ஆஸ்திரேலியாவில் இரண்டரை லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இந்திய சமூகத்தினர் அங்கு நல்ல பணிகளில் இருந்து வருகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்கள், படித்து முடித்த பிறகு, அங்கேயே நல்ல வேலைகளைப் பெற்று நிரந்தரக் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அண்மையில் இந்திய மாணவர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவங்களை வைத்து, அந்த நாட்டை மதிப்பிட்டு விடக்கூடாது.
இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க வருகிறார்கள். இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து படிக்கும் மாணவர்களை, உயர்கல்விக்காகப் படிக்க வருபவர்கள், தொழிற் கல்விக்காக படிக்க வருபவர்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். உயர்கல்விக்காகப் படிக்க வரும் மாணவர்கள் தாக்கப்படுவது என்பது மிகவும் குறைவு. தொழிற் கல்விக்காக படிக்க வரும் மாணவர்கள்தான் இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள்.
இந்திய மாணவர்களில் ஒருபிரிவினர், இளநிலைப் பட்டங்களைப் படித்து விட்டு, உயர்கல்விக்காக ஆஸ்திரேலியா வருகிறார்கள். மற்றொரு பிரிவினர் பிளஸ் 2 படிப்பை முடித்து விட்டு, கேட்டரிங் டெக்னாலஜி, ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மெண்ட், ஹேர் டிரஸ்ஸிங் போன்ற தொழிற் கல்வி படிக்க வருபவர்கள். இவர்கள் பெரும்பாலும் இந்தியாவில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆங்கிலத்தில் சரிவர பேச முடியாத நிலையில் இருக்கிறார்கள். பிளஸ் 2 முடித்து விட்டு, ஆங்கிலம் நன்கு பேச முடியாத மாணவர்களுக்கு தகுந்த பகுதி நேர வேலை கிடைப்பது மிக அரிதாக உள்ளது. வட மாநிலங்களில் இருக்கும் சில ஏஜண்டுகளும் அந்த மாணவர்களுக்கு சரியான தகவல்களைக் கூறுவதில்லை. நீங்கள் ஆஸ்திரேலியா போய்விட்டால், படித்துக் கொண்டே அங்கு வேலை செய்து கொள்ளலாம் என்று மாணவர்களுக்கு அவர்கள் நம்பிக்கையூட்டி விடுகிறார்கள். அவர்களை நம்பி ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க வந்துவிட்டு அந்த மாணவர்கள் சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். கட்டாயமாக வேலைக்குச் சென்றால்தான் படிப்பைத் தொடர முடியும் என்ற நிலையில், ஆஸ்திரேலியாவில் அவர்களுக்கு உரிய பகுதி நேர வேலை கிடைப்பதில்லை. ஆங்கில அறிவு இருந்தால் மட்டுமே, பகல் நேரங்களில் வேலைவாய்ப்பு எளிதாகக் கிடைக்கும்.
ஆங்கில அறிவு போதுமான அளவுக்கு இல்லாத நிலையில், மணிக்கு 2 டாலர்கள், 3 டாலர்கள் என்ற சம்பளத்தில், தங்கியிருக்கும் இடத்திற்கு வெகுதொலைவில் இரவு நேரத்தில் பணி செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். ஆஸ்திரேலியாவில் தனியாகச் செல்வது உகந்தது அல்ல என்ற பகுதிகளின் வழியாக, இந்த மாணவர்கள் பணி முடிந்த பிறகு இரவு நேரத்தில் கடந்து வரவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் போதைப் பொருட்களை உட்கொள்பவர்கள், அதிகமாக மது அருந்தியவர்களினால் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இவர்கள், இரவு நேரங்களில் இந்தப் பகுதிகளின் வழியாக நடந்து செல்லும்போது, போதை பழக்கத்துக்கு ஆளானவர்கள் இவர்களை மிரட்டி பணம் கேட்கிறார்கள். பணம் இருந்தால் பிடுங்கிக் கொள்கிறார்கள். போதையில் இருக்கிற அவர்கள், எதிரே வருபவர்கள் யார், எந்த நாட்டினர் என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளக்கூடிய மனநிலையில் இருப்பதில்லை. அடித்து அவர்களிடம் பணத்தைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் நடப்பதில்லை.இரவு நேரங்களில் மட்டுமே நடக்கின்றன. எனவே, தொழிற் கல்வி படிப்புகளில் சேர்ந்து படிக்கச் செல்லும் மாணவர்கள், முன்னதாகவே முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு, ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் சேருவது நல்லது.
ஆஸ்திரேலிய கல்வித்துறையின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத கல்வி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. அண்மையில், நான்கு கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், 300 இந்திய மாணவர்கள் உட்பட, இரண்டு ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர் என்ற செய்தி வெளியானது. விளம்பரங்களைப் பார்த்தும் ஏஜண்டுகள் மூலமும், அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் சில நேரங்களில் மாணவர்கள் சேர்ந்து விடுகிறார்கள். அதுபோன்ற கல்வி நிலையங்கள் மூடப்பட்டு விடுகின்றன. அதுபோன்ற சூழ்நிலைகளில், ஆஸ்திரேலிய அரசு தலையிட்டு, அந்த மாணவர்களை வேறு கல்வி நிலையங்களுக்கு மாற்றுகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் இயங்கும் கல்வி நிறுவனங்களைத் தொடர்ந்து தணிக்கை செய்யும் பணியில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டு வருகிறது. விதிமுறைகளை மீறி செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து வருகிறது.
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க வரும் மாணவர்களுக்கான விதிமுறைகளை இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது. http://www.hcindiaau.org/students_guidelines.html ஆஸ்திரேலியாவில் படிக்கும் மாணவர்கள், ஏதாவது பிரச்சினைகளை எதிர் கொண்டால், இந்திய தூதரக அலுவலகத்துடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் சிட்னி, மெல்போர்ன், கான்பெரா, பெர்க் ஆகிய நகரங்களில் 24 மணி நேர தொலைபேசி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் இருப்பவர்கள் கான்பெராவில் உள்ள அலுவலகத்துடன் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம். இந்திய மாணவர்கள் செய்யும் புகார்களின் அடிப்படையில், ஆஸ்திரேலிய அரசும் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக்கு வெளிநாட்டுப் படிப்புக்கு ஏற்ற வகையில், ஆங்கில மொழி அறிவு தேவை. தொழில் படிப்புகளில் சேரும் பிளஸ் 2 மாணவர்கள், தங்களது படிப்பின் ஒரு பகுதியாக, தொழில் நிறுவனங்களில் செய்யும் பயிற்சிப் பணிக் காலம் எவ்வளவு என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த காலகட்டப் பணிகளுக்கு ஊதியம் இல்லாமலும் இருக்கலாம். அங்கு படிக்க வரும் மாணவர்கள், வாரத்திற்கு 20 மணி நேரம் பகுதி நேர வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் மூலம் நாம் எவ்வளவு வருவாய் ஈட்ட முயலும் என்பதையும், எந்த அளவுக்கு பொருளாதார வசதி இருக்கிறது என்பதையும், மாணவர்கள் உணர்ந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
பொதுவாக ஒரு செமஸ்டருக்கு மூன்று ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் வரை படிப்புக் கட்டணம் இருக்கும். அங்கு தங்கும் இடம், உணவு உள்ளிட்ட செலவுகளுக்கு மாதம் ஆயிரம் டாலர் அளவுக்கு பணம் தேவைப்படும். பகுதி நேர வேலையின் மூலம் இந்தப் பணத்தைச் சம்பாதிக்கக்கூடிய மாணவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நல்ல ஆங்கில அறிவு இல்லாவிட்டால், பகுதி நேர வேலைக்கு நல்ல பணிகள் கிடைக்காது. எனவே, ஊதியமும் அந்த அளவுக்கு ஈட்டமுடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவில் நமக்கான உரிமை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் சேரும் கல்வி நிறுவனங்கள் குறித்த விதிமுறைகளை ஆஸ்திரேலிய தூதரகங்கள் மூலம், முன்னதாகவே தெரிந்து கொண்டால் பல பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 பேரு சொன்னாங்க:
Post a Comment