Sunday, October 25, 2009

சூர்யாவுக்கு டாப்பூ, விஜய்க்கு ஆப்பூ - கலைஞர் குடும்ப சதி!!

புதிய "வேட்டைக்காரன்" படத்தை பாரம்பரியம் மிக்க ஏவி.எம். நிறுவனம் சார்பாக ஏவி.எம்.பாலசுப்ரமணியனும் பி.குருநாத்தும் தயாரிக்க, நடிகர் விஜய் நடித்திருக்கிறார்.
அவரோடு, தெலுங்கின் முன்னணி நடிகை அனுஷ்கா கை கோர்த்திருக்கிறார் கதாநாயகியாக! வியாபார ரீதியான இயக்குநர் தரணியின் உதவியாளர் பாபு சிவன் இயக்க விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

ஆக, ஒரு கமர்ஷியல் திரைப்பட கூட்டணியின் பின்புலத்தோடு கடந்த ஆண்டு இறுதியில் "வேட்டைக்காரன்" வெற்றிக் கனவோடு பயணிக்கத் தொடங்கினான். கடந்த இரண்டு வருடங்களாக, அவ்வப்போது தனது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி, மன்றத்துக்கென தனிக்கொடி, இயக்கம், இலச்சினை (ப்ர்ஞ்ர்) உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் விஜய்யின் இந்தப் பயணத்தை அரசியலில் வெற்றிக் கூட்டணி அமைத்து வருபவர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர்.

சுமார் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுவதாக எதிர்பாராத அறிவிப்பு வந்தது. பொதுவாக, எந்த நிறுவனம் தயாரித்த படமாக இருந்தாலும் அதை தங்களது விளம்பர சக்தியைக் காட்டி மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதே சன் பிக்சர்ஸின் வழக்கம் எனக் கூறப்படுவதுண்டு. அப்படிப்பட்ட படங்கள் ரசிகர்களின் மனதில் இடம்பெறாவிட்டாலும் கூட சன் டி.வி.யின் "டாப் டென்" பட வரிசையில் முதலிடம் பெற்றுவிடும்.

படத்தைத் தயாரித்து வியாபாரம் செய்ய முடியாமலோ அல்லது பணம் குறைந்தால் கூட பரவாயில்லை; நல்ல விளம்பரம் கிடைக்கும்; அதை வைத்து அடுத்த படத்தில் காலூன்றிவிடலாம் என நினைப்போர் தங்களது படங்களை "சன்" வசம் தருவதாகவும் பேச்சு உண்டு. விளம்பரங்களில் ஏவி.எம்.மின் "வேட்டைக்காரன்", இளைய தளபதியின் "வேட்டைக்காரன்" என்றெல்லாம் பயன்படுத்த முடியாது; சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் "வேட்டைக்காரன்" என்றுதான் வரும். அதனால் வேட்டைக்காரனாக இருந்துகொண்டு சன் பிக்சர்ஸ் கூண்டில் அடைபடுவதை விஜய் தரப்பும் தயாரிப்பு தரப்பும் ஆரம்பத்தில் விரும்பவில்லை என்றே அவர்களது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சன் பிக்சர்ஸ் வசம் படம் போய்விட்டால் தங்களுக்கு சென்னை ஏரியா விநியோக உரிமை கிடைக்காது என்பதும் விஜய் வட்டாரத்தில் மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஆனாலும் என்ன காரணத்தாலோ, வேறு வழியில்லாமல் வேட்டைக்காரனே வலையில் சிக்கிக்கொண்டான். படம் சன் பிக்சர்ஸ் வசம் மாறியது, விஜய் தரப்பே எதிர்பார்க்காத... குறிப்பாக, அறியாத ஒன்று எனவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கிடையில் சில நல விரும்பிகள் மூலம் தில்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியையும் சந்தித்துவிட்டு வந்தார். உடனே காங்கிரஸில் சேரப் போகிறார்; இளைஞரணித் தலைவர் ஆகப்போகிறார் போன்ற ரீதியில் தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் செய்தியாளர்களை திடீரென அழைத்து "எனக்கு எல்லாமே சினிமாதான்; "வேட்டைக்காரன்" படம்தான் என் தற்போதைய இலக்கு. இப்போதைக்கு அரசியலில் ஈடுபட மாட்டேன்" என திடீரெனப் பின்வாங்கினார் நடிகர் விஜய்.

