Monday, February 22, 2010

ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

போலி ரயில் டிக்கெட் தயாரித்து நாடு முழுவதும் பயணம் செய்த வட மாநில ஆசாமிகள் மூவர், கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள பல வங்கிகளின் பெயரைக் கொண்ட போலி செக்குகளை அச்சடித்து, வினியோகித்த கும்பல் பற்றி, சி.பி.ஐ., கண்டறிந்துள்ளது. அக்கும்பலோடு தொடர்புடைய ஒருவனை, சி.பி.ஐ., கைது செய்து, அவனிடமிருந்து, 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான போலி செக்குகள் கைப்பற்றப்பட்டன.

தமிழகம், கர்நாடகா, கேரளா (திராவிட நாட்டில்) ஆகிய மாநிலங்களில், 2007ம் ஆண்டு முதல், போலி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்த இலங்கை ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். இப்படி எல்லாக் குற்றங்களையும், நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்த போலி ரயில் டிக்கெட்டுகள் விவகாரத்தைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில், தென்னக ரயில்வேயைப் பொறுத்தவரை, அதன் பணியாளர்கள் கில்லாடிகள். சலுகைக் கட்டணத்தில் ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களை, "போதுமான சான்றுகள் இல்லை” என்று, வழியிலேயே இறக்கி விடுவர் அல்லது அபராதக் கட்டணம் என்று, ஒரு பெரும் தொகையைக் கறந்து விடுவர். அதேபோல, ஈ-டிக்கெட், தத்கல் போன்றவை மூலம் பயணம் செய்யும் பயணிகளும், ஒரிஜினல் சான்று இல்லாது பயணித்தால், டிக்கெட் இல்லாப் பயணிகளாகவே கருதப்பட்டு, அபராதத் தொகையைப் போட்டுத் தாளித்து விடுவர்.

அது மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள எந்த ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட்டு முன்பதிவு செய்தால், நீங்கள் விரும்பும் ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் கிடைக்காது. இங்கிருந்து புறப்படும் அத்தனை ரயில்களுமே, முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் முழுமையாக நிறைந்தே புறப்படுகின்றன. இந்த நிலையில், போலி ரயில் டிக்கெட்டுகள் எப்படி சாத்தியமாகும்? நமக்குத் தெரிந்து, முன்பதிவு செய்த டிக்கெட்டுக்களுக்கு மட்டுமே, கேன்சல் செய்யும்போது, கால அளவுக்குத் தக்கவாறு, 10 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை கழித்துக் கொண்டு திருப்பி வழங்குவர். ஒதுக்கீடற்ற டிக்கெட்டுகளை திருப்பிக் கொடுத்து பணம் பெறும் வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆக, கோளாறு எங்கேயோ உள்ளது என்பது தான், மம்தா கண்டுபிடிக்க வேண்டிய விஷயம்.

அடுத்து என்ன பஸ் டிக்கெட்டா?