சிங்கள இனவெறியும்
இந்திய ஆதிக்க வெறியும்
இணைத்து வன்னியில்
அழித்திட்ட தமிழினத்திற்கு
துக்கம் விசாரிக்க வருகிறாயா
தையே நீ
12 திங்களுக்கு முன்
தையே நீ பிறந்த அன்று
பாதுகாப்பு வலயத்திற்குள்
சிதறி அழிந்துக்கொண்டிருந்தது
ஈழத் தமிழனின் மானமும்
தமிழீழ மாந்தரின் கற்பும்
இளந்தளிர் குழந்தைகளின் உயிரும்
இன்று பிறக்கின்றாய்
வாழும் நடைபிணங்காய்
வற்றிய கண்களுடன்
வாழ்ந்த வீடிழந்து
வரலாற்று அடையாளமிழந்து
உயிர்காத்த தேசமிழந்து
உணவளித்த காணியிழந்து
சிங்களவன் கொடுத்த ரேஷனை
மானத்தை விட்டு கையில் வாங்கி
வாழ வழிதேடி திக்கற்று
ஈழத் தமிழினம் நிற்கையில்
நீயும் மீ்ண்டும் பிறக்கிறாய்
என்ன கொண்டு வந்தாய்?
தையே நீ தமிழருக்கு
என்ன கொண்டு வந்தாய்?
இரக்கமற்ற உலகில் வாழ
பொருளேதும் உண்டா உன்வரவில்?
இருந்தால் கொடு இல்லையேல் போ
(உலகில்) எங்கு திரும்பினும் துரோகம்
எதை நோக்கினும் வணிகம்
இலங்கையில் தேர்தல் வியாபாரம்
ஏக்கத்தில் தவிக்கும் (தமிழர்) தலைவர்கள்
தமிழ்நாட்டில் எல்லாமே வார்த்தைதான்
வீரஞ்சொரிந்த வார்த்தைகள்
சொரி நாய் கூட மதிப்பதில்லை
முகவரியற்று போய்விடுவோமோ
தத்தளிக்கிறது தமிழினம்
வழிகாட்டுவாயே தையே நீ
தமிழினமே கலங்காதே என்று கூறாதே
தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் கதைக்காதே
எல்லாவற்றிற்கும் முடிவுண்டு என்றும் பேசாதே
எதைச் செய்ய வேண்டும் என்று கூறு
மறந்துபோன (எம்) வீரத்தை ஊட்டு
எதையும் ஏற்கும் துணிவைக் கொடு
விடுதலை வேள்விக்குத் தயாராக்கு
எம்மை எதற்கும் துணிந்த இனமாக்கு
அதுபோது தையே உன்வரவை யாம் போற்றுவோம்
என்றென்றும் போற்றுவோம் பொங்கலிடுவோம்
நன்றி: வெப்துனியா
Subscribe to:
Post Comments (Atom)
0 பேரு சொன்னாங்க:
Post a Comment