கோவை மாநகராட்சி வ.உ.சி., பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலையில் ஆண், பெண் ஜோடிகள் பொது இட மென்றும் பாராமல் ஒழுங்கீனமான செயலில் ஈடுபடுகின்றனர். சமூக ஒழுங்கை சீர்குலையச் செய்யும் இவர் களை, மாநகராட்சி நிர்வாகமும், போலீசும் வேடிக்கை பார்ப்பது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.
கோவை நகரவாசிகள், பள்ளி மாணவ, மாணவியரின் பிரதான பொழுது போக்கும் இடம் வ.உ.சி., பூங்கா மற்றும் மிருகக் காட்சி சாலை. பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்படுகிறது. மிருகக் காட்சி சாலை, செவ்வாய் தவிர பிற நாட்களில் காலை 10.00 முதல் மாலை 7.00 மணி வரை செயல்படுகிறது. மிருகக் காட்சிசாலையை பார்வையிட நகர் பகுதி பள்ளிகளில் இருந்து மட்டுமின்றி, புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் அதிகம் வருகின்றனர்.
ஒழுங்கீன செயல்கள்: வ.உ. சி., பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டதும் ஆண், பெண் ஜோடிகள் நுழைந்து ஆங்காங்கு ஆக்கிரமித்துக் கொள் கின்றனர். புல்வெளியில், புதர் மறைவில், மரத்தின் பின்னால் என பல இடங்களிலும் தனியாக அமர்ந்து சேஷ்டையில் ஈடுபடுகின்றனர். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தும், மடியில் படுத்தபடியும் காதல் விளையாட்டு புரிகின்றனர். இவர்களில் பலரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், பூங்காவுக்கு வருவோரை பற்றிய எவ்வித கவலையும் கொள்வதில்லை. சமீபத்தில், இது போன்ற ஜோடிகளின் அத்துமீறல் அதிகரித்ததை தொடர்ந்து, ரேஸ் கோர்ஸ் போலீசுக்கு அதிகளவில் புகார்கள் சென்றன. மாலை நேரத்தில் திடீர் ரெய்டு நடத்திய போலீசார், பூங்காவில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டிருந்த ஜோடிகளை பிடித்து கடும் எச்சரிக்கைக்கு பின் அனுப்பினர். ஓரிரு நாட்கள் போலீஸ் கண்காணிப்பும் தொடர்ந்த காரணத்தால், ஜோடிகளின் சில்மிஷ வேலைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. பின்னாளில் போலீசாரின் கண்காணிப்பு படிப்படியாக குறைந்து, தற்போது அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதை வேடிக்கை பார்த்து ரசிக்கவும், மொபைல் போன் கேமராவில் படம் பிடிக்கவும் சில வாலிபர்கள் சுற்றித்திரிகின்றனர்; சில ஜோடிகளை படம் பிடித்து மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட போட்டோவை காண் பித்து மிரட்டி பணம் பறித்த சம்பவங்களும் நடந் துள்ளன. எனினும் ஆண், பெண் ஜோடிகள் வருவது குறைந்தபாடில்லை.
மாணவர்கள் "கட்': வ.உ.சி., பூங்காவில் காதல் ஜோடிகளின் சில்மிஷ செயல்கள் ஒரு புறம் அதிகரித்திருக்க, மறுபுறம் பள்ளி மாணவர்கள் வகுப்பை "கட்' அடித்துவிட்டு, பூங்கா மற்றும் வ.உ.சி.,மைதானத்தில் சுற்றித்திரிவதும் அதிகம் நடக்கிறது. புத்தக மூட்டைகளை மைதானத்தின் ஓரத்தில் வைத்துவிட்டு, அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடுகின்றனர். மாலை நேரத்தில் பள்ளி வகுப்பு முடிந்து செல்வதை போல, வீட்டுக்கு கிளம்பிச் செல்கின்றனர். இந்த மாணவர்களில் சிலர் புகை பிடிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர்.
கஞ்சா ஆசாமிகள்: கஞ்சா விற்கும் நபர்கள், பாலியல் தொழிலுக்கு ஆள் பிடிக்கும் புரோக்கர் நடமாட்டமும் வ.உ.சி., பூங்கா மற்றும் மைதானம் பகுதியில் அதிகரித் துள்ளது. கையில் "பேக்'குடன் சுற்றித் திரியும் நபர்கள் கஞ்சா பொட்டலங்களை திறந்தவெளியில் சர்வ சாதாரணமாக விற்கின்றனர். இதை வாங்கவும் "வாடிக்கையாளர்கள்' வருகின்றனர். இவர்கள், பள்ளி மாணவர்களிடம் பேச்சுக் கொடுப்பதால், மாணவர்களையும் கஞ்சா புகைக்கும் பழக்கம் தொற்றிக் கொள்ளும் அபாயமிருக்கிறது. இது போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்கவும், பொதுமக்கள் வந்து செல்லும் வ.உ.சி., பார்க்கில் ஆண், பெண் ஜோடிகளின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வரவும் மாநகர போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 பேரு சொன்னாங்க:
Post a Comment