ஒரு ஊருல ராஜா இருந்தாராம், நல்ல ஆட்சி செய்தாராம்.ஆனால் அவரது அமைச்சரைப் பற்றி அவ்வப்போது அரசால் புரசலாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் அவர் காதில் விழுந்தனவாம். எந்த அரசாங்கக் காரியமானாலும் அவருக்கு 'வெட்டு' உண்டு என்றார்கள். ஊரெல்லாம், நாடெல்லாம் நிலம் வாங்கி குவித்து வருகிறார் என்றார்கள். அவரிடம் தனிக் கருவூலமே இருக்கிறது என்றார்கள். இந்தக் குரல் மெல்ல வலுவடைந்து அரண்மனைப் பக்கம் நகர்ந்து, அரசவையின் அத்தாணி மண்டபத்தையே அடைந்தது ஒரு நாள். ராஜா இனியும் தாமதிப்பது தமக்கே தீங்கு என உணர்ந்து 'விசாரணைக் கமிஷன்' போட்டார்.
கமிஷனின் தீர்ப்பு அமைச்சருக்கு எதிராக அமைந்தது. கடும் சிறை வாசமே தண்டனை என்றாயிற்று. ராஜாவோ பார்த்தார். அந்த அமைச்சர் பரம்பரை, பரம்பரையாக அமைச்சுப் பணியில் இருப்பவர். ஆகவே, அவருக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று யோசித்தார். 'பளிச்'சென்று ஒரு கருத்து மின்னலிட்டது . அரசவையைக் கூட்டினார். தண்டனையை அறிவித்தார். தண்டனையின்படி மறுநாளே அமைச்சர் இரு உதவியாளர்களுடன் கடற்கரைக்குச் சென்று கூடாரம் அமைத்துக் கொண்டு, கடல் அலைகளைக் கணக்கிட்டு நாள் தோறும் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்பது ஆணை.
"கடல் அலைகளைக் கணக்கிடுவதா. மாட்டிக்கொண்டார் அமைச்சர்" என்று அனைவரும் மகிழ்ந்தனர். அவையே திடுக்கிடும் வகையில் அமைச்சர் உடனே ஒப்புக்கொண்டார். சொன்னபடி மறுநாள் முதல் தனது பணியை நிறைவேற்றத் தொடங்கினார்.
சில நாட்கள் ஆயின. கணக்கு வந்த வண்ணம் இருந்தது. ராஜாவுக்கு சரிவர ஆராயாமல் தண்டனை தந்துவிட்டோமோ என்ற கவலை சூழ்ந்தது. அதே நேரத்தில் 'கிசு கிசு' எந்திரம் 'க்றீ'ச்சிடத் தொடங்கியது. அமைச்சர் முன்பு இருந்ததை விட அதிகமாக லஞ்சம் வாங்குகிறார் என்று வதந்தி பரவியது. உளவுத் துறையைக் கேட்டார். தயக்கத்துடன் 'ஆமாம் 'என்றார்கள். ராஜா யோசித்தார். மாறு வேடம் புனைந்து நேரில் பார்த்து விடுவது என்று முடிவு செய்தார்.
மறுநாள் காலையில் மாறுவேடம் பூண்ட ராஜா கடற்கரை சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை திடுக்கிட வைத்தது.
ஏன் என்று சொல்லுங்கள் பார்ப்போம்?
Subscribe to:
Post Comments (Atom)
0 பேரு சொன்னாங்க:
Post a Comment