அவசியம் உங்களை வந்து பார்க்கிறேன்'' என்று கூறி விடை பெற்றேன்.
அடுத்த வருடம் போகும்போது சாமியாரைப் போய்ப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் சாமியாரின் முகம் பெளர்ணமியானது.
''என்ன தம்பி இப்பத்தான் வர்றீங்களா?''
''ஆமாம் சாமி நேற்று வேலையிருந்தது. அதுதான் லேட்''
''பரவாயில்லை. இன்று மாலை முடிகட்டி இரவே கிளம்பிடலாம்.''
''ஐயா! நீங்க எப்படி சாமியாரானீர்கள்.''
சாமியார் சொன்னதைச் சுருக்கமாகச் சொல்கிறேன். சென்னையில் பெரிய தொழிலதிபர் பெயரைச் சொல்லி, (தமிழ்நாடு பூராவும் அவருக்கு நல்ல பெயரிருக்கிறது) அவரிடம்தான் பதினைந்து வருஷமாக உதவியாளராகப் பணியாற்றினாராம். இந்தத் சபரிமலைக்கு முதல் முதலாக அவரோடதான் வந்தாராம். தனக்கு அவர் பெரிசாக எதுவுமே செய்யலை என்றார். கொஞ்சம், கொஞ்சமாக வாழ்வின் மீது வெறுப்பு வந்து சாமியாரானாராம்.
''அந்தப் பெரிய மனிதர் ரொம்ப நல்லவர் என்று ஊருக்குள்ளே ஒரு பெயரிருக்கிறது. அவர் உங்களுக்கு ஏன் ஒன்றும் செய்யவில்லை?'' என்றேன்.
''இதைப் போய் நீ அவரிடம்தான் கேட்கணும். தம்பி, வாழ்க்கையில் எல்லா மனிதனுமே தன்னைச் சுற்றி ஒரு மாயத் தோற்றத்தைக் கட்டி எழுப்பி வைத்திருக்கிறான். அதை ஒவ்வொரு நிமிடமும் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வருகிறான். அது உடைந்து போனால் வாழ்க்கையே அவனுக்கு நிர்மூலமாகி விடும். ஒரு மனிதனைப் பற்றி உருவாகியிருக்கும் வெளித் தோற்றத்திற்கும் அவன் உள்ளத்துக்கும் சம்பந்தமே கிடையாது. இது நான் அனுபவத்தில் கண்டது.''
கேட்ட எனக்கு ஆச்சரியமாகயிருந்தது.
''ஒரு தடவை சபரிமலை வரும்போது திரும்ப சென்னைக்குப் போக மனமில்லை. இங்கேயே சுற்றித் திரிந்தேன். எனக்கு இந்த ஊர், இந்த மலை, இங்குள்ள மக்கள் எல்லாமே ரொம்பப் பிடிக்கும். இந்த கோவிலிலேயே தங்க ஆரம்பித்தேன். முதலில் என்னைப் பரதேசியாக நினைத்துக் காசு போட்டார்கள். அப்புறம்தான் கெளரவமாகப் பிச்சையெடுப்போம் என்று இதையெல்லாம் வாங்கி வந்தேன். இப்போது நான் சாமியார். மழை, பனி காலமானாலும் இங்கேயேதான் தங்குவேன்'' சொல்லி முடித்தார் சாமியார்.
இப்படித்தான் எனக்கும் அந்தச் சாமியாருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
போனவருடம் போகும்போது அந்த கோவிலுக்குப் போனேன். சாமியாரைக் காணவில்லை. அந்த இடம் வெறிச்சோடிக் கிடந்தது. "என்னாச்சி சாமியாரக் காணவில்லை. உடம்பு எதுவும் சரியில்லாமல் போச்சா?" அருகிலிருந்த இளநீர்க் கடைக்காரனிடம் விசாரித்தேன்.
''அந்தச் சாமியார் ஓடிப் போய்ட்டார் சார்'' என்றான்.
என்னது சாமியார் ஓடிட்டாரா? சாமியாருக்கு யார் மேல கோபம். எதுக்கு ஓடினார். வியாபாரம் நல்லா நடந்துகிட்டிருக்கும்போது கடையை இழுத்து மூடினது மாதிரியிருக்கே. எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. கொஞ்ச நேரம் அந்த இடத்திலே இருந்து விட்டு வந்து விட்டேன்.
பிறகு சென்னையில் நண்பர்களுடன் ஒரு நாள் இரவு வேளச்சேரியில் உள்ள ஒயின்ஷாப்பில்...................சாமியா கும்பிட? சரக்குதான்!
நான் குடிச்சுக்கிட்டிருக்கும்போது அங்கு ஒரு ஆள் குவார்ட்டர் பாட்டிலோட வந்தார். அவரும் என்னைப் பார்த்தார். நானும் அவரைப் பார்த்தேன். இவரை எங்கேயோ பார்த்தது மாதிரி எனக்குத் தோன்றியது.
குடித்துக் கொண்டே யோசனை பண்ணினேன். அவ்வப்போது நானும் பார்ப்பேன், அவரும் பார்ப்பார்.
''உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன் சார். எங்க என்று ஞாபகமில்லை'' என்றேன்.
''திருச்சி வழிவிடு முருகன் கோவில் சாமியார்'' என்றார்.
எனக்கு ஒரே ஆச்சரியம்!
''நீங்க எப்படி சார் மறுபடியும் லெளகீக வாழ்க்கைக்கு திரும்பினீர்கள்?'' என்றேன்.
''எங்கம்மாவுக்கு மூன்று ஆண் குழந்தைகள். நான்தான் மூத்தவன். அப்பா சிறு வயதிலேயே தவறிட்டார். அந்தப் பெரிய மனிதரிடம் நான் வேலை பார்க்கும்போது என் தம்பிகள் இரண்டு பேர்களையும் நல்லா படிக்க வைத்து, வேலையும் வாங்கிக் கொடுத்து திருமணம் பண்ணி வைத்தேன். இவனுக ரெண்டு பேர்களும் என் தாயை நல்லபடியாகக் கவனித்துக் கொள்வார்கள் என்று நினைத்துதான் பதினைந்து வருட போக வாழ்வைத் துறந்து மோன வாழ்க்கைக்குப் போனேன். ஒரு மனிதன் வாழும் தெய்வம் என்று இந்த உலகில் அடையாளம் காட்டணும் என்றால் அவனுடைய தாயைத்தான் அவன் காட்ட முடியும். தாயை விடப் பெரிய தெய்வம் இந்த உலகத்தில் கிடையாது. என் தம்பிகள் இரண்டு பேர்களும் என் தாயை நல்லபடியாகக் கவனிக்காமல் வீட்டை விட்டே துரத்திட்டார்கள். என் தாய் ரோட்டில் பிச்சையெடுக்கிறாள் என்று கேள்விப்பட்ட நான், எப்படி கோயிலில் சாமியாராக இருக்க முடியும். சொல்லுங்க பார்ப்போம்'' என்று சொல்லியபடியே கண்களில் தேங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.
''அந்தப் பெரிய மனிதரைப் போய்ப் பார்த்தீர்களா?''
''தேவையில்லை. இப்போ ஒரு வீடு வாடகைக்கு எடுத்து என் அம்மாவோடு இருக்கிறேன். ஒரு பிரஸ்ல வேலை பார்க்கிறேன். என் அம்மா இறந்த பிறகுதான் லெளகீக வாழ்வைத் துறந்துட்டு சாமியாராகப் போவேன்'' என்றார். ''வர்றேன் சா(மி!)ர். மீண்டும் சந்திப்போம்'' என்று கூறி விடை பெற்றேன்.
வீட்டுக்கு கார் ஓட்டிட்டு வரும்போது யோசனை பண்ணினேன். இவருக்கு இவர் தாய் மேலிருக்கும் பாசம் ஏன்? இவர் தம்பிகளுக்கில்லாமல் போனது. வாழ்க்கைக்கு இன்னொரு பெண் துணை வந்ததும் பெற்ற தாய் மேல் உள்ள பாசம் குறைந்து விடுகிறதே. இவரும் திருமணம் பண்ணாமலே இருக்கட்டும் என்று அந்த ஐய்யப்பனை வேண்டிக் கொண்டேன்.
Subscribe to:
Post Comments (Atom)
3 பேரு சொன்னாங்க:
GREAT ONE!
repeateyyyyy
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment