தமிழகத்தில் கடைசியாக நடந்த திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, விஜயகாந்த் கட்சியின் பலம் என்னவென்பது வெட்ட வெளிச்சமானது. அதன்பிறகு, பல கட்சிகளில் இருந்து தே.மு.தி.க.,விற்கு தாவிய பலரும், சத்தமின்றி கழன்று வருகின்றனர். பத்து சதவீத மாற்று கட்சியினர் மட்டுமே தற்போது கட்சியில் எஞ்சியுள்ளனர். தீவிர விசுவாசிகள் தற்போது கட்டம் கட்டப்பட்டு, 10 சதவீதமுள்ள மாற்று கட்சியினரை தக்க வைப்பதற்காக அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தீவிர ஆதரவாளர்களுக்கு, தி.மு.க., பாணியில் இதயத்தில் மட்டுமே இடம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் விஜயகாந்தின் தீவிர ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். மாநிலம் முழுவதுமுள்ள அதிருப்தியாளர்களின் ஒட்டு மொத்த குமுறல்கள், கடந்த 16ம் தேதி நாகை மாவட்ட நிர்வாகிகள் மூலம் வெளிப்பட்டது.
தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி நாங்கள் தான்; வரும் 2011ம் ஆண்டு கோட்டையை ஆளப் போவது எங்கள் கட்சி தான் என்று விளம்பரப்படுத்திக் கொண்டிருந்த தே.மு.தி.க.,வின் அஸ்திவாரம் சமீபகாலமாக ஆட்டம் காணத் துவங்கியுள்ளது.
நாகை மாவட்டத்தில் இருந்து வாகனங்களில் திரண்டு வந்த அவர்கள் அ.தி.மு.க.,வினர் பாணியில் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட்டனர். அவர்களை சந்தித்து பேசுவதற்கு விஜயகாந்த் முன்வரவில்லை. விஜயகாந்த் உத்தரவுப்படி, அவர்களை கட்சி அலுவலகம் வரவழைத்து மாநில நிர்வாகிகள் சிலர் சந்தித்து பேசினர். பிரச்னையை பெரிதாக்கிவிட வேண்டாம் என்பதற்காக, இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால், நாங்கள் கொட்டி தீர்த்த குமுறல் களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என்ற புலம்பல் சத்தம், விஜயகாந்தின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தானே இயக்கி நடிக்கும் விருதகிரி பட வேலையில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக விஜயகாந்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாவட்டச் செயலர், ஒன்றியச் செயலர் போன்ற பதவிகளில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டது. இதனால், 20 ஆண்டுகளுக்கு மேலாக மன்ற பணியில் இருந்து கட்சி பணி வரை தங்களை கட்சிக்கு அர்ப்பணித்த மூத்த நிர்வாகிகள் ஒதுக்கப்பட்டு, மாற்று கட்சியில் இருந்து வரும் வசதி, செல்வாக்கு படைத்தவர்களுக்கு "சிவப்பு கம்பளம் விரித்து" பதவிகள் வழங்கப்படுகிறது. தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்டச் செயலராக பொறுப்பேற் றுள்ள, பால அருள்செல்வன் என்பவர் தன்னை கவனிப்பவர்களுக்கு மட்டும் பதவிகளை வழங்கியுள்ளார். இதனால் கோபமான தொண்டர்கள், "கேப்டன்" வீட்டை முற்றுகையிடும் நிலை ஏற்பட்டது. "ஊழலை வேரோடு அழிக்க வந்துள்ளோம்" என்று களம் இறங்கிய தே.மு.தி.க. கட்சிக்குள்ளேயே, மாவட்ட அளவிலான பதவிகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கட்சியின் செயல்பாடு இப்படியே போனால், தொண்டர்கள் எதிர்காலம், குடும்பத்தினரின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலை அதிகரித்து வருகிறது.
கட்சியினரிடம் கேப்டன், "கூடி கலைவது கும்பல்; கூடி நிலைப்பது கூட்டம்" என அடிக்கடி பேசுவார். ஆனால் கூட்டமாக இருந்த தே.மு.தி.க.,வினர் இப்போது கும்பலமாக மாறி வருகின்றனர். இதை எப்போது தான் கேப்டன் புரிந்து கொள்வார் என்று தெரியவில்லை. சினிமா தொழிலுக்கு முழுக்கு போட்டு விட்டு இனியாவது அவர் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும். தனித்து போட்டி பார்முலாவால் இருள் சூழ்ந்து கிடக்கும் எங்கள் வாழ்க்கையில் கூட்டணி பார்முலா மூலம் அவர் ஒளி ஏற்ற வேண்டும். வரும் 24ம் தேதி அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் வருகிறது. அன்று அவருக்கு மரியாதை நிமித்தமாக கேப்டன், போன் மூலமாவது வாழ்த்து சொல்லி கூட்டணிக்கு அச்சாரமிடுவார் என என்னை போன்ற தீவிர விசுவாசிகள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். தே.மு.தி.க.,வினரின் இந்த எதிர்பார்ப்புக்கு விடை காணும் நாள் நெருங்கி வருவதால் அக்கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சிகள் மட்டத்திலும் பரபரப்பு எழுந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 பேரு சொன்னாங்க:
Post a Comment