Friday, October 2, 2009

ஒரே வீட்டில் 90 பேர் கூட்டு குடும்ப வாழ்க்கை நடத்தும் அதிசயம்!!

சிவகாசி தாலுகா, மேட்டுப்பட்டி அருகே உள்ள கிராமம் பூசாரிபட்டி. ராஜகம்பளத்தார் என்னும் ஒரே சமுதாயத்தை பல குடும்பங்கள் இருந்தாலும், பெருமாள்சாமி (65)யின் சகோதர, சகோதரிகள் என 15 குடும்பங்களை சேர்ந்த 90 பேர் ஒரே குடும்பமாக பல ஆண்டுகளாக கூட்டுக்குடித்தனமாக வாழ்க்கை நடத்துகின்றனர்.

கிராமத்திலேயே பெருமாள் சாமிதான் முதல் பட்டதாரி. இவர் கூட்டு குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும் என்ற சூழ்நிலையால் 1974ல் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து குடும்ப பொறுப்பை ஏற்றார். கூட்டு குடும்பத்திற்கு இவர்தான் தலைவர். இவர்களின் மூதாதையர் காலத்தில் இருந்தே இன்று வரை ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். இவர்களின் ஒரு ஆண்டு தேவைக்கான நெல், நவதானியங்கள், காய்கறிகளை சொந்த நிலங்களில் சாகுபடி செய்து சேமித்து கொள்கின்றனர். கடைகளில் விலை கொடுத்து வாங்கும் பொருட்கள் என்றால் உப்பு, சீனி, டீ, காபி தூள்தான். ஆண்டுக்கு 500 மூடை நெல், 500 மூடை தானியங்கள் விளைவிக்கின்றனர்.

தினமும் மூன்று வேளை உணவுக்காக 1 மூடைக்கு குறைவில்லாமல் அரிசி, தானியங்கள் செலவிடப்படுகிறது. தீபாவளி, பொங்கல், ஆடி விசேஷ நாட்களில் 5,6 ஆடு வெட்டி அசைவ உணவு சாப்பிடுகின்றனர். அனைவரும் தினமும் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து அன்றாட பணிகளை துவக்கி விட வேண்டும் என்பது கட்டாயம். காலையில் கூல் குடித்து வேலைக்கு சென்று விடுவார்கள். ஆணும்,பெண்ணும் நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தும் அளவிற்கு கடின உழைப்பாளிகள். மதிய உணவினை அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கே சென்று வழங்க அதற்கென தனியாக ஆட்கள் உள்ளனர். மாலை ஆறரை மணிக்கு எல்லோரும் வீடு திரும்பி விட வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு ஒவ்வொருவருக்கும் பணி ஒதுக்கப்பட்டு விடும்.

சமையலுக்கு பெண்களும், தோட்டத்தில் களை எடுத்தல், உழவு, தண்ணீர் பாய்ச்சுதல், உரமிடுதல் வேலைகளை ஆண், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு விடும். சொந்தமாக நடத்தம் 2 பட்டாசு ஆலைகளில் குடும்ப ஆண்கள் 30 பேர் வேலை செய்கின்றனர். குடும்ப நிர்வாகம், வரவு, செலவு என ஒவ்வொரு வரும் ஒரு பொறுப்பு ஏற்றுக்கொள்கின்றனர். படிக்கும் வயது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அவர்கள் விரும்பிய வரை பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று படிக்கலாம். குறைந்த பட்சம் 8ம் வகுப்பு,10ம் வகுப்பு, பிளஸ்2 வரை படித்துள்ளனர். அதன்பின் சொந்த வேலைகளை கவனிக்க வந்துவிடுவார்கள். படிப்பில் ஆர்வம் உள்ளோர் தொடரலாம்.

பெருமாள்சாமியின் மகன் பி.இ., முடித்து லண்டனில் வேலை செய்து, பெங்களூரூவில் உள்ளார். முத்துக்குமார் பி.சி.ஏ., படிக்கிறார். மற்றொரு பெண் பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.இவர்கள் வெளியில் திருமணம் செய்வது இல்லை. உறவினர்களுக்குள்ளே திருமணம் செய்கின்றனர். வீட்டின் மூத்தவர் இன்னாருக்கு இன்னார் என மணமக்களை நிச்சயிப்பார் இதில் மறுப்பே இருக்காது. படித்து வெளியிடங்களில் வேலை பார்த்தாலம் இங்குள்ளவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என எழுதப்படாத சட்டம். பெண்களுக்கு 18 வயதில் திருமணம் செய்கின்றனர். நான்கு ஆண்டுக்கு ஒரு முறை 9ஜோடி, 11 ஜோடிகளுக்கு மொத்தமாக திருமணம் நடத்துகின்றனர்.

இக்குடும்பத்திற்கு 100 ஏக்கர் நிலங்கள் இருந்தாலும் அந்தந்த குடும்ப தலைவர்கள் பெயரில் சொத்து பத்திரம் இருக்கும். ஆனால் எல்லாம் பொதுவுடமை சொத்து. பண்டிகை நாட்களில் புது துணிகள் மொத்தமாக ரூ.1 லட்சத்திற்கு எடுத்து வருகின்றனர். வீட்டில் உள்ள மூத்த பெண், பெண்களுக்கு புடவைகளை எதை கொடுக்கிறாறோ அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்கின்றனர்.உறவு திருமணங்களால் குறைபாடுடைய குழந்தை பிறக்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மை. ஆனால் உறவு திருமணங்களால் ஆண்டவன் கிருபையால் எவ்வித குறைபாடும் இன்றி நலமாக உள்ளதாக பெருமைப்படுகின்றனர்.

பெருமாள்சாமி கூறுகையில், ஆண்டாண்டு காலமாக கூட்டு குடும்பமாக வசிக்கின்றோம். இதே போல் ஒற்றுமையுடன் அதிகம் பேருடன் வசிக்க வேண்டும் என ஆசை. எல்லோரும் கடினமாக உழைப்பதாலும், பாராம்பரிய உணவு பழக்கவழக்கத்தால் எவ்வித குறைபாடு இன்றி சுகமாக வாழ்கின்றோம் என தெரிவித்தார்.

4 பேரு சொன்னாங்க:

said...

கூட்டுக்குடும்பம்???

ம்ம்ம்... ஆசைதான் என்ன செய்ய

said...

Jst give a try!

Anonymous said...

படிக்கவே நல்லா இருக்கு

said...

அட...வித்தியாசமா இருக்கே...மகிழ்ச்சி

-ப்ரியமுடன்
சேரல்