Wednesday, January 21, 2015

பெண்கள்....

பெண்கள்.... அர்த்தநாரீஸ்வர சிவனின் பாதி... காளி ரூபமாய் கற்களில் மீதி... கடவுளான பெண்ணுக்கே அவ்வளவுதான் மதிப்பு என்றால் தினம், தினம் குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும், தங்களுடைய வாழ்க்கைக்காகவும் போராடும் சாதாரண பெண்களின் நிலைமை இன்னும் மோசம்தான். 2014 இல் உலகம் அழியும் என்ற செய்தி கேட்டு பயந்து, பதறியவர்களுக்கு அன்று தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்...

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் பிறப்பிற்கும் காரணமான பெண்களின் அழிவுதான் அது என்பது. காலம்காலமாக ஆண்களின் மார்புப் பதக்கமாக மட்டுமே பெண்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கும் மோசமான ஆண் வர்க்கத்தின் பொறாமை மற்றும் சதை தின்னும் நர ஆசைக்கு பலியான பரிதாப பெண்கள்தான் நிர்பயா முதல், உமா மகேஸ்வரி முதல், இன்றைய வேலூர் சிறுமி வரை. "உன்னை நீ என்னிடம் இருந்து காப்பற்றிக் கொள்ள வேண்டுமானால் ஆடைகளால் உன் அவயங்களை மறைத்துக் கொள், பாலியல் இச்சையைத் தூண்டாதே, இரவில் நடக்காதே" என்று பெண்களுக்கு மட்டுமே அறிவுரைகள் வழங்கத் தயாராக இருக்கும் நாம் ஆண்களுக்கு "பெண்ணை இச்சையுடன் பார்க்காதே... மனைவியைத் தவிர அனைவரும் சகோதரிகள்...

சதை தின்பதற்கு அலையாதே" என்ற அறிவுரைகளை வழங்கத் தயாராக இல்லை. இதில் விதிவிலக்காக 10 சதவீத ஆண்கள் நல்லவர்களாக இருந்தாலும், 90 சதவீதம் பேர் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணகர்த்தாக்களாகத்தான் உள்ளனர். எதற்கெடுத்தாலும் கையில் தயாராக பதிலையும், வாயில் வர்ணம் பூசிய வார்த்தைகளையும், எதிரெதிர் வார்த்தை தாக்குதல்களையும் நிகழ்த்தத் துணிந்தவர்களும் கூட இதனை மறுக்க முடியாது. மறுத்தால் கண்டிப்பாக அவர்களும் இந்த கூட்டத்தில் ஒருவர்தான் என்பதுதான் நம்மால் மறுக்க முடியாத உண்மை. வாச்சாத்தி வன்கொடுமை, டெல்லி நிர்பயா, பத்திரிக்கை பெண், பொறியாளர் உமா மகேஸ்வரி, பெங்களூர் பள்ளி மாணவி, எல்கேஜி குழந்தை, 80 வயது மூதாட்டி, உபேர் டாக்சி பெண் பயணி, வேலூர் மாணவி என்று குழந்தை தொடங்கி எந்த வயது பெண்களுக்கும் இங்கு பாதுகாப்பில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. பெண்ணியம் பேசும் அமைப்புகளும் கூட இவ்விஷயத்தில் முழுமையாக போராடுவதற்கு தயாராக இல்லை.

வீட்டில் பெற்ற தந்தையைக் கூட நம்ப முடியாமல், அண்ணனை மதிக்க முடியாமல், தம்பியிடம் அன்பு பாரட்ட முடியாமல் இன்று வேறொரு வகையில் பெண்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் என்பதுதான் காலத்தின் கசப்பான உண்மை. "ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் போது, ஒரு சந்ததியே அங்கு அடியோடு வேரறுக்கப்படுகின்றது" என்பது சாட்டையடி நெருப்பாக என்று ஆண்களின் மனதில் பதிகின்றதோ அன்றுதான் பெண்களுக்கு முழுச்சுதந்திரம் கிடைக்கும். ஒரே ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பார்த்தால் எல்லா ஆண்களுக்கும் புரியும்.... நாம் உலகிற்கு வர உதவிய ஒரு புனிதமான கருவறை வழியை, கேவலம் ஒரு நிமிட இச்சைக்காக கல்லறை சமாதியாக நமக்கு நாமே மாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்ற விஷயம். பெண்களுக்கு.... "

உன்னைக் காப்பாற்றிக்கொள்ள நீயே ஆயுதம் எடுக்க வேண்டிய நேரம் இது. ஏனெனில், உன்னைக் காப்பாற்ற உன் குடும்பமோ, கல்வி நிறுவனமோ, அரசோ, பக்கத்து வீட்டு மனிதர்களோ, மதமோ, இனமோ, சட்டங்களோ தயாராக இல்லை". கடைசியாக.... பெண்களை ஆடை உரித்துப் பார்க்கத் துடிக்கும் ஆண்களும், போகும் வழியெல்லாம் பின் தொடரும் காமம் நிறைந்த கண்களின் நிழல்களும், கேளிக்கை என்ற பெயரில் பெண்ணை நுகர்வுப் பொருளாக பயன்படுத்துபவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றே ஒன்று .... "ஒரு பெண்ணை தவறான இச்சையோடு பார்ப்பவன் தன்னுடைய தாயையே தரக்குறைவாய் பார்ப்பவனுக்கு சமமாவான்" என்பதுதான்... பெண் இனத்தின் அழிவு ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்குத் தானே தோண்டிக்கொள்ளும் சவக்குழி... சதைத் திமிர் பிடித்த ஜென்மங்கள் திருந்துவார்களா இனியேனும்?

0 பேரு சொன்னாங்க: