Tuesday, September 22, 2009

பி.எஸ்.எல்.வி., : இந்திய விஞ்ஞானிகள் மீண்டும் சாதனை

"ஓசியன்சாட் -2' செயற்கைக்கோள் மற்றும் ஆறு சிறிய செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் மீண்டும் சாதனை படைத்துள்ளனர்.

"பி.எஸ்.எல்.வி., சி-14' ராக்கெட் பகல் 11.55 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதில், "ஓசியன்சாட் -2' செயற்கைக்கோளும், ஆறு சிறிய செயற்கைக்கோள்களும் இடம்பெற்றுள்ளன. மீன் பிடிப்பதற்கு வாய்ப்புள்ள பகுதிகள், வானிலை நிலவரம், கடலோர பகுதிகள் ஆய்வு போன்றவற்றுக்கு, "ஓசியன்சாட் -2' செயற்கைக்கோள் பெரிதும் உதவியாக இருக்கும். இது 970 கிலோ எடை கொண்டது. "ஓசியன்சாட் -2' செயற்கைக்கோளின் ஆயுள் காலம் ஐந்து ஆண்டுகள். ஆறு சிறிய செயற்கைக்கோள்களில், நான்கு ஜெர்மனி நாட்டுக்குரியவை, ஒன்று சுவிட்சர்லாந்து, மற்றொன்று துருக்கி நாடுகளுக்குரியவை. இந்த குறு செயற்கைக்கோள்கள் இரண்டு முதல் எட்டு கிலோ வரை எடை கொண்டவை.

இதற்கான இறுதி 51 மணி நேர, "கவுன்ட் டவுன்' கடந்த திங்கள்கிழமை காலை 9 மணிக்கு துவங்கியது. சரியாக 11.55 மணிக்கு ராக்கெட் விண்ணுக்கு புறப்பட்டது. அனைத்து செயல்பாடுகளும் சரியாக உள்ளதாகவும், ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது என்றும், "இஸ்ரோ' விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ராக்கெட் விண்ணில் பாய்ந்ததும் விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

0 பேரு சொன்னாங்க: