Thursday, October 8, 2009

சாம்பியன்ஸ் கோப்பையும், காக்கா கதையும்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு சாம்பியன்ஸ் கோப்பை கிடைக்காமல் போனது பற்றி இப்போது தெருமுனைகளிலும், பஸ் ஸ்டாப்களிலும் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது.

ஏன் தோற்றீர்கள் என தோனியிடம் கேட்டால், தம்மையும் பிரெட் லீயையும் போல பவுலர்கள் யாருமில்லாததுதான் காரணம் என்பார். நமது பந்துவீச்சாளர்களின் பேச்சைப் பார்த்தால், "எப்படிப் போட்டாலும் அடிக்கறாங்கப்பா' என எதிரணியினர் மீது பழிபோடத் தயாராக இருப்பது தெரிகிறது

சிலர் தென்னாப்பிரிக்க பிட்சை காரணம் சொல்வார்கள். வேறு சிலர் டக்வொர்த் லீவிûஸ வம்புக்கு இழுப்பார்கள். இன்னும் சிலர் பந்து, பேட், ஸ்டம்ப் கேமரா, ஷூ, எதிரணியினர் ஹேர்ஸ்டைல், அம்பயரின் தொப்பி, சைடு ஸ்கிரீன், சனிப்பெயர்ச்சி, சீயர் லீடர்ஸ் இல்லாதது என எதையாவது சொல்லி ரசிகர்களை இம்சிப்பார்கள்.

ஆனால், ரசிகர்கள் இப்போது பாகிஸ்தான் வீரர்கள் மீதுதான் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள்தானே இந்திய அணியை ஜெயித்தும் கெடுத்தார்கள்; ஆஸ்திரேலியாவிடம் தோற்றும் கெடுத்தார்கள்.

இந்திய அணி தோற்றுப் போனதற்கு வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும். சமீபகாலமாக இந்திய அணிக்குச் சிறந்த கேப்டன்கள் கிடைக்கவில்லை. கவாஸ்கர், கபில்தேவ், ஸ்ரீகாந்த், அசாருதீன், டெண்டுல்கர், கங்குலி, திராவிட் என யாருமே வெற்றிகரமாக இருந்ததில்லை. இந்திய அணிக்குக் கேப்டனாகிவிட்டால், அவர் சிறந்த கேப்டனாக இருக்கவே முடியாது என்கிற சூழ்நிலை உருவாகிவிட்டது. அப்படியிருக்கையில் சில வெற்றிகளைப் பெற்றதுமே தமது தலைமையால்தான் அணி ஜெயிக்கிறது என்று தோனி எண்ணிக்கொண்டார். அதனால்தானோ என்னவோ, யுவராஜ், சேவக் ஆகியோருடன் முட்டிக் கொண்டார்.

ஆல் ரவுண்டராக ஆட வேண்டும் என்கிற தோனியின் எண்ணம் நியாயமானதுதான். ஆனால், ஆல் இன் ஆல் ரவுண்டராக வரலாற்றில் இடம்பிடிக்கப் போராடும் அவரது நிலையை நினைத்தால் ஆப்பசைத்த குரங்கின் கதைதான் நினைவுக்கு வருகிறது. ஒருவர் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் ஜொலிக்கலாம். அல்லது பவுலராகவும் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாகச் செயல்படலாம். கீப்பராகவும் பவுலராகவும் செயல்படுவேன் என அடம்பிடித்தால் எப்படி? வேறு யாராவது கேப்டனாக இருந்தால் இந்த மாதிரியான வாய்ப்பெல்லாம் இவருக்குத் தருவார்களா?

அடுத்தது, ராகுல் திராவிட் வருகையினால் ஏற்பட்ட அசாதாரணமான நிலை. அவரது ஆட்டம் அணிக்குப் பலமா அல்லது பலவீனமா என்பதை திருவுளச் சீட்டு மூலமாகத்தான் அறிய வேண்டும். அந்த அளவுக்கு நன்மையும் செய்கிறார், இம்சையும் செய்கிறார். ரசிகர்கள், எதிரணியினர், அம்பயர் என அனைவரின் பொறுமையையும் அவர் சோதிப்பார். ஆவேசம் வந்தாலன்றி பந்தை செல்லமாகத் தட்டி மட்டுமே பழக்கப்பட்டவர். கிரீஸýக்குள் பந்து கிடந்தாலும் ரன் எடுப்பது போல பாவ்லா காட்டியே கடுப்பேற்றுவார். இதனால், அவரோ அல்லது உடன் ஆடுபவரோ அவுட் ஆகி வெளியேறுவதுதான் மிச்சம். அவரது வருகை அணியின் ரன் சேர்க்கும் முறையை மாற்றிவிட்டது என்பது மட்டும் தெளிவு.

சேவாக்கும் யுவராஜும் தற்செயலாக சாம்பியன்ஸ் கோப்பையில் ஆடவில்லையா, அல்லது தோனி புகழைக் கொஞ்சம் தட்ட வேண்டும் என்று திட்டமிட்டே புறக்கணித்தார்களா எனத் தெரியவில்லை. எப்படியோ தாங்கள் இருவரும் அணியில் இருந்தால்தான் பலம் என்பதை தோனிக்குப் புரிய வைத்துவிட்டார்கள். இதற்காக ஒரு கோப்பையை இழக்க வேண்டுமா?

அடுத்தது, ஐபிஎல் அணியில் எல்லோரும் டி20 ஆட்டங்கள் நிறைய ஆடிவிட்டதால், பழக்கத்தை மாற்ற முடியாமல் தடுமாறுகிறார்கள். 5 ஓவர் தொடர்ந்து வேகப்பந்து வீசுவதும், 10 ஓவர்களுக்கு மேல் பேட் செய்வதும், 50 ஓவர்கள் ஃபீல்டிங் செய்வதும்கூட வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கும். இதுவும் அணியின் மோசமான ஃபார்முக்கு காரணம்.

அதற்காக இந்திய அணி, எப்போது நல்ல ஃபார்மில் இருந்தது எனக் கேட்கக்கூடாது. நம் அணி அவ்வப்போது சாம்பியனாகும், பிறகு நோஞ்சான்களிடம் கூடத் தோற்கும். இது நீண்டகால உண்மை. அதை மறந்துவிட்டு, கோப்பையை ஜெயிப்பார்கள் என்று கனாக் காண்பது அறியாமை.

காரணம் எதுவாக இருந்தாலும், இந்திய அணியின் தோல்வி வேறொரு திருப்பத்துக்கான அறிகுறியாக இருக்கலாம் என்றே தெரிகிறது. அசாருதீன் கேப்டனாக இருந்தபோது, அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பதவி பறிக்கப்பட்டு டெண்டுல்கரிடம் வழங்கப்பட்டது. பின்னர் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு கங்குலியிடமும், பின்னர் திராவிட்டிடம் வழங்கப்பட்டது. கடந்த உலகக் கோப்பையில் தோற்றதும் தோனிக்கு கிரீடம் சூட்டப்பட்டது. இப்படி காகம் வடை திருடிய கதைபோல் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பதவி போய்கொண்டிருக்கிறது.

இது எல்லா அணிகளுக்கும் பொதுவானதுதான் என்றாலும், கேப்டன்கள் அனைவரும் பதவிக்கு வந்ததும் ஃபார்மை பறிகொடுப்பதும், பதவிபோன பிறகு நன்றாக ஆடி தொடர்ந்து அணியில் நீடித்திருப்பதும் இந்திய அணியின் பிரத்யேக அடையாளம். சமீபகால கேப்டன்களில் டெண்டுல்கர் தவிர வேறு யாருக்கும் பதவி போன பிறகு உரிய மரியாதை தரப்படவில்லை.

இப்போதைய நிலையில், காகத்தின் வாயிலிருக்கும் வடையைப் பறிப்பதற்குரிய இன்னொரு தருணம் வந்துவிட்டதாகவே தெரிகிறது. வடையைத் தக்கவைத்துக் கொள்வது காகத்தின் சாமர்த்தியம்.

Thanks: Dinamani

2 பேரு சொன்னாங்க:

said...

காக்கா காக்கா கத்தறதால காக்கான்னு கூப்பிடறமா, காக்கா காக்கான்னு கூப்பிடறதால காக்கான்னு கத்துதா?

said...

தெரியல முருகா..