அவராகப் பின்வாங்கவில்லை; சில சக்திகளும் சூழ்நிலைகளும்தான் அவரை அப்படிப் பேசச் செய்தன என்று கூறியவர்களும் உண்டு. விஜய்யும் அவரது குடும்பத்தினரும் எதிர்பார்த்தது போல, தில்லி காங்கிரஸ் வட்டாரங்களில் அவருக்கு வரவேற்பு இருக்கவில்லை என்று தெரிகிறது. தனது தந்தைக்கு மத்திய அமைச்சர் பதவி, தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அல்லது தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பதவி, தனது ரசிகர் மன்றத்தினருக்கு வட்ட, மாவட்ட, மாநில அளவில் கட்சிப் பதவிகள் என்றெல்லாம் கனவுகள் கண்ட நடிகர் விஜய், காங்கிரஸ் மேலிடத்தின் "ஆகட்டும் பார்க்கலாம்" நமுட்டுச் சிரிப்பைப் பார்த்ததும் தகர்ந்தன. அதிகபட்சம் நடிகர் விஜய் மாநிலங்களவை உறுப்பினராக்கப் படலாம் என்பதுதான் காங்கிரஸ் தரப்பில் வாக்குறுதியாக இருந்ததாம்.

அது ஒரு புறம் இருக்க, "இளைய தளபதி"யின் அரசியல் ஆசையும், காங்கிரஸில் இணைந்து கட்சியை பலப்படுத்தும் முயற்சியும் ஆளும் திமுக தரப்பை எரிச்சலூட்டியதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? அதையடுத்து உருவான அரசியல் திட்டமே "உறவாடிக் கெடு" ப்ராஜெக்ட். அதன் முன்னோட்டம்தான் "வேட்டைக்காரன்" படம் கைப்பற்றப்பட்டதன் பின்னணி என்கிறார்கள்.

தீபாவளிக்கு வர வேண்டிய படம் வெளிவரவில்லை. இதற்கு துணை முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த "ஆதவன்" படம்தான் காரணம். கலைஞர் தொலைக்காட்சி தொடங்கக் காரணமாக இருந்த காரணிகளைக் காலமும் பணமும் மாற்றிவிட்ட சூழ்நிலை நிலவுவதால் வேட்டைக்காரனும் ஆதவனும் ஓரிடத்துப் பிள்ளைகளாகிவிட்டனர். அதனால் தீபாவளிக்கு "ஆதவன்" அதன் பிறகு "வேட்டைக்காரன்" என முடிவு செய்யப்பட்டது. விஜய்யின் முந்தைய பட வெளியீடுகளின்போது இருந்த அவருடைய தலையீடு முதல்முறையாகத் தகர்ந்தது. "வேட்டைக்காரன்" வெளிவராமல் தள்ளிப் போவதால், அடுத்த படத்தின் தயாரிப்பும், ரிலீசும் தள்ளிப் போகும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்படி தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று "வேட்டைக்காரன்" தள்ளித் தள்ளிப் போகிறதே என்கிற கவலையில் "விஜய்" வட்டாரம் நிலைகுலைந்து போயிருக்கிறதே... சினிமாவைப் பொருத்தவரை ஆறிய கஞ்சி பழங்கஞ்சி தானுங்களே..!

5 பேரு சொன்னாங்க:

Anonymous said...

விமர்சனங்கள் படிச்சா 'ஆதவன்' கதைல வேட்டைக்காரன் மாதிரித்தான் போலிருக்கு . :) ஒரே படம்னு எல்லாரும் நினைச்சிடக்கூடாதில்ல.

said...

தீபாவளிக்கு வர வேண்டிய படம் வெளிவரவில்லை. இதற்கு துணை முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த "ஆதவன்" படம்தான் காரணம். ///

அப்படியா!!

said...

Yes sir,.....

said...

இது செய்தியா? வதந்தியா? யுகமா?

said...

It's true Selva.