Monday, April 19, 2010

IPL - சென்னை அணிக்கு தினமலரில் எச்சரிக்கை!

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் (ஏப்.,22), சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் மோதுகிறது. லீக் ஆட்டங்களில் இரண்டு முறையும் டெக்கானிடம் தோற்றுவிட்டது. இதற்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

மூன்றாவது ஐ.பி.எல்., ஆட்டங்களில் ஆரம்பத்திலிருந்தே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் மாத்யூ ஹைடன் சொதப்பி வருகிறார். ஒரு சில ஆட்டங்களில் அவர்சிறப்பாக பீல்டிங் செய்வதன் மூலம், தப்பித்துவருகிறார். அரையிறுதிக்கு வந்துள்ள மற்றஅணிகளில் எல்லாம் சொதப்பிய வீரர்களை களை எடுப்பதில் தயக்கம் காட்டவில்லை. ஒரு அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்களே இருக்க வேண்டும் என்பதால், ஹைடனுக்கு வாய்ப்பு அளிக்க போய், முரளிதரன் போன்றவர்களையும் இன்னும் சில வீரர்களை வெளியே நிறுத்த வேண்டியிருக்கிறது. மும்பை, பெங்களூரு, டெக்கான் அணிகளில், லீக் ஆட்டங்களில் சொதப்பிய வீரர்களை, அவர்கள் மூத்த வீரர்களாக இருந்தாலும், ஓரங்கட்டி வைக்க தயங்கவில்லை. மும்பையில் துவக்க ஆட்டக்காரராக வந்த ஜெயசூர்யா அவ்வளவாக எடுபடவில்லை. அவரை ஓரங்கட்டினர். டெக்கான் அணியில் முன்னாள் கேப்டனாக இருந்தபோதும், லட்சுமண் சரியாக விளையாடாததால், முக்கிய போட்டிகளின் போது அவரை சேர்க்காமல் ஒதுக்கி வைத்தனர். பெங்களூரு அணியில் தென் ஆப்பிரிக்க அணியின் சிறந்த விக்கெட் கீப்பரான மார்க் பவுச்சரை ஒதுக்கிவைத்துவிட்டு உத்தப்பாவை சேர்த்துள்ளனர். முக்கிய கட்டங்களில் உத்தப்பா சரியான முறையில் கிப்பீங் செய்யாவிட்டாலும், அவரை வைத்து கொண்டே சமாளிக்கின்றனர்.

சென்னை அணியில் இப்போதைக்கு அதிரடி மாற்றம் தேவையானதுதான், டெக்கான் அணியுடனான போட்டியின் போது, தோனி ஆர்டர் மாறி இறங்கியும் பலன் இல்லாமல் போனது. வெளிநாட்டு வீரர்கள் நான்கு பேர் மட்டுமே இடம்பெற முடியும். ஹைடனை பேட்டிங், பீல்டிங்கை மனதில் வைத்து சேர்த்தால், பேட்டிங்கின் போது அவர் எடுபடாமல் போய் பின்னால் வருபவர்களுக்கு சிக்கல் வருகிறது. எனவே, துவக்க ஆட்டக்காரராக மார்க்கல் அல்லது ஹசிக்கு வாய்ப்பு அளித்து பார்க்கலாம். இல்லையெனில் அனிருத் ஸ்ரீகாந்த் போன்ற இளம் இந்திய வீரருக்கு வாய்ப்பு அளிக்கலாம். சென்னை அணியை பொறுத்தவரை பலமும், பலவீனமும் பேட்டிங்தான். பந்துவீச்சை பொறுத்தவரை ஏதோ அன்றைய சூழ்நிலையும், பிட்சும் சாதகமாக அமைந்தால் நன்றாக இருக்கிறது. இல்லையெனில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடுகிறது. இரண்டு லீக் ஆட்டங்களில் டெக்கானுடன் மோதி தோல்வியை தழுவியுள்ளோம்.சென்னையில் நடந்த போட்டியில் டெக்கான் முதலில் பேட் செய்து 190 ரன் எடுத்தது. இரண்டாவதாக சேஸ் செய்த சென்னை அணி 159 ரன் மட்டுமே எடுத்தது. நாக்பூரில் நடந்த போட்டியில் சென்னை டாஸில் வென்று முதலில் பேட்டிங் எடுத்து138 ரன் மட்டுமே எடுத்தது. இதை டெக்கான் எளிதாக எடுத்து வெற்றி பெற்றது. ஆக சென்னையை பொறுத்தவரை, அரையிறுதியில் அனைத்து வியூகங்களையும் கையாள வேண்டுமாம்.

மூன்று ஐ.பி.எல்., தொடர்களில் இரு அணிகளும் இதுவரை ஆறு முறை மோதியுள்ளன. இதில் சென்னை 2 முறை வெற்றிபெற்றுள்ளது. டெக்கான் அணி 4 முறை வென்றுள்ளது. இந்தாண்டு சென்னை அணி 7 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில், முதல் பேட்டிங் செய்ததில் மூன்று ஆட்டங்களில் மட்டுமே வெற்றி கிட்டியுள்ளது. சேஸ் செய்து நான்கு முறை வென்றுள்ளது. டெக்கான் அணியை பொறுத்தவரை, எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் அளவுக்கு இருக்கிறது. ஆனால் சென்னை அணியோ சூழ்நிலையை நம்பி இருக்கிறது. பைனலுக்கு முன்னேற வேண்டுமானால், இதையே எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு களம் இறங்க வேண்டுமாம்.

0 பேரு சொன்னாங்க